Thursday, January 30, 2020

எஸ்.ராமகிருஷ்ணன்-காந்தியோடு பேசுவேன்-சிறுகதை-ஒலிவடிவம்



ஓம் முருகன் துணை 

எஸ்.ராமகிருஷ்ணன்-காந்தியோடு பேசுவேன்-சிறுகதை




காந்தியை அறிந்து கொள்ள வாசிப்பு உதவி செய்யாது என்றே நான் நம்புகிறேன், வாசிப்பின் வழியே காந்தி கருத்துருவமாக மட்டுமே பதிவாகிறார், அவரது செயல்பாடுகளின் பின்னுள்ள வலியை, எளிமையை, நேரடித்தன்மையை வாழ்ந்து பார்க்க வேண்டும், அப்போது தான் காந்தி , மணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துளி மணலாக விழுந்து நிரம்புவதைப்  போல கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் விழுந்து நிறைவார்-சிறுகதை






நன்றி- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்





Wednesday, January 29, 2020

மனுசி-சிறுகதை-வாசிப்பு அனுபவம்.










ஓம் முருகன் துணை

நேற்று இரவு பவா செல்லதுரை சொன்ன மனுசி-பிரபஞ்சன் சிறுகதையை கேட்டேன். 

நன்றி பவா.

உங்களை க.சீ. சிவக்குமார் “ நீ ஒரு இசைமயமானவன்“ என்று சொன்னதாக சொன்னீர்கள். நான்சொல்கிறேன் “நீ ஒரு கதைகனிந்த பெரும்பலா. உன்னில் இருந்து சுவையான கதைநதி பாய்ந்து என்னை திக்கவைக்கிறது“ . உங்கள் கதைகளை கேட்கும்போது உங்களை கட்டிப்பிடித்து முத்தமிட நினைக்கிறேன். கதை சொல்லும்போது நீ ஒரு தாயாக தெரிகிறாய்.  .

மனுசி சிறுகதை லட்சுமி என்ற பசுவுக்கும் அதை வளர்க்கும் அம்மாவிற்கும் உள்ள பாசத்தை வெறுப்பை சொல்லும் கதை. கூடவே மருமகள் உடன் மாமியர் கொள்ளும் மனவிலக்கத்தையும் காட்டும் கதை.

பெண்பிள்ளைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்துக்கொள்ளும் இந்த காலத்தில்தான் பெண்பிள்ளை பெற்று எடுக்காத மருமகளையும், மாட்டையும் வெறுக்கும் தாயின் மனநிலையை மகன் கதைச்சொல்லியாக இருந்து சொல்லும் கதை.

பின்னலூரில் குடியிருந்தபோது எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்த ஆச்சி அந்த ஊரில் இருந்த ஒரு ஆச்சியைப்பற்றி சொன்ன செய்தி ஞாபகத்தில் வருகிறது.

“அவள் ஆண்டுக்கு ஒரு  ஆம்பள பிள்ள பெப்பா, அவள் வளர்க்கிற பசு ஆண்டுக்கு ஒரு  கெடெரிக்கன்ணுப்போடும். அவளுக்கு பூரிப்பு வராம இருக்குமா?”

பிரபஞ்ச தத்துவம் சொல்லும் ரகசியம் என்னவென்றால் ஒரு குடும்பத்தில் பெண்ணும், மாடும் கருவுற்று இருந்தால், முதலில் பசுமாடு  எந்த கன்றைபோடுமோ அந்த வகை குழந்தைதான் பெண்ணும் பெற்று எடுப்பால் என்று எனது அத்தை சொன்னார்கள்.  

மனுசி சிறுகதையிலும்    அந்த வீட்டுபெண்கள் ஆண்பிள்ளைகளை பெறுகின்றார்கள். அந்தவீட்டிற்கு வரும் மாடும் ஆண் கன்றுகளைத்தான் ஈனுகின்றது.

ஆண்கன்றை ஈன்றதாலேயே பிள்ளைகளைவிட மேலான பாசம்வைத்து பிள்ளைபோல் வளர்த்த பசுவை அந்த கதையின் அம்மாவெறுக்கின்றார். 

“பெண்ணை புரிந்துக்கொள்ள பெண் பேசுவதை கவனிக்காதே, பெண் செய்வதை கவனி“ என்று ஓஷோ சொல்கிறார்.

தனது மருமகளும் பெண்ணை பெற்று எடுக்கவில்லை, தான் வளர்க்கும் மாடும் கெடெரி கன்றை ஈனவில்லை என்று மருமகளை ஈட்டுக்காட்டும் அம்மா. ஒருநாள் தான் ஒரு பெண்குழந்தையை பெற்றதாகவும், அது அம்மைநோயில் இறந்துவிட்டதாகவும் அந்தகதையில் வரும் அம்மா இந்த கதையில் அழுகிறாள்.

