Monday, April 29, 2019

திருப்புகழ் 779 உரத்துறை போத (வைத்தீசுரன் கோயில்)




ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
ஸ்ரீசெல்வமுத்துக்குமரசாமிக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 779 உரத்துறை போத  (வைத்தீசுரன் கோயில்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்தன தானத் ...... தனதான


......... பாடல் .........


உரத்துறை போதத் ...... தனியான

உனைச் சிறிதோதத் ...... தெரியாது

மரத்துறை போலுற்று ...... அடியேனும்

மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ

பரத்துறை சீலத்தவர் ...... வாழ்வே

பணித்தடி வாழ்வுற்று ...... அருள்வோனே

வரத்துறை நீதர்க்கு ...... ஒருசேயே

வயித்திய நாதப் ...... பெருமாளே.



......... சொல் விளக்கம் .........

உரத்துறை போதத் தனியான ... உறுதி வாய்ந்த ஞானத்தின்
தனிப்பொருளான

உனைச்சிறிதோதத் தெரியாது ... உன்னைச் சிறிதளவேனும்
போற்றத் தெரியாமல்

மரத்துறை போலுற்று அடியேனும் ... மரக்கட்டை போன்று
இருந்து அடியேனும்

மலத்திருள் மூடிக் கெடலாமோ ... ஆணவம், கன்மம், மாயை
என்ற மும்மலங்களும் இருள் போல் என் மனத்தை மூடி நான்

கெட்டுப்போகலாமோ?

பரத்துறை சீலத்தவர் வாழ்வே ... மேலான நிலையிலுள்ள புனித
வாழ்க்கையர்களின் செல்வமே,

பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே ... உன் திருவடியில்
பணிவித்து வாழ்வு பெற அருள்வோனே,

வரத்துறை நீதர்க்கு ஒருசேயே ... வரம் தருவதே தன் நீதியாகக்
கொண்ட சிவனாரின் ஒப்பற்ற சேயே,

வயித்திய நாதப் பெருமாளே. ... வைத்தீசுரன்கோயில் நாதனாம்
சிவனுக்குப் பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0779_u.html


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 



திருப்புகழ் 518 தேனுந்து முக்கனிகள் (கயிலைமலை)



ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
கைலைமலையானே போற்றி
அம்மையப்பா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 518 தேனுந்து முக்கனிகள்  (கயிலைமலை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தானந் தனத்ததன தானந் தனத்ததன
     தானந் தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

தேனுந்து முக்கனிகள் பால்செங்கருப்பு இளநிர்
     சீரும் பழித்த சிவம் ...... அருளூறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
     சீவன் சிவச்சொருப மென...... தேறி

நானென்பது அற்று உயிரொடு ஊனென்பதற்று வெளி
     நாதம் பரப்பிரம ...... வொளிமீதே
ஞானஞ் சுரப்ப மகிழாநந்த சித்தியொடெ
     நாளுங் களிக்க பதம் ...... அருள்வாயே

வானந்தழைக்க அடியேனுஞ் செழிக்கஅயன்
     மாலும் பிழைக்க அலைவிட ...... மாள
வாருங் கரத்தன் எமையாளுந் தகப்பன் மழு
     மானின் கரத்தன் அருள் ...... முருகோனே

தானந் தனத் ததனனா வண்டு சுற்றி மது
     தானுண் கடப்பமலரணி ...... மார்பா
தானங் குறித்து எமையாளுந் திருக்கயிலை
     சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தேன் உந்து முக்கனிகள் ... நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,
பலா, வாழை)

பால்செங் கருப்பிளனிர் ... பால், சிவந்த கரும்பு, இள நீர்

சீரும் ... இவைகளின் இனிப்பின் சிறப்பையும்

பழித்த ... (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)
தாழ்மைப்படுத்துகின்ற

சிவம் அருள் ஊற ... மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்
பெருகவும்,

