Tuesday, April 16, 2019

திருப்புகழ் 1307 அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை)


ஓம் முருகன் துணை 

சுவாமிமலை சாமிநாதா போற்றி 
பழமுதிர்சோலை ஆண்டா போற்றி 
முருகா சரணம்

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்

திருப்புகழ் 1307 அகரமுமாகி  (பழமுதிர்ச்சோலை)

 பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான


......... பாடல் .........



அகரமுமாகி  அதிபனுமாகி  அதிகமுமாகி ...... அகமாகி
     அயனெனவாகி  அரியெனவாகி  அரனெனவாகி ...... அவர்மேலாய்
இகரமுமாகி  எவைகளுமாகி  இனிமையுமாகி ...... வருவோனே
    இருநிலமீதில் எளியனும் வாழ எனதுமுனோடி ...... வரவேணும்



மகபதியாகி  மருவும் வலாரி மகிழ்களிகூரும் ...... வடிவோனே
     வனமுறை வேடன்  அருளிய பூஜை மகிழ்கதிர்காமம்  ...... உடையோனே
செககணசேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
    திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.



......... சொல் விளக்கம் .........



அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல

எப்பொருளுக்கும் முதன்மையாகி


அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி



அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி



அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி



அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி



அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி



அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி



அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி



இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி



எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி



இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி



வருவோனே ... வருபவனே



இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்



எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ



எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்



மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக



மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)



மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்



வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே



வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)



அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற



கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)

உடையவனே


ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)



என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே



திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த



பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது



மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.


* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற
வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.



நன்றி-கௌமாரம்.காம். 
http://www.kaumaram.com/thiru/nnt1307_u.html

பாட்டு. பெங்களுர்.ரமணி அம்மாள்-https://www.youtube.com/watch?v=lzqjEDvftXc


Singer -Thiru P. Sambandam Gurukkal-https://www.youtube.com/watch?v=RF98tgJuYNU




வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

முருகா சரணம் 

No comments:

Post a Comment