Saturday, November 9, 2019

கற்கனிமர வீதி (சிறுகதை)




ஓம் முருகன் துணை

கற்கனிமர வீதி (சிறுகதை)

ராமராஜன் மாணிக்கவேல்

திலகவதி பாட்டிம்மா தானியங்கி  இயந்திரத்தில் பணம் எடுக்கும் அறைக்குள் நுழைந்ததும்யாரோ துபாய் காரன் பொண்டாட்டி வந்து பணம் எடுத்துட்டு போயிருக்காள். செண்டு வாசமும் மல்லிகைப்பூவாசமும் மூக்கை துளைக்குதுஎன்று கூறிய படி கணவன் பாலசுப்பிரமணியன் தாத்தாவைப் அண்ணாந்துப் பார்த்து சிரித்தது.

கீழே சிந்தி கிடந்த மல்லிகைப்பூவைப் பார்த்த தாத்தா பாட்டியின் நுனிமூக்கு புடைக்கும் அழகை  கனிந்து நோக்கி ஏதோ சொல்லவந்தவர் பாட்டியம்மாவின் வைரமூக்குத்தி ஜொளிப்பதை கண்டு   களித்தார். பாட்டிம்மாவின் மஞ்சல்பூசிய நெற்றியில் வைத்திருந்த காசளவு குங்குமம் அடுக்கு செம்பருத்தி வண்ணம் காட்டி தாழ்பூ மணம் பரவசெய்தது.
  
தாத்தா நகர்ந்து பணம் எடுக்கும்  பாட்டிம்மாவின்  பின் கழுத்தை  பார்த்துக்கொண்டு அருகில் நின்றார். பாட்டிம்மா கழுத்தில் இரட்டைவடம் தங்கசங்கிலி மின்னியது.   தோளில் நழுவிய பட்டுத்துண்டை இழுத்து விட்டுக்கொண்டு  அடர்த்தியான தனது வெள்ளை மீசையை வலது கையால் நீவினார். நெய் தடவிய வெள்ளைமீசை மின்னியது. முதுகுக்கு பின்னால் சாலையில் சென்ற வாகனங்களின் விளக்கொளி அவர்கள் முதுகை தடவி நழுவியது. 

பாட்டிம்மாவின்  வெள்ளைமுடிக்கொண்டையில் மலர்ந்து இருந்த கதம்பப் பூச்சரம் மணத்தது. மரிக்கொழுந்து வாசாம் அறைமுழுவதும் நிரம்பியது     பணம் எடுக்கும் கவனத்தில் பாட்டிம்மாவின் முகம் கொண்ட கூர்மையில் பாட்டிம்மா  சின்னக்குழந்தையாக தெரிந்தது.  அந்த முதுதாயிக்குள் அரும்பும் குழந்தைமையை நினைத்து தாத்தா புன்னகைத்தார்.  பெண்மையின் இருபெரும் எல்லைகளை அந்த ஒரு முகத்தில் காட்டி விளையாடியது அந்த கணம். 

பாட்டிம்மாவின் பின் கழுத்தில்  அரும்பிய வியர்வையை தனது வெள்ளை பட்டுத்துண்டால் ஒற்றினார் தாத்தா. வெடுக்கென்று திரும்பி அவர் கையை தட்டிவிட்டு யாரும் தங்களை பார்க்கிறார்களா? என்று கண்களை சுருக்கி கண்ணாடி சுவர்வழியாக வீதியைப் பார்த்துவிட்டு, யாரும் பார்க்கவில்லை என்று தெரிந்ததும் கணவனைப்பார்த்து பொய் கோபம் காட்டி முறைத்தது பாட்டிம்மா. தாத்தா  மென்மையாக சிரித்தார். பாட்டிம்மாவின் முகத்தில் புன்னகைகீற்று.  மீண்டும் அந்த  முகத்தில் குழந்தையும் கிழவியும் ஒன்றுகலந்து வந்து அழகுகாட்டும் விளையாடல். பாட்டியின் கனிந்த பனம்பழம்போன்ற முகம் விளக்கொளியில் பளபளத்தது.

