Friday, November 29, 2019

நாஞ்சில் நாடன்-இடலாக்குடி ராசா சிறுகதை-வாசிப்பு அனுபவம்.





ஓம் முருகன் துணை




நாஞ்சில் நாடன்-இடலாக்குடி ராசா சிறுகதை-வாசிப்பு அனுபவம்.

நகைச்சுவையும் சிரிப்பை உண்டாக்கும், கேலியும் சிரிப்பை உண்டாக்கும். நகைச்சுவை நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்கும் சிந்தனையை கொடுக்கும். கேலி சிரிக்கவைத்தாலும் நினைக்கும்போது தர்மசங்கடத்தை அல்லது மனகாயத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும். 

நகைக்சுவை நான் பெரியவன் என்ற அகங்காரத்தோடு வருவதில்லை. கேலி நான் பெரியவன் என்ற அகங்காரத்தோடு வந்து ஆட்டிவிட்டுப்போகும். எனவே கேலியை நகைச்சுவை என்று நினைத்துக்கொள்ளும் அறியாமையை விடவேண்டும்.

பாண்டவர்கள் இந்திரபிரதஸ்தத்தை உருவாக்கியபோது, இந்திரபிரதஸ்தத்தில் துரியோதனைப்பார்த்து திரௌபதி சிரித்தது நகைச்சுவைக்காக இல்லை. கேலிக்காக, அதன் விளைவு எத்தனை கொடுமைகளை உண்டாக்கியது.

வலம்புரிஜான் சிறுவனாக இருந்தபோது அவர் கிராமத்தில் பணக்காரர் வீட்டிற்கு வரும் ஆங்கில நாளேடு படிக்க சென்றபோது  படிப்பதற்கு மறுக்கப்பட்டு, கேலியாக வெளியே அனுப்பப்படுகிறார். பின்னாநாளில் ஆங்கிலத்தில் பெரும்புலமைப்பெற்று பெரும் பேச்சாளராக மேடையில் வலம்புரிஜான் தோன்றுகின்றார். அவர் பேச்சை கேட்க முன்வரிசையில் அந்த பணக்கார வீட்டுக்காரர் அமர்ந்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தும் வலம்புரிஜான். சொல்கிறார் “அம்பு எய்தவன் மறந்துவிடுவான், காயம்பட்டவன் மறப்பதில்லை”

பாலபருவத்தில் ஸ்ரீராமன் கூனியின் கூன்முதுகில் களிமண் உருண்டையால் அடித்து விளையாடுகிறான். அது ஒரு கேலி. அதற்குதான் கூனி சமயம்பார்த்து ஸ்ரீமன்ராமச்சந்திபெருமானை வணத்திற்கு அனுப்புகிறாள். கேலி திரும்பிவர காத்திருக்கும் அம்பு. 

கேலி செய்பவரை கேலிக்கு உட்படுபவர் பழிவாங்கிவிடுவார் என்பது நடமுறை வாழ்க்கை. எனவே கேலி செய்வதை நிறுத்தவேண்டும் என்பது பொதுநியதி. ஆனால் கேலி செய்தவரை கேலிக்கு உட்பட்டவர் பழிவாங்காமல் விட்டால் வாழ்க்கை துன்புறுவதில்லை மாறாக மனம் துன்புறுகிறது.

வாழ்க்கையை கண்ணால் பார்க்கிறோம், மனதை உணர்கின்றோம். உணர்வதை அறிய அகக்கண் வேண்டும்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு-என்கிறார் திருவள்ளுவர்.

கேலி நாவினால் சுட்டவடுவாகும். இதனால் பாதிக்கப்பட்டது என்ன என்பதை எளிதில் அறியமுடியாது. பாதிப்புள்ளானவர்கள் நெஞ்சம்படும்பாட்டை அறம் அறிந்து திரும்பிவந்து தாக்கும் அந்த தாக்கத்தை தாங்கமுடியது. எனவே கேலி செய்தவர்கள் அதைஅறியும்போது உலகமே புரண்டு தங்கள்மீது விழுந்ததைபோல் இறக்கிவைக்கமுடியாமல் தவிக்கிறார்கள்.

நாஞ்சில்நாடன் எழுதிய சிறுகதை இடலாக்குடி ராசா. கேலியில் விழும் ஒரு உயிரின் செயலால் கேலிசெய்தவர்கள் அடையும் மனசுமையை நம்மீது இறக்கிவைக்கிறது.

பிச்சைகேட்பவர்களைப் பார்த்து கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்து சாப்பிடுங்கள் என்பார்கள். நாற்பது ஐம்பது வயதை எட்டியவன் இடலாக்குடி ராசா. கையும் காலும் நன்றாக இருந்தும், வாட்ட சாட்டமாக இருந்தும் உழைத்து சாப்பிடும் நிலையை அடையமுடியாமல் ஆகிவிடுகின்றான்.  பசிக்கின்ற நேரத்தில் யாருடைய வீட்டிற்காவது வந்து சாப்பாடு வாங்கி சாப்பிடுவான். பெண்கள் எல்லாம் அவனுக்கு சாப்பாடு போட பிறந்த அன்னையும் அக்காவும்தான். அவன் மனம் தாய்மையில் குழைந்து நின்றுவிடுகிறது. யார் வீட்டில் அவன் சாப்பிட்டாலும், ஊரில் உள்ள   அக்கா அம்மாக்கள் அவன் சாப்பிடும் இடத்திற்கே வந்து அன்னம் பாலிப்பார்கள்.  

ஒரு நாள் கல்யாணவீட்டில் கல்யாணசாப்பாடு சாப்பிட போகும் இடலாக்குடி ராசாவை விருந்துபரிமாரும் இளவட்ட பசங்கள் அவனுக்கு மட்டும் சாப்பாடு போடாமல் மற்றவர்களுக்கு மட்டும் சாப்பாடு போடுகின்றார்கள். இடலாக்குடி ராசா சாப்பாடு கேட்டும் பரிகாசம் தொடர்கின்றது. இடலாக்குடி ராசா கண்கள் நிறைந்துவிடுகிறது. அதற்காகவே காத்திருந்ததுபோல் இளவட்டபசங்கள் கேலியில் சிரிக்கிறார்கள். இடலாக்குடி ராசா பந்தியைவிட்டு எழுந்து சாப்பிடாமல் சென்றுவிடுகின்றான். அதன் பின்பு இலவட்ட பசங்களால் சாப்பிடமுடியவில்லை.

இந்த இடலாக்குடி ராசா கதை இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தின் முதல்காட்சியாக அமைந்து உள்ளது.

இந்தகதையில் கேலிதான் நடக்கிறது. இடலகுடி ராசாவிற்கு உணவு மறுக்கப்படவி்ல்லை. உணவை வைத்து அங்கு ஒரு பெரும்கேலி நடக்கிறது. கேலியின் முடிவு கேலி செய்தவனையும், கேலிக்கு உட்பட்டவனையும் வேதனையில் கொண்டு தள்ளிவிடுகின்றது.

கேலிக்கு உட்பட்டவன் வேதனையில் இருந்து தப்பிவிடுவான். கேலி செய்தவன் தப்பவே முடியாது என்பதாக உள்ளது கதை.

நகைச்சுவை செய்யுங்கள். கேலி செய்யாதீர்கள். நகைச்சுவை மட்டும்தான் வலி நிவாரணி. 

ராமராஜன் மாணிக்கவேல்
நவம்பர் 30, 2019.




Sunday, November 24, 2019

சிவபூஜை (சிறுகதை)





ஓம் முருகன் துணை

ஸ்ரீமன்நாராயணன் திருமருகபெருமான் திருவடிப்போற்றி


சிவபூஜை (சிறுகதை)

ராமராஜன்மாணிக்கவேல்

டாக்டர் வந்தியதேவனின் விழிகளில் தேங்கிய கண்ணீர் மின்விளக்கின் ஒளியில் குருதித்துளிபோல் திரண்டு மின்னியது.

செல்போனில் பேசும் அண்ணனுக்கு பதில் சொல்லமுடியாமல் தொண்டை அடைக்க “ம்..ம்” என்றபோது அவர்  உடல் வேதனையில் அதிர்ந்தது.
போன்பேசி முடித்ததும் செல்போனை மேசைமீது வைத்துவிட்டு தலைகுனிந்து சிந்திப்பவர்போல அந்த கண்ணீரை இமைகளாலேயே தேய்த்து அழித்தார்.

எலும்பு முறிவு அறுவைசிகிழ்ச்சை நிபுணரான டாக்டர் வந்தியதேவன் தனது கையில் கைத்தியை எடுத்தால் கூற்றுவன் நோயாளியை விட்டுவிட்டு தனது வாகனத்தையும் மறந்து ஓடிவிடுவான்.

அவர் கண்ணிலா இன்று கண்ணீர்? கண்ணீருக்கே ஆச்சர்யம்தான்.

உதட்டில் மலரும் புன்னகையும், முகத்தில் தவழும் அமைதியும், உள்ளத்தில் ததும்பும் கருணையும் கொண்டு டாக்டர் வந்தியதேவன்  வரும்போதே நோயாளிகளின் மனதில் நம்பிக்கையும், நோயாளிகளின் உறவுகளின் உள்ளத்தில் அமைதியும் கனிந்துவிடும்.

கிராமத்தில் உள்ள டாக்டர் குடும்பத்தின் பூர்வீக  நிலத்தை கைப்பற்றுவதற்காக   பணத்தையும், மனத்தையும் கறுப்பாக வைத்திருக்கும் பக்கத்து தெரு நாகப்பன் தினமும் ஒரு பிரச்சனையை  டாக்டரின் குடும்பத்திற்கு செய்துக்கொண்டு இருக்கிறான்.

கொடுமையின் உச்சமாக அவன் வயலுக்கு மேயபோன தாய்பசுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டான். ”தாயை இழந்த கன்று துடிப்பதை பார்க்க முடியவில்லை, அந்த வயலை அவனிடமே விற்றுவிடுவோம் அதற்காக இன்னும் என்ன என்ன கொடுமை செய்வானோ என்று நினைத்தாலே பயமாக உள்ளது” என்று அண்ணன் சொன்னபோதுதான் டாக்டர் கலங்கினார்.  

மனம் அறிந்த சில உண்மைகளை சட்டம் அறிந்த உண்மைகளாக்க முடியாதபோது பாமரன் முதல் படித்தவன்வரை செய்வதறியாது விழித்து கண்ணீர்தான் விடவேண்டி உள்ளது.

நல்லவர்களின் கண்ணீருக்கு விலை உண்டு, அது எந்த பாறையையும் பிளந்து மூழ்கடித்துவிடும்.

நாகப்பனின் கொடுமைகளை சட்டத்தின் முன் கொண்டு செல்ல மருத்துவரின் குடும்பத்திடம் எந்த ஆதாரங்களும் இல்லை.

நாகப்பன் தருமத்தின் அனைத்து பாதைகளையும் அடைத்துவிட்டு பணப்பாதையில் மட்டுமே நடப்பவன். அவன் தேடிய பணமெல்லாம் இருள்வழிப் வந்த செல்லும் காகிதங்கள் மட்டும்தான்.   பாவவழியல் உண்டாக்கிய பணத்தைக்கொண்டு மேலும் மேலும் பாவத்தையே வாங்கி,  பாவக்கோட்டையை கட்டி தன்னைச் சுற்றி எழுப்பிக்கொண்டு இருக்கிறான்.

ஏழை எளிய மக்களின் நிலங்களை வட்டிக்கு எழுதி வாங்கி உரிமையாக்கிக் கொண்ட  உடமைகள் அவனுடையது. அவன் கால்படும்போது அந்த மண் வயிறு எரிவதை அவனால் அறியா முடியாது.
மருத்துவரின் குடும்ப நிலத்தையும் எழுதி வாங்கிவிட்டால் அதன்பின் மக்களுக்கு நடக்க கூட வழியிருக்காது அந்த வயல்வெளிப்பக்கம். அதன் மூலமே மற்றவர்களின் நிலத்தையும் வாங்கிவிடலாம் என்பதுதான் அவனின்  இறுதித்திட்டம்.

தோள்மேல் கிடந்த  ஸ்டெதஸ்கோப்பை மேசைமேல் வைத்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்த மருத்துவர் மேசைமீது இருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழி புத்தகத்தை தொட்டுக்கும்பிட்டு அதை எடுத்து தனது தலையில் வைத்துக்கொண்டு சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருந்தார்.

மனதில் மலரும் அமைதி அவர் முகத்தில் புன்னகையாக இதழ்விரித்தது.
அமுதமொழியை தலையில் இருந்து எடுத்து மேசைமீது வைத்துவிட்டு ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியே கிளம்பியபோது உள்ளே வந்த நர்ஸ் இந்துமதி மூன்றாம் அறையில் உள்ள  நோயாளி வலியால் துடிப்பதாக சொன்னாள்.

