Sunday, May 26, 2019

திருப்புகழ் 529 வரிசேர்ந்திடு (திருவேங்கடம்)





ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருவேங்கடம் உடைய ஸ்ரீநிவாசன்திருமருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளி திருப்புகழ்
திருப்புகழ் 529 வரிசேர்ந்திடு  (திருவேங்கடம்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதாந்தன தானன தானன
     தனதாந்தன தானன தானன
          தனதாந்தன தானன தானன ...... தனதான


......... பாடல் .........


வரிசேர்ந்திடு சேல்கயலோ வெனும்
     உழைவார்ந்திடு வேலையு நீலமும்
          வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
     தனவாஞ்சையிலே முக மாயையில்
          வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே


இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
     மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
          இனிதாங்கனி வாய் அமுதூறல்கள் ...... பருகாமே
எனதாந்தன தானவை போயற
     மலமாங்கடு மோக விகாரமும்
          இவைநீங்கிடவே இருதாளினை ...... யருள்வாயே


கரிவாம்பரி தேர்திரள் சேனையும்
     உடனாந் துரியோதனனாதிகள்
          களமாண்டிடவே யொரு பாரதம் ...... அதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனிலே எழு
     பரிதூண்டிய சாரதி யாகிய
          கதிரோங்கிய நேமியனாம் அரி ...... ரகுராமன்


திரைநீண்டிரை வாரியும் வாலியும்
     நெடிதோங்கு மராமரம் ஏழொடு
          தெசமாஞ்சிர ராவணனார் முடி ...... பொடியாகச்
சிலைவாங்கிய நாரணனார் மரு
     மகனாங் குகனே பொழில் சூழ்தரு
          திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........


வரிசேர்ந்திடு சேல்கயலோவெனும் ... செவ்வரி படர்ந்த சேல் மீனோ,
கயல் மீனோ என்று சொல்லத்தக்கதும்,

உழைவார்ந்திடு வேலையு நீலமும் ... மானையும்,
வார்த்தெடுக்கப்பட்ட வேலையும், நீலோத்பல மலரையும்,


வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே ...
மாம்பிஞ்சினையும் நிகர்த்த கண்களை உடைய மாதர்களின் காம
வலையினாலும்,

வளர்கோங்கிள மாமுகை யாகிய ... வளர்ந்த கோங்கு மரத்தின்
இளம் சிறப்பான அரும்பையொத்த

தனவாஞ்சையிலே முக மாயையில் ... மார்பகங்களின் மேல் வைத்த
ஆசையாலும், முகத்தின் மயக்கத்தாலும்,

வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே ... செழுமையான
மாந்தளிர் போன்ற நிறத்து வடிவத்தாலும்,

இருள்போன்றிடு வார்குழல் நீழலில் ... இருளையொத்துக் கருத்து
நீண்ட கூந்தலின் நிழலாலும்,

மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற ... காம மயக்கம் கொண்ட
படுக்கையின் மேலே பொருந்த,

இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே ... இனிதான
கோவைக்கனி இதழ்களின் அமுதாகிய ஊறல்களை உண்ணாதபடி,

எனதாந் தனதானவை போயற ... என்னுடையவை, தன்னுடையவை
என்றவை நீங்கி அற்றுப்போகவும்,

மலமாங் கடு மோகவிகாரமு மிவைநீங்கிடவே ...
மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும்
அகன்றிடவும்,

இரு தாளினை யருள்வாயே ... உன் இரு திருவடிகளை
அருள்வாயாக.

கரிவாம்பரி தேர்திரள் சேனையும் ... யானைப்படையும், தாவும்
குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும்,

உடனாந்துரி யோதன னாதிகள் ... ஒன்றாகக் கூடியுள்ள
துரியோதனாதியர்

களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி ... போர்க்களத்தில்
இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே ... பெருமைவாய்ந்த பாண்டவர்களின்
தேரிலே,

எழுபரிதூண்டிய சாரதி யாகிய ... கிளம்பிப் பாயும் குதிரைகளைச்
செலுத்திய தேரோட்டி ஆனவனும்,

கதிரோங்கிய நேமியனாம் ... ஒளி மிகுந்த சுதர் ன சக்கரத்தை
உடையவனுமான

அரி ரகுராமன் ... ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,


திரைநீண்டிரை வாரியும் வாலியும் ... அலைகள் ஓங்கி ஒலிக்கும்
கடலையும், வாலியையும்,

நெடிதோங்குமராமரம் ஏழொடு ... நீண்டு உயர்ந்த ஏழு
மராமரங்களையும்,

தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக ... பத்துத்
தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே ... கோதண்ட
வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,

பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய
பெருமாளே. ... சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.



நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0529_u.html



வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

முருகா சரணம் 

Thursday, May 23, 2019

திருப்புகழ் 22 அந்தகன் வருந்தினம் (திருச்செந்தூர்)



ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா


ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 22 அந்தகன் வருந்தினம்  (திருச்செந்தூர்)


உரை எழுதியது. திரு.கோபாலசுந்தரம் ஐயா

தந்தன தனந்தனந் தனதனத்
     தந்தன தனந்தனந் தனதனத்
          தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான

......... பாடல் .........

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
     சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
          அன்புருகு சங்கதந் தவிர முக் ...... குணமாள
அந்தி பகலென்று இரண்டையும் ஒழித்து
     இந்திரிய சஞ்சலங்களை அறுத்து
          அம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்

செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுறக்
     கந்தனை அறிந்தறிந்து அறிவினிற்
          சென்று செருகுந்தடந்தெளிதரத் ...... தணியாத
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரையொழித்து
     என்செயல் அழிந்தழிந்து அழியமெய்ச்
          சிந்தைவர என்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
     கும்பிடு புரந்தரன் பதிபெறக்
          குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
     கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
          குண்டலம் அசைந்து இளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்


தந்தன தனந்தனந் தனவெனச்
     செஞ்சிறு சதங்கைகொஞ்சிட மணித்
          தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான
சங்கரி மனங்குழைந்து உருக முத்
     தந்தர வருஞ் செழுந்தளர் நடைச்
          சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

அந்தகன் வருந்தினம் பிறகிட ... யமன் வருகின்ற தினமானது பின்
தள்ளிப் போக,

சந்ததமும் வந்துகண்டு அரிவையர்க்கு அன்புருகு சங்கதம்
தவிர ... எப்போதும் வருவதும் போவதும் காண்பதுமாய், பெண்களிடம்
அன்பு காட்டி உருகக்கூடிய தொடர்பு விட்டு நீங்க,

முக் குணம் மாள ... சத்துவம், ராஜதம், தாமதம் என்ற மூன்று
குணங்களும் அழித்து,

அந்திபகலென்றிரண்டையுமொழித்து ... இரவு (ஆன்மா
செயலற்றுக் கிடக்கும் நிலை), பகல் (ஆன்மா உழலும் நிலை) என்னும்
இரண்டு நிலைகளையும் ஒழித்து,

இந்திரிய சஞ்சலங் களையறுத்து ... ஐம்பொறிகளால் வரும்
துன்பங்களை அறுத்து,

அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி ... தாமரை போன்ற
உன் திருவடிகளின் பெருமையைக் கவிபாடி,

செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற ... திருச்செந்தூரைக்
கருதி உணர்ந்து ஞானம் பிறக்க,

கந்தனை அறிந்து அறிந்து அறிவினில் ... கந்தக் கடவுளாம்
உன்னைஅறிந்து அறிந்து அந்த அறிவின் வழியே

சென்று செருகுந் தடந் தெளிதர ... சென்று நுழைந்து முடிகின்ற
இடம் தெளிவு பெற,

தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து ... அடங்காத மனமும்
நெகிழ்ந்து நெகிழ்ந்து,

உரையொழித்து என்செயல் அழிந்தழிந்து அழிய ... பேச்சும்
நின்று, எனது செயலும் அடியோடு அற்றுப் போக,

மெய்ச்சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் படுவேனோ ...
உண்மையான அறிவு வர, எப்பொழுது உன்னைக் காணும் பாக்கியத்தை
யான் பெறுவேனோ?

கொந்தவிழ் சரண்சரண் சரணென ... மலர்க் கொத்துக்கள் கிடக்கும்
பாதங்களே சரணம் சரணம் என்று

கும்பிடு புரந்தரன் பதிபெற ... கும்பிட்ட இந்திரன் தனது ஊராகிய
அமராவதியை மீண்டும் பெற,

குஞ்சரி குயம்புயம் பெற ... யானை வளர்த்த மகள் தேவயானையின்
மார்பகம் உன் திருப்புயங்களைப் பெற,

அரக்கரும் மாள ... அரக்கர்கள் யாவரும் மாண்டழிய,

குன்றிடிய ... கிரெளஞ்ச மலை பொடிபட்டு விழ,

அம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின்
கிணினென ... அழகிய பொன்னாலான அரைஞாண் கிண்கிணி
கிணின் கிணின் கிணின் என்று ஒலிக்க,

குண்டலம் அசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீச ...
குண்டலங்கள் அசைந்து சிறிய காதணிகளில் ஒளிவீச,

தந்தன தனந்தனந் தனவென ... தந்தன தனந்தனந் தன என்ற
ஓசையோடு

செஞ்சிறு சதங்கைகொஞ்சிட ... செவ்விய சிறு சதங்கைகள்
சிற்றொலி செய்திட,

மணித் தண்டைகள் கலின்கலின் கலினென ... மணித் தண்டைகள்
கலின்கலின் கலின் என்று சப்திக்க,

திருவான சங்கரி மனங்குழைந்துருக ... அழகிய சங்கரி மனம்
குழைந்து உருகி நிற்க,

முத்தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி ... முத்தம் தர வரும்
செழுவிய தளர்ந்த நடைப் பிள்ளையே,

சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே. ... இந்த வையமெல்லாம்
தொழும் சரவணப் பெருமாளே.

நன்றி. கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0022_u.html

Wednesday, May 22, 2019

திருப்புகழ் 13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)






ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருப்பரங்குன்றம் தேவாசேனாபதி போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 13 சந்ததம் பந்த  (திருப்பரங்குன்றம்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தந்தனந் தந்தத் ...... தனதான
     தந்தனந் தந்தத் ...... தனதான

......... பாடல் .........

சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென்று என்று உற்று ...... உனைநாளும்
     கண்டுகொண்டு அன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற
தொடர்பினாலே

சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,

கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி
மனதார உன்னை தினமும்

கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,

அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?

தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி
போன்ற தேவயானையை

புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,

சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய
பார்வதியின் குழந்தாய்,

செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய
கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே,

தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில்
அமர்ந்த பெருமாளே.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0013_u.html

பாடியவர்.சுதா ரகுநாதன் https://www.youtube.com/watch?v=PqIFgT0gNsE



வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 


Tuesday, May 21, 2019

திருப்புகழ் 15 தடக்கைப் பங்கயம் (திருப்பரங்குன்றம்)




ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதாபோற்றி  
திருப்பரங்குன்றம் தேவசேனாபதி போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 15 தடக்கைப் பங்கயம்  (திருப்பரங்குன்றம்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
     தனத்தத் தந்தனந் ......தனதான


......... பாடல் .........

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
     டமிழ்க்குத் தஞ்சமென்று ...... உலகோரைத்
தவித்துச் சென்று இரந்து உளத்திற் புண்படுந்
     தளர்ச்சிப் பம்பரந்தனை ......  ஊசற்

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
     கலத்தைப் பஞ்சஇந்த்ரிய ...... வாழ்வைக்
கணத்திற் சென்று இடந் திருத்தித் தண்டையங்
     கழற்குத் தொண்டுகொண்டு ...... அருள்வாயே

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
     புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
     பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா

குடக்குத் தென்பரம் பொருப்பிற் தங்கும் அங்
     குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பை முன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

தடக்கைப் பங்கயம் ... உன் அகன்ற கை தாமரை போன்றது,

கொடைக்குக் கொண்டல் ... கொடை வன்மையில் நீ மேகம்
போன்றவன்,

தண்டமிழ்க்குத் தஞ்சமென்று ... தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம்
என்று கூறி

உலகோரைத் தவித்துச் சென்றிரந்து ... உலகத்தவரைத் தவிப்புடன்
நாடி யாசித்து

உளத்திற் புண்படும் ... மனம் நொந்து புண்ணாகி

தளர்ச்சிப் பம்பரந்தனை ... தளர்வுற்றுப் பம்பரம் போன்று
சுழல்வேனை,

ஊசற் கடத்தை ... உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை,

துன்பமண் சடத்தை ... துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை,

துஞ்சிடுங் கலத்தை ... அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை,

பஞ்சஇந்த்ரிய வாழ்வை ... ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும்
இந்த வாழ்வை,

கணத்திற் சென்று இடம் திருத்தி ... நொடியில் வந்து என் இதயமாம்
இடத்தைத் திருத்தி,

தண்டையங் கழற்கு ... வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய
திருப்பாதங்களுக்கு

தொண்டுகொண் டருள்வாயே ... தொண்டு செய்ய என்னை
ஏற்றுக்கொண்டு அருள்வாயாக.

படைக்கப் பங்கயன் ... படைக்கும் தொழிலைச் செய்வதற்குத்
தாமரைமலர் மேவும் பிரமன்,

துடைக்கச் சங்கரன் ... அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன்,

புரக்கக் கஞ்சைமன் ... காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள்
மணாளன் திருமால்

பணியாகப் பணித்து ... என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து,

தம்பயந் தணித்து ... அவரவர் பயங்களைப் போக்கி,

சந்ததம் பரத்தைக் கொண்டிடும் ... எப்போதும் பராகாசத்தில்
மேலான நிலையிலே நிற்கும்

தனிவேலா ... ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே,

குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும் ... மதுரைக்கு மேற்கே
திருப்பரங்குன்றத்தில் தங்கும்,

அங்குலத்திற் கங்கைதன் சிறியோனே ... உயர்குல நதியாம்
கங்கையின் குழந்தாய்,

குறப்பொற் கொம்பைமுன் ... குறக்குலத்து அழகிய கொடியாம்
வள்ளியை முன்பு

புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. ...
தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட
பெருமாளே.

நன்றி.கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0015_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Sunday, May 19, 2019

திருப்புகழ் 519 நகைத்து உருக்கி (கயிலைமலை)




ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 519 நகைத்து உருக்கி  (கயிலைமலை)

  பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்
தனத்த தனத்த தனத்த தனத்த
     தனத்த தனத்த ...... தனதான


......... பாடல் ......... 

நகைத்து உருக்கி விழித்து மிரட்டி
     நடித்து விதத்தில் ...... அதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
     நலத்தில் அணைத்து ...... மொழியாலுந்

திகைத்த வரத்தில் அடுத்த பொருட்கை
     திரட்டி யெடுத்து ...... வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
     தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ

பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
     படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
     பதத்த கனத்த ...... தனமாதை

மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
     வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
     ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் ... சிரித்து,
(மனத்தை) உருக்கி, விழிகளை விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து,
பல விதமாக

அதி மோகம் நடத்து(ம்) சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில்
அணைத்து
 ... அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சாமர்த்தியத்தைக்
காட்டி, முகத்தை மினுக்கிக்கொண்டு, இதமாகவே அணைத்து,

மொழியாலும் திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி
எடுத்து வரவே செய்
 ... பேச்சினாலும் திகைப்பு உண்ட நிலையில்,
அவர்கள் கேட்டபடி கிடைத்த பொருளைக் கையில் சேகரித்துக்கொண்டு
வரும்படி செய்கின்ற

திருட்டு முலைப் பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு
கலைக்குள் விழுவேனோ
 ... திருட்டுப் பெண்களின் மார்பகங்களான
மயக்கம் தரும் காம வலையிலும், மிகுந்த காம சாத்திரச் செயல்களிலும்
விழுவேனோ?

பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில்
ஏறி
 ... பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து, படர்ந்த கரு
நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி,

பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன
மாதை
 ... செழுமையான திருக்கரங்களும், குணமான நறு மணம்
கொண்ட பாதங்களும், விம்மிப் பெருத்த மார்பகங்களும் கொண்ட
பெண்ணாகிய வள்ளியை,

மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த
பொருப்பில் உறை நாதா
 ... சிறப்பு மிக்க தினைப் புனத்தில்
(வள்ளிமலையில்) வைத்து அணைத்து, வெள்ளி மலையாகிய
கயிலைகிரியில் உறைகின்ற நாதனே,

விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர்
பெருமாளே.
 ... விரிந்துள்ள சடையில் கங்கை என்னும் ஒரு பெண்
இருக்க, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு (உரிய) பெருமாளே.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0519_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Saturday, May 18, 2019

திருப்புகழ் 212 காமியத் தழுந்தி (சுவாமிமலை)







ஓம் முருகன் துணை
குருநாதா சுவாமிமலை சாமிநாதா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 212 காமியத் தழுந்தி  (சுவாமிமலை)

 பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தானனத் தனந்த ...... தனதான


     தானனத் தனந்த ...... தனதான



......... பாடல் .........


காமியத்து அழுந்தி ...... யிளையாதே
     காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத்தில் அன்பு ...... மிகவூறி
     ஓவியத்தில் அந்தம் ...... அருள்வாயே

தூமமெய்க்கு அணிந்த ...... சுகலீலா
     சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற்பு உயர்ந்த ...... மயில்வீரா
     ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........



காமியத் தழுந்தி ... ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு

யிளையாதே ... மெலிந்து போகாமல்,

காலர்கைப் படிந்து ... யம தூதர்களின் கைகளிற் சிக்கி

மடியாதே ... இறந்து போகாமல்,

ஓமெழுத்தி லன்பு ... ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு

மிகவூறி ... மிகவும் ஏற்பட்டு,

ஓவியத்தி லந்தம் ... யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை

(அடைய)

அருள்வாயே ... அருள்வாயாக.

தூமமெய்க் கணிந்த ... வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள

சுகலீலா ... சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே,

சூரனைக் கடிந்த கதிர்வேலா ... சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே,

ஏமவெற் புயர்ந்த மயில்வீரா ... பொன்மலையைப் போலச் சிறந்த

மயிலில் ஏறும் வீரனே,

ஏரகத் தமர்ந்த பெருமாளே. ... திருவேரகம் என்ற சுவாமிமலையில்

வீற்றிருக்கும் பெருமாளே.


நன்றி. கௌமாரம்.காம்-http://www.kaumaram.com/thiru/nnt0212_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

Friday, May 17, 2019

திருப்புகழ் 9 கருவடைந்து (திருப்பரங்குன்றம்)





ஓம் முருகன் துணை 
குருநாதா சுவாமிமலைசாமிநாதா போற்றி 
ஸ்ரீவிசாகா போற்றி 
ஸ்ரீசீதாராமன் திருமருகோனோ போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 9 கருவடைந்து  (திருப்பரங்குன்றம்)

   பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனனதந்த தத்தத்த தந்த
     தனனதந்த தத்தத்த தந்த
          தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

கருவடைந்து பத்துற்ற திங்கள்
     வயிறிருந்து முற்றிப் பயின்று
          கடையில்வந்து உதித்துக் குழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கு எடுத்துச் சுரந்த
     முலை அருந்துவிக்கக் கிடந்து
          கதறி அங்கை கொட்டித் தவழ்ந்து ...... நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
          அவையணிந்து முற்றிக் கிளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
     பிணியுழன்று சுற்றித் திரிந்தது
          அமையும் உன் க்ருபைச்சித்தம் என்று ...... பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக் குரங்கின்
     அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
          யிறைவன் எண்கினக்கர்த்தன் என்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற் சிறந்த
     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ

அரியதன் படைக்கு அர்த்தர் என்று
     அசுரர்தங் கிளைக்கட்டை வென்ற
          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும் புடைத்துச் சினந்து
     உலகமும் படைத்துப் பரிந்து
          அருள்பரங்கிரிக்குள் சிறந்த ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கருவடைந்து ... கருவிலே சேர்ந்து

பத்துற்ற திங்கள் வயிறிருந்து ... பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
இருந்து

முற்றிப்ப யின்று ... கரு முற்றிப் பக்குவம் அடைந்து

கடையில்வந்து தித்து ... கடைசியில் பூமியில் வந்து பிறந்து

குழந்தை வடிவாகி ... குழந்தையின் வடிவத்தில் தோன்றி

கழுவியங்கெ டுத்து ... குழந்தையை அங்கு கழுவியெடுத்து

முலையருந்து விக்க ... சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க

கிடந்து கதறி ... தரையிலே கிடந்தும், அழுதும்,

அங்கை கொட்டித்தவழ்ந்து ... உள்ளங்கையைக் கொட்டியும்,
தவழ்ந்தும்,

நடமாடி ... நடை பழகியும்,

அரைவடங்கள் கட்டி ... அரைநாண் கட்டியும்,

சதங்கை இடுகுதம்பை ... காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,

பொற்சுட்டி தண்டை அவையணிந்து ... பொன் கொலுசு, தண்டை
அவைகளை அணிந்தும்,

முற்றிக் கிளர்ந்து வயதேறி ... முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,

அரியபெண்கள் ... அருமையான பெண்களின்

நட்பைப்பு ணர்ந்து ... நட்பைப் பூண்டு,

பிணியுழன்று ... நோய்வாய்ப்பட்டு

சுற்றித்தி ரிந்த(து) அமையும் ... அலைந்து திரிந்தது போதும்.
(இனிமேல்)

உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ ... உனது அருள்
கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?

இரவிஇந்த்ரன் ... சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்
(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக் குரங்கினரசரென்றும் ... வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் ... ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த
பிரமன்

எண் கினக்கர்த்த னென்றும் ... கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)
ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் ... நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ... ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் ... ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து ... இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ ... இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன் படைக்கர்த்த ரென்று ... (இவர்களே) தன் அரிய
படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங் கிளைக்கட்டை ... அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் ... வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே ... புகழும் குணம் வாய்ந்த
மருமகனே,

அயனையும்  புடைத்துச் சினந்து ... பிரம்மாவையும் தண்டித்து,
கோபித்து,

உலகமும் படைத்து ... (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்
படைத்து,

பரிந்து ... அன்புடன்

அருள்பரங் கிரிக்குள் ... அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.

நன்றி -கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0009_u.html

பாடியது-திரு.சம்பந்தம் குருக்கள். https://www.youtube.com/watch?v=-uXTngw-mgA




வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்