நெற்றில் விபூதியும் தூக்கிய வாரிய சுருண்ட அடர்த்தியான வெள்ளை முடியும், கன்னத்தில் பஞ்சுபோன்ற மீசை முடியும் தாத்தாவின் முகத்தை ஒரு வெண்கல் சிற்பமென நினைவுபடுத்தியது.  தாத்தா பூசியிருந்த விபூதியின் பன்னீர்மணம் காற்றை  மணக்கவைத்தது. 

இயந்திரம் வெளித்தள்ளிய பணத்தை உருவி எடுத்து   தாத்தாவின் வெள்ளை சட்டைபையில் திணித்தபடியே தாத்தாவின் நெஞ்சை தடவியது பாட்டிம்மாவின் தங்கவளையல் கை. கழுவியும்போகாத பாட்டிம்மாவின் உள்ளங்கை மஞ்சல் பூச்சால் உள்ளங்கையில் தங்கம் மின்னியது.
   
நீயே வச்சிக்க, நீயே வச்சிக்கஎன்று தடுத்த தாத்தா, கையில் இருந்த துண்டால் நிதானமாக பாட்டியின் பின் கழுத்து வியர்வையை துடைத்துவிட்டு, தனது முகத்தையும் துடைத்துக்கொண்டார். அது பாட்டிம்மாவின் வியர்வை  மணத்தை முகர்ந்ததுபோல் இருந்தது. மரிக்கொழுந்து மணத்தோடு மஞ்சல் மணமும் தாத்தாவின் நாசியை நெகிழச்செய்தது.
  
தாத்தாவின் முகத்தை அண்ணாந்துப்பார்த்த பாட்டிம்மா தாத்தாவின் மீசையில் ஒட்டி இருந்த பூவிதழை  தனது ஆள்காட்டி விரலால் ஒற்றி எடுத்து தனது வாயில்போட்டு சாப்பி துப்பியது. அது காற்றில் ஓவியம் வரைந்துக்கொண்டே சென்று மண்ணைத்தொட்டது.
 
தாத்தா  தடுத்தும்  கேட்காமல் சில ஐநூறு ரூபாய் நோட்டை தாத்தா சட்டையில் திணித்துவிட்டு, மீதி பணத்தை தனது கைப்பையில் வைத்துக்கொண்டு முன்னால் நடந்து ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலை தாண்டி படியிறங்கியது பாட்டிம்மா. பாட்டிம்மாவின் கைப்பையில் இருந்து எழுந்தது ரோஜா இதழ்மணம்.

படி இறங்கியபடியேபக்கத்துவீட்டில் யாரோ நெய்சோறு சமைக்கிறார்கள்,   பொதினா வதங்கும் மணம்என்றது பாட்டிம்மா.

சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிய பையன் இரண்டு கைகளையும் தூக்கி காற்றில்  ஆட்டிவிட்டு மீண்டும் வண்டியை பிடித்துக்கொண்டான். பின்னால் சென்ற யாரோ வசைபாடுவது ஒசையாக கேட்டது. அவன் வண்டியில் இருந்து வந்த புகையின் மணத்தால் பாட்டிம்மா மூக்கை முந்தானையால் மூடிக்கொண்டது.

சிதம்பரத்தில்  உறவினர்கள் வீட்டு கல்யாண வரவேற்பு.  மகனும் மருமகளும் வேறு ஒரு கல்யாணத்திற்கு நேற்று இரவு சென்றுவிட்டு கல்யாணம் முடிந்து காலையில்தான் வந்தார்கள்.    மகனும் மருமகளும்  தாங்கள் போய் வருவதாகத்தான் சொன்னார்கள்.  வீட்டுவேலையையும் கவனித்துக்கொண்டு அங்க இங்க என்று அலைந்தால் உடம்பு என்ன ஆவது என்றுதான் மருமகளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு தாத்தாவும் பாட்டியும் வந்தார்கள்.  மாமனார் மாமியார் நல்லபடியாக போயிட்டு வரவேண்டும் என்று மருமகள் தவிப்பவது அவள் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிந்தது. பெரியவர்கள் இப்படி  கல்யாணம் காட்சி என்று கலந்துகொண்டால் மனம் ஆனந்தபடுமே என்று நினைத்துக்கொண்டும் அனுப்பி வைத்தாள்.
    