மாட்டை வெறுக்கும் அம்மா அந்த மாட்டை விற்க சொல்லிவிடுகிறார்கள்,அம்மாவின் மனமாறுபாட்டை அறிந்த கதைச்சொல்லியும் மாட்டை விற்றுவிடுகிறார். அந்த மாடு வாங்கியவருடன் சென்ற பின்பு அம்மா அழுவைப்பார்த்து கதைச்சொல்லி அம்மா அந்த குழந்தைகக்காக அழவில்லை என்று சொல்கிறார். 

அவளையும் அறியாமல் அவள் மாட்டுக்காகத்தான் அழுகிறாள்.
   
இத்தனை பாசம் வைத்த மாட்டை அம்மா  வெறுப்பது பெண்கன்றை ஈனவில்லை என்பதற்காக மட்டும் இல்லை. உள்ளார்ந்த ஒரு காரணம் உள்ளது கதையில்.

எட்டுத்தலைமுறையாக அந்த வீட்டில் பெண் பிள்ளைகள் பிறப்பதில்லை. கொள்ளுதாத்தாவின் கொள்ளுதாத்தா அவரின் மனைவியை சந்தேகப்பட்டு கழுத்தறுத்து கொன்றுவிட்டார். தாத்தா பாட்டியிடம் எதுவும் கேட்கவில்லை. பாட்டியும் என்ன ஏது என்று தெரியாமல்,எதுவும் சொல்லாமலே செத்துவிட்டது.  அது பத்தினிப்பெண்ணின் பெண்சாபம்.

அம்மாவிற்குள் அந்த சாபத்தை போக்கடிக்கவேண்டும் என்ற பெரும் தீவிரம் இருக்கிறது. அம்மா பெற்றும் தக்கவைக்கமுடியாத ரணத்தில் இருக்கிறாள். அம்மாவின் தொடர் ஓட்டத்தில் குச்சி மருமகள் இடத்திற்கு வந்துவிட்டது, மருமகள் ஆண்பிள்ளையாக பெற்று இலக்கை தொடாமலே ஓய்ந்துவிட்டாள். அந்த தொடர் ஓட்டத்தில் மருமகள் வீட்டில் இருந்து வந்த பசு லட்சுமி கலந்துக்கொள்கிறது அதுவும் இலக்கை தொடாமலே ஆண்கன்றாக ஈன்று நின்றுவிடுகிறது.  பெண்பிள்ளைப்பெற்று   அந்த குடும்பம்மீது இருக்கும் பெண்சாபத்தை கழுவமுடியவில்லை என்ற ஆரா ரணம் இந்த கதையில் உள் உறைந்து உள்ளது.

மற்றவர்கள் இடம் இல்லாதது தன்னிடம் இருக்கிறது என்று காட்டி மற்றவர்கள் மனதில் கடுகளவாது பொறாமைவிதையை தூவுவது இந்த அம்மாவின் குணம். அதில் சந்தோஷப்படுவது இந்த அம்மாவின் குணம். அந்த குணம் கொண்ட அம்மாவின்வீட்டில் பெண் என்ற பேருக்கு ஒரு பசுகூட கன்றுபோடவில்லை என்றால் அந்த அம்மாவின் மனதில் எத்தனைபெரிய பொறாமைவிதை இந்த உலகும் காலமும் விதியும் கடவுளும் தூவி சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். என்று நினைக்கவேண்டி உள்ளது.  

நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்கிறது உபநிடதம்.

மனிதன் விரும்பியதை மட்டும் இல்லை வெறுப்பதையும் அடைந்தே தீர்கின்றான் என்கிறது உளவியல் தத்துவம்.

அப்பாவைப்போல குடிகாரன் தனக்கு கணவனாக வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அப்பாபோலவே கணவன் வந்து அமைந்தார் என்று ஆண்டாள் P.சொக்கலிங்கம் நிகழ்வில் ஒரு பெண்மணி சொல்கிறார்.