தீதும் பிடித்தவினை யேதும் ... தீவினை, நல்வினை முழுவதும்

பொடித்துவிழு ... தூள்பட்டு ஒழியவும்,

சீவன் சிவச்சொருபம் ... இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது

என தேறி ... என்று நன்கு தெளிந்து,

நானென்ப தற்று ... அகங்காரத்தை அடியோடு நீத்தும்,

உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று ... உயிர்ப்பற்று, உடற்பற்று
இரண்டையும் அகற்றியும்,

வெளிநாதம் பரப்பிரம ... (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள
அருள்நாதப் பிரம்மமாம்

ஒளிமீதே ... பரஞ்ஜோதியில்

ஞானம் சுரப்ப ... சிவ ஞானம் பெருகிவரவும்,

மகிழ் ஆனந்த சித்தியொடு ... மகிழ்ச்சி ஊறும் சிவானந்த
மோட்சத்தில்,

எநாளும் களிக்க ... அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு

பதம் அருள்வாயே ... நின் திருவடியைத் தந்தருள்வாயாக

வானம் தழைக்க ... விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும்,

அடியேனும் செழிக்க ... அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன்
பொருட்டும்,

அயன் மாலும் பிழைக்க ... பிரம்மாவும், திருமாலும் (சூரனால்
அழியாது) வாழும் பொருட்டும்,

அலை விட(ம்) மாள ... பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை
அழிய

வாருங் கரத்தன் ... (அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை
உடையவரும்,

எமை யாளும் தகப்பன் ... எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும்,

மழு மானின் கரத்தன் ... நெருப்பையும், மானையும் ஏந்திய
திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான்

அருள் முருகோனே ... பெற்றருளிய முருகக் கடவுளே

தானந் தனத்ததனனா ... தானந் தனத்ததனனா என்ற
ரீங்காரத்துடன்

வண்டு சுற்றி ... வண்டானது வட்டமிட்டு

மது தானுண் ... தேனை உண்ணுகின்ற

கடப்பமலர் ... கடப்ப மலரை

அணிமார்பா ... தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே

தானங் குறித்து ... (எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து

எமை யாளும் ... எங்களை ஆட்கொள்ளவென்றே

திருக்கயிலை சாலும் ... திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய,

குறத்திமகிழ் பெருமாளே. ... வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே.


நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0518_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Sunday, April 28, 2019

திருப்புகழ் 515 பரமகுரு நாத (சிதம்பரம்)




ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
முருகா சரணம் 

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 515 பரமகுரு நாத  (சிதம்பரம்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

......... பாடல் .........

பரமகுரு நாத கருணை உபதேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்
பகலிரவு இலாத ஒளிவெளியில் மேன்மை
     பகரும் அதிகாரப் ...... பெருமாள்காண்

திருவளரு நீதி தினமனொகர ஆதி
     செகபதியை ஆளப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
     தெரிசனை சிவாயப் ...... பெருமாள்காண்

ஒருபொருளதாகி அருவிடையை ஊரும்
     உமைதன் மணவாளப் ...... பெருமாள்காண்
உகமுடிவு காலம் இறுதிகள் இலாத
     உறுதி அநுபூதிப் ...... பெருமாள்காண்

கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய
     கலவிபுகுதா மெய்ப் ...... பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரதம் ஆடு
     கடவுள் செகசோதிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரமகுரு நாத கருணையுப தேச ... பரமசிவனுக்கும் குருநாதனே,
கருணையுடன் உபதேசிப்பவனே,

பதவிதரு ஞானப் பெருமாள்காண் ... அருட் பதவிகளைத்
தருகின்ற பெருமாள் நீதான்.

பகலிரவிலாத ஒளிவெளியில் ... பகலும் இரவும் அற்றதான ஞான
ஒளிவீசும் சிதாகாச வெளியில்

மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள்காண் ... மேலான
உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள்
நீதான்.

திருவளரு நீதி தின மனொகர ஆதி ... முக்திச் செல்வத்தை
வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே,

செகபதியை யாளப் பெருமாள்காண் ... உலகிலுள்ள மன்னர்களை
எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான்.