அறையை நோக்கி நடக்கும்போதே அவனுக்கு என்ன மருந்துக்கொடுக்க வேண்டும் என்பதை அறிந்ததால் அவரின் நடையில் கம்பீரம், முகத்தில் சாந்தமும் வந்து இணைந்துக்கொண்டது.

படுக்கையில் கிடந்து வலியால் துடித்த நோயாளியின் மீது டாக்டரின் கைப்பட கைப்பட தாயின் அன்பில் கரையும்  குழந்தைபோல அவன் அமைதி அடைந்தான்.

உறவினர்கள் கையெடுத்துக்கும்பிட்டார்கள், புன்னகையால் அதை ஏற்றுக்கொண்ட டாக்டர்  அடுத்த அறைக்கு செல்லும்போது நாகப்பன் நினைவால் நெற்றி சுருங்குவதைப் அறிந்து தலையை உதறிக்கொண்டார். 
டாக்டரின் கைப்பட்டதும் அமைதியடையும் நோயாளிகளை கண்டு அதிசயம் அடையும் நர்ஸ் இந்துமதி “இந்த அற்புதம் எப்படி டாக்டர்?, உங்களுக்க மட்டும் எப்படி சாத்தயம்? ஒவ்வொரு நாளும் வியக்கிறேன்” என்று உள்ளம் பூரிக்க கேட்டாள்.

நாகப்பன் நினைவில் இருந்து விடுபட்ட டாக்டர் தனது நடையை நிறுத்தி, கம்பீரம் குறையாமல் கழுத்தை மட்டும் திருப்பி நர்ஸைப்பார்த்து “சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் படிப்பது உண்டா?” என்றார்.  

“நமது மருத்துவமனையின் வரவேற்பறையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் படிப்பது உண்டு” என்றாள் மென்குரலில் நர்ஸ் இந்துமதி.

“நல்லது அதில் படித்திருக்கலாமே. “ஏழைகளிடமும், பலகீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான்” என்ற  சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை.  நான் நோயாளிகளை சிவனாகப் பார்க்கின்றேன். எனது தொழிலையே அந்த சிவனுக்கான பூசையாக செய்கின்றேன்” என்றார்.  

நர்ஸ் இந்துமதியின் கைகள் அவளையும் அறியாமல் உயர்ந்து டாக்டரை கும்பிட்டது. அவளுக்கு கோட்டுப்போட்ட சிவபூசை செல்வராகவே  அப்போது டாக்டர் தெரிந்தார்.

அப்போது “காப்பாத்துங்க டாக்டர்” என்று ஒரு கும்பல் விபத்தில் அடிப்பட்ட ஒரு குழந்தையை இரத்தம்  வழிவழிய மருத்துவமனைக்குள் தூக்கிக்கொண்டு ஓடிவந்ததைப் பார்த்ததும் இந்துமதி பரபரப்பானாள்.

மருத்துவமனை ஊழியர்களும் நர்ஸுகளும் மிகவிரைவாக அவசரசிகிழ்ச்கை அறையை தயார் செய்து விட்டார்கள்.

அது தனது குடும்பத்திற்கு தொல்லைதரும் நாகப்பன் குழந்தை என்பதை அறிந்ததும்  டாக்டர் ஈவு இரக்கம் எதுவும் இல்லாத பேய்போல “நான்  கேட்பதைக் கொடுத்தால்தான் மருத்துவம் பார்ப்பேன்” என்றார்.

சற்றுமுன் தனது கண்ணுக்கு சிவபக்தனாக தெரிந்தவரா இவர் என்று நர்ஸ் இந்துமதி வாயடைத்துப்போனாள். அவரை அவள் ஒருநாளும் அப்படிப் பார்த்தது இல்லை. பயந்துப்போனாள். அந்த குழந்தை பிழைப்பானோ இறப்பானோ என்று வேதனைப்பட்டாள்.

டாக்டர் வந்தியதேவனால்தான் இந்த குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மற்ற  டாக்டர்கள் கைவிரித்தப் பின்புதான் நாகப்பன் இங்கு வந்து உள்ளார்.

டாக்டர் தன்னை பழிக்கு பழி வாங்குவதாக நாகப்பன் நினைத்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளும் நேரமில்லை.முடியாது என்று மறுக்கவும் வழியில்லை. 

கண்ணீர் வழியும் கண்ணோடு மருத்துவரின் காலைபிடிக்க ஓடிவந்த நாகப்பன் அவரையும் அறியாமல்  ”எனது சொத்து முழுவதையும் எழுதித்தரேன் டாக்டர் எனது பிள்ளையை காப்பாத்துங்க” என்றார்.

“நீங்கள் சொன்னப்படி எனது குடும்பநிலத்திற்கு பக்கத்தில் இருக்கும் நிலத்தை எனது பெயருக்கு எழுதிக்கொடுங்கள்” என்றார் டாக்டர்.
“எனது மகன் உயிர் பிழைத்தால் போதும், எனது உயிரையே தருகிறேன்” என்றார் நாகப்பன்.

மாயை தயை என்று குருதேவர் அமுதமொழியல் சொன்ன சொல் டாக்டரின் நினைவில் ஏழுந்து அசைந்தது.

நாகப்பனின் பிள்ளைப்பாசத்தைப் பார்த்து மாயை..மாயை என்று டாக்டர் மனதுக்குள் சொல்லிக்கொண்டார். “நான் காப்பாற்றுகின்றேன்”  என்று டாக்டர்கள் சொல்லும்போது இறைவன் சிரிக்கிறான் என்று குருதேவர் சொன்ன சொல் நினைவில் எழுந்ததும் தன்னைத்தானேப் பார்த்து சிரித்துக்கொண்டார்.

இறைவன் அருளால் நாகப்பன் மகன் பிழைத்துக்கொண்டான். நாகப்பன் வேறு வழியில்லாமல் மருத்துவரின் குடும்பநிலத்திற்கு பக்கத்தில் உள்ள இரண்டு காணிநிலத்தை மருத்துவர் பெயருக்கு எழுதிக்கொடுத்தார்.

பத்திரத்தை வாங்கிக்கொண்ட டாக்டர் நாகப்பனிடம் “உங்கள் மகன் உயிருக்கும் ஒரு பசுவின் உயிருக்கும் எந்த வித்தியாசம்  இல்லை என்பதை இனியாவது புரிந்துக்கொள்ளுங்கள், மனிதன் மட்டும்தான் வாழவேண்டும் என்று நினைத்திருந்தால் இறைவன் மற்ற உயிரினங்களைப் படைதிருக்கவே மாட்டார். டாக்டருக்கு படித்திருந்தால்கூட போகிற உயிரை மனிதனால் காப்பாற்ற முடியாது, இறைவனால் மட்டும்தான் உயிர்களை காக்கமுடியும். குழந்தையை நலமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் ” என்றபடியே அந்த பத்திரத்தை திருப்பி நாகப்பனிடமே கொடுத்தார்.

“மன்னித்துவிடுங்கள் டாக்டர், நான் திருந்திவிட்டேன் இந்த நிலத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நிலத்தை வாங்க நினைத்த எனக்கு இது ஒரு தண்டனையாக இருக்கட்டும்”  என்று நாகப்பன் பத்திரத்தை வாங்க மறுத்தார்.

“எங்கள் குடும்பநிலத்தை நமது ஊர் பள்ளி  மாணவிகள் தங்கிப்படிக்க மாணவியர் விடுதிக்கட்டிக்கொள்ள இலவசமாகக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். நீங்களே உங்கள் நிலத்தை வைத்துக்கொள்ளுங்கள், நமது ஊர் மக்கள் நமது சொந்தம் என்று வாழுங்கள். உங்கள் மகனை எனது மகனாக நினைத்துதான் வைத்தியம் செய்தேன்” என்ற டாக்டரின் கைகளை கண்ணீர் மல்க பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டார் நாகப்பன்.   

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை கடைப்பிடிக்கின்றேன். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் படிக்கின்றேன் என்று சொல்லிக்கொள்ளும் மருத்துவர் ஒரு குழந்தையின் உயிரைப் பணயமாக வைத்து நிலத்தை எழுதி வாங்க இருந்ததைப் பார்த்து அவர்மீது அடங்காத கோவம் கொண்ட நர்ஸ் இந்துமதி. டாக்டரின் பெரும்தன்மையைப் பார்த்து வாயடைத்துப்போனாள்.

அவள் மனதில் அசையும்  எண்ண அலைகளை அறிந்த டாக்டர் வந்தியதேவன் சிரித்தபடியே மேஜைமீது இருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் முதல்பாகம் நூலை பிரித்து பதினேழாம் பக்கத்தில் கடைசிப்பாராவை சுட்டிக்காட்டி இந்துமதியை வாய்விட்டுப் படிக்க சொன்னார். அவள் படித்தாள்…

ஸ்ரீராமகிருஷ்ணர் –“உலகில் வாழ நேரும்போது, தீயவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சிறிது தமோகுணத்தைக் காட்டுவது அவசியம்தான். ஆனால் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களுக்கு தீமை செய்யக்கூடாது”.
அவள் மனம் உருகி மென்மையானது.

டாக்டர் சிரித்துக்கொண்டே “அந்த குழந்தையின் உயிரை நான் பணயமாக வைக்கவில்லை,  அந்த குழந்தையையும் நான் சிவனாகத்தான் பார்த்தேன், இந்த  சிவனின் மூலம்தான் அவன் தந்தையின் பேராசை, பொறாமை, குரோதம் என்ற மூன்று சுயநலக் கோட்டையையும் எரிக்கமுடியும் என்று நினைத்து பகவானிடம் வேண்டிக்கொண்டுதான் இப்படி ஒரு நாடகம் ஆடினேன். அந்த குழந்தை அவன் தந்தை பறந்துக்கொண்டு இருந்த முப்புரங்களை எரித்த சிவன்” என்றார்

ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம் தொன்னூறாவது ஆண்டு முதல் மலரில் படித்த “இதயப்பூர்வமாகக் காரியங்கள் செய்பவனுக்கு இறைவனும் உதவிப் புரிகிறான்” என்ற சுவாமி விவேகனந்தரின் பொன்மொழி நர்ஸ் இந்துமதியின் மனதில் மலர்ந்து ஒளிர்ந்தது. 


*****************************
ராமராஜன் மாணிக்கவேல்
ஜுன்-15-2014

ரயிலில்-கடிதம்



ஓம் முருகன் துணை 



ரயிலில்-கடிதம் 




அன்புள்ள ஜெ வணக்கம்.

ரயிலில் சிறுகதை படித்து முடித்ததும் மாபெரும் அறப்போராட்டத்தின் முடிவிலா விளையாட்டின்  வலையில் சிக்கிய மீன்போல் மனம் துடித்தது.அறம் என்னும் வாள் இருபுறமும் வெட்டிச்செல்லும் தொடர் ஓட்டத்தில் யார் விழுந்தாலும் யார் எழுந்தாலும் அதன் நியாய முள் முட்டும் ஆடி ஆடி தனது சமநிலையில் நிற்’கும் அதிசயம் கண்டு அசைவிழந்தேன்.அறத்தின் அளகிலா விளையாட்டை ஒரு ஒழுங்கோடு சமநிலையில் வைக்கும் கதையை இப்போதுதான் பார்த்ததுபோல் படித்ததுபோல் ஆனந்தம்.

இந்த வாழ்க்கை ஒரு ஐந்து நிமிட ஏறுவதும் இறங்குவதும்போன்ற ரயில்தான். ஒழுங்காக ஏறினால் இறங்கினால் மூன்று நிமிடத்தில் நடந்து இரண்டு நிமிடம் நல்லூதியமாக கிடைத்துவிடும், ஆனால் மனிதன் சுழிப்புகளை ’ஏற்படுத்தி தானே தனக்கு தடைமூடியாகவும் ஆகிவிடுகின்றான்.    அந்த சுழிப்பில் அவனே சிக்கி சிடுக்காகி தவித்து சக மனிதர்கள் மீது எரிச்சலும் அவநம்பிக்கையும் கொண்டு உடல்நடுக்கமும் மனநடுக்கமும் கொண்டுவிடுகின்றான். .  வாழ்க்கை என்னும் ரயில் மனித செயல்களின் எந்த அங்கத்திலும் பங்குகொள்வது இல்லை. ஆனால் மனிதன் தன் செயல்களின் வடிவங்களை ரயிலில் ஏற்றி நடப்பது எல்லாம் ரயிலால் ஏற்படுவதுபோல எண்ணிக்கொள்கின்றான். ரயில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படியேதான் ஓடிக்கொண்டு இருக்கிறது. மனிதர்களே அதை போராட்ட களமாக்குகிறார்கள், மனிதர்களே அதை  ஒரே சாதி  ஒரு இனம் என்னும் சமச்சீரான கிராமசாவடியாகவும் ஆக்குகிறார்கள்.