அந்த கழுத்தறுப்பட்ட பாட்டி அந்த குடும்பத்தின்மீது சாபம் இட்டதோ இல்லையோ. அந்த குடும்பத்திற்கு வாக்கப்பட்டுவரும் பெண்கள் மனதில் அந்த நிகழ்வு பெரும் அதிர்வாக நுழைந்து நிலைகுலைய செய்து எண்ணங்களை பாவத்திலும் சாபத்திலும் கொண்டு சென்று நிலைக்கவைத்து விடுகிறது. எங்கிருந்து வந்தாலும் அந்த குடும்பத்திற்கு வரும் பெண்கள் எல்லாம் அந்த கழுத்தறுப்பட்ட பாட்டியின் வடிவங்கள்தான். அந்த குடும்பத்திற்கு அந்த பாட்டியின் இடத்திற்குதான் அவர்கள் வருகிறார்கள். அவர்கள் உள்ளுக்குள் அந்த குடும்பத்தை அவர்களையும் அறியாமல் சபிக்கிறார்கள். அது ஒரு எண்ண அலையாக பரவிக்கொண்டு இருக்கிறது. அதுதான் அவர்களை அந்த குடும்பத்திற்கு உரிய  பெண் பிள்ளைகளை  பெற்று எடுக்க முடியாமல்செய்கிறது. அந்த எண்ணங்கள் அவர்கள் வளர்க்கும் மாட்டுக்குள்ளும் நுழைந்து இறந்தப்பாட்டிக்கு நீதி செய்கிறது.

அந்த குடும்பத்தில் கொள்ளுதாத்தாவின் கொள்ளுதாத்தா மட்டும் இல்லை, இதோ இந்த அம்மாகூட பெண்களை (மருமகளை, மாட்டை) உள்ளார்ந்து மகிழ்விக்கவில்லை.  

பெண்ணை மகிழ்விப்பவருக்கே கண்ணீர் மறைந்து ஆனந்தம் பெருகுகிறது. கதையின் உள்ளீடாக இந்த கதை அந்த இடத்தை தொடுகிறது.

எண்ணம் மாறாமல் வாழ்க்கை மாறுவதில்லை. 

இந்த கதையை சொல்லும்போது பவா செல்லதுரை தனது தாயுக்கும் மீனம்மா என்ற மாட்டிற்கும் உள்ள நெருக்கத்தை சொல்கிறார். மாடு செல்லவம் மட்டும் அல்ல அன்பும்கூட. அந்த அன்பை மாட்டுடன் வாழ்ந்துப்பார்த்தவர்களால்தான் பெற்றுக்கொள்ள  முடியும்.

பவா செல்லதுரையும் அவரது அம்மாவும் அவர்வீட்டு நாயும் மீனம்மாவும் வயலுக்கு செல்கையில் பவா செல்லதுரையின் வயலில் அறுவடை நெல்லை கசக்கி திருடுபவர்களைப்பார்த்து இவர்கள் அமைதியாக நிற்க. அந்தமாடு பொறுக்க முடியாமல் செருமியதையும் அதைக்கேட்டு திருடர்கள் எழுந்ததையும் பவா செல்லுதுரை சொல்லும்போது அந்த மீனம்மாவின் முகமும் ஸ்பரிசமும் கைகளுக்குள் வந்துபோனது.

திருடர்களைப்பார்த்து கொதிக்காமல் அவர்களின் கயமையை கண்டுகொண்ட கம்பீரத்துடன் வேண்டிய அளவுக்கு கசக்கிக்கொண்டுபோகங்கள் என்று பவாவின் தாய் திரும்பிகாட்சியும், அந்த திருடர்கள் கசக்கிய நெல்லை விட்டுப்போன காட்சியும் அறத்தின் மென்மையை வன்மையை உண்மையை எழுந்து வரவைக்கிறது.

பவாவின் மீனாம்மா விற்கப்பட்டு அது சிலநாள் கழித்து பவாவின் வீட்டிற்கே வந்ததும். அந்த பணத்தை செலவு செய்யாமல் வைத்திருந்த பவாவின் அம்மா அந்த பணத்தை வாங்கியவரிடம் கொடுத்து மாட்டை விட்டுவிட்டு திரும்பிப்போகசொன்னதும் அன்பின் ஆழமும் உயரமும்.

நாங்கள் ஒரு வெள்ளைமாடு வளர்த்தோம். எங்கள் ஐந்துபேரை   பெற்ற அம்மாவிற்கு அதுவும் ஒரு குழந்தைதான்.  அம்மாவின் வார்த்தையை அது மீறியது இல்லை. அம்மாவின் பசியை அம்மா அறிந்தாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் அம்மா அதன்பசியை அறிந்து இருந்தார். அதற்கு உணவு இல்லை வைக்கோல் இல்லை புல் இல்லை என்றால் அம்மா அழுதுவிடுவார்.

