Friday, April 26, 2019

திருப்புகழ் 1328 ஏறுமயிலேறி (திருவருணை)

ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
அருணாசலா அருணாசலா அருணாசலா
முருகா சரணம்


ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 1328 ஏறுமயிலேறி  (திருவருணை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்



  மங்களம் - 'ஏறுமயில் ஏறி

     ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே

          ஈசருடன் ஞானமொழி பேசு முகமொன்றே


     கூறுமடியார்கள் வினை தீர்க்கு முகமொன்றே

          குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே


     மாறுபடு சூரரை வதைத்த முகமொன்றே

          வள்ளியை மணம்புணர வந்த முகமொன்றே


     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

          ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே.


.........
இப்பாடலின் மேலார்ந்த பொருள் .........

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு
முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு
முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன்
ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து
ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

... அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை

நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

.........
இப்பாடலின் உள்ளர்த்தம் .........

1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,

2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,

3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,

4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,

5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,

6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்


... இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.


.........
மற்றும் .........

இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின்
திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து
இகபர செளபாக்கியத்தை அருளும்.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt1328_u.html
பாடல் நித்தியஸ்ரீ.https://www.youtube.com/watch?v=_HHPjw6R0Ls
சுதா ரகுநாதன்ஸ்ரீ https://www.youtube.com/watch?v=Op8WlIMSiAA
https://www.youtube.com/watch?v=h0_zDiBcB8Y


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம். 

No comments:

Post a Comment