Tuesday, July 23, 2019

திருப்புகழ் 274 துப் பார் அப்பு (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

சிவகுமரா சுவாமிமலைசாமிநாதா போற்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா
பழநிஆண்டவருக்கு அரஹரோ ஹரா
திருக்தணிகைமலை முருகனுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர்சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 274 துப் பார் அப்பு  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தனனத் ...... தனதான

......... பாடல் .........

துப்பார் அப்பு ஆடற்றீ மொய்க்கால்
     சொற்பா வெளி முக் ...... குணமோகம்
துற்றாயப் பீறற் தோலிட்டே
     சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பாவக் காயத்து ஆசைப்பாடு
     எற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா
     எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பாமற் பாடிச் சேவிப்பார்
     தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்காழிச் சூர் செற்றாய் மெய்ப் போ
     தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பாகைப் பாலைப்போல் சொற்கா
     வற்பாவை தனத் ...... தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
     அப்பா குமரப் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

துப் பார் அப்பு ஆடல்தீ ... உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற

நெருப்பு,

மொய்க்கால் சொல் பா வெளி ... நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க
பரந்த ஆகாயம் (ஆகிய ஐம்பொரும் பூதங்களும்),

முக்குணமோகம் ... மூன்று குணங்களும் ( த்வம், ராஜ ம், தாமசம்),
மூவாசைகளும் (மண், பெண், பொன்)

துற்றாய ... (மேலே சொன்னவை யாவும்) நெருக்கமாக
வைக்கப்பட்டுள்ளதும்,

பீறல் தோலிட்டே சுற்றா ... (ஒன்பது துவாரங்களுடன்*) கிழிந்த
தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும்,

மதனப் பிணிதோயும் ... காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய

இப் பாவக் காயத்து ... இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது

ஆசைப்பாடு எற்றே ... ஆசைப்படுவதை மேற்கொண்டு,

உலகிற் பிறவாதே ... உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல்,

எத்தார் வித்தாரத்தே கிட்டா ... உன்னைத் துதிக்காதவர்களின்
கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும்

எட்டா அருளைத் தரவேணும் ... அவர்களுக்கு எட்டாததுமான உன்
திருவருளைத் தந்துதவ வேண்டும்.

தப்பாமற் பாடிச் சேவிப்பார் ... தவறாமல் உன்னையே பாடித்
தொழுபவர்கள் எவரெவரோ

தத்தாம் வினையைக் களைவோனே ... அவரவர்களின் வினைகளை
நீக்குபவனே,

தற்கு ஆழிச்சூர் செற்றாய் ... செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய
சூரனை அழித்தவனே,

மெய்ப் போதத்தாய் ... மெய்யான சிவஞான பண்டிதனே,

தணிகைத் தனிவேலா ... திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும்
ஒப்பற்ற வேலவனே,

அப் பாகைப் பாலைப் போல் சொல் ... அந்த சர்க்கரைப் பாகு
போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும்,

காவற் பாவை ... தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை

தனத்தணைவோனே ... மார்புறத் தழுவுபவனே,

அத்தா நித்தா முத்தா சித்தா ... உயர்ந்தவனே, என்றும்
உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே,

அப்பா குமரப் பெருமாளே. ... பரம பிதாவே, குமாரக் கடவுளே,
பெருமாளே.

நன்றி:கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0274_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

Saturday, July 20, 2019

திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதனுக்கு அரஹரோ ஹரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா
திருத்தணிகைமலை முருகனுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர்சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தாத்தன தத்தன தானன தானன
     தாத்தன தத்தன தானன தானன
          தாத்தன தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறொரு
     சாக்ஷியறப் பசியாறியை நீறிடு
          சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
     போற்பரி வுற்றுனையே கருதாது இகல்
          சாற்று தமிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப்

போக்கிடமற்ற வ்ருதாவனை ஞானிகள்
     போற்றுதல் அற்றதுரோகியை மாமருள்
          பூத்த மலத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப்
போக்கிவிடக் கடனோ அடியாரொடு
     போய்ப்பெறு கைக்கிலையோ கதியானது
          போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா அருள் ...... புரிவாயே