ஒரு செயலின் ஒழுங்கின்மையால் சகமனிதர்கள் மேல் எரிச்சலையும் அவநம்பிக்கையும் உண்டாக்கும் மனம்தான், அந்த செயலின் கொந்தளிப்பு என்னும் குழிழ்களை உடைத்து சமநிலையை அடையும்போது நட்பும் சிரிப்புமாக மாறுகின்றது.  “பிரச்சனைகள் சாதாரணமானவை, தீர்வுகளும் சாதாரணமானவை, அவற்றின் எளிமையைப்பார்க்க ஒருவன் மனதைவிட்டு வெளியே வரவேண்டும்” என்று ஓஷோ சொல்கிறார். ஆனால் சாமிநாதன் மற்றும் முத்துசாமியின் பிரச்சனைகள் சாதாரணமானவைகளா? அதற்கான தீர்வுகளும் சாதாரணமானவைகளா?   சாதாரனமானவைகள்தான். அவர்கள் மனங்களை விட்டு வெளியில் வரவில்லை. வெளிவராத அவர்களின் மனங்கைளைத்தான் இங்கு கதையின் வழியாக அறம் இருபுறமும் வெட்டி எறிந்து வெளிவரவைக்கிறது. இருபுறமும் அறம் வெட்டும்வேகம் அதிவேகம், வெட்டும் ஆழம் மிகுஆழம். அந்த வேகமான ஆழமான வெட்டுதலில் ஜொளிக்கின்றீர்கள் ஜெ. அதற்குதான் இந்தகதைகள்  ஜெவை தேர்ந்து எடுக்கின்றன.

அறம் முத்துசாமியின் குடும்பத்தை வெட்டும் என்பதை சாமிநாதன் எண்ணுவது சாதாரணம்தான், ஆனால், முத்துசாமியின் குடும்பத்தை அறம் வெட்டிவீழ்த்தி முடிக்கும்போது சாமிநாதன் முகம் தெளிவடைந்தாலும், சாப்பிட்டே ஆகவேண்டிய காலத்தில் சாப்பிடமுடியாமல் மனதை ஆட்டிவிடுவதுதான் அறத்தின் வெற்றி. ஆனால் முத்துசாமியால் எளிதாக சாப்பிடமுடிகின்றது. சாப்பிடுங்கள் என்று சொல்லமுடிகின்றது. அறம் யார் பக்கம் எப்போது நிற்கும் என்று யாராலும் சொல்லிவிடமுடியாதோ? இல்லை. அறம் அங்குதான் இருக்கிறது. யார் அறத்தின் அருகில் சென்று நிற்கிறார்கள் யார் தூரத்தில் சென்று நிற்கிறார்கள் என்றுதான் பார்க்கப்படுகிறது.

அறம் அதிசயமான சக்கரம் அருகில் இருப்பவனுக்கு தர்மசக்கரமான விசிறி அவனின் இரத்தவேர்வையை உலரவைத்து துயிலவைக்கிறது, தூரத்தில் நிற்பனுக்கு கழுத்தறுக்கும் காலசக்கரமாகி இரத்தம் குடிக்கிறது.

இந்த கதையில் சாமிநாதனை அறிமுகம் செய்யும்போது மனிதர்களிடம் எரிச்சலையும் அவநம்பிக்கையும் கொள்ளும் நடுங்கும் மனிதனாக காட்டி உள்ளீர்கள். முத்துசாமியை தீயில் வாட்டிய முகம்கொண்டவராக காட்டி உள்ளீர்கள். கருமையும் நரையும் கலந்ததோற்றத்தில்  அவரை நீறாக்கிவிட்டீர்கள். அறம் இருவரையும் இருவேறு விதத்தில் வாட்டி வதக்கி வைத்துவிட்டது. அறத்தைப்பொருத்தவரை இருவரும் வேறுவேறு அல்ல ஒருவரே தான். அறத்தின் சுழற்சியில் இருவரும் சிக்கி இருவேறு நிலையை அடைகிறார்கள். சாமிநாதன் தெரியாமல் செய்ததுபோல், என்னால் முடிந்ததை செய்தேன் என்பதுபோல அறமற்றதை செய்கிறார் ஆனால் அவர்மனம் அதை அறியும். முத்துசாமி தனது தந்தையால் தெரிந்தே செய்கிறார் அது தொழிலாகப்பார்க்கப்படுகிறது.  இருவர் பெயரிலும் சாமி சமமாக இருக்கிறது. மீதிதான் வேறுவேறாக இருக்கிறது. உலகில் உள்ள எல்லாமனிதர்களிலும் பாதி சாமிதான் மீதி என்ன என்பதுதான் கேள்வி.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
பெண்கள் தெரிந்து கடைப்பிடிக்கிறார்களோ அல்லது தெரியாமல் செய்கிறார்களோ, அல்லது அவர்கள் சுபாவமே அப்படி செய்யப்பட்டு உள்ளதா? சாமிநாதனின் மனைவியும், முத்துச்சாமியின் அம்மாவும் அச்சத்தினாலோ அறத்தினாலோ ஒதுங்கிக்கொள்ள சொல்லும் இடத்தில் ஒதுங்கி இருந்தால் ஓஷோ சொன்னதுபோல இந்த வாழ்க்கையின் பிரச்சனைகள் எத்தனை சாதாரணமானவையாக இருந்து இருக்கும். ஆனால் ஆசையும் அகங்காரமும் அல்லவா மனிதனை அறத்திற்கு எதிராக நிற்க வைக்கிறது.

அந்த வீட்டை விற்றபணத்தில்தான் சாமிநாதன் தன் இரண்டு பெண்களை நன்றாக வாழவைத்தார். அந்த வீட்டை விற்றதால்தான் முத்துசாமி தன் இரண்டு பெண்களின் வாழ்க்கையை தொலைத்தார். அந்த வீடுதான் அதற்குகாரணம் என்று சராசரி உலகில்  மனிதன் நினைக்கிறான். ஆனால் அந்த வீட்டிற்கும் அந்தபெண்களுக்கும் இடையில் அவர்கள் குடும்பத்தாரின் ஆசைகள் அகங்காரங்கள் காரணமாக உள்ளன.  முத்துசாமியின் அம்மா கணவரின் சொல்லுக்கு அடங்கி உள்ளே செல்லாமல் அறம் சிறுகதையின் நாயகி ஆச்சிபோல் வெளியில் வந்து நடு ரோட்டில் வந்து உட்கார்ந்து இருந்தால், அவரின் பேரபிள்ளைகள் நாடுவீதியில் விழுந்திருக்க மாட்டார்கள் அல்லவா? அறம் தவறும் இடங்களில் பெண்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். அது ஏன் உலக்கு புரிவதே இல்லை?  பெண்கள் அறத்திற்கு அருகில் தன்னை வைத்துக்கொள்ளவேண்டியதுதான் எத்தனை அவசியம். பெண்சக்திக்கு அறம்வளர்த்த நாயகி என்று பெயர்வைத்தவர்கள் வாழ்க!

சாமிநாதனும், முத்துசாமியும் பயணிக்கும் வாழ்க்கை ரயிலில்தான் பிறர் உலகத்தில் இருப்பதையே தெரியாத மார்வாடிக்குடும்பமும் இருக்கிறது. அவர்களுக்கு அடுத்தவர் பேசும் மொழி என்பது வெறும் சத்தம். அவர்கள் வயிறு நிரம்பியவர்கள், நிரப்புவர்கள் என்பது எத்தனை பெரிய நிதர்சனம்.  பிறர் என்பதே உலகத்தில் இல்லை என்று நினைத்து பாட்டுக்கேட்டு துயிலும் இளைஞனும் இருக்கிறான். வாழ்க்கை ரயிலில்தான் இத்தனையும் நடக்கிறது. வாழ்க்கை இரயிலுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அது அத்தனையும் சுமந்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது.

எத்தனை பெரிய அறம் வந்து அடித்து கரை ஒதிக்கினாலும் மானிட மீன்கள் தன் இறையை எப்படி விழுங்குவது என்ற போட்டியில் போட்டிப்போட்டுக்கொண்டேதான் இருக்கிறது. முத்துசாமி தனது பெண்ணிற்கு திருமணம் முடிக்கும் விதத்தைப்பார்க்கும்போது தோன்றுகின்றது. கரையேறிய மீன்கள் வாழமுடியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும், அவைகளுக்கு  அலைகளின் ஊஞ்சல் கிடைக்காது. மீன்கள் அலைகளின் ஆடலில் இருக்கவே முயல்கின்றன. இது வாழ்வின் சுவை.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சரிடம் இறைவன் ஏன் மனிதர்களை மயக்குகின்றான்? என்று கேட்பதற்கு. “இறையானந்தத்தின் ஒரு துளியை மனிதன் சுவைத்துவிட்டாலும் இந்த வாழ்க்கை அவனுக்கு வெறுத்துவிடும், இந்த வாழ்க்கை விளையாட்டு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருப்பதற்காகத்தான் மயக்குகிறார்” என்று சொல்வார்.

எத்தனை முறை ஏமாந்தாலும், எத்தனை முறை ஏமாற்றினாலும் இந்த ஏமாற்றுதல்கூட வாழ்க்கையாக இருப்பதுதான் நகைச்சுவை. அந்த நகைச்சுவையில்தான் எத்தனை கண்ணீர்.

ரயிலில் சிறுகதை அறம் காலனாகவும், காலகண்டனாகவும் இருவேறு தோற்றம் காட்டும் கதை. அறத்தை ’சுமந்துபோகும் வாழ்க்கை என்னும் ரயில் பயணித்த கணம் இது.    நன்றியும் வணக்கமும் ஜெ.


அன்புடன்
மாணிக்கவேல் ராமராஜன்.
நன்றி-ஜெயமோகன்.இன். ரயிலில்-கடிதம்

நிலம்-கடிதம்






ஓம் முருகன் துணை 

நிலம்-கடிதம்

நிலம்(சிறுகதை)

அன்புள்ள ஜெ வணக்கம்.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வடமேற்கே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது.  அங்கு ஒரு ஜமின்தார்.  அந்த ஜமின்தாரை ஆள்வைத்து வெட்ட பக்கத்து ஊர் மிராசால் கணக்குபோடப்பட்டது. எளிய மனிதர்களுக்கே கர்வ எதிரியோ கௌரவ எதிரியோ இருக்கும்போது ஜமின்தாருக்கு கொலைகார எதிரி இருப்பது  எப்படி அதிசயமாகும்.
ஆறு கொலைகாரர்கள். நால்வர் வீட்டுக்கு வெளியில் காவல். இரண்டுபேர் வீட்டு ஓட்டைப்பிரித்து உள்ளே போய்விட்டார்கள். தூங்கும்போதே தலைவேறு உடம்புவேறு என்று ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் திட்டம்.
உள்ளே போனவர்கள் வெளியே வரவில்லை. ஜமின்தார்தான் வெளியே வந்தார். வெட்டப்போனவர்கள் ஜமின்தார் பின்னால் மெய்காப்பாளன்போல வந்தார்கள். வெளியில்  இருந்தவர்களும் வேலையாள் கையில் மாட்டிக்கொண்டார்கள்.
கொலை செய்ய வந்தவர்களை கட்டிவைத்து அடித்துக்கொல்லவேண்டும் என்றது ஊர்.
“திருந்துனவனுவள ஏன்டா கொல்லனும் திருந்தாதவனுவள” என்றார் ஜமின்தார்.  ஆட்டம்போட்டதலைகள் கவிழ்ந்து அடங்கின.
ஜமின்தாரை வெட்டுவதற்கு உள்ளே சென்றவர்கள் அவரின் தோற்றத்தையும்  அவர் படுத்திருக்கும் அழகையும் பார்த்து, “ஸ்ரீரங்கநாதர்போல இருக்காருடா” என்று ஓங்கிய கொடுவாளை இறக்கிவிட்டு அவர்காலில் விழுந்துவிட்டார்கள்.
கண்ணுக்கு தெரியும் மனித உருவம் கண்ணுக்கு தெரியாத மனதில் ரசவாதம் செய்து மனிதனிடம் மனிதன் கட்டுண்டு கிடக்க செய்கிறது.
இராவணன் அன்னை சீதையால் துரும்புக்கும்  அப்பால் உள்ள துரும்பாக பார்க்கப்படும்போதுகூட அவன் கோபத்தையும் காமத்தையும் தனிக்க அவனை பிரியமாக அனைக்கிறாள் அவன் மனைவி தான்யமாலினி. இடம் பொருள் இல்லாமல் என்ன ஒரு மோகம் ராவணன்மேனிமீது.
உடம்பின் வழியாகத்தான் மனிதர்கள் மனிதர்களின் மனங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகிறார்கள். மனதின் வழியாக நெருக்கமாகும் மனிதர்களும் உடம்புக்குதான் மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். உடம்பு ஒரு மாயவலையை மற்றவர்கள்மீது வீசிக்கொண்டே இருக்கிறது.
காரைக்கால் அம்மையை பிரிந்துபோன கணவன், உண்மையில் யாரை பிரிந்துபோனான். அம்மையின் உடம்பையா? உள்ளத்தையா? உடம்புதான் அவனை வதைக்கிறது. உள்ளம் அவனைத்தானே எண்ணிக்கிடந்தது. உடம்பை பிரிந்ததால்தான் தான் பெற்ற பிள்ளைக்கு தன் மனைவியின் பெயர் வைக்கிறான். ஒரு உடலை பிரிந்து இன்னொரு உடல் பெற்று பயம் தெளிகிறான். அன்னையும் அந்த உடம்பைத்தான் உதறி வெளியேறுகிறார். தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளவறியா மனம் தரும் என்ற அபிராமி பட்டர் தெய்வ வடிவம் தரும் என்கிறார். தெய்வ வடிவம் பெறுதல் ஒரு கொடை.
உருவங்கள் எல்லாம் தெய்வ வடிவங்கள்தான். பலது அணுவாக இருக்கிறது அதனால் அதுகண்ணில் நிறைவதில்லை. சிலது கடலாக இருக்கிறது அதனால் அள்ளிக்கொள்ள கண்கள் போதவில்லை . ராமலட்சுமியின் கணவன் வடிவம் வெட்டுவேல் அய்யனார் உருவமாக இருக்கிறது. இருக்கிறது என்பதை விட அவளுக்கு அப்படி தெரிகிறது.  இருப்பதெல்லாம் தெரியும் என்பது இல்லை, தெரியவேண்டியவர்களுக்கு தெரியவேண்டிய நேரத்தில் தெரிகிறது. ராமலெட்சுமிக்கு தெரிகிறது. சிலநேரங்களில் சிலதுகள் தெரியாமல் இருந்துஇருக்லாம். தெரியவேண்டியது தெரிந்துவிடும்போது, நடக்கவேண்டியது நடக்காமல் போகிறது. நாடக்காது என்பதும் நடந்துவிடுகிறது.
ராமலெட்சுமி சேவுகப்பெருமாளுக்கு உடம்பால்தான் மனைவியாக இருக்கிறாள். மனதால் பக்தையாகிவிட்டாள். உயிருள்ள ஐயனார். இருபது வருடத்திற்கு முன்பு முதன் முதலில் ஐயனாரை வழிபட வந்தவளை ஏன் அந்த பொத்தைமுடி வெட்டுவேல் ஐயானார் கணவனுக்கு மனைவியை பக்தையாக்கினார்? அவள்தான் எல்லாம் என்று அவன் மனம் முழுவதும் நிறைவதற்காக.
குழந்தைகாக்க இல்லை, தனக்காக அவள் அவனுக்கு இன்னொரு கல்யாணம் கட்டிவைக்க நினைக்கிறாள், ஒரு பக்தையின் வழிபாட்டு மனம் அதை செய்கிறது. மனைவியாக அதை செய்ய முடியுமா? மண்ணுள்ளது, பிள்ளை இல்லை என்பது எல்லாம் இரண்டாம் பச்சம்.
அவன் தன்னை ஐயனாராக நினைக்கிவில்லை ஆனால் அவள் நினைக்கிறாள். அவளால் அவனும் ஐயனாராக சத்தியத்திற்கு கட்டுப்படுகிறான். அவன் அவளால் ராமனாக வாழ்கிறான்.
இந்த கதையில் ராவணனும் சுட்டப்படுகிறான். துரியோதனனும் சுட்டப்படுகிறார்கள். இருவமே அழிவின் சின்னம். அடங்கா ஆசையின் அடையாளம். ஆனால் இருவரின் மனைவிகளும் அவர்கள்மீது கொண்ட காதல் பெரியது. அவர்கள் மனைவிமீது அவர்கள் கொண்ட காதலும் பெரியது. துரியோதனன் மனைவிமீது கொண்ட அன்பில் மண்ணில் எந்த கணவனையும் அண்ணாந்துப் பார்க்க வைக்கிறான்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹைம்சர் பெண் ஆணின் முக்கால்பங்கு மனத்தை பிடித்துக்கொள்கிறாள். குழந்தைகள் வேறு பிறந்துவிட்டாள் அப்புறம் அதில் கடவுளுக்கு எங்கே இடம்? என்று கேட்கிறார். இத்தனை பெரிய சேனைகள் கொண்டு துரியோதனன் மண்ணைபிடிக்க மொத்த குலத்தையும் இழந்தது எல்லாம் அவன் பானுமதிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்த மனம்போக இருந்த தூசளவு மனத்தில் ஒட்டியிருந்த மண்ணாசையினால்தானா? அல்லது பானுமதி கணவன் பங்குபோட்டுக்கொள்ளாத மண்ணுக்கு சொந்தகாரன் என்று பானுமதி நினைக்கவேண்டும் என்பதற்காகவா?
மனித மனம் எத்தனை சிறிய புழுதிக்கு ஆசைப்பட்டு, தன்  இரத்தத்தையும், உடன் பிறந்தாரின் இரத்தத்தையம் புழுதியில்  சிந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறது.
சேவுகபெருமாள் அடங்காத மண்ணாசையை உடையவனாக இருப்பதுகூட அவன் மனதில் பெரும்பகுதியை தன் மனைவிக்கு கொடுத்ததால்தான் இருக்குமோ?. அவன் அரிவாள் தூக்கி மண் சேர்ப்பதெல்லாம் அவள் மகாராணியாக வாழத்தானா? எதன்மீது மனம் ஒட்டிக்கொள்கிறதோ அதை பெரிதாக்க மனம் எல்லாம் வழிகளையும் கடக்கிறது. பிரபஞ்சத்தில் எதுவுமே பெரிதில்லை. எல்லாம் சமம். ஒன்றை பெரிதாக்கினால் ஒன்றை சிறியதாக்குகிறோம். பெரியதாக்கியதின் பெருமைக்கு  பரிசு வாங்கினால் சிறியதாக்கியதின் சிறுமைக்கு விலைக்கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் பிரபஞ்சநீதி.
சேவுகபெருமாள்போல் பத்துமடங்கு நிலம் வைத்திருந்தவர்தான் இன்று பண்டாரமா கிடக்கிறார். அவர் பிரபஞ்சவிதிக்குள் வாழ்கிறார். சேவுகபெருமாள் பிரபஞ்சவிதிக்கோட்டுக்கு இப்பால் நின்று அப்படி ஒன்று இருந்தால் இருந்துவிட்டுபோகட்டுமே என்று நிற்கிறான்.
ராமலட்சுமி //‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச?’// என்று கேட்கும்போது //‘பிள்ளை இல்லாததனாலதான்…’ என்று சிரிக்கும்போது. சமன் செய்யப்படாத மனம் வீங்கிவிடுகின்றது என்பது தெரியாமல், அறியாத மனங்கள் அதை வளர்ச்சி என்று ஏமாறுகின்றன என்பதை உணர்த்துகிறார்.
நூறு ஏக்கர் வச்சிருக்கிற சேவுக பெருமாள் பண்டாரத்தை கூர்ந்து நோக்கிநின்றபோதே கண்டுகொண்டு இருப்பான். அவனைவிட பத்துமடங்கு நிலம்வைத்திருந்த ஒட்டபிடாரம் கிட்ணப்பநாயக்கருதான் பண்டாரமாக இருக்கிறார் என்பதை.  கண்கள் கவர்ச்சியை நம்பும் அளவு உண்மைகளை நம்புவது இல்லை. அவன் கண்கள் கண்ட உண்மையை நம்பி இருந்தால் தன்னைவிட பத்துமடங்கு வைத்திருந்தவன் பண்டாரமாகிவிட்டான் நாம் எம்மாத்திரம் என்று உணர்ந்துவிடுவான்.  உண்மையை பார்ப்பது உடற்கண்கள் இல்லையே. அறிவுக்கண். அறிவுக்கண்  அடிப்பட்டபின்புதான் விழிக்கும்.
சேவுகப்பெருமாள்போல் பத்துமடங்கு சொத்துவைத்திருந்த பண்டாரம் சேவுகப்பெருமாள் மனைவி பிச்சிபோடும் இரண்டு பழத்தை கேட்கும் இடத்தில் இருக்கிறார். சேவுகபெருமாள் இன்னும் பத்துமடங்கு சொத்து சேர்த்து கிட்ணப்பநாயக்கர் இடத்திற்கு செல்ல நினைக்கிறான். ராமலெட்சுமி இனி தாயாக முடியாது என்று என்ற இடத்திற்கு வந்து நின்று சாமிக்கு படைக்கும் தேங்காயை உடைத்துப்போட்டு குரங்குக்கும் தாயாகி நிற்கிறாள். மூவரும் ஒரு புள்ளியில் நிற்கிறார்கள் ஆனால் அவர்கள் வந்தபாதையும் போகும்பாதையும்   எத்தனை தூரமானது. எப்போதும் வாழ்க்கை மனிதர்கள் நிற்கு புள்ளிக்கு அப்பால் அப்பால் சென்று நின்று மனிதர்களை இழுத்துக்கொண்டே இருக்கிறது.
சௌதியில் கேம்புக்கு அருகில் ஒரு நாள் வாக்கிங் செல்கையில் ஒரு தாய்நாயையும் அதன் பத்திற்கும்மேல் பட்ட குட்டிகளையும் பார்த்தேன். “ஒரு நாய் இத்தனை குட்டிப்போடுமா!” அத்தனை குட்டிகளுடன் ஒரு தாய்நாயைப்பார்த்ததும் அந்த வீதியே மறைந்து ஒரு தேவதை உலகம் கண்முன் விரிந்து உணர்வலையில் ஆழ்த்தியது. எத்தனை குட்டிகள் என்று என்னத்தொடங்கியவன். சற்றென்று அந்த தாய்மையின் உச்சத்தை எண்ணிக்கையினால் அடக்கவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். கேம்பிற்கு அருகில் கடற்கரை மாங்க்ரோ குறுங்காடு. அது அங்கிருந்து வந்திருக்கலாம். அத்தனை குட்டிகளுடன் ஒரு தெருநாயைப்பார்ப்பது அதுதான் முதல்தடவை. அது அபூர்வமான தருணம்கூட. அருகில் இருந்த கடையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிஸ்கட்டைப்போட்டேன். அந்த தாய் அதே ராஜகம்பீரத்துடன் சலனமில்லா நோக்குடன் நோக்கிப்படுத்திருந்தது. குட்டிகள்தான் ஓடிவந்து தின்றன. மறுநாளும் அப்படிதான். அந்த தாயிடம் உணவுக்காக ஏங்கிஓடிவரும் வாளாட்டும் எந்த அறிகுறியும் இல்லை. “நான் தாயிடா” என்ற ராஜகம்பீரம். தெய்வங்கள் குழந்தையாகிவிடும் தருணம். தாயானால் அப்படி ஒரு கம்பீரம் வருமா?.
பெண் தாயாக நினைப்பது பிள்ளைகளை பெறுவதற்காக மட்டுமில்லை என்று நினைத்துக்கொண்டேன். அது மனிதகுலமாக இருந்தாலும், மற்ற உயிர் குலமாக இருந்தாலும்.   மண்ணை விண்ணை  அவள் அந்த அன்பின் கோபுரத்தால் இணைக்கிறாள். மண்ணை  உயிர்விப்பதற்கு அது அவள்வழி வரும் அமுதத்துளி.
பரமஹம்ச யோகனந்தர் துறவியாகிவிடக்கூடாது என்று காவல்காத்துக்கொண்டே இருக்கும் அவர் தந்தை, அவர் துறவியான பின்பு ஒரு நாள் ஆசிரமத்திற்கு வந்து  பார்க்கிறார், அவர் கல்விக்கொடுத்து காத்து வளர்க்கும் குழந்தைகள் அவரை சூழ்ந்து நின்று அவரை கருணைதந்தையாக்கி இருப்பதைக் கண்டு மகிழ்கின்றார்.
பண்டாரம் ராமலெட்சுமியை பார்த்துச்சொல்கிறார் ‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’
வாழ்க்கையில் இல்லை என்பதே இல்லை. மனிதன் மட்டும்தான் இல்லாமையில் இருக்கிறான். இல்லாமையை தாண்ட தெரிந்தவர்கள் இடத்தில் உலகமே இருக்கிறது.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.
நன்றி-ஜெயமோன்.இன். நிலம்-கடிதம்

குருதி-கடிதம்






ஓம் முருகன் துணை

குருதி(சிறுகதை)-கடிதம்

குருதி(சிறுகதை)