ஒரு மழைநேரம் மாலை அம்மா வைக்கோல் நனைகிறது என்பதற்கா மாட்டுக்குபோட வேண்டிய அளவு வைக்கோலை பிடிங்கிவந்து வீட்டு வாசல்படிக்கு முன்னால் வீட்டுக்குள் போட்டுவிட்டு மழையில் நனைந்தபடி வாசலில் கிடந்த துணிகளை பொருள்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். இரண்டுவயது கைக்குழந்தையாக இருந்த எனது தங்கை சின்னவண்டு வாசல்படியில் உட்கார்ந்து மழையைப்பார்த்துக்கொண்டு இருந்தது.  தங்கையின் பின்னால் வீட்டுக்’குள் வைக்கோல். வாசலில் மழையும் அம்மாவும்.

மேச்சலுக்கு சென்ற வெள்ளைமாடு மழையில் நனைந்து ஓடிவந்து அவசரமாக வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. வாசல்படியில் குழந்தை. அம்மா பதறி “ஐயோ. என் புள்ள” என்று  ஓடிவந்துப்பார்க்கிறார்கள். வெள்ளைமாடு முன்னங்கால் இரண்டையும் தூக்கி வைக்கோல்மீது வைத்து வைக்கோல் திங்கிறது. பின்னங்கால் வாசலுக்கு வெளியில் இருக்கிறது. குழந்தை மாட்டு வயிற்றுக்குகீழே உட்கார்ந்து மடியைப்பார்த்து சிரிக்கிறது.

நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் மட்டும் இல்லை வெள்ளைமாட்டின் குழங்தைகள்கூடதான் என்பது இப்போது நினைக்கையில் புரிகிறது.

ஒரு நாள் அப்பா வெள்ளைமாட்டை விற்றுவிட்டார்கள். அம்மாவும் அழுதார்கள். அப்பா தனது பேச்சால் கண்ணீரை மறைத்தார்கள்.  வெள்ளைமாடும் ஒருநாள்அம்மாவை தேடிவந்தது. 

அம்மா தன்னால் முடிந்தது ஒருவேளை உணவுஊட்டி அனுப்பி வைத்தார். 

விலங்குகள் அன்பு காட்டுவதில் மனிதர்கள்முன் மனிதர்களைவிட மேலானவர்கள். மனிதர்கள் எண்ணங்களால் பலநேரங்களில்  விலங்கின்முன் விலங்கைவிட கீழனவர்கள்.

மனுஷி கதையிலும் லட்சுமி மாடு திரும்பி வந்துவிடவேண்டும்போல் இருந்தது.




அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.  

Monday, January 27, 2020

காதலி அரசி அன்னை


ஓம் முருகன் துணை

காதலி என்பதும் பெருநிலை. அரசியென்பதும் பெருநிலைதான்,  இரண்டும் அன்னையாகி உலகில் வாழ்வாங்கு வாழும் உயர்நிலைதான். 

அன்னை பார்வதி காதலி, அன்னை சிவகாமி காதலி, அன்னை சீதை காதலி, அன்னை சந்திரவதி காதலி, அன்னை சாவித்திரி காதலி, அன்னை தமயந்தி காதலி.

அன்னை மீனாட்சி காதலி மட்டும் இல்லை, உலகாளும் அருளரசி.  அன்னை தேவயானி காதலியாக இருந்து, உலகாண்டா ராஜமாதா. அன்னை திரௌபதி   பெரும்காதலி,  உலகாளும் குலதெய்வம்.

காதலியாக இருப்பவரும், காதலியாகவும் ஆளுமையுடை அரசியாகி அன்னையாகவும் இருப்பவர்களும் இருபெரும்  உயர்நிலைகள். ஒன்று அகமாகி வளர்வது. மற்றொன்று புறமாகி வளர்வது. இரண்டு வளர்ச்சியும் உயர்வானதே.  

காதலியாக இருப்பவர்கள் உலக உள்ளங்களில் மென்மையானவர்களாக எளியவர்களாக தெரிகின்றார்கள். ஆனால் அவர்கள் அகஆளுமைக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஊற்றுக்கண்போல அவர்களிடம் இருந்தே அவர்கள் சார்ந்து உள்ளவர்கள் சக்தியை ஆளுமையை மேன்மையை பெருகின்றார்கள். அவர்கள் ஒரு மையம். பரவுவதில்லை. ஆனால் பரவுவது எல்லாம் அவர்களிடம் இருந்தே.

காதலியாகி ஆளுமை அரசியாகி அன்னையாகவும் உள்ளவர்கள் புறசக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்கள் ஆற்றல் முழுவதை புறத்தில் விரித்து வைத்து புறத்தை சக்தி உடையதாக செய்கிறார்கள். அவர்கள் அகத்தை விரித்துக்கொண்டே செல்கின்றார்கள். அகம் ஒன்று இருப்பதாககூட அவர்கள் அறிவதில்லை. அவர்கள் அறிவதெல்லம் புறம்உலகம். புறஉலகமே அவர்களை கொண்டு வளர்ந்து, புறஉலகம் அவர்களின் வடிவங்களாக ஆகிவிடுகின்றன.

