ஓம் முருகன் துணை
களிற்றியானை நிரை-04 -வாசிப்பு அனுபவம்.
அன்புள்ள ஜெ வணக்கம்
களிற்றியானை நிரை
-04 பல மெல்லிய நுண் இடங்களை தொட்டு எடுத்துக்காட்டிச்செல்கிறது.
உச்சத்திற்கு நீச்சத்திற்கும்
இடையில் உள்ள இடைவெளிகளை நேரடியாக ஓடி நிரப்பாமல், உங்கள் அகத்தின் ஆழத்தி்ல் இருந்து
மணிகளை எடுத்துவந்து முன்வைத்து காட்சிப்படுத்துகிறது.
//அந்தணர் திகைத்தபின்
மேலும் ஓசையுடன் வேதம் ஒலித்தனர்//
//அனைத்துக்கும்
மேல் ஒரு மெல்லிய ஐயத்தை அடைபவனுக்கு உரியது பகடி//
//அவன் மதுரையில்
வைகைக்கரையில் அமைந்த செங்கல்படிக்கட்டில் அமர்ந்து நீலநீர் சுழித்தோடுவதை பார்த்துக்கொண்டிருந்தான்//
//வேகவதியில் நீர்
வெள்ளிக்கம்பிச் சுருள்கள் என முறுகி விரிந்து குவிந்து எழுந்து வளைந்து விழுந்து சென்றுகொண்டிருந்தது//
இப்படி கதை நெடுக
நுண்மைக்குள் நுண்மணிகளை அள்ளிவந்து அணிசெய்கிறது
அலைகள் அற்ற அன்றாட
வாழ்க்கையில் பெரும் அலைகள் திருப்பங்கள் தோன்றும் நிலைவரும்போது திகைப்பது நியாயம்.
அந்த திகைப்பை வெல்ல எதை செய்கி்ன்றோமோ அதை வேகமான சத்தத்துடன் செய்வதும் உண்மை.
//அந்தணர் திகைத்தபின் மேலும் ஓசையுடன் வேதம் ஒலித்தனர்// அந்த இடம் அந்த வரி தூக்கிவாரிப்போட்டது.
அடர் இருளில் பெரும்காட்டில்
தனித்து மாட்டிக்கொள்ளும் மனம் மிக ஆழமாக சென்று ஒவ்வொரு ஒலியையும் உள்வாங்கும், செவி
உள்வாங்கும் ஒவ்வொரு ஒலிக்கும் புத்தி இது இது, அது அது, என்று பதில் சொல்லிக்கொண்டே
இருக்கும், திடீர் என்று அருகில் எழும் ஒலிக்கு அறிவால் சட்டென பதில் சொல்லி காட்சியை
உருவாக்கமுடியாது, அப்போது அது திகைக்கும் அந்த திகைப்பை தனக்குள் இருந்து எழுப்பும்
ஒரு பேரொளியைக்கொண்டே அந்த கணத்தை திகைப்பை சமன்செய்யும். ஆ...ஓ…. ஐயோ..அம்மா...அல்லது
மெல்ல முனுமுனுக்கும் பாடல் பெரும் சத்தமாக வெளிப்படும்.
வாழ்க்கை பயணம்
என்பதுகூட முழு மை இருளின் பெரும்காட்டு தனித்தப்பயணம்தான். அதில் போர் என்னும் போரிடி
ஒலி வரும்போது திகைக்கும் மனம் தான் கொண்ட மொழியில்தான் சத்தமிடும். அந்தணர்கள்
திகைக்கும்போது சத்தமாகத்தான் ஒலிப்பார்கள். அற்புதமான மனநிலை நுட்பம். இப்படிப்பட்ட
நுட்பமான இடங்கள் கதையை உருவத்தில் இருந்து உணர்வுநிலைக்கு கொண்டு சென்று அதிரவைக்கிறது.
இதுபோல ஒரு அபூர்வமான
மனநிலை எழுச்சியை ஆதனை காணமல் ஆதன் தாய் தேடி களைத்து விழுந்து எழுந்து அவனைக்கண்டதும்
அடிக்கும்போது அவன் தாயைப்பார்த்து சிரிப்பது.
கதை உங்களை எழுதிச்செல்கிறது
ஜெ.
அன்னை ஔவை, காரைக்கால்அம்மை
இருவரும் தொலைவுக்கு சென்றவர்கள். சென்று கொண்டு இருப்பவர்களாகவும் இருந்தார்கள்.
காரைக்கால் அம்மையார்
தன்னை காரைக்கால்பேய் என்றே அழைத்துக்கொள்கிறார். அவரே அப்பன் சிவபெருமானை பார்த்தே,
அம்மாவுக்கே உரிய அதட்டலோடு, அதுவும் மருகளோடு போகும்போது பார்க்கும் மாமியார் கர்வத்தோடு,
நக்கலோடு “(டேய்!). நீ மட்டும் ஈமப்பெருங்காட்டில் பேயோடும், ஆரழலோடும்
ஆடினால் போதும், குழல் புரளும் சிறுமுதுகு கொண்ட வளையல்காரியை ( என் மருமகளை!) அழகுக்காக
வைத்துக்கொண்டு செல்லாதே” என்கிறார்.
குழலார் சிறுபுறத்துக்
கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.-அற்புதத் திருவந்தாதி-காரைக்கால் அம்மை
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.-அற்புதத் திருவந்தாதி-காரைக்கால் அம்மை
எல்லாவற்றையும்
விட்டு பேயானவருக்கு, அவன் எங்கு ஆடினால் என்ன? எப்படி ஆடினால் என்ன? யாரோடு ஆடினால்
என்ன?
வேறுஒரு பாட்டில்
மலையான் மகள் மருண்டுபோய் பார்க்கிறாள் என்கிறார். மற்றொரு பாட்டில் உனது நெஞ்சில்
புரளும் பாம்பு கடித்துவிட்டால்பெண்பாவம் வரும் என்கிறார். பேயே ஆனாலும் ஆணும் பெண்ணுமாய்
இல்லத்திறத்தில் இன்பம் கண்டு வாழவேண்டும் என்று நினைக்கும் உள்ளம் அன்னையின் உள்ளம்.
வாழ்க்கை வேண்டாம்,
இளமை வேண்டாம் என்ற ஓவை அன்னை ஓயாது ஊரெல்லம் சுத்தி இந்த அலைகடல் வாழ்க்கையில் பொருளென
ஒன்றும் இல்லை என்பதை அறிந்தும். முல்லைக்குகூட தேர்கொடுக்கும் மென்னுள்ளம்
கொண்ட பாரி மன்னவனை மூப்பெரும் மன்னவரும் மற்றும் சிற்றரசரும் சேர்ந்துக்கொள்ளும் மண்ணில்
இல்லறம் நடத்தி என்ன செய்ய போகிறோம் என்று எண்ணாமல் “இல்லறம் அல்லது நல்லறம்
அன்று” என்கிறார்.
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்
துறவறம் செல்லப்போவதாக கூறும் கணவனிடம் மனைவி கூறுவதாக கூறுவார். “வெளியில் சென்று
சோற்றுக்கு நாலுவீட்டு முன்னால் நிற்பதைவிட, இந்த ஒருவீட்டோடு நின்றுவிடுவது நல்லதுதானே”
. இதனை சொல்லிவிட்டு. கோட்டைக்குள் இருந்துபோரிடுவதுதான் பாதுகாப்பானது என்பார்.
//தெய்வத்தைவிட
பெரிய ஒன்றை இல்வாழ்க்கையிலேயே கண்டடைபவன் நல்லூழ் கொண்டவன் அல்லவா?//” என்கிறது. களிற்றியானை
நிரை-04.
தனது தாய் தந்தையரை
கொன்ற கொள்ளைக்காரனால் வளர்க்கப்படும் சிறுவன் பிற்காலத்தில் பெரும் கொள்ளையனாக
மாறும் தக்கி அமீர் அலி தனது கையால் எழுநூற்று பத்தொன்பது கொலைகள் செய்ததாக ஒப்புதல்
வாக்குமூலம் கொடுக்கிறான். வெள்ளையர் அரசால் கைது செய்யப்படவில்லை என்றால் அது ஆயிரத்தையும்
தாண்டி இருக்கும் என்கிறான். அத்தனையும் நம்பவைத்து கழுத்தறுகும் நயவஞ்சகம். ஓசை எழாமல்
உயிர் எடுக்கும் அதிசயம்.
நிலத்தியல்பால்
நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும்
அறிவு -என்கிறார் வள்ளுவர்.
கொள்ளையரிடமிருந்து
தப்பிக்கும் அழிசி ஆதனுடன் சேர்வது அற்புதம். நிறை நிறையை ஈர்க்கும்.
அன்பும் நன்றியும்.

ராமராஜன் மாணிக்கவேல்
No comments:
Post a Comment