Saturday, July 20, 2019

திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதனுக்கு அரஹரோ ஹரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா
திருத்தணிகைமலை முருகனுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர்சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தாத்தன தத்தன தானன தானன
     தாத்தன தத்தன தானன தானன
          தாத்தன தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறொரு
     சாக்ஷியறப் பசியாறியை நீறிடு
          சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
     போற்பரி வுற்றுனையே கருதாது இகல்
          சாற்று தமிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப்

போக்கிடமற்ற வ்ருதாவனை ஞானிகள்
     போற்றுதல் அற்றதுரோகியை மாமருள்
          பூத்த மலத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப்
போக்கிவிடக் கடனோ அடியாரொடு
     போய்ப்பெறு கைக்கிலையோ கதியானது
          போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா அருள் ...... புரிவாயே

மூக்கறை மட்டை மகாபல காரணி
     சூர்ப்பநகைப் படுமூளி யுதாசனி
          மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி ...... முழுமோடி
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்
     பேற்றிவிடக் கமலாலய சீதையை
          மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே கொடு ...... முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
     வீட்டில் இருத்திய நாளவன் வேரற
          மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் ...... மருகோனே
வாச்சிய மத்தள பேரிகைபோல் மறை
     வாழ்த்த மலர்க்கழு நீர்தரு நீள்சுனை
          வாய்த்த திருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

தாக்கு அமருக்கு ... தாக்கிச்செய்ய வேண்டிய போருக்கு


ஒரு சாரையை ... ஒரு சாரைப்பாம்பு சென்றதைப் போன்றவனை
(கோழை),

வேறொரு சாக்ஷியற ... அருகில் வேறு ஒருவரையும் சாக்ஷியாக
வைத்து உண்பிக்காமல்

பசி யாறியை ... தான்மாத்திரம் உண்ணுபவனை (சுயநலவாதி),

நீறிடு சாஸ்த்ர வழிக்கு ... திருநீற்றைத் தரிக்கிற சைவசாஸ்திர
வழிக்கு

அதி தூரனை ... வெகு தொலைவில் உள்ளவனை (சிவத்வேஷி),

வேர்விழு தவமூழ்கும் ... மரத்தைத் தாங்கும் வேர்போல்
உயிரைத்தாங்கும் தவத்தில் மூழ்கும்

தாற்பர்யம் அற்று உழல் பாவியை ... நற்பயனை விடுத்து வீணில்
உழலும் பாவியை (நாஸ்திகன்),

நாவலர் போல் ... புலவர் போல நடித்துக்கொண்டு,

பரிவுற்று உனையே கருதாது இகல் சாற்று ... அன்போடு
உன்னை நினையாமல், சண்டை செய்து

தமிழ்க்குரை ஞாளியை ... தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும்
நாயினை (நாய் போன்றவன்),

நாள்வரை தடுமாறி ... இந்தநாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து,

போக்கிடமற்ற வ்ருதாவனை ... வேறு புகலிடம் இல்லாத
வீணனை (வீணன்),

ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை ... மெய்யறிவாளர்களைப்
போற்றாதுவிட்ட துரோக சிந்தனை உடையவனை (துரோகி),

மாமருள் பூத்த மலத்ரய பூரியை ... பெரும் அஞ்ஞானம் நிறைந்த
மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்த கீழ்மகனை (மகாபாவி),

நேரிய புலையேனை ... பறையனுக்குச் சமானமானவனை (மிலேச்சன்),

போக்கிவி டக் கடனோ ... இத்தகைய பாவியாகிய அடியேனை
(முருகா, நீ) நீக்கிவிடக் கடவதோ? (இதுவரை அருணகிரியார் தம்மைத்
தாழ்த்திக் கொண்டு கோழை, சுயநலவாதி, சிவத்வேஷி, நாஸ்திகன்,
நாய்போன்றவன், வீணன், துரோகி, மகாபாவி, மிலேச்சன் என்று
கூறுகிறார்).

கதியானது அடியாரொடு போய் ... மோக்ஷ உலகில் உன்
அடியார்களோடு சேர்ந்து யானும் போய்

பெறுகைக்கு இலையோ ... பெறக்கூடிய பாக்கியம் எனக்கு
இல்லையா?

போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா ... போர் செய்வதும்,
ஒளிவிடுவதுமான வைரம் போன்ற கூரிய வேலினையும், மயிலினையும்
உடையவனே,

அருள்புரிவாயே ... திருவருள் புரியவேண்டும். (இனி, ராமாயணக்
கதைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்).

மூக்கறை ... மூக்கு அறுபட்டவளும்,

மட்டை ... அறிவில்லாதவளும்,

மகாபல ... பெரும் வலிமையுள்ளவளும்,

காரணி ... ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக
இருந்தவளும்,

சூர்ப்பநகைப் படு மூளி ... சூர்ப்பநகையென்ற பெயருடன்,
மூளியான கொடியவளும்,

உதாசனி ... அவமதிக்கத் தக்கவளும்,

மூர்க்க குலத்தி ... மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில்
பிறந்தவளும்,

விபீஷணர் சோதரி ... விபீஷணருக்கு சகோதரியும்,

முழுமோடி ... முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை,

மூத்த அரக்கன் இராவணனோடு ... அண்ணனும்
அரக்கனுமான ராவணனிடம் சென்று

இயல்பேற்றிவிட ... சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில்
புகுத்திவிட,

கமலாலய சீதையை ... தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய
சீதாதேவியை

மோட்டன் வளைத்து ... மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக்
கவர்ந்து

ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய் ... ஒற்றைத் தேரிலே
வைத்து மேகமண்டலம் சென்று,

மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் ... பிரசித்தி பெற்ற,
அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்

இருத்திய நாள் ... (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது,

அவன் வேரற ... அந்த ராவணனின் வம்சமே வேரோடு
அற்றுப்போகும்படி,

மார்க்க முடித்த ... அதற்குரிய வழியை நிறைவேற்றிய

விலாளிகள் நாயகன் மருகோனே ... வில்லாதி வீரர்களின்
தலைவனாம் ராமனின் மருமகனே,

வாச்சிய மத்தள பேரிகை போல் ... வாத்தியங்களான மத்தளம்,
பேரிகை இவற்றின் ஓசை போல

மறை வாழ்த்த ... வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும்,

மலர்க்கழு நீர்தரு ... செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற

நீள்சுனை வாய்த்த ... நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற

திருத்தணி மாமலை மேவிய பெருமாளே. ... திருத்தணிகை
என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே.
நன்றி-கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0272_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

No comments:

Post a Comment