மூக்கறை மட்டை மகாபல காரணி
     சூர்ப்பநகைப் படுமூளி யுதாசனி
          மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி ...... முழுமோடி
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்
     பேற்றிவிடக் கமலாலய சீதையை
          மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே கொடு ...... முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
     வீட்டில் இருத்திய நாளவன் வேரற
          மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் ...... மருகோனே
வாச்சிய மத்தள பேரிகைபோல் மறை
     வாழ்த்த மலர்க்கழு நீர்தரு நீள்சுனை
          வாய்த்த திருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

தாக்கு அமருக்கு ... தாக்கிச்செய்ய வேண்டிய போருக்கு


ஒரு சாரையை ... ஒரு சாரைப்பாம்பு சென்றதைப் போன்றவனை
(கோழை),

வேறொரு சாக்ஷியற ... அருகில் வேறு ஒருவரையும் சாக்ஷியாக
வைத்து உண்பிக்காமல்

பசி யாறியை ... தான்மாத்திரம் உண்ணுபவனை (சுயநலவாதி),

நீறிடு சாஸ்த்ர வழிக்கு ... திருநீற்றைத் தரிக்கிற சைவசாஸ்திர
வழிக்கு

அதி தூரனை ... வெகு தொலைவில் உள்ளவனை (சிவத்வேஷி),

வேர்விழு தவமூழ்கும் ... மரத்தைத் தாங்கும் வேர்போல்
உயிரைத்தாங்கும் தவத்தில் மூழ்கும்

தாற்பர்யம் அற்று உழல் பாவியை ... நற்பயனை விடுத்து வீணில்
உழலும் பாவியை (நாஸ்திகன்),

நாவலர் போல் ... புலவர் போல நடித்துக்கொண்டு,

பரிவுற்று உனையே கருதாது இகல் சாற்று ... அன்போடு
உன்னை நினையாமல், சண்டை செய்து

தமிழ்க்குரை ஞாளியை ... தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும்
நாயினை (நாய் போன்றவன்),

நாள்வரை தடுமாறி ... இந்தநாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து,

போக்கிடமற்ற வ்ருதாவனை ... வேறு புகலிடம் இல்லாத
வீணனை (வீணன்),

ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை ... மெய்யறிவாளர்களைப்
போற்றாதுவிட்ட துரோக சிந்தனை உடையவனை (துரோகி),

மாமருள் பூத்த மலத்ரய பூரியை ... பெரும் அஞ்ஞானம் நிறைந்த
மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்த கீழ்மகனை (மகாபாவி),

நேரிய புலையேனை ... பறையனுக்குச் சமானமானவனை (மிலேச்சன்),

போக்கிவி டக் கடனோ ... இத்தகைய பாவியாகிய அடியேனை
(முருகா, நீ) நீக்கிவிடக் கடவதோ? (இதுவரை அருணகிரியார் தம்மைத்
தாழ்த்திக் கொண்டு கோழை, சுயநலவாதி, சிவத்வேஷி, நாஸ்திகன்,
நாய்போன்றவன், வீணன், துரோகி, மகாபாவி, மிலேச்சன் என்று
கூறுகிறார்).

கதியானது அடியாரொடு போய் ... மோக்ஷ உலகில் உன்
அடியார்களோடு சேர்ந்து யானும் போய்

பெறுகைக்கு இலையோ ... பெறக்கூடிய பாக்கியம் எனக்கு
இல்லையா?

போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா ... போர் செய்வதும்,
ஒளிவிடுவதுமான வைரம் போன்ற கூரிய வேலினையும், மயிலினையும்
உடையவனே,

அருள்புரிவாயே ... திருவருள் புரியவேண்டும். (இனி, ராமாயணக்
கதைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்).