செகதலமும் வானு மருவு ஐ அவை பூத ... மண்ணும், விண்ணும்,
அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி

தெரிசனைசிவாயப் பெருமாள்காண் ... தரிசனம் தரும் சிவாயநம
என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்*.

ஒருபொருள் அதாகி அருவிடையை யூரும் ... ஏக வஸ்துவாகி
அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற

உமைதன்மண வாளப் பெருமாள்காண் ... பார்வதியின் மணவாளப்
பெருமாளும் நீதான்*.

உகமுடிவு காலம் இறுதிகளிலாத ... பிரபஞ்சங்களின் யுக முடிவு,
காலம், இறுதிகள் என்பவை இல்லாத

உறுதி அநுபூதிப் பெருமாள்காண் ... நிலைபெற்ற சிவாநுபூதியைத்
தந்தருளும் பெருமாள் நீதான்.

கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய ... கருக்குழியிலிருந்தே
ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய

கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண் ... மீண்டும் என்னை மாயப்
பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான்.

கனகசபை மேவி அனவரதம் ஆடு ... பொன்னம்பலத்தில்
(சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற*

கடவுள்செக சோதிப் பெருமாளே. ... தெய்வமாகின்ற
ஜெகஜ்ஜோதியான பெருமாளே.

* சிதம்பரத்து நடராஜனை முருகனாகவே அருணகிரிநாதர் காண்கிறார்.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0515_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 



Saturday, April 27, 2019

திருப்புகழ் 228 பாதி மதிநதி (சுவாமிமலை)


ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
முருகா சரணம் 

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்


திருப்புகழ் 228 பாதி மதிநதி  (சுவாமிமலை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தான தனதன தான தனதன
     தான தனதன ...... தனதான

......... பாடல் .........

பாதி மதிநதி போதும் அணிசடை
     நாதர் அருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காதும் ஒருவிழி காகமுற அருள்
     மாயன் அரிதிரு ...... மருகோனே
காலனெனை அணுகாமல் உனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு
     ஆளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
     சூழவர வரு ...... இளையோனே

சூத மிகவளர் சோலை மருவு  
     சுவாமி மலைதனில் ...... உறைவோனே
சூரன் உடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாதி மதிநதி போதும் ... பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,
கொன்றை மலரையும்

அணிசடை நாத ரருளிய குமரேசா ... அணிந்த சடைப் பெருமான்
சிவபிரான் அருளிய குமரேசனே,

பாகு கனிமொழி மாது ... சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற
இனிய மொழியை உடைய மாதரசி,

குறமகள் ... குறமகளாகிய வள்ளியின்

பாதம் வருடிய மணவாளா ... பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,

காது மொருவிழி காகமுற அருள் ... பிரிக்கப்பட்ட ஒரு விழியை*
காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய

மாயன் அரி திரு மருகோனே ... ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,
லக்ஷ்மிக்கும் மருமகனே,

காலனெனை யணுகாமல் ... யமன் என்னை அணுகாத வகைக்கு

உனதிரு காலில் வழிபட அருள்வாயே ... உன் இரு திருவடிகளில்
வழிபடும் புத்தியை அருள்வாயாக.

ஆதி யயனொடு தேவர் ... ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா ... தேவலோகத்தை
ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,

ஆடு மயிலினி லேறி ... நடனம் ஆடும் மயில் மீது ஏறி

அமரர்கள் சூழ வர ... தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர

வரும் இளையோனே ... வருகின்ற இளையவனே,

சூத மிகவளர் சோலை ... மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்

மருவு சுவாமிமலைதனில் உறைவோனே ... நிறைந்த
சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,

சூர னுடலற ... சூரனின் உடல் வீழ,

வாரி சுவறிட ... கடல் வற்றிப்போக,

வேலை விடவல பெருமாளே. ... வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0228_u.html

பாடல் ஒலிவடிவம்-வாணிஜெயராம்.எல்.ஆர்.அஞ்சலி.  https://www.youtube.com/watch?v=FDMcv6CjglI&t=6s
கே.ஜே.யேசுதாஸ். https://www.youtube.com/watch?v=J3hDeMD7pvE

கஸ்தூரி ஆர். https://www.youtube.com/watch?v=A-osrfOn48k




வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Friday, April 26, 2019

திருப்புகழ் 900 அரி மருகோனே (வயலூர்)


ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
வயலூர் முருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 900 அரி மருகோனே  (வயலூர்)

பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதன தானான தானந் தனதன தானான தானந்
     தனதன தானான தானந் ...... தனதான

......... பாடல் .........