அன்புள்ள ஜெ வணக்கம்.
உங்கள் கதையின் பாத்திரங்கள் உருவமாக சொல்லாக செயலாக உணர்வாக உயிபெற்று வந்து, மனமுடையவர்களா வாழ்ந்து, வாசகனை வாழவைத்துவிட்டு செல்கின்றனர்.
சேத்துக்காட்டார் தனது பேத்திதலையில் கைவைத்து ஆசிர்வதிக்கும்போது அவர் நம்முன் நம்முள் ஒருத்தராக வந்து நின்று மனம்படும் பாட்டை காட்டி தன் இருப்பை நம் மனத்திற்குள் ஆழ நின்று நெஞ்சம் நெகிழவைக்கின்றார்.
எட்டு ஆண்டுகள் காத்திருந்து நாயக்கர் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று நிற்கும்போது அவர் வெறும் கதை மாந்தர் இல்லை. ஓடுக்கப்பட்டு அழுத்தப்படும் மனிதர்களின் முகவரியாய் எழுந்துவரும் தீப்பொறி. மொத்த காட்டையே உண்டு எழுந்து நிற்கும் அக்கினிகாடு. எரியாத மரம்கூட அந்த தீச்சுடர்ப்பட்டு ஒளிர்ந்து எரிமரம் என்று நிற்கும். அவர் அருகில் இருக்கும்போது சுடலை அப்படிதான் ஆகின்றான்.
பஸ்ஸில் போகும்  சுடலை, தன் மாரில் சொட்டும் நீரை தன்கண்ணீர் என்று நினைத்துக்கொள்வதும். அவன் தன் கேவல் ஓலியை வேறு யாருடைய கேவலோ என்று நினைப்பதும் வெறும் கதை பாத்திரத்தின் செயல் அல்ல. நூல் அறுந்து வெட்டிவெளியில் துடிக்கும் பட்டம்போல மனம் அறுந்த மனிதன் வாழ்க்கையின் திசையற்ற நிலையில் சிக்கி தவிக்கும் பரிதாபம்.
குருதி கதை குருதி சிந்துவதைப்பற்றி சொல்வதுபோல் தோன்றினாலும், தன் வழிவந்த குருதி இந்த மண்ணில் நின்று நிலைத்து வாழ்வதைப்பற்றி சொல்கிறது.
சேத்துக்காட்டார் பாத்திரம் வன்மத்தை வஞ்சத்தை துரோகத்தை பழிவாங்குதலை வாழ்தலின் அர்த்தமாக கொள்ளவேண்டும் என்பதுபோல் காட்டினாலும், இந்த மண்ணில் வன்மம் வஞ்சம் துரோகம் பழிவாங்குதலைத்தாண்டி வாழவேண்டும் என்று காட்டுகின்றது. எட்டு ஆண்டுகள் பழிக்கு பழி தீர்க்க காத்திருக்கிறார். ஜெயிலில் தனது வயலில் உழைப்பதுபோலவே உழைக்கிறார். விடுதலைக்கு பின்பு தனியிடத்தில் வாழ்ந்தாலும் சுடலைபோல என்ன வாழ்க்கை எதற்கு வாழ்கிறோம் என்று நினைக்காமல், போதைக்கு அடிமையாகாமல் வாழ்கிறார். சேத்துக்காட்டார் வாழ்தலின் சுவையிலேயே வாழ்கிறார். மற்றவர்கள் வாழவேண்டும் என்றுதான் கொலைசெய்கிறார். அவரை பொறுத்தவரை அவர் செய்தது கொலை இல்லை அறம்.
மண்ணில் பிறந்த எல்லா உயிரும் இறந்துவிடும். இறப்பு என்பது நிச்சம். ஆனால் வாழ்ந்து பார்க்கவேண்டும், அந்த வாழ்க்கை சுவையில் களிக்கவேண்டும் என்பதை  நோக்கமாக கொள்ளவேண்டும் என்று காட்டுகின்றார்.
தக்காளி தோட்டத்திற்கு காவலுக்கு இருந்த பெரியமகன் வெட்டப்பட்ட பின்னும், அழிக்கப்பட்டதுபோக ஒடிந்து கிடக்கும் தக்காளி செடியை எழுப்பி குச்சிவைத்து கட்டி தண்ணீர் பாச்சி  உயிர்ப்பிக்கறதுதான் வாழ்க்கை என்பதை சொல்லாமல் செய்து காட்டுகின்றார்.
பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டிய நேரத்தில் எட்டுவருடம் கழித்து ஏன் சேத்துக்காட்டார் நாயக்கர்களை வெட்டி ஜெயிலுக்குபோகவேண்டும்? இது அறியாமையால் செய்தது இல்லை, ஆணவத்தால் செய்தது இல்லை, ஆசையால் செய்தது இல்லை. மனிததரத்திற்காக செய்தது.
எத்தைனை பெரிய விலங்காக இருந்தாலும் பயம் காட்டினால் ஓடிவிடும். காரணம் எல்லா உயிர்களுக்கு உள்ளும் பயம் இருக்கிறது. பயத்தாலேயே அனைத்து உயிர்களும் அடுத்த உயிர்கள்மீது நம்பிக்கை அற்று, அந்த நம்பிக்கை இன்மையின் காரணத்தால் பயத்தை நீக்குவதாய் நினைத்து, எதிரிகளை உருவாக்கி அந்த எதிரிகளாலும் பயத்தோடேயே வாழ்கின்றது. உயிர்களின் பெரும் பயம் உயிர் பயம். உயிரை  வாங்குவதால் மரணத்தின்மீது பயம். எனவே மரணபயமே பெரும் பயமாக உயிர்களை வதைக்கிறது. சேத்துக்காட்டாருக்கு மரணபயத்தை காட்டிய நாயக்கருக்கு பயந்துகொண்டு சேத்துக்காட்டார் ஓடியிருந்தால் அவரும் விலங்குதான்.   விலங்குகள் எப்போதும் நிலத்தில் இருக்கின்றன. ஆனால் நிலம் அற்று இருக்கின்றன. ஒவ்வொரு பயத்திற்கும் ஓடிகொண்டே இருக்கின்றன. விலங்குபோல் அவர் பயத்திற்காக ஓடாமல், எங்கே இழந்தாரோ  அங்கேயே தேடுகின்றார். எவர் அழித்தனரோ அவரை அழிகின்றார். இந்த ரௌத்திரம், இந்த அஞ்சாமை, மனிதனை விலங்கு தளையில் இருந்து உயர்த்தி மனிததரத்தில் வைக்கிறது.
மனிததரம்,பெரும் பணிவு, பெரும் அன்பு பெரும் கருணைக்கு தடையாக இருக்கும் பேராணவத்திற்கு எதிராக தன் மறுப்பக்கத்தை காட்டியே தீரவேண்டிய நிலையில் உள்ளது. கரியில் இருந்து தீ பிறப்பதுபோல,அந்த மறுப்பக்கத்தின் விலங்கு வேட்டையிலிருந்தே  பெரும்மனித முகம் காட்சிக்கொடுக்கிறது. இல்லை என்றால் பெரும் பணிவு, பெரும் அன்பு, பெரும் கருணை, பெரும் தியாகத்திற்கான அர்த்தங்கள் வரலாறுகள் ஆகாமலே போய்விடும்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. –என்கிறார் திருவள்ளுவர்.
எட்டு ஆண்டுகளாய் காத்துத்கிடந்து சேத்துக்காட்டார் கொலை செய்வதாய் சட்டம் சொல்கிறது. ஆனால் அவர் கொல்வது மனித விலங்கை, மனிதனுக்குள் இருக்கும் அன்பற்ற தன்மையை, வஞ்சத்தை, கொடுமையை, விலங்குதனத்தை. சட்டத்தால் அதை புரிந்துக்கொள்ளமுடியாது. அறம் அதை புரிந்துக்கொள்ளும்.
இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்னால் வீட்டிற்கு வரும் திருமணபத்திரிக்கையின் பின்புறம்  மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீ்ட்டார் உறவினர் வரிசையில் யாராவது ஒருவர் பெயராவது பெரும்நிலக்கிழார் என்ற வாசகத்தோடு இருக்கும். இன்று அது கேம்ப் சிங்கப்பூர் சௌதி துபாய் குவைத் என்று மாறியுள்ளது. பெரும்நிலக்கிழார் என்ற வாசகமே இல்லை என்றுகூட சொல்லலாம்.
பெரும்நிலக்கிழார் என்ற சொல் மாறிவிட்டதே தவிர அந்த தோரணை ஆசை    வேறு வடிவம்பெற்று வெளிப்படுத்த முடியாத பணத்தொகையின் வடிவாக உள்ளது. வீடு மனை வண்டி வாகனம் என்று உள்ளது. பார்க்கிற வீட்டை எல்லாம் வாங்கவேண்டும். கிடைக்கிற மனையை எல்லாம் வாங்கவேண்டும். ஏன் இத்தனை வண்டி வாகனம் என்ற காரணமே தெரியாமல் வாங்கவேண்டும். காரணம் மனிதன் மனிதனை சமமாக உட்காரவிடக்கூடாது என்ற எண்ணதில் அலைகிறான்.
அநாதி காலத்தில் இருந்தே மனிதனிடம் இந்த அங்காரம் இருக்கும்போல. தனக்கு நிகராக தன்னைவிட உயர்ந்தவனாக ஒரு மனிதன் இருந்தால் இவனுடைய அகங்காரம் எங்கோ முனை உடைகிறது. வலி ஏற்படுகிறது. அதற்காகவே மனிதன் தன் அகங்காரத்தின் கூரை தீட்டிக்கொண்டே இருக்கிறான்.  அந்த அங்காரகூரின் கூர்மையை அடுத்தவர்மீது காட்டி அடுத்தவர்களுக்கு ஏற்படும் வலியில் இருந்து தனது கூரின் கூர்மையை கண்டு களிக்கிறான்.
சேத்துக்காட்டார் உழைக்கிறார் உருவாக்குகிறார் அவ்வளவுதான். ஆனால் ஊர் பெரிய மனிதர்களுக்கு ஏன் அது குமச்சளை ஏற்படுத்துகிறது. வெள்ளையும் சொல்லையுமா வந்து சரிக்கு சமமாக உட்கார்ந்துவிடுவானோ என்ற பயத்தால் ஏற்படுகிறது. அது அர்த்தமற்ற பயம்தான். அறியாமை பயம்தான்.அந்த பயத்தை ஆணவத்தை எடுத்து போர்த்திக்கொள்வதன் மூலம் வெளிக்காட்டாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள். தனக்கும் கீழே, தன் காலுக்கும் கீழே மனிதனை வைக்கும் ஆணவத்தின் வெளிப்பாடு.
இது ஏதோ நம் மண்ணில் மட்டும் இருக்கும் வெளிப்பாடு இல்லை. மண் உள்ள இடத்தில் எல்லாம் மனிதன் இப்படிதான் இருக்கிறான்.
இங்கு ஒரு கம்பெனி ஓனர் குழந்தை இல்லாமல் இறந்துபோக அவருடைய தம்பி(ஒரு பாட்னர்) கம்பெனியை வாங்க முயல்கிறார். அவரை வாங்கவிடாமல் மற்றொரு பாட்னர் தடுக்கிறார். இவர் கம்பெனிக்கு சின்னமுதலாளிபோல, தூரத்து உறவு. தம்பி கம்பெனியை வாங்கிவிட்டால் தனக்கு இருக்கும் சின்னமுதளாலி வேலை போய்விடுமே என்ற பயம். பல சிக்கல் பல போராட்டம். நீதி மன்றம் கம்பெனியை விற்று   கம்பெனி ஓனர் மனைவிக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று உறுதியாக கூறியதன்பேரில். ஓனர் தம்பி ஒதுங்கிக்கொள்ள அவருடைய மகன்  கம்பெனியை வாங்குகிறார். வாங்கியவன் சின்ன முதலாளியாக இருந்தவருக்கு சேரவேண்டிய பணத்தை ஒரு ட்ரெலிபேக்கில் அள்ளிவந்து அவர் முன் கொட்டி எண்ணிக்கொள் என்றான். அத்தனையும் ஐந்து ரியால் பத்து ரியால் நோட்டுகள். என்ன ஒரு ஆணவம்.  என்று சின்னமுதலாளி நினைத்து இருப்பார். ஆனால் அவர்தான் அந்த ஆணவத்தை அவனுக்குள் சிறுக சிறுக விதைத்தவர் என்பது அவருக்கு புரிந்திருக்குமா?  அவரால் சில நிமிடங்கள் பேசமுடியவில்லை. பணத்தோடு கம்பெனியை விட்டுப்போனவர் வேறு ஒரு மனிதராக மாறிவிட்டார். அவர் நின்ற நிலம் அவரை விட்டுப்போய்விட்டது. அவர் உட்கார்ந்த இடத்தில் அவருக்கு கீழே நின்றவன் உட்கார்ந்துவிட்டான். காந்தம் தொடும் இரும்பை காந்தமாக்குவதுபோல, ஆணவம் தொடும் மனிதனை ஆணவமாக்குகிறது. கொலை தொடும்மனிதனை கொலைகாரனாக்குகிறது. அறம் செய்ய விரும்பு என்று ஔவை அன்னை சொல்வது எத்தனை உண்மை.
நிலம்தான் எல்லா உயிர்களை பிறப்பிக்கிறது. நிலம்தான் எல்லா உயிர்களையும் விழுங்கிவிடுகிறது.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில் –என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் செய்க பொருளை என்றுதான் சொல்கிறார். ஆனால் மனிதன் பிடுங்குக பொருளை என்று எண்ணிக்கொள்கிறான்.
சேத்துக்காட்டார் கொலைகாரன் ஆனதற்கும், சுடலை குடிகாரன்ஆவதற்கும் அவர்கள் காரணம் இல்லை. சட்டம் அவர்களை அப்படிதான் பார்க்கும். கண்ணால் காண்பதும் பொய். சட்டம் கண்கட்டி நீதி வழங்கினாலும் அது கண்ணால் கண்டதைத்தான் சாட்சியாக ஏற்றுக்கொள்கிறது.
மனிதன் வாழவைப்பது மூலமே மனிதனாகிறான். சேத்துக்காட்டார் தக்காளி செடியை மட்டுமல்ல சுடலையையும் வாழவைக்கிறார். அவர் விவசாயம் செய்யக்கூடியவர் பயிர்வாழ களைபிடுங்குவது தவறில்லை என்று நினைத்திருப்பார். சட்டம் என்ன செய்தான் என்று சாட்சியை நம்புகிறது. அறம் எதற்காக செய்தான் என்று நியதியை நம்புகிறது.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்
நன்றி-ஜெயமோகன்.இன். குருதி-கடிதம்

அறமெனப்படுவது யாதெனின்-கடிதம்





அறமெனப்படுவது யாதெனின்..