மூக்கறை ... மூக்கு அறுபட்டவளும்,

மட்டை ... அறிவில்லாதவளும்,

மகாபல ... பெரும் வலிமையுள்ளவளும்,

காரணி ... ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக
இருந்தவளும்,

சூர்ப்பநகைப் படு மூளி ... சூர்ப்பநகையென்ற பெயருடன்,
மூளியான கொடியவளும்,

உதாசனி ... அவமதிக்கத் தக்கவளும்,

மூர்க்க குலத்தி ... மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில்
பிறந்தவளும்,

விபீஷணர் சோதரி ... விபீஷணருக்கு சகோதரியும்,

முழுமோடி ... முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை,

மூத்த அரக்கன் இராவணனோடு ... அண்ணனும்
அரக்கனுமான ராவணனிடம் சென்று

இயல்பேற்றிவிட ... சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில்
புகுத்திவிட,

கமலாலய சீதையை ... தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய
சீதாதேவியை

மோட்டன் வளைத்து ... மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக்
கவர்ந்து

ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய் ... ஒற்றைத் தேரிலே
வைத்து மேகமண்டலம் சென்று,

மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் ... பிரசித்தி பெற்ற,
அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்

இருத்திய நாள் ... (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது,

அவன் வேரற ... அந்த ராவணனின் வம்சமே வேரோடு
அற்றுப்போகும்படி,

மார்க்க முடித்த ... அதற்குரிய வழியை நிறைவேற்றிய

விலாளிகள் நாயகன் மருகோனே ... வில்லாதி வீரர்களின்
தலைவனாம் ராமனின் மருமகனே,

வாச்சிய மத்தள பேரிகை போல் ... வாத்தியங்களான மத்தளம்,
பேரிகை இவற்றின் ஓசை போல

மறை வாழ்த்த ... வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும்,

மலர்க்கழு நீர்தரு ... செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற

நீள்சுனை வாய்த்த ... நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற

திருத்தணி மாமலை மேவிய பெருமாளே. ... திருத்தணிகை
என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே.
நன்றி-கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0272_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Monday, July 15, 2019

திருப்புகழ் 269 சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை)




ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
சிவகுருநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 269 சினத்தவர் முடிக்கும்  (திருத்தணிகை)


பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான


......... பாடல் .........

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் உயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென்று ...... அறிவோம்யாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
     நிசிக் கருவறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
     நிறைப்புகழ் உரைக்குஞ் ...... செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
     தளத்துடன் அடக்குங் ...... கொடுசூரர்

சினத்தையும் உடற்சங்கரித்த மலைமுற்றுஞ்
     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணியிருக்கும் ...... பெருமாளே.
 


......... சொல் விளக்கம் .........

சினத்தவர் முடிக்கும் ... முருகன் அடியார்களை கோபிப்பவர்களது

தலைக்கும்,

பகைத்தவர் குடிக்கும் ... அவர்களைப் பகை செய்தவர்களது
குடும்பத்திற்கும்,

செகுத்தவர் உயிர்க்கும் ... அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,

சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... அவர்களைக் கண்டு கோபமாகச்
சிரிப்பவர்கட்கும்,

பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,

திருப்புகழ் நெருப்பென்று ... திருப்புகழே நெருப்பாகி (அடியோடு
அழிக்குமென)

அறிவோம்யாம் ... யாம் நன்கு அறிவோம்.

நினைத்தது மளிக்கும் ... (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும்
அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,

மனத்தையு முருக்கும் ... (பாடுவோர், கேட்போரின்) மனதையும்
உருக்குவதும்,

பிறவாமல் ... மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்

நிசிக்கரு வறுக்கும் ... இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
அறுப்பதும்,

நெருப்பையு மெரிக்கும் ... அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே
எரிப்பதும்,

பொருப்பையு மிடிக்கும் ... மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய,

நிறைப்புகழ் ... எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை

உரைக்குஞ் செயல்தாராய் ... பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.

தனத்தன தனத்தந்திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... (அதே ஒலியுடன்)

பேரி ... பேரிகைகள் முழங்கவும்,

தடுட்டுடு டுடுட்டுண் டென ... (அதே ஒலியுடன்)

துடி முழக்கும் ... உடுக்கைகள் முழங்கவும்,

தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த

கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூராதி அசுரர்களின்
கோபத்தையும்,

உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அறுத்தெறிந்த பிணமலைகள்
யாவையும்,

சிரித்தெரி கொளுத்தும் ... புன்னகை புரிந்தே அதிலெழுந்த
அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய

கதிர்வேலா ... ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,

தினைக்கிரி குறப்பெண் ... தினைப்பயிர் விளையும் மலைக்
குறவள்ளியை

தனத்தினில் சுகித்து ... மார்புற அணைத்து இன்புற்று,

எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... உயர்ந்தோர்
மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0269_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம். 


Wednesday, July 10, 2019

திருப்புகழ் 267 கூர்வேல் பழித்த (திருத்தணிகை)





ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகை மலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 267 கூர்வேல் பழித்த  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்


தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

கூர்வேல் பழித்த விழியாலே மருட்டி முலை
     கோடால் அழைத்து மலர் ...... அணைமீதே
கோபாவிதழ்ப் பருக மார்போடணைத்து கணை
     கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக்

கார்போல் குழற்சரியவே வாயதட்டி இரு
     காதோலை யிற்று விழ ...... விளையாடுங்
காமா மயர்க்கியர்கள் ஊடே களித்து நம
     கான் ஊருறைக்கலகம் ...... ஒழியாதோ

வீராணம் வெற்றி முரசோடே தவிற்றிமிலை
     வேதாகமத்து ஒலிகள் ...... கடல்போல
வீறாய் முழக்கவரு சூரார் இறக்கவிடும்
     வேலா திருத்தணியில் ...... உறைவோனே

மாரோன் இறக்கநகை தாதா திருச்செவியில்
     மாபோதகத்தை அருள் ...... குருநாதா
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு
     மாலோடணைத்து மகிழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால்
அழைத்து மலர் அணை மீதே ... கூர்மையான வேலாயுதத்தைப்
பழித்து வென்ற கண்களாலே வருபவரை மயக்குவித்து, மலை போன்ற
மார்பால் வரவழைத்து, மலர்ப் படுக்கை மேல்

கோபா இதழ்ப் பருக மார்போடு அணைத்து க(ண்)ணை
கோல் போல் சுழற்றி இடை உடை நாணக் கார் போல் குழல்
சரியவே ... தம்பலப் பூச்சி போலச் சிவந்த வாயிதழ் ஊறலை
உண்ணும்படி மார்புறத் தழுவி, கண்ணை அம்பு போலச் சுழற்றி,
இடையில் உள்ள ஆடை நெகிழவும், மேகம் போல் கருப்பான கூந்தல்
சரியவும்,

வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும்
காமா மயக்கியர்கள் ஊடே களித்து நம(ன்) கான் ஊர்
உறைக் கலகம் ஒழியாதோ ... வாய் அதட்டும் சொற்களைப்
பேசவும், இரண்டு காதுகளில் உள்ள ஓலைகளும் கழன்று விழவும்,
லீலைகளைச் செய்து காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது
மகளிருடன் மகிழ்வுற்று, யமனுடைய நரகில் சேர்ந்து
இருக்கும்படியான குழப்பம் என்னை விட்டு அகலாதோ?

வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேத
ஆகமத்து ஒலிகள் கடல் போல வீறாய் முழக்க வரு(ம்)
சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே ...
வீராணம் என்னும் பெரிய பறை, வெற்றி முரசாகிய ஜய பேரிகை,
மேள வகை, திமிலை என்ற பறை, வேதாகம ஒலிகள் இவையெல்லாம்
கடல் போல மிக்க சிறப்புடன் முழக்கம் செய்ய, எதிர்த்து வந்த சூரர்கள்
இறக்கும்படி செலுத்திய வேலாயுதனே, திருத்தணிகைப் பதியில்
வீற்றிருப்பவனே,

மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா
போதகத்தை அருள் குரு நாதா ... மன்மதன் இறக்கும்படி சிரித்த
தந்தையின் காதுகளில் சிறந்த ஞானோபதேசத்தை அருளிய குரு நாதனே,

மாலோன் அளித்த வ(ள்)ளியார் மால் களிப்ப வெகு
மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே. ... திருமால் பெற்ற
வள்ளி அம்மை மிக்க மகிழ்ச்சிகொள்ள, அதிக ஆசையுடன்
அவளை அணைத்து மகிழ்ந்த பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். மற்றும் கோபால சுந்தரம் ஐயா அவர்கள். 


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்