காதலியாக இருப்பவர்கள் அரசிகளை பெரியவர்கள் என்று நினைப்பது உண்டு. அரசிகளாக இருப்பவர்கள் காதலிகளை பெரியவர்களாக நினைப்பது உண்டு. தன்னைத்தான் திரும்பிப்பார்ப்பவர்களே தன்னின் பெருமையை உணரமுடியும். அதுவே ஆனந்தம் தரும் வளர்ச்சி என்பது விளங்கும். 

காதலியாக இருப்பவர்கள் உள்ளத்தை இனிக்கவைத்து கண்ணில் ஆனந்தமாக நிறைகின்றார்கள். காதலியாக மட்டும் இல்லாமல் அரசியாகவும் ஆகி  அன்னையாகவும் இருப்பவர்கள் கண்ணில் புதுமையாக நிறைந்து இதயத்தில் தீபமாக ஒளிர்கின்றார்கள்.

பெண்கள் இரண்டு கிளைகளாக வளரமுடியும். தன்னை காதலியாக மட்டும் வளர்த்துக்கொள்வது. மற்றொன்று காதலியாக இருந்து ஆளுமையுடைய அரசியாகி லோக அன்னையாகவும் வளர்த்துக்கொள்வது. 

அன்பானவர்களே! உங்கள் இயல்பு என்ன என்பதை கவனித்து உங்களை எதுவாக வளர்த்துக்கொள்ளமுடியுமோ அதாக வளர்த்துக்கொள்ளுங்கள்.

அன்னை சிவகாமியாக இருப்பது முடியா நடனம் கண்டு ஆடல் கண்டு முடிவிலியாக நிற்பது. அன்னை  மீனாட்சியாக இருப்பது வளராட்சி செய்து  வளர்ந்தோங்கி நிற்பது. இரண்டுமே வாழ்க்கையின் ஆடல்தான். 

வாழ்க வளமுடன்.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.  

Thursday, January 23, 2020

வாழ்க்கை எப்போது பிரச்னையாகிறது-சத்குரு


ஓம் முருகன் துணை 

அக உலகம் புற உலகம் என்பது தனது உண்மையை   எண்ணங்கள் என்ற  தோலுக்குள் மறைத்து வைத்துள்ள கனியாகும்.  அந்த தோலை மட்டும் நாம் விலக்க தெரிந்துக்கொண்டாள், உண்மையை  கண்டு சுவைக்கலாம்.  

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்வதுபோல ஓடும் சதையும்  சேர்ந்ததுதான் வில்வபழத்தின் எடை. 

எண்ணங்களும் மெய்மையும் சேர்ந்ததுதான் உலகும் வாழ்வும். 

சத்குரு ஜக்கிவாசுதேவ்  சொல்லும் இந்த கதையில் நான்கு எறும்பும் யானையும் கதை அகங்காரத்தின் தன்மையை அழகாக விளக்குகிறது. 

சத்குருவின் குரலில் இந்த கதையை கேட்பது சுகானுபவம். நன்றி சத்குரு.




வாழ்க்கயைின் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து கவனித்தால் வாழ்க்கை என்பது நமது எண்ணங்கள்தான். நமது எண்ணங்களை நாம் ஒழுங்குபடுத்த ஒழுங்குப்படுத்த வாழ்க்கை ஒழுங்கு ஆகும். 

பகவான் ஸ்ரீராமசந்திரபெருமான் தனக்கு உரிய ராஜியத்தையே விட்டுக்கொடுத்தான், கிடைத்தபோதும் அவன் மகிழவில்லை, அது கிடைக்காதபோதும் அவன் வருந்தவில்லை. அதுதான் ஸ்ரீராமன் எண்ணம். அதனால்தான் அவர் தெய்வம். அவருக்கு இன்னும் இனியும் ஒருதாசன் உண்டு. ஸ்ரீபக்தன் ஸ்ரீஆஞ்சனேயர். 

ராவணன் தனக்கு உரிமையில்லாத ஒன்றை (சீதையை) திருடிவந்தான், அதை கொடு என்று எத்தனையோ பேர் சொல்லியும் அந்த ஒன்றை திருப்பிக்கொடுக்கவில்லை. அதனால் அவன் மட்டும் இல்லை அவன் குலமே அழிந்தது.  அதுதான் ராவணன் எண்ணம். 