அன்புள்ள ஜெ வணக்கம்.

சிலநாட்களுக்கு முன்பு  தொலைக்காட்சி சிறு படத்தொகுப்பைப் பார்த்தேன். தொலைக்காட்சி நிழ்ச்சி தொகுப்பாளர், “கையில் காசில்லை, பசிக்கின்றது ஏதாவது சாப்பிட கொடுங்கள்“ என்று கேட்கின்றார். எல்லோருமே பெரும் பணக்காரர்கள். காரில் செல்பவர்கள். குடும்பத்தோடு செல்பர்வள். பைக்கில் செல்பவர்கள். யாரும் திருப்பி ஒருவார்த்தை கேட்கவில்லை யாருமே அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. பீச்சில் பச்ஜிவிற்கும் அக்கா ஒரு பச்ஜி கொடுக்கிறது. இறுதியாக பிச்சைக்காரர் ஒருவர் தனக்கு கிடைத்த பிச்சை உணவுப்பொட்டலத்தை கொடுத்து சாப்பிடசொல்கிறார்.

“உங்களுக்கு கிடைத்த உணவை என்னிடம் கொடுத்துவிட்டீர்களே, நீங்கள் என்ன செய்வீர்கள்”

“பரவாயில்லை. உனக்கு பசிக்கிதில்ல நீ முதலில் சாப்பிடு, எனக்கு கிடைக்கும், கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை” என்று சிரிக்கிறார்.

பசியை உணர்வதற்கு மனிதன் எவ்வளவு தூரம் வாழ்வை கடந்து, வாழ்வின் கடைமுனையில் சென்று வாழவேண்டி உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்.

பணம் இருப்பதால்.வசதி இருப்பதால், நித்தம் நித்தம் சாப்பிடுவதால், விருந்து சாப்பிடுவதால் மட்டும் ஒரு மனிதன் பசியை உணர்ந்து கொண்டவன் ஆவானா?

நாஞ்சில்நாடன் எழுதிய விரதம் சிறுகதையில். அம்மாவாசை அன்று உடம்புக்கு முடியாமல் மனைவி படுத்துவிட பழையசோற்றை சாப்பிடமுடியாது என்பதால் சின்னத்தம்பியா பிள்ளை மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் மகள்கள் வீட்டிற்கு செல்கிறார். துவைத்து கையில் பிடித்துக்கொண்டு நடக்கும்போதே வேட்டிக்காய்ந்துவிடுகிறது.

சாப்பாட்டு நேரம்.   பெரியமகள்  உச்சிவெயிலில் வந்தற்காக அப்பாவை உரிமையாக கோபித்துக்கொள்கிறாள். சின்னமகள் அக்காவீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் இங்கவருவியா என்று பாசத்தைக்கொட்டி கோபித்துக்கொள்கிறாள். இருபெண்களுமே சாப்பிடுப்பா என்று ஒருவார்த்தை சொல்லவில்லை. சின்னதம்பியா பிள்ளை சட்டைப்போடாதவர். வேட்டியும் துண்டுதான். வயிறு பார்க்கதெரியாத மகள்மகள். அதே வெயிலிலேயே நடந்து வீட்டுக்குவந்து அமாவாசையும் அதுவுமா பழையதை சாப்பிடுகிறார். தனது விபூதி பூச்சால்தான் மகள்கள் தான் சாப்பிட்டு விட்டதாய் நினைத்துக்கொண்டார்கள் என்று தனது சம்பிரதாயத்தின்மீது பசி குட்டுவதை சின்னத்தம்பியா பிள்ளை உணர்கிறார். பசியின் முன் விரதம் விரதம் எடுத்துக்கொள்கிறது.

நாஞ்சில்நாடன்  உயிரின் பசியின் முன் உறவு உலகு சம்பிரதாயம் எல்லாம் இடிந்துவிழுவதை காட்சிப்படுத்துகிறார். இறக்கிவைக்கவேண்டியவை எல்லாம் இடித்து தள்ளுபவையாக  இருப்பதை காட்டுகின்றார்.  சூடிக்கொள்ள வேண்டியவை  எல்லாம் சூட்டுக்கோல்களாக இருப்பதை காட்டுகின்றார். பசி வந்தால் பத்தும்பறந்துபோகும் என்கிறது முதிர்ந்தசொல்.

ஊரில் நடந்த அரிச்சந்திர  நாடகத்தில், அரிச்சந்திரன் தனது சத்தியத்தை காக்க தன் மனைவி சந்திரவதி மகன் லோகிதாசனை காலகண்டர் வீட்டில் அடிமையாக விற்றுவிடுகிறான்.  ஓரு நாள் காட்டில் நாணல் பறிக்கச்செல்கிறான் லோகிதாசன். கூட வந்த குழந்தைகள் எல்லாம் கட்டுசோறு திங்கின்றார்கள்.  லோகிதாசன் பசியால் கங்கைநீர் குடிக்கிறான். அந்த கொடும்பசியிலும் ஆற்று தண்ணீரை இரண்டு கையாலும் அள்ளி ஒரு கைநீரை “உலகோருக்கு ஆகுக“ என்று ஆற்றிலேயே விட்டுவிட்டு ஒரு கைநீரை மட்டுமே குடிக்கிறான்.  அவன் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை அந்த பழகத்தையே செய்வான். “ஐயமிட்டு உண்” என்கிறாள் தமிழ்தாய்.  அந்த ஒரு காட்சிதான் அன்று நாடகம் நடந்துமுடியும்வரை மனதில் சித்திரமாக நின்றது. அது என்பசி நான் அறிந்த காலமில்லை. என்தாய் அறிந்த காலம். ஆனலும் அன்று பசி தன் பெரும் தீநாவால் தீண்டியதை உணர்ந்தேன். அந்த பெரும் நெருப்புக்கு எதிராக அறம் தண்ணீராய் இறங்கி குளிர்வித்ததையும் உணர்ந்தேன்.ஒரு பெரும் மானிட அறத்தை ஒரு காட்சியில் எத்தனை ஆழமாக நமது முன்னோர்கள் பதியவைத்திருக்கிறார்கள் என்பது நினைத்துப்பார்க்கிறேன்.லோகிதாசன் கைநீர் ஆற்றில் மானிடஅறமாக விழுந்து உயிரறமாக பரவிப்பாய்ந்து  பாய்ந்து உள்ளத்தை வெள்ளமாக மூழ்கடித்தது அன்று.

உங்களுடைய அறமெனப்படுவது யாதெனின் கட்டுரையில் அய்யப்பண்ணன் வந்துசேரும் இடம் மானிட அறத்தின் உச்சமான உயிரறத்தின் இடத்தில்தான்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்-

என்கிறார் வள்ளுவர்.  அகம்மகிழ்ந்து கொடுத்தாலும், தெரியாமல்கொடுத்து மகிழ்தாலும் உள்ளத்தில் செய்யாள் உறைகிறாள். இந்த திருக்குறள் அகம்மகிழும் இடத்தி்ல் ஒரு அறசூத்திரமாக நிற்கின்றது. அது அய்யப்பண்ணன் வழியாகி வெளிப்படுகிறது என்பதை சிறப்பாக எடுத்து வைத்து உள்ளீர்கள்.

அறம் வாழ்வின் அடிப்படையாகி, வரலாறாகி, மொழியில் அது ஒரு விதையாக சென்று உறங்கும் இடம்வரை சென்று இந்த கட்டுரையை கொண்டு சென்று, அந்த அறவிதையை வனமாக்கி உள்ளீர்கள்.

அறம் குடும்ப அறமாகி, குலஅறமாகி, சமுகஅறமாகி மானிட அறமாகி தழைக்கும் விதம் காட்டி,  அறமும் மறமும் அன்பின் துணையால் சமதளத்தில் துலாக்கோல் முள்ளாகி நிற்கும் இடத்தை வள்ளுவன் காட்டும் இடத்தை கட்டுரை சுட்டும்போது  ஒளிமலர்கள்.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

அன்பும் நன்றியும்.
ராமராஜன் மாணிக்கவேல்.

நீர்க்குமிழி(சிறுகதை)


ஓம் முருகன் துணை

நீர்க்குமிழி (சிறுகதை)

ராமராஜன் மாணிக்கவேல்.

பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான் அப்படிக்கேட்டேன். அது தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து.  

சிலநேரங்களில் பி.முட்லூரில் அந்த வகைப்பேருந்துகள் நிற்பது உண்டு. நடத்துனர் கடலூர் பாண்டி சென்னை என்றபடியே என்னைப்பார்த்து நிற்கும் என்பதற்கு சம்மதமாக தலையையாட்டினார். எனக்கு மகிழ்ச்சி. சீக்கிரமாக சென்றுவிடலாம். சீக்கிரமாக செல்வதில் என்ன மகிழ்ச்சி?. நான் சென்றபின்பு அங்கு மகிழ்ச்சி இருக்குமா? மகிழ்ச்சியின் முடிவு ஒரு துன்பம், துன்பத்தின் முடிவு மகிழ்க்சி.  இது பிரபஞ்சவிதி. எல்லோருக்கும் விதி தெரியும். துன்பம் வந்துவி்ட்டால் மட்டும் அழும் மனிதன் விதிசரியில்லை என்று நொந்துக்கொள்ளும்போது சிரிப்பதுவிதியில்லை ஆனாலும் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.

மீசை வழித்த முகத்தோடும், ஒட்டவெட்டிய முடியோடும் வெள்ளையில் முழுக்கால்சட்டையும் முழுக்கை சட்டையும் அணிந்து கண்களை மறைக்க கறுப்புக்கண்ணாடி அணிந்து கையில் தினசரிக்குறிப்பேடு ஒன்று வைத்திருந்தேன்.

சிவந்திருக்கும் விழிகளை  எவரும் பார்க்கக்கூடாது என்றுதான் கறுப்பு கண்ணாடி அணிந்து இருந்தேன். எனது சிவந்த விழிகளை பார்த்தவர்கள் “எமன் மாதரிப்பார்க்கிறான்“  என்று  என் தலைமறையும்போது என்காதில் விழட்டும் என்று சொல்கிறார்கள். பாதுகாப்பு எல்லையில் இருந்துப்பேசத்தெரிந்தவர்கள். “நான்தான் எமன்“ என்று அவர்கள் இடம் எப்படிச்சொல்ல முடியும்?.

பஸ் சி.முட்லூரைத்தாண்டி வெள்ளாற்றுப்பாலத்தை கடக்கும்போது நடத்துனர் “டிக்கெட்” என்று கைநீட்டினார்.

தொலைதூர நிருத்தங்கள் கொண்ட இந்த பேருந்தில் ஐம்பத்தி இரண்டு இருக்கைகள்.  நான்  வலது பக்க வரிசையில் நான்காவது இருக்கையில்தான் அமர்ந்து இருந்தேன்.  நடத்துனர் இப்பொழுதுதான் என்னிடம் வந்தார்.   நகரபேருந்துகளின் குறுகிய நிருத்தங்களில் அதிகபடியான மக்கள் ஏறி இறங்கையில் நடத்துனர் டிக்கெட் கொடுக்கப்படும்பாட்டை நினைத்துக்கொண்டேன். இவர் கொடுத்து வைத்தவர்.