திலகா! பாத்து இறங்கு, காலை நன்றாக ஊன்றி வைத்து இறங்குஎன்று பாட்டிம்மாவின் தோளை பிடித்துக்கொண்ட தாத்தாவின் கை பாட்டிம்மாவின் நெல்நாற்று நிற பட்டுப் புடவை வழவழப்பில் வழுக்கியது.

நீங்கள் பார்த்து வாங்கஎன்று முந்தானையோடு சேர்த்து தாத்தாவின் கையை பிடித்துக்கொண்ட பாட்டிம்மா படியில் நிதனமாக அழுத்தமாக  காலை எடுத்து  வைத்து இறங்கியது.  பாட்டிம்மாவின் கறுத்தபாதத்தில் மஞ்சல்பூச்சு மினுங்கியது. சிற்பச்சிலை பாதம். மஞ்சல்பளபளப்பு. மஞ்சலால் கறுப்பும், கறுப்பால் மஞ்சலும் தெய்வீக வண்ணம் காட்டியது. பட்டுப்புடவையின் தங்கசரிகையும் வீதி விளக்குகளும் பாட்டிம்மாவின் பாதத்திற்கு   பளபளப்பை கொடுத்தது.

பாட்டிம்மா கட்டி இருந்த பச்சை பட்டுப்புடவையின் பிரதிபளிப்பா?  பாட்டியம்மாவின் பாதமும் பச்சையாக இருப்பதுபோல் விழிமயக்கு.   தாத்தா கண்களை மூடி திறந்து மீண்டும் பார்த்தார். ஒவ்வொரு படிக்கும் பாட்டியின் பாதம் ஒன்று வெளிவந்து முகம் காட்டுவதும், மற்றொன்று உள்சென்று   மறைவதுமாக நடனம் நடத்தியது. பாட்டிம்மாவின் வெள்ளிக்கொளுசு மெல்ல இசைத்தது.

பாட்டிம்மா இப்பொழுதும் பாதத்தில் மருதாணி வைத்து உள்ளது. மருமகள் வைத்துவிட்டது. மருமகளுக்கு பாட்டிம்மா வைக்கும்போது நடந்தது. உள்ளங்கால் மருதாணி சிவப்பு தாத்தாவின் கண்ணில் தடவியது. அந்த பாதத்தை நெஞ்சில் தாங்கவேண்டும் என்ற நினைவு தாத்தாவிற்கு, எட்டி நடக்கும் அன்னைகாளியின் பாதத்தை பூமியாய் கிடந்து தாங்கும் சிவன்போல படியாய் கிடந்துவிட தாத்தாவிற்கு ஆசை.    கறுத்தம்மா! கறுப்பாயி! கறுமாரி!” என்று முணுமுணத்த தாத்தா.

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே
என்று தாத்தா பாட்டிக்கு மட்டும் கேட்க பாடிய அபிராமி அந்தாதிப்பாடல் பாட்டியின் செவியை இனிக்க வைத்து, பாட்டியை குழைய செய்தது. தாத்தாவின் கையை இருக்கிப்பிடித்தது பாட்டிம்மா. அது அன்பு உருவம்கொள்ளும் கணம். பெண்மை உருகும் தருணத்தில் வலிமை கொள்வது எப்படி?! தாத்தா அந்த பிடியின் கனத்ததை உணர்ந்து நீண்ட சுவாசத்தை வெளிவிட்டார். நெஞ்சு உயர்ந்து தாழ்ந்தது. பாட்டிம்மாவின் மார்ப்பும் ஏறி இறங்கியது.

பாட்டிம்மா சாலையில் இறங்கி வீதியில் நின்றபோது. நடராஜர்கோயில்    மேற்கு கோபுரம் விளக்கொளியில் வானைதொட்டது. கோபுரத்தின் மேலேமட்டும் பனியிறங்குவதுபோன்ற காட்சி. பாட்டி கையெடுத்து   கோபுரத்தை  கும்பிட்டுவிட்டு நடக்க தொடங்கியது.

சாலையோரத்தில் பூப்பந்துகளை ஏந்தி முழம்போட்டு கொடுத்துக்கொண்டு இருந்த பெண்களில் தாவணிப்போட்ட பெண்ணொருத்தி ஓடிவந்து முழம்போட்டுக்காட்டி பூவாங்கிக்கச் சொன்னாள். அவள் இடதுகையில் உயர்கூடையை தொங்கவிட்டிருந்தாள்.  தாத்தா இரண்டு முழம் பூவாங்கி பாட்டியிடம் கொடுத்தார். அதில் பாதியை கிள்ளி பூவில்லாத பூக்காரபெண்ணின் தலையில் வைத்துவிட்டு மீதியை தன் தலையில் கதம்பத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டு  நடந்தது பாட்டிம்மா. பூக்கார பெண்ணின் விழிகள் பாட்டிம்மாவின் முதுகை தொட்டதை உணர்ந்து தாத்தா பூக்கார பெண்ணை திரும்பிப்பார்த்து சிரித்துவிட்டு சென்றார். அந்த பெண் கண்களை துடைத்துக்கொண்டாள்.

பக்கத்தில் இருந்த டீக்கடையில்  பெரிய இருப்பு வாணலியில் காயும் மசாலாபால் வாசம்காட்டி இழுத்தது.  மசாலா  பால் குடிக்கிறியா?“ என்றார் தாத்தா.

எனக்கு வேண்டாம், நீங்கள் வேண்டும் என்றால் குடித்துவிட்டுவாங்கநான் நிற்கிறேன் என்ற பாட்டிம்மா, ஓதுங்கி நிற்பதற்காக  கால்வைக்கபோன இடத்தில் ஏதோ பிளாஸ்டிக் பை குப்பை,  தாத்தா பாட்டிம்மாவை தோள்தொட்டு இழுத்து நிறுத்தினார். அதற்குள் காப்பித்தூள் வண்ண மணிபர்ஸ். அந்த புழுதிபடிந்த மணிபர்ஸை எடுத்து புழுதிபோக தட்டியபடியே யாராவது உடையவர்கள் தேடுகிறார்களா? வருகிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தார் தாத்தா.

தாத்தா பார்த்தவர்களில் சிலர் பேருந்து ஆட்டோ இருச்சக்கர வாகனத்தில்  உட்கார்ந்து ஓடினார்கள்கள். நடந்தவர்கள் எங்கோ இருக்கும் வாழ்க்கையை இங்கிருந்தே பிடித்தபடி நடந்தார்கள். வீதியின் விளக்குகள் சில கமலா ஆரஞ்சு வண்ணத்தில் எரிந்தன, சில பச்சை ஆப்பில் வண்ணம், சில ஆரஞ்சு வண்ணம், சில நிலவொளி வண்ணம். வீதி வண்ணத்தின் கலவையாக இருந்தது.  தொலைத்தவன் எங்கே ஓடிக்கொண்டு இருக்கிறோனோ? இங்கே தொலைத்துவிட்டு எங்கே தேடிக்கொண்டு இருக்கிறானோ? 

தாத்தா கையில் இருந்த பர்ஸை வாங்கி பாட்டிம்மா திறந்துப்பார்த்தது. புது பர்ஸ். உள்ளே வெண்மையாக இருந்த பர்ஸில் இருந்து தோல்வாசம் அடித்தது. பாட்டிம்மா மூக்கை சுளித்துக்கொண்டது. பர்ஸ் இன்னும் பணத்திற்கு பழகவில்லை. பர்ஸின்  உள் உறையில்  நடுத்தரவயது  பெண்ணின் கறுப்பு வெள்ளை  சிறிய படம்.

பர்ஸை வாங்கிய தாத்தா, பார்த்த முகமாக இருக்கிறதே என்று  நெற்றியை சுருக்கி வலதுகையால் தடவினார்.

அட நம்ம கீழ மூங்கிலடி அலமேலுஎன்றவர். “அது போயிதான், ஒரு வருசம் ஆச்சே. அது புருஷன் சேதுபதி பர்ஸூன்னு நினைக்கிறேன்என்ற தாத்தா பர்ஸை திறந்து பணம் இருக்கா என்று பார்த்தார். எல்லாம் புது நோட்டுகள், பணத்தை தாத்தா கையில் எடுத்ததும் பணம் ஒலித்தது. புதுப்பணத்திற்கு வாசமிருந்தது.
  
பணததை எண்ணிய தாத்தாபத்தாயிரம் பணம் இருக்கு திலகாஎன்று   முடிப்பதற்குள் பாட்டிம்மாஎன்ன பஸ் ஏத்திவிட்டுட்டு நீங்க கீழ மூங்கிலடி போயி இந்த பணத்த கொடுத்துட்டுவாங்கஎன்றது.

வீதி ஓரம் பாணிபூரி விற்பவன் காத்திருந்தவர்களுக்கு பாணிப்பூரியை எடுத்து  சிறிய தட்டில் அடுக்கிக்கொண்டு இருப்பதை பார்த்தபடி இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தார்கள்.  
 
சும்மா விடுவியா? அவன் என்ன இந்த பணத்த பார்க்காதவனா? நாலும் ஆம்பிள பிள்ள, நாலுக்கும் கல்யாணம் பண்ணி வச்சி பேரன் பேத்திய பார்த்துவிட்டான்.  மகன்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுத்து தனிகுடித்தனம் வைத்துவிட்டான். கொத்துவேலை  பார்க்குற பெரிய மொவன் துபாயில பில்டிங் கட்டிக்கொடுக்கற காண்ராக்ட் வேலைப்பாக்கிறான். இப்ப கூட சிதம்பரம் வண்டிக்கேட்டுல கடை வீடுன்னு கட்டி அமக்கள படுத்தி இருக்கிறான். மகன் மாசத்துல லட்சகணக்குல சம்பாதிக்கிறான்.    எங்க என்ன சேதுபதி பார்த்தாலும் பிள்ளைகள் பணம் சம்பாதிப்பதையும், வீடு நிலம் மனை கடை என்று நாளுக்கு நாள் சொத்தை வாங்கி குவிப்பதைப்பற்றிதான் பேசுவான். அவன் குரல்தான் தெரியுமே, சிதம்பரத்துல பேசுனா கடலூர்ல கேட்கும். உனக்கு போனே வேண்டாம்டா என்று நான்கூட கிண்டல் செய்வேன். ” என்று தாத்தா சிரித்துக்கொண்டே மனைவியைப் பார்த்தார்.

பாட்டிம்மாவின் செல்போன் ஒலித்தது. மருமகள்தான். தெற்குவீதி பஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருப்பதாய் பாட்டிம்மா சொல்லிவிட்டு போனை நிறுத்தி பையில் வைத்துக்கொண்டது. மருமகள் அழைப்பு பாட்டிம்மா முகத்தில் நிலவொளி எழச்செய்தது.
     
அதற்காக. ஊரான்வீட்டு பணத்தை நீங்களே வைத்துக்கொள்வீர்களா?” என்று பாட்டிம்மா முறைத்தது. முகத்தில் நீர் கிழியும் கோபம். கோபம் தோன்றியபோதே மறைந்துகொண்டும் வந்தது. தாத்தா முகம் கூம்பி பின் மலர்ந்தது.

சரி சரி. நம்ம பெரிய பயல்கிட்ட கொடுத்தா, நாளை காலை பைக்கிலபோயி கொடுத்துட்டு வந்துடுவான். நான் பேத்திக்கு பால்கோவா வாங்கியாறேன். நீ இங்கேயே உட்காருஎன்று பஸ்டாண்ட் சிமெண்ட் கட்டையை தனது துண்டால் விசிறி பாட்டிம்மாவை உட்கார வைத்து விட்டு, அது உட்கார்ந்து இருக்கும் அழகை கண்களில் தேக்கியபடி  உனக்கு என்ன வேண்டும்என்றார்.

மருகளுக்கு குண்டுமல்லி பூ பிடிக்கும், வாய்விட்டு கேட்க மாட்டா அதுல ஐந்துமொழம் வாங்கிக்குங்க.  குலோப்ஜாமுன் விரும்பி சாப்பிடுவாள் அதுல கொஞ்சம் தாராளமா வாங்கியாங்கஎன்ற பாட்டி தன்  தலையில் இருந்து மடியில் விழுந்த மல்லிகை பூவை தூக்கி முகத்திற்கு முன் வைத்துப்பார்த்தது.

பாட்டிம்மாக்கையில் இருந்த மல்லிகைப்பூவை புடுங்கி முகர்ந்தபடிஉனக்கு என்ன வேண்டும்?” என்று தாத்தா கேட்பதே சிரிப்பதுபோல் இருந்தது.

எல்லாம் நமக்குதாங்க, உங்களுக்கு பிடித்தத வாங்கிவாங்க. மகன் மருமகள், பேரன் பேத்தி எல்லாம் நாம ரெண்டுபேரும்தானேஎன்று சொல்லிய படி சிரித்த பாட்டிம்மாவின் கன்னத்தில் குழிவிழுந்தது. வயதின் ஏற்றத்தால் அது கொஞ்சம் நீண்டு வளைந்து வயதை நீட்டிக்காட்டியது.  தாத்தா கனிவுடன் பார்த்தார்.  பாட்டிம்மாவின்  காதோரம் மொய்த்த கொசுவை துண்டால் விசிறி துரத்திவிட்டு இடது தோளில் முன்பின் கிடந்த துண்டை இழுத்து  இடது வலது தோளில்   மாலையாக போட்டு நடந்தார். எட்டுமுழ பட்டு வேட்டியின் தங்கம் மின்னும் பெரியகரை அப்போது ஒரு கம்பீரத்தை கொடுத்தது. அவர் நடக்கும் அழகையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தது பாட்டிம்மா.
 
மனைவியுடன் ஸ்கூட்டியில் போகும்  மெக்கானிக்கிடமிருந்து டீசல்வாசம் வந்தது. அவனுடைய காக்கிச்சட்டை ஆயிலில் நினைத்து தி்ட்டுத்திட்டாய் ஈரமாக இருந்தது. பாட்டிம்மா அவன் மனைவி ஒதுங்கி தள்ளி உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவர்களுடனே பார்வையை அனுப்பி திரும்பி அழைத்துக்கொண்டது. அவள் ஐந்துமாத வயிற்றை ஒரு கையால் பிடித்திருந்தாள். தலையில் வைத்திருந்தபூவோடு வேப்பிலைக்கீற்றொன்றை சொருகியிருந்தாள்.

பேண்ட் சர்ட்டில் நடந்துபோவோரை பார்த்துவிட்டு மீண்டும் தனது கணவன் நடக்கும் அழகைப்பார்த்தது பாட்டிம்மாஎன்ன பேண்ட் போட்டால் என்ன?  நடக்கும்போது வேட்டியில் ஆணுக்கு ஒரு கம்பீர அழகு வரத்தான் செய்கிறதுஎன்று  தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

தெற்குரதவீதியில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்திருந்தபடியே எதிரே மரவல்லிகிழங்கு வறுவல் விற்கும் தள்ளுவண்டியை பார்த்துக்கொண்டு இருந்தது பாட்டிம்மா. அருகருகே தள்ளுவண்டியில் ஒரு பழக்கடையும். ஒரு வளையைல் மணி பொம்மைகள் விற்கும்கடையும் இருந்தது. மரவல்லிக்கிழங்கின் வறுவல் மணம் மண்ணெண்ணெய் தீச்சுடர் வாசமும் இங்குவரை வந்து சென்றது.
  
பூ பொட்டலத்துடன் சண்முகவிலாஸ் இனிப்பையும்   வாங்கி வந்த தாத்தா. “96 படம் ஓடுது. நாளைக்கு வந்து பார்ப்போமா? பேரன் பார்த்துவிட்டு வந்து நல்ல படம் என்றான்என்றார் கண்கள் மின்ன.

சண்முக விலாஸ் இனிப்பின் நெய்வாசமும், குண்டுமல்லி பூவாசமும் பாட்டியின் முகத்தை பிரகாசிக்க வைத்தது. பாட்டிம்மா உட்கார்ந்திருந்த படியே நிமிர்ந்து தாத்தாவின் கண்களைப்பார்த்தபடியே   மைனருக்கு, காலேஜ் பையன்னு நினைப்பா? அது  சின்ன வயசுல பிரிந்த காதலனும் காதலியும்  காதலியின் கல்யாணத்திற்கு பிறகு சந்திச்சிகிற படமாமில்ல, மருமக சொன்னா. உங்களுக்கு யாரு பழைய காதலி? அந்த நினைப்பு இன்னும் இருக்கா?” என்று பாட்டி  சிரித்துக்கொண்டே தாத்தாவின் கையில் இருந்த இனிப்பையும் பூவையும் வாங்கியபடியே அவர் கையை தடவியது. தாத்தாவின் கையில் இருந்த பால்கோவா நெய் பாட்டிம்மாவின் உள்ளங்கையில் ஒட்டி பிசுபிசுத்து மணத்தது.  

பாட்டியின் பக்கத்தில் இருந்த சிமெண்ட் கட்டையை துண்டால் விசிறிவிட்டு உட்கார்ந்த தாத்தா. “நீதான் என் காதலி!   நமக்கும் பழைய கால  நினைப்பு இருக்குல்ல.  அது என்னமோ திலகா. வயது கூடக்கூடத்தான் மனசு இளமையா ஆவுது. இன்னும் மனசு உன்ன பார்த்த அந்த நாட்களில்தான் இருக்கு. மாமாமட்டும் அன்னைக்கு உன்ன கொடுக்கல,   தூக்கிட்டு வந்து குடும்பம் நடத்திருப்பேன்பழைய நினைவில் தாத்தாவின் முகத்தில் ஒரு இறுக்கம் எழுந்து கற்சிலை விழிப்பை ஏற்படுத்தியது.

பாட்டி தாத்தாவின் பேச்சை விரும்பினாலும், பக்கத்தில் உள்ளவர்கள் பார்ப்பதை பார்த்ததும் பேச்சை மாற்றவிரும்பியாரு, தருமதுரையில நடித்தானே அந்த பையனா? நல்லாத்தான் நடிக்கிறான். ஆனால், எல்லா படத்திலேயும் ஒரே மாதரி தலைய குனிந்துகிட்டு. கழுத்த சாச்சிகிட்டு பேசுறான். நடிக்கனும்ன்னா அந்த பாத்திரத்திற்கு ஏத்தமாதரியே மாறிடனும்என்றபடியே முந்தானையை விசிறிபோல ஆக்கி தனக்கு விசுறுவதுபோல தாத்தாவிற்கும் விசிறியது பாட்டிம்மா. “ஊரெல்லாம் காங்கிரட் கட்டிடம், புழுங்காமல் என்ன செய்யும். இராத்திரி மாதரியா இருக்கு? காத்தே இல்ல, காத்து இருந்தாலும் காத்தில் உயிரில்லஎன்ற பாட்டிம்மாவின் மூச்சு ஏக்கமாக மாறியது.

தாய்ப்பால் மணம் தொட திரும்பிய பாட்டிம்மா பின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் முந்தானையை விளக்கி குழந்தைக்கு பால் கொடுத்ததைப் பார்த்து சிரித்தடி. பிள்ளையின் கடைவாயில் பால் ஒழுகியபாலை  அந்த பெண்ணின் முந்தானையை இழுத்து   துடைத்துவிட்டு, குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு குழந்தையின் முகத்தையும் தாயின் மாரையும் முந்தானையால் மூடிவிட்டது.  குழந்தையிடமிருந்து ஜான்சனன் ஜான்சன் பேபி பவுடர் வாசம் பாட்டிம்மாவின் கையிலும் ஓட்டிக்கொண்டது.

கண்ணு பட்டுடபோவுது, பிள்ளைக்கு மூச்சு முட்டாம பாலை பாத்துக்கொடு’’  என்ற பாட்டிம்மாவை குழந்தையின் தாய்  பார்த்து வெட்கத்தோடு குழந்தைபோல் சிரித்தாள்.  அவள் மேல் உதட்டில் இருந்த மிளகு அளவு மச்சம் அவள் முகத்தை மீண்டும் பார்க்க தூண்டியது.

திலகா!, நடிப்புன்னா சிவாஜிகணேசன்தான், ஓவர் ஆக்டிங்குன்னு இந்த காலத்து பயலுக சொல்லுவாங்க. அவருடைய கண்ணின் மணிகூட நடிக்கும். உயர்ந்த மனிதன் படத்தில் காதலியை இழந்துவிட்டு, பணக்காரமனைவியுடன் உயர்ந்த மனிதனாக நடிக்கும் பாத்திரம். அந்த கண்ணுக்குள் காதலிய இழந்த சோகமும், பணக்கார மனைவிக்காக பந்தாவும் பணக்காரத்தனமும் சேர்ந்து நின்று அவரை வேறு ஒரு மனிதனாக காட்டும். அப்பப்பா மனுசன் நடிப்பதற்காகவே பிறந்த தெய்வபிறவி. தன் மகன் என்று தெரியாமல் தன்வீட்டில் வேலையாளாக  வைத்திருக்கும் தன்மகனை திருடன் என்று  எல்லோரும் சொல்லும்போது, தான் நம்பியவன் ஏமாற்றிவிட்டானே என்ற தன் நம்பிக்கை  தொலைந்த சோகத்தில் ஒரு பார்வை, ஒரு பாவனை காட்டுவார், அதெல்லாம் நடித்து உருவாக்க முடியாது. தானா வரனும் திலகா!.” தாத்தா சிவாஜிகணேசன் நடிப்பு உலகத்திற்குள் ஆழ்ந்துபோனார்.  பன்னீர்புகையிலை மணக்க மணக்க வெற்றிலைப்போட்டுக்கொண்டு வந்த பெரியவர்  திரும்பி கிழக்கே இருந்து பஸ்வருகிறதா என்று பார்த்தார். 

போதும் போதும் பஸ்வருகிறது வாங்க போகலாம்.  வரும் ஞாயிற்குகிழமை  பிள்ளைகளோட வந்து படம் பார்க்கலாம்என்று எழுந்த பாட்டிம்மா தாத்தாவின் கையைபிடித்து இழுத்துக்கொண்டு நடந்தது.

எதையோ நினைத்துக்கொண்டு நின்ற பாட்டிம்மாஏனோ மனம் இந்த பர்ஸையும் பணத்தையும் அலமேலு புருஷன்கிட்ட இன்னைக்கே கொடுத்துட்டு போன்னு சொல்றமாதரி இருக்குதுங்க. ரெண்டுபேரும் கீழ மூங்கிலடிபோயி கொடுத்துட்டு அப்படியே ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு போயிடுவோம். வெள்ளாத்த தாண்டினா நம்ம ஊருதானே

நாளைக்கு கொடுத்துடுலாம் திலகா

எவ்வளவு பணம் இருந்தால் என்ன? தொலைந்த பணத்தில் மனம் சிக்கிபடும்பாடு, சொல்லி மாளாது. என்னத்துக்காக வைத்திருந்த பணமோ?  மண்டபம் பஸ் வருதான்னு பாருங்கள்என்ற பாட்டிம்மா மீண்டும் வந்து உட்