எண்ணத்தை அகங்காரம் இல்லாமல் ஒழுங்குப்படுத்துவோம். 

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்


Thursday, January 16, 2020

அம்மா

ஓம் முருகன் துணை 


அம்மா

“மா“ என்று சொல்லாத ஒரு உயிரில்லை. எந்த மொழியல் எந்த நாட்டில் ஒரு ஜீவன் பிறந்தாலும் இந்த “மா“ என்ற சொல்லை சொல்லிதான் தன்னை மண்ணில் இணைத்துக்கொள்கிறது.

தமிழ் மொழி அந்த “மா“ என்ற சொல்லை அழகுப்படுத்தும் விதமாக, உயர்த்தும் விதமாக, புனிதப்படுத்தும் விதமாக “அம்மா“ என்று அழைக்கிறது.

நண்பருடன் மருத்துவ சோதனைக்கு சென்று வந்த நண்பர் பாலகிருஷ்ணன் “மருத்துவ மனையில் பிறந்து சிலதினங்கள் ஆன குழந்தை அம்மா அம்மா என்று அழுவதைப்பார்த்து தழிழ் குழந்தை என்று நினைத்து அறையை எட்டிப்பார்த்தேன், அரபிக்குழந்தை“ என்றார். 

அரபி மொழி “மா“வை மேலும் மேன்மைப்படுத்தும் விதமாக “மாமா“ என்று அழைத்து பெருமைப்படுகிறது.

சகோதரியின் குழந்தைக்கு, தாயிக்கும் மேலான தாய்போல தாயின் சகோதரன் விளங்குவதால், தமிழ் தாய்மாமனை பெருமைப்படுத்தும் விதமகா   “மாமா“ என்று அழைக்கிறது.

பசு உலகையே தாயாக நினைக்கிறது போலும், அதானால்தான் தனது சொல்லை “மா“ என்ற விளியாக உலகுக்கு வைக்கிறதோ?.

2016ல் பு.முட்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மாணவர் மனமேம்பாட்டு சிறப்பு விழா  ஜிஜிஆர் திருமணமண்டபத்தில் நடந்தது. அதில் பேசிய மதிப்பிற்குறிய காவல்துரை ஆய்வாளர் திரு.மணி அவர்கள் சொன்ன கதை இது.

நடக்கமுடியாத வயதான மாமியாரை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பாத மருமகள், தனது கணவனிடம் மாமியாரைப்பற்றி சொல்லிச்சொல்லி அவளை தனித்துவிட ஏற்பாடு செய்துவிடுகிறாள்.

கணவன் தான் மகன் என்பதை மறந்து மனைவியின் பணியாள் என்றே நடந்து கொள்கிறான் என்பதை தாய் அறிந்துக்கொண்டு வீட்டை விட்டுவெளியேற முடிவெடுக்கிறாள்.   

மகன் தாயை ஒரு கூடையில் வைத்து மலைக்காட்டில் கொண்டுசென்று விட தயாராகிறான்.

கூடையில் உட்கார்ந்து இருக்கும் தாய் மகனிடம் வீட்டுதோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் இருந்து ஒரு கைப்பிடி முருங்கை இலை கொத்தை பறித்துவரச்சொல்லி கையில் வைத்துக்கொள்கிறாள்.

“போகும்போதுகூட சும்மா போகுதா பார் கிழ முண்டம்“ என்று மருமகள் முணுமுணுக்கிறாள். 
  
மகன் தாயை தூக்கிக்கொண்டு மலையை நோக்கிப்பயணம் செய்கிறான். தாய் கையில் இருந்த முருங்கைகீரை இணாக்கை கிள்ளி போட்டுக்கொண்டே செல்கிறாள்.  காட்டை கடந்து மலையின் உச்சியில் உள்ள ஒரு குகையில் தாயை இறக்கிவிட்டுவிட்டு, மகன் திரும்பி வீட்டை நோக்கி நடக்கிறான்.

திரும்பி நடக்கும் மகனை கூப்பிட்டு அம்மா சொல்கிறாள் “மகனே! இருட்டப்போகுது, வழிமறைந்விடும், வேகமாக நடந்துபோ, திரும்பிபோகும் வழியில் நான் போட்டு வைத்துள்ள முருங்கைகீரை இணாக்கை பொறிக்கி  எடுத்துக்கொண்டே போ, வழிமாறாது, வீட்டுக்கு சரியாக போய்விடுவாய்” என்கிறாள்.

மகனால் அதற்குமேலும் நடக்க முடியவில்லை.   