“பி.முட்லூர்” என்று நான் பத்துரூபாய் நோட்டை நீட்டியபோது நடத்துனர் முகம் சுருங்கிவிட்டது.  

“இது எக்பிரஸ் பி.முட்லூரில் நிக்காதுன்னு தெரியாதா?” அவருக்குள் இருந்து வெறு ஒரு ஆள் எழுந்து வந்துபேசுவதுபோல் எனக்கு தெரிந்தது. எனக்குள் இருந்து எழுந்த வேறு ஒரு ஆளை தட்டி உட்காரவைத்துவிட்டு “நான் உங்களிடம் கேட்டுதானே ஏறினேன்” என்று சிரித்தேன். பல்தெறியாமல்தான் சிறித்தேன். பல்தெறிந்தால் பயந்துவிடுவர் அல்லவா? 

நமக்குள் இருக்கும் இரண்டாவது ஆளை எதிரில் இருப்பவன் எளிதாக எழுப்பிவிடுகிறான். நமக்குள்  அவனை மீண்டும் உட்கார வைக்க சகலகால வல்லமை தேவைப்படுகிறது. 
  
அவரில் இருந்து வெளியேறி என்முன் நின்ற வேறு மனிதன் நடத்துனருக்குள் சட்டென்று ஒளிந்துக்கொள்ள, நடத்துனர் பழைய ஆளாக மாறி பற்களைக்காட்டியபடி “சாரிசார், நீங்கள் முட்லூர் என்றதை கடலூர் என்று நினைத்துக்கொண்டேன்” என்றார். உண்மையான வருத்தம் உள்ளத்தை தொட்டது.   

“பி“ என்பதை அழுத்திச்சொல்லாமல் விட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி நெஞ்சை கீறியது. நமக்குகூட நெஞ்சு இருக்கிறதா? என்று தடவிக்கொண்டேன்.  அதற்குள் பஸ் பி.முட்லூர் பஸ் நிறுத்தத்தை தொட்டுவிட்டது. “நிறுத்துங்கள் இறங்கிக்கொள்கிறேன்“ என்று  கத்தினேன்.
“கடலூர் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு  முட்லூரில் இறங்கிக்கொள்ளுங்கள் சார்“. மீண்டும் மன்னிப்புக்கேட்டார் நடத்துனர். கையில் இருந்த பத்துரூபாய் நோட்டை பையில் திணித்துவிட்டு  நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். நிறுத்தத்ததை பேருந்து கடந்துவிட்டது.  

“நிறுத்துங்கள்..நிறுத்துங்கள்” என்று ஓட்டுனர் இருக்கும் திசை நோக்கி கத்தினேன். அவ்வளவு பதட்டமும் கத்தலும் தேவை இல்லை என்று பதட்டப்பட்டு கத்தியப்பின்பே உணர்ந்தேன். உணர்வற்குள்ளேயே  உணரப்போவதை செயலாக்குபவர்கள்தான் சான்றோர்கள். உணர்ந்ததை உணர்ந்தேன் என்று மட்டும் நம்புபவர்கள் வெறும் மனிதர்கள். நான் இப்போது வெறும் மனிதனாக இருக்கிறேன்.

நடத்துனர் தனது உதட்டைக்குவித்து வாயாலேயே ஒரு விசில் அடித்தார். ஓட்டுனர் கோபத்தில் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றே வண்டியை நிருத்தினார். நடத்துனர் கொடுத்த சில்லரையையும் பயணச்சீட்டையும் அவர் முகத்தைப்பார்த்தப்படியே வாங்கினேன் அதில் சிரிப்பு இல்லை ஆனாலும் சிரிப்பதுபோல் தெரிந்தது.  ஏழு ரூபாய் செலவில் செல்லவேண்டிய தூரத்தை முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து கடந்த என்னை நொந்துக்கொண்டே இறங்கினேன்.  மானிடவேடம் போட்டால் கணக்குப்பார்க்கும் மானிட சஞ்சலம் எல்லாம் வந்துவிடுகிறது.  

நிறுத்தம் இல்லாத இடத்தில் பஸ் நின்றதும் நிறுத்தத்தில் நின்றவர்கள் அனைவர் தலையும் காற்றின் திசையில் இலை பூ திரும்புவதுபோல என்னைப்பார்த்து திரும்பியது. நான் வானத்தை பார்த்தேன். வானம் வெளுத்து   பளபளத்தது. கோடையின் உக்கரத்தில் திரும்பியவர்கள் முகத்தில் ஆவிப்படர்வதுபோல வெயிலின் அலை. 

நான் நிறுத்தத்திற்கு திரும்பிச்செல்லாமல்  பேருந்து சென்ற திசையிலேயே நடந்தேன். எதிரில் வந்த இருச்சக்கர வாகன ஓட்டி தனது கழுத்தை முடிந்த அளவு திருப்பி என்னைப்பார்த்தப்படியே சென்றான். அவன் கண்ணில் தெரிந்தது என்ன? நான் யார் என்பதைவிட, ஏழு ரூபாய் கட்டணப்பேருந்தில் வராமல் முப்பத்தைந்து ரூபாய் கட்டணத்தில் வந்த இந்த  கேனை யார் என்பதா? சௌதி அராபியாவிற்கு சென்றபோது தெரிந்துக்கொண்டேன். மோப்பநாய் ஏற்றிச்செல்லும் வாகனத்தின் எண் K9. இதைத்தான் தமிழில் கேனையன் என்கிறார்களோ?

இந்த 35ரூபாய் பயணச்சீட்டு செய்தியை சித்திரகுப்தனுக்கு அலைப்பேசியில் சொல்லவேண்டும்போல் இருந்தது. அதே நேரத்தில் அலைப்பேசி ஒலித்தது   சித்ரகுப்தன்தான். “சித்ரகுப்தனுக்கு ஆயுசு நூறு“ என்று வாயில் எழுந்த சொல்லை நாக்கை கடித்து நிறுத்தினேன். மானிட வேடம் போட்டதும் எமன் என்பதே மறந்துவிடுகிறது. எமன் என்பதும் ஒரு வேடம்தானோ? சித்ரகுப்தனுக்கு ஏது சாவு?

மகிழ்ச்சியில் “செல்லம்..சித்ரகுப்தா” என்றேன். நான் துள்ளினேன் என்பதை என்கால்கள் தார்சாலையில் மோதியப்போதுதான் உணர்தேன். தலையில் வெயில் சுட்டது. எதற்கு இந்த மனிதர்கள் அழைப்பவர் பெயர் தெரிந்தும் ஹலோ என்கிறார்கள்?  

“மன்னிக்கனும் பிரபோ“ என்றான் சித்தரகுப்தன். நான் மகிழ்ச்சியில் இருந்ததால்  அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “சொல்லு செல்லம்” என்றேன்.

எனது அளவுக்கடந்த அன்பு சித்ரகுப்தனை பேசவிடாமல் மௌனத்தில் முழுக்காட்டியது. மகிழ்ச்சிக்கூட ஒரு தடைக்கல்தான். அவனது மௌனத்தை கலைக்க மீண்டும் ஒருமுறை செல்லம் கொஞ்சவேண்டியவனானேன்.  விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் வரும் பேருந்தில் விஜயின் கில்லிப்படம் பார்த்த பாதிப்பு இந்த செல்லம். மென்மையான சொற்களை அன்பை வெளிப்படுத்தும் வசனங்களை வில்லன் பேசும்போது உள்ளம் உருகுகிறது என்றால்  எமனே செல்லம் என்றால் சித்ரகுப்தனுக்கு எப்படி இருக்கும்?

பழைய சிதம்பரம் வட்டம் புதிய புவனகிரி வட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு செல்லவேண்டிய நான் மஞ்சக்குழி கிராமத்திற்கு வந்துவிட்டேன் என்றான்.   உளுந்தூர்பேட்டையில் வாக்கு சேகரிக்க வந்த கேப்டன்விஜகாந்த் உடுமலைப்பேட்டை என்று பேசியப்பேச்சைக்கேட்டதால் வந்தவினை இது. இந்த நகைக்சுவையை நினைத்தப்படியே சித்ரகுப்தன் கையில் இருந்த கணக்கைபிடுங்கி “புவனகிரிவட்டம் மஞ்சக்…..கிராமம்“ என்று மூடிவைத்து கிளம்பிவிட்டேன். மஞ்சக்கொல்லைக்கு போகவேண்டியவன் மஞ்சக்குழிக்கு வந்துவிட்டேன்.

ஊருக்கு நல்லது செய்த அறவோர்கள், குடும்பத்தை உருவாக்கிய முதுதாய் தந்தையர், சான்றோர்களை அழைத்துச்செல்ல நானே வருவேன். அது அந்த உயிருக்கு நான் தரும் மரியாதை. பேத்திக்கும் பேரன் பிறந்துவிட்டதை பார்த்த ஒரு பெரும்தாய் எனக்காக மஞ்சக்கொல்லையில் சிவனேன்னு இருக்கிறாள். சிவனேன்னு இருப்பவளை சிவனாகவே மதித்து அழைத்துச்செல்லவேண்டும். இல்லை என்றால் சிவன் உதையை தாங்கமுடியாது. சிவன் உதைப்பது ஒரு பாக்கியம்தான். அந்த பாக்கியத்தை வாங்கிதந்த மார்க்கண்டேயனுக்கு நன்றி.

பக்கத்திலேயே பஸ் நிறுத்தம், மஞ்சக்கொல்லைக்கு பேரூந்து ஏறவேண்டியதுதான் என்று நினைத்து பேரூந்து நிறுத்தத்திற்கு திரும்பினேன். நடந்துபோகும் தூரம்தான் என்றான் பனியனில் ரஜினியை சுமந்தவன். . மீண்டும் அலைபேசியில் சித்ரகுப்தன் எழுத்தாகி ஒலிஒளியில் மின்னினான்.  

“செல்லம்”

“பிரபோ..மஞ்சக்கொல்லைக்கு  யமகிங்கரர்களை அனுப்புறேன். நீங்க மஞ்சக்குழிக்கே செல்லுங்க” என்றான்.

“வேண்டாம் செல்லம். அந்த முதுத்தாய் உயிர்களால் பூமியை நிறைத்த கற்பகவிருட்சம். அவள் வணக்கத்திற்கு உரியவள், அவளை அழைக்க நான்தான் போகனும்”

“சரி பிரபோ” சித்திராகுப்பதனும் கொஞ்சினான்.

“மஞ்சக்குழியில் யார் என்றேன்” மனிதனாக இருந்தாலும் இதை கேட்கும்போது எமனாகத்தான் அகம் இருந்தது.

“சாலைகளை பெரிதாக்காமல் வாகனங்ளை பெருக்குவதும், உழைப்பே இல்லாமல் குடிக்கிறதும் தொடங்கிய பின்பு காலம் நேரம் ஆள் முகவரி எதுவும் தேவை இல்லை பிரபோ” என்றான். கணக்கு எழுதி எழுதி  கைவலிக்கொண்ட சித்ரகுப்தனுக்கு விடுதலைக்கிடைத்த மகிழ்ச்சி. ஒரு மடிகணினி கேட்கிறான். வாங்கிக்கொடுக்கலாம் ஆனால்   மின்சாரத்திற்கு என்னச்செய்வது. மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்றாலும் அது இந்திரன் கைப்படை என்பதால் காத்திருக்கவேண்டி உள்ளது. மானிடர்கள்போல் எதையும்  கூறுப்போட்டு கமிஷனுக்கு விக்கும் நிலை அங்கு இன்னும் வரவில்லையே.

எந்த இடத்திற்கும் காலத்திற்கு செல்வதால்தான் எனக்கு காலன் என்றே பெயர், எனக்கே காலம் என்ன வென்று தெரியாத ஒரு திட்டமிடா பயணமா? மனிதர்களின் செய்கைகள் வானவர்கள் வாழ்க்கை முறையையும் மாற்றி வைக்கக்கூடியது. வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தால்தானே வானுறையும் தெய்வத்தில் வைக்க. வாழக்கூடாத வகையில்வாழ்ந்தால் தெய்வங்களின் வரிசையும் கலைந்துவிடும் என்பதை மனிதன் அறிந்தே இருக்கிறான் போலும்.  

கழுகுப்பார்வையில் மொத்த பூமியையும் ஒரு கனத்தில் நோக்கிவிடுவேன். இருந்தும் மனித வடிவத்தில் இருந்துக்கொண்டு அதை எல்லாம் செய்ய விரும்பவில்லை. காலம் கணக்கில் இல்லாததால் காலதாமதமாகவே சென்றுக்கொண்டு இருந்தேன். யாருன்னுக்கூட தெரியாதபோது எதுக்கு வேகம்.

எமலோகத்தில் எண்ணெய் கொப்பறைகள் கொதிக்கும் கூடத்தில்கூட இத்தனை சூடு இல்லை. சித்திரை வெயிலில் தார்சாலையில் நடப்பது எனது வியர்வையில் என்னையேப்போட்டு யாரோ வறுப்பதுபோல் இருந்தது. யார் விட்ட சாபமோ?

மனிதனாக வேசம்போட்டால் மனிதர்களுக்கு உரிய அனைத்து உடல் உபாதைகளும் வந்துவிடும்போலும். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகில் நின்ற புளிய மரத்தில் வேர் மறைப்பில் ஒதுங்கினேன். எனக்கு முன்னமே யாரோ ஒதுங்கி இரண்டு வேலையையும் அங்கேயே முடித்து இருந்தார்கள். சாலையோரத்தில் மலம்கழிப்பதைப்பார்க்கும்போது தமிழ்நாட்டு மக்கள் வீட்டை குடிசையாக கட்டிக்கொண்டு கக்கூஸை பெரிதாக கட்டிக்கொண்டு உள்ளார்கள் என்று தெரிகிறது. மூக்கை பிடித்துக்கொண்டு தள்ளி உட்கார்ந்து நீர் இறக்கம் செய்துவிட்டு நடக்கத்தொடங்கினேன்.

ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் தொத்திக்கொண்டு என்னை இடிப்பதுபோல் வந்து வண்டியை வளைத்து முன்சக்கரம் துள்ள பாய்ந்து சென்றார்கள். மதுபான வீச்சம்  எனது நாசியை திருகி குடலை மேல் இழுத்தது. மூக்கை சுளித்து காறி சாலை ஓரத்தில் துப்பினேன். “இச்ச.. மனுசனான உடனேயே பொது இடத்தில் துப்பக்கூடாது என்ற துப்புஇல்லாமே போச்சே“ என்னையே நொந்துக்கொண்டு தலையை உயர்த்தினேன்.

இருசக்கர வாகனத்தில்   பின்னாடி உட்கார்ந்து இருப்பன்  தலைதொங்கியதைப்பார்த்தபோது தூங்குகிறானோ என்ற சந்தேகமும் எழுந்தது, வழுக்கி விழுந்துவிடுவானோ என்ற பயம் எழுந்தது.

எமனுக்கே பயமா? உயிரை எடுப்பது தொழிலாக இருந்தாலும் இதுமாதரி விழுந்து அடிப்பட்டு அல்லல்படுவதைப்பார்க்க பரிதாபமாகத்தானே இருக்கிறது. ஆடு வெட்டுற கசாப்புக்கடைக்காரனும் ஆட்டுக்கு தீனி வைத்து தடவிதானே கொடுக்கிறான். அவர்கள் என் கண்ணில் இருந்து மறைந்துவிடும் தூரம் சென்றுவிட்டார்கள். கண்ணுக்கு அப்பால் என்ன நடந்தால் என்ன? சற்று நிம்மதியாக இருந்தது. இதுகூட மனித இயல்புதான் என்று சிரித்துக்கொண்டேன். இது எமலோகம் இல்லை என்பதால் சத்தம்வராமல் சிரித்துக்கொண்டேன்.  

எங்காவது சற்று உட்கார்ந்தால் தேவலாம்போல் தோன்றும்போது மஞ்சக்குழி ஏரியை நெருங்கிவிட்டேன். இந்தக்கோடையில் இத்தனை நீரா? பரவசத்தில் துள்ளிக்குதித்து குளிக்கவேண்டும்போல் தோன்றியது. எனது வாகனம் ஐந்தாறு ஏரியில் அமிழ்ந்து கிடந்தது. என்னைப்பார்த்ததும் மரியதையாக எழுந்தது. மனிதனாக இருப்பதால் போதும் மரியாதை என்பதுபோல் படுத்துக்கொண்டது.

ஏரிக்கரையில் இருந்த திரௌபதி அம்மன்கோயில் அரசமரத்தின் நிழல் கொஞ்சம் உட்கார்ந்து படுத்துப்பார் என்றது. இந்த மனிதர்களுக்கு பூமியில் சொற்கம் விலையில்லாமல் கிடைக்கிறது ஆனால் அவர்கள் காசிக்கொடுத்து நரகத்தை வாங்கிக்கொள்கிறார்கள்.

அல்லிப்பூத்த ஏரியின் குளிர்ந்த வெள்ளிநீர் பரவசமாக இழுக்க வேக வேகமாக நடந்து ஆவலோடு படித்துறைக்கு சென்றேன். படித்துறைக்கு சென்றபின்புதான் அது பெண்கள் குளிக்கும் துறை என்று தெரிந்தது.

பெண் ஒருத்தி படிக்கட்டில் உட்கார்ந்து துணிக்கு சோப்பு போட்டு துணியை கும்மிக்கொண்டு இருந்தாள். சிறுகுழந்தையின் பள்ளிக்கூட சீருடை. சோப்புப்போட்டு கும்மிய துணிகள் எதிரில் இருந்தது. துவைக்கவேண்டிய துணிகளை வலதுப்பக்கம் அலுமினிய அன்னக்கூடையில் மேல் படிக்கட்டில் வைத்து இருந்தாள். மெலிந்து இருந்த அவள் உடலும் உடையம் கிழவி என்றுக்காட்டியது.  எனது வரவு அவள் உணர்வில் பதிந்து இருக்கவேண்டும் துணியை கும்முவதை நிறுத்திவிட்டு தலையை திருப்பி என்னைப்பார்த்தாள்.   “ஆ! எத்தனை அழகான இளமையான முகம், எவ்வளவு அழகான கண்கள்! உடல் அறுபதையும் முகம் முப்பதையம் காட்டிக்கொடுத்தது. “என்ன மாயாம்“  என்று வியக்கும்போதே அவள் வெண்விழியின் சிவப்பும் அதில் உறைந்திருந்த கண்ணீரும் நெஞ்சைப்பிழிந்தது. யாரோ தொடை சதையைக்கிள்ளி இழுத்து நரம்பை பிடித்து கசக்கியதுபோல் குதிகாலை உயர்த்தி பின்பு பாதத்தை முழுவதும் மண்ணில் படியவைத்து நின்றேன்.

சோப்பு நுரையோடு இடதுக்கையால் முந்தானையை இழுத்து மூக்கை உறிஞ்சி அழுத்தி துடைத்துக்கொண்டு “அதோ அங்க இருக்கு ஆம்பள தொற“ என்றாள். அந்த அழகு முகத்தில் அழுந்தி இருந்த களைப்பு அவள் இனிய குரலில் இழையோடும் சோகமும் என்னை சுட வெயிலின் கொடுமை எனக்கு மறந்துப்போனது.    

ஏன் இப்படி இவள்? தெறிவதை பார்க்கும் முகவிழிகளை மூடி, தெறியாததை பார்க்கும் அகவிழியை திறந்தேன்.  அதிர்ந்துப்போனேன்.

பூமாலைச்சூடி தேன்வடியும் வாழ்க்கை வாழவந்தவளுக்கு கிடைத்தது சாராய வாடையும் அடியும் உதையும்தான். மூன்றுமுறை தூக்குகயிறை எடுத்துக்கொண்டுப்போனவளை காப்பாத்தி கூப்பிட்டுவந்தது ஆறுதல் சொன்னது மாமியார்தான். காலன் கணக்கில் அவள் ஏடு இன்னும் எடுக்கப்படவில்லை என்பது அவளுக்கு எப்படி தெரியும்? மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாகிவிட்டாள். பிள்ளையை அள்ளி முத்தம் வைக்கும்நேரத்தில்கூட பிள்ளைமீது சாரயவாடை அடிப்பதுபோலவே அவள் அகம் அறிகிறது. இரவுக்கூட குடியும் அடியும் உதையும்தான். 

மீண்டும் திரும்பி முழுவதும் அவளைப்பார்த்தேன். வயிறு முன்னால் சரிந்து அடுத்தது என்று காட்டியது. அவள் பின்புறம் அப்போதுதான் பறித்து வைத்த அல்லி மலர்கள் அதன் தண்டோடு சிரித்துக்கொண்டு இருந்தது. யார் வைத்திருப்பார்கள். அவள் கணவன் தண்ணீருக்குள் இருக்கிறான். பூ பறிக்கிறான்.

 “ஆ” என்று அலற நினைத்து அடக்கிக்கொண்டேன். காலனும் காலமும் சந்தித்துக்கொண்ட காலம்.  

அதே நேரத்தில் தூக்கிவாரிப்போட்டதுபோல் எழுந்த அந்த பெண் “ஐயய்யோ யாராவது ஓடிவாங்க, தண்ணிக்குள்ள போனவர இன்னும் காணவில்லையே” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

எனக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. பக்கத்து நிலத்தை துத்து வீடுக்கட்டிக்கொண்டு இருந்த கூட்டம் ஓடிவந்து ஏரியில் குதித்து ஆளுக்கு ஒரு திசையில் தேடியது.

அவள் நிற்கமுடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு படியில் சரிந்து விழுந்தாள். நான் பதறிப்போயி அவளை தொடுவதா வேண்டாமா என்று தயங்கியபோது யாரோ ஒருத்தன் அவளை தூக்கிவந்து மரத்தடியில் போட்டேன்.

ஏரி நீர் குழம்பி அலைகளாகி கரைகளை அறைந்துக்கொண்டு இருந்தது. முழுகி எழுந்தவர் அனைவர் கண்களிலும் அடுத்தவன் கையில் கிடைத்திருப்பான் என்ற பரிதவிப்பு இருந்தது. இல்லை என்று அறிந்து மீண்டும் உக்கிரமாக விழுந்து தேடினார்கள்.

எனக்கு தெரியும். நான் அதை செய்யக்கூடாது.

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகங்களின் ஆழத்தில் புரண்டு எழுவது போல் மூச்சடைக்க வைத்தது. பத்து பதினைந்து நிமிட அமளிதுமளிக்கு பின்பு ஒருவன் தோளில் சுமக்க அவன் வந்தான். வலது கையில் அல்லிக்கொடிகளை பற்றிக்கொண்டு இருந்தான். தூக்கிவந்தவன் அவன் முகத்தை திருப்பப் பார்த்தேன் இருசக்கரவாகனத்தில் பின்னால் வழுக்கிவிழுந்துவிடுவதுபோல் குடிபோதையில் இருந்தவன். என்கால்களுக்கு கீழே பூமி நழுவுவதுபோல் இருந்தது தலையை இரண்டுகையாலும் பிடித்துக்கொண்டு நின்ற இடத்தில் உட்கார்ந்துவிட்டேன்.

“இச்ச செத்துட்டாண்டா, குடிகார கம்மணாட்டி!” என்று தரையை உதைத்தான் தூக்கிவந்தவன். அவன் தலையில் இருந்து வழிந்த தண்ணீர் பரவி தெறிக்க அவன் கண்ணீரும் சிதறியது.

“ஐயோ, குடிச்சிருக்க… தண்ணிக்குள்ள போயி பூ பறிக்காத, அல்லி செடியில சிக்கிக்குவ,  வேண்டாம் வேண்டாமுன்னு சொன்னேனே” என்று அவள் நெஞ்சில் அறைந்துக்கொண்டு சாலையில் விழுந்துப்புரண்டாள்.

அவன் பறித்து வந்து வைத்த அல்லிப்பூ   சிரிப்பு இன்னும் உதிரவி்ல்லை. அவன் உயிர் உதிர்ந்துவிட்டது. இத்தனை அற்பமானதா உயிர்? இதனை வைத்துக்கொண்டுதான் மனிதன் இத்தனை ஆட்டம்போடுகின்றானா? மனிதனாக இருக்கும் நான் என்னையே ஒரு முறைப்பார்த்துக்கொண்டேன்.
அதற்குள் ஊருக்குள் செய்தி கசிந்து ஊரே ஓடிவந்தது.  

“பாண்டிச்சேரி அரவிந்தர் கண் ஆஸ்பத்திரிக்கு கண் ஆப்பரேஷன் செய்ய போன அவுங்க அம்மாவை அழைத்துவர ஒருத்தன அனுப்புங்கட” என்றான்  கட்சிக்கரை துண்டுபோட்டிருந்த ஒருவன்.  

“அந்த அம்மாவிற்கு கண்ணாப்பிரேஷன் நடந்திருக்கக்கூடாது“ என்று மனதில் வேண்டிக்கொண்டே  என் கண்ணாடியை கழட்டினேன். என் விழிகளை கண்ணீர் மூடிக்கொண்டது. நான் அழக்கூடாது. ஆனால் நான் இப்போது மனித உருவில் அல்லவா இருக்கிறேன்.

ராமராஜன் மாணிக்கவேல்.