அரிமருகோனே நமோவென்று அறுதியிலானே நமோவென்று
      அறுமுக வேளே நமோவென்று ...... உனபாதம்
அரகர சேயே நமோவென்று இமையவர் வாழ்வே நமோவென்று
      அருண சொரூபா நமோவென்று ...... உளதாசை

பரிபுர பாதா சுரேசன் தருமகள் நாதா அராவின்
     பகைமயில் வேலாயுதா ஆடம்பர ...... நாளும்
பகர்தலிலா தாளை யேதுஞ் சிலதறியா ஏழை நானுன்
     பதிபசு பாச உபதேசம் ...... பெறவேணும்

கரதல சூலாயுதா முன் சலபதிபோல ஆரவாரங்
     கடின சுராபான சாமுண்டியும் ...... ஆடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாபதீ யென்று
     களமிசை தானேறியே அஞ்சிய ...... சூரன்

குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
     குடல்கொளவே பூசலாடும் ...... பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
     குளிர்வயலூர் ஆரமேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அரிமருகோனே நமோவென்று ... திருமாலின் மருமகனே போற்றி
என்றும்,

அறுதியிலானே நமோவென்று ... முடிவு என்பது அற்றவனே
போற்றி என்றும்,

அறுமுக வேளே நமோவென்று ... ஆறுமுகக் கடவுளே போற்றி
என்றும்,

உனபாதம் அரகர சேயே நமோவென்று ... உனது பாதத்தில்,
பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும்,

இமையவர் வாழ்வே நமோவென்று ... தேவர்களின் செல்வமே
போற்றி என்றும்,

அருண சொரூபா நமோவென்று ... செந்நிறத்துச் சொரூபனே
போற்றி என்றும்,

உளதாசை ... பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை
இருக்கிறது.

பரிபுர பாதா ... வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே,

சுரேசன் தரு மகள் நாதா ... தேவேந்திரன் பெற்ற மகள்
தேவயானையின் நாதனே,

அராவின்பகைமயில் வேலாயுத ஆடம்பர ... பாம்பின் பகையான
மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே,

நாளும் பகர்தலிலா தாளை ... ஒரு நாளேனும் நினைத்துச்
சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி

ஏதுஞ் சிலதறியா ஏழை நானுன் ... சிறிதளவு கூட எதுவும் அறியாத
ஏழை நான் உன் திருவாயால்

பதிபசு பாச உபதேசம் பெறவேணும் ... பதி, பசு, பாசம்*
ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும்.

கரதல சூலாயுதா ... கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே,

முன் சலபதி போல் ஆரவாரம் ... முன்னொரு நாள், கடல் போலப்
பேரோலியும்

கடினசுராபான சாமுண்டியும் ஆட ... கொடிய கள்ளைக் குடித்தலும்
உடைய துர்க்கை ஆடவும்,

கரிபரி மேலேறுவானும் ... யானையை (ஐராவதம்) வாகனமாகக்
கொண்ட இந்திரனும்

செயசெய சேனா பதீயென் ... ஜெய ஜெய சேனாபதியே என்று
ஆரவாரம் செய்யவும்,


களமிசை தானேறியே ... போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால்


அஞ்சிய சூரன் குரல்விட ... பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும்,

நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகம் ... நாயும், பேயும்,
பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும்

குடல்கொளவே ... அவனது குடலைக் கீறித் தின்னவும்,

பூசலாடும் பலதோளா ... சண்டை செய்த பல தோள்களை
உடையவனே,

குடதிசை வாராழி போலும் ... மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம்
போன்று

படர்நதி காவேரி சூழும் ... பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்த

குளிர்வயலூர் ஆர மேவும் பெருமாளே. ... குளிர்ந்த வயலூரில்*
உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே.

* பதி - கடவுள், பசு - ஜீவாத்மா, பாசம் - மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயை.

** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.

வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0900_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

திருப்புகழ் 1328 ஏறுமயிலேறி (திருவருணை)

ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
அருணாசலா அருணாசலா அருணாசலா
முருகா சரணம்


ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 1328 ஏறுமயிலேறி  (திருவருணை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்



  மங்களம் - 'ஏறுமயில் ஏறி

     ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே

          ஈசருடன் ஞானமொழி பேசு முகமொன்றே


     கூறுமடியார்கள் வினை தீர்க்கு முகமொன்றே

          குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே


     மாறுபடு சூரரை வதைத்த முகமொன்றே

          வள்ளியை மணம்புணர வந்த முகமொன்றே


     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

          ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே.


.........
இப்பாடலின் மேலார்ந்த பொருள் .........

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு
முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு
முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன்
ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து
ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

... அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை

நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

.........
இப்பாடலின் உள்ளர்த்தம் .........

1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,

2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,

3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,

4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,

5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,

6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்


... இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.


.........
மற்றும் .........

இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின்
திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து
இகபர செளபாக்கியத்தை அருளும்.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt1328_u.html
பாடல் நித்தியஸ்ரீ.https://www.youtube.com/watch?v=_HHPjw6R0Ls
சுதா ரகுநாதன்ஸ்ரீ https://www.youtube.com/watch?v=Op8WlIMSiAA
https://www.youtube.com/watch?v=h0_zDiBcB8Y


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம். 

Wednesday, April 24, 2019

திருப்புகழ் 399 இரவுபகற் பலகாலும் (திருவருணை)


ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
அண்ணாமலையானுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 


ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 399 இரவுபகற் பலகாலும்  (திருவருணை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான

......... பாடல் .........

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே பரசிவ தத் ...... துவஞானா
     அரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி ... இரவும், பகலும்,
பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும்
உன்னைப் புகழ்ந்து பாடி,

திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே ...
நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது
திருவருளைத் தந்தருள்வாயாக.

பரகருணைப் பெருவாழ்வே ... மேலான கருணையுடன் விளங்கும்
பெருவாழ்வே,

பரசிவதத்துவஞானா ... உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப்
பொருளே,

அரனருள்சற் புதல்வோனே ... சிவபிரான் அருளிய நற்குணப்
பிள்ளையே,

அருணகிரிப் பெருமாளே. ... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0399_u.html



வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 



Tuesday, April 23, 2019

திருப்புகழ் 525 சரவண பவநிதி (திருவேங்கடம்)

ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
முருகா சரணம் 


ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 525 சரவண பவநிதி  (திருவேங்கடம்)


   பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்


தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன தனதன தனதன
          தனதன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

சரவண பவநிதி அறுமுக குருபர
     சரவண பவநிதி அறுமுக குருபர
          சரவண பவநிதி அறுமுக குருபர ...... எனவோதித்
தமிழினில் உருகிய அடியவர் இடமுறு
     சனன மரணமதை ஒழிவுற சிவமுற
          தருபிணிதுள வரம் எமதுயிர் சுகமுற ...... அருள்வாயே

கருணைய விழிபொழி ஒருதனி முதலென
     வருகரி திருமுகர் துணைகொளும் இளையவ
          கவிதை அமுதமொழி தருபவர் உயிர்பெற ...... அருள்நேயா
கடலுலகினில் வருமுயிர்படும் அவதிகள்
     கலகம் இனையதுள கழியவும் நிலைபெற
          கதியும் உனது திருவடிநிழல் தருவதும் ...... ஒருநாளே

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
     குமர சமரபுரி தணிகையு மிகுமுயர்
          சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய ...... வடிவேலா
தினமும் உனதுதுதி பரவிய அடியவர்
     மனதுகுடியும் இருபொருளிலும் இலகுவ
          திமிர மலமொழிய தினகரனென வரு ...... பெருவாழ்வே

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
     மருகனெனவெ வரும் அதிசயம் உடையவ
          அமலி விமலி பரை உமையவள் அருளிய ...... முருகோனே
அதலவிதல முதல் கிடுகிடு கிடுவென
     வருமயில் இனிதொளிர் ஷடுமையில் நடுவுற
          அழகினுடன் அமரும் அரகர சிவசிவ ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே*, நிதியே,
ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே, நிதியே,
ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே, நிதியே,
ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

எனவோதித் தமிழினி லுருகிய ... என்று பல முறை தமிழினில்
ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற

அடியவரிடமுறு ... உன் அடியார்களுக்கு உற்ற

சனனமரணமதை யொழிவுற சிவமுற ... பிறப்பு, இறப்பு என்பவை
நீங்கவும், சிவப்பேறு அடையவும்,

தருபிணி து(ள்)ள ... வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும்,

வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே ... வரத்தினை நீ எங்கள் உயிர்
இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக.

கருணைய விழிபொழி ... கண்களினின்றும் பொழிகின்ற கருணையை
உடையவனே,

ஒருதனி முதலென வருகரி திருமுகர் ... ஒப்பற்ற தனிப் பெரும்
தலைவனென வந்த யானைமுகக் கணபதியை

துணைகொளு மிளையவ ... துணையாகக் கொண்ட இளையவனே,

கவிதை யமுதமொழி தருபவர் ... கவிதைகளாகிய அமுத
மொழிகளை வழங்குபவருடைய

உயிர்பெற அருள்நேயா ... உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள்
புரியும் நேசம் உடையவனே,

கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் ... கடல் சூழ்ந்த
இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும்,

கலகம் இனையதுள கழியவும் ... கலக்கங்களும், இன்னும்
இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும்,

நிலைபெறகதியும் ... நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும்,

உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே ... உனது திருவடி நிழல்
அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ?

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர ... திரிபுரங்களை
எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே,

சமரபுரி தணிகையு மிகுமுயர் ... திருப்போரூரிலும்,
திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த

சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா ...
சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே,

தினமும் உனது துதி பரவிய அடியவர் ... நாள்தோறும் உன்
புகழைக் கூறும் அடியார்களின்

மனது குடியும் ... உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே,

இரு பொருளிலும் இலகுவ ... அருட்செல்வம், பொருட்செல்வம்
ஆகிய இரண்டிலும் விளங்குபவனே,

திமிர மலமொழிய ... இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு

தினகரன் எனவரு பெருவாழ்வே ... ஞானசூரியனாக வருகின்ற
பெரும் செல்வமே,

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் ... பாம்பணையில்
துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின்

மருகனெனவெ வரும் அதிசயமுடையவ ... மருகோனாக வரும்
அதிசய மூர்த்தியே,

அமலி விமலி பரை ... மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும்,
பெரியவளும் ஆகிய

உமையவள் அருளிய முருகோனே ... உமாதேவி தந்தருளிய
முருகக் கடவுளே,

அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென ... அதலம் விதலம் முதலிய
ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க

வருமயிலினிதொளிர் ... வருகின்ற மயிலின் மீது இனிதாக
ஒளி வீசுபவனே,

ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும் ... ஆறுகோணச்
சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற

அரகர சிவசிவ பெருமாளே. ... ஹர ஹர சிவ சிவ, பெருமாளே.



* 'சரம்' - தர்ப்பை, 'வனம்' - காடு, 'பவன்' - வெளிப்பட்டவன். நாணற்புல் காட்டில் தோன்றியதால் 'சரவனபவன்'. தமிழ் இலக்கண விதிப்படி 'ர'கரத்தின் பின்வரும் 'ன'கரம் 'ண'கரமாகும் என்பதால் 'சரவணபவன்'

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0525_u.html


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்