அந்த விழாவில் யுதிஷ்டிரன் யச்சனுக்கு சொன்ன பதில்களைப்பற்றி நான்பேசிவிட்டு அமர்ந்துஇருந்தேன். அந்த கதையைக் கேட்ட என் மனம் தாயை நினைத்து துள்ளி துடித்து சமநிலை அடைந்தது.

தாயின் இடத்தில் எதை வைத்து சமன்செய்யமுடியும். தாய்கூட அதை அறிந்து சொல்ல முடியாது.

குழந்தைகளை அடிக்காத தாய்களே இல்லை, ஆனாலும் தாயைவிட பெரும் உறவு குழந்தைகளுக்கு இல்லை. தாய் அடித்ததால் உடைந்துபோன குழந்தை உறவுகள் இல்லை. தந்தை அடித்ததால் உடைந்துபோன மகன்கள் பலர் இருக்கிறார்கள்.  தந்தையிடம் அந்த விரிசலை ஒட்ட பசை இல்லை.  அதனால் அந்த விரிசல் விரிந்துக்கொண்டே சென்று தந்தையை மகனை எதிர் எதிர் துருவத்தில் நிறுத்திவிடுகிறது. ஆனால் அம்மா அம்மாவாகவே இருந்து எந்த விரிசலையும் ஒட்ட வைத்துவிடுகிறாள். தாயிக்கும் பிள்ளைக்கும் இடையில் விரிசல் இருக்கிறது என்றால் அது பிள்ளையின் கற்பனையில் உள்ள விரிசல் மட்டுமே.  குழந்தை என்று ஒன்று தனியாக இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தாயின் கொடியில் கனிந்த தாயின் கனிதான். 

மேலே சொன்ன கதையில் அம்மா தாய்பாசத்தோடு நடந்துக்கொண்டாள் என்று தோன்றுகின்றது. அம்மா பாசக்காரியாக நடந்துக்கொள்வது நமது மனதின் வெளிப்பாடு, அவள் வாழ்க்கை விஞ்ஞானி. அவள் எத்தனை பெரிய சூழ்நிலை அறிவாளி. தாயை தொலைக்கபோன இடத்தில் மகனே தொலைந்துப்போவான் என்பதை அந்த தாய் அறிந்தது எத்தனை பெரிய அறிவாளி தனம். எந்த அறிவியலிலும் இந்த சூத்திரம் இல்லை. மகனுக்காக எத்தனை மணிநேரத்திற்கு முன்பு செயல்பட தொடங்குகின்றாள் அந்த தாய். குழந்தை பிறப்பதற்கு முன்பே அம்மா அம்மாவாகிவிடுகிறாள் என்பது குழந்தைகள் அறிவதில்லை. 

சௌதி அராபியாவில் இருந்து சென்று அம்மா முகம் பார்க்க முடியவில்லை. எனது அம்மா இறந்து பதினாறு நாள் காரியம் எங்கள் சொந்த ஊர் பூவாயிக்குளத்தில் மாமாவீட்டில் இருந்து  முடித்துவிட்டு  நாகவல்லி அம்மன்கோவில் வந்து  நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டை உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைக்க சென்றபோது அம்மா இல்லாத வீட்டில் அம்மா சுட்டுவைத்திருந்த தோசை மட்டும் இருந்தது.  

பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பிருந்தே அம்மா  பிள்ளைகளுக்கு உணவாகிக்கொண்டே இருக்கிறார்.  

ஜெயமோகன் எழுதும் வெண்முரசில் ஒரு கதை. இறக்கும் தருவாயில் உள்ள ஒரு தாய்பறவை, இன்னும் இறகும் சிறகும் முளைத்து பறக்க எழாத தன் குஞ்சுகளிடம்   சொல்லும். “முதலில் என்கால்களை சாப்பிடுங்கள், பின் இறக்கைகளை சாப்பிடுங்கள், அதன் பின் என் உடலை சாப்பிடுங்கள், இறுதியாக என் இதயத்தை சாப்பிடுங்கள். இறகும் சிறகும் முளைத்ததும் பறந்து சென்று உலகை வென்று வாழுங்கள்”  

அம்மா ஒரு வாழ்க்கை விஞ்ஞானி. தனக்கு தெரிந்த பொருள்களை மட்டும் கொண்டு அவள் விஞ்ஞானம் செய்கிறாள். மெய்ஞானம் படைக்கிறாள். அதனால் அதற்கு மதிபில்லை மண்ணில். ஆனால் தெய்வங்கள் அதனை வாழ்த்திக்கொண்டே இருக்கின்றன. 

சூழ்நிலையின் அறிவாளியாக இருக்கும் தாயால்தான் வாழ்க்கை வளமானதாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளும் குழந்தைக்கு தாயே தெய்வம்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை-திருக்குறள்      

இ்ந்த திருக்குறளில் திருவள்ளுவர் அருமையினும் அருமையான உவமைகளை சொல்லி இருக்கலாம், சொல்லவில்லை. தாயைவிட அருமையான ஒன்று உலகில் இல்லை என்பதை குறிப்பு உணர்த்த இந்த குறளில் தாயை உவமையாக வைக்கிறார்.



உலகையே அம்மாவாக நினைத்து “அம்மா“ என்று அழைத்து அம்மாவாக இருக்கும் கோமாதாவை வணங்கி அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்து. 

பட்டி பெருக பெருக பால்பானை பெருக பெருக

மாட்டுப்பொங்கலோ பொங்கல். 


தாய் வாழ்க தாயகம் வாழ்க தாய்தமிழ் வாழ்க. 

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல். 


Monday, January 6, 2020

அ.முத்துலிங்கம் கட்டுரை வாசிப்பு அனுபவம்-நிஜமான ஆனந்தம்




ஓம் முருகன் துணை

 நிஜமான ஆனந்தம்.

கட்டுரை வாசிக்க அன்றன்றைக்கு உரிய அப்பம்-அ.முத்துலிங்கம்



’சின்ன விஷயங்களின்  மனிதன்’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை எழுத்தாளர் வண்ணதாசன் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு 2014 ஆண்டு சமர்ப்பணம் செய்து உள்ளார்.

இதற்கு முன்பு வண்ணதாசனும், அ.முத்துலிங்கமும் கடிததொடர்போ, தொலைபேசி தொடர்போ வைத்துக்கொண்டது இல்லை. நேரிலும் சந்தித்தது இல்லை.

அந்தநூலை அ.முத்துலிங்கம் அதுவரை படித்தது இல்லை. அவரும் இவருக்கு சொல்லவில்லை. அனுப்பவில்லை.

2018  ஆண்டு கனடா தமிழ் சங்கம் வண்ணதாசனுக்கு இயல்விருது வழங்கும் போது அ.முத்துலிங்கம் வண்ணதாசனை வரவேற்று உபசரிக்கின்றார். விடைபெறும் நாளில்தான் வண்ணதாசன் அந்த நூலை முத்துலிங்கத்திற்கு கொடுக்கிறார். அவர் நின்று கொண்டே படிக்கிறார்.

‘புனைவுகளாலும், அதைவிடக் கூடுதலாகத் தன்னுடைய அபுனைவுகளாலும் நவீன தமிழுக்குத் தொடர்ந்த பங்களிப்பை அளித்துவருகிற திரு அ.முத்துலிங்கம் அவர்களின் கையில் இந்த தொகுப்பைக் கனிவுடன் சேர்க்கிறேன்.’ 

இதில் எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால்?. கையில் கனிவுடன் சேர்க்கிறேன் என்ற அந்த வார்த்தைகள் நிஜமானதால் ஏற்படும் ஆனந்தம்தான் ஆச்சர்யம்.

2014லிருந்து 2018ம்வருடம் வரை காத்திருந்து அந்த எழுத்தாளன் வார்த்தைகள் நிஜமானது நிஜமான ஆனந்தம்.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்

கைத்தல நிறைகனி-01-திருப்புகழ்



ஓம் முருகன் துணை

ஸ்ரீஅருணகிரிநாதர்சாமிகள் அருளிய திருப்புகழ்
கைத்தல நிறைகனி

தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான

......... பாடல் .........

கைத்தல நிறைகனி யப்பமொடு அவல்பொரி
     கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
     கற்பகம் எனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புனம்அதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய
கரிமுகன் அடிபேணி ... கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம்,
அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின்
திருவடிகளை விரும்பி,

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை
கடிதேகும் ... அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில்
நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,
என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில்
ஓடிப் போய்விடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு
திரள்புய மதயானை ... ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும்
சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க
திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்
மலர்கொ(ண்)டு பணிவேனே ... மத்தளம் போன்ற பெருவயிறு
உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத்
தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய
முதல்வோனே ... இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல்
முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல்
முதலில் எழுதிய முதன்மையானவனே,

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது
பொடிசெய்த அதிதீரா ... (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த
அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத்
தூளாக்கிய மிகுந்த தீரனே*,

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம்
அதனிடை இபமாகி ... (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத்
துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப்
புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம்
அருள் பெருமாளே. ... அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச்
சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள்
பாலித்த பெருமாளே.


* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான்
விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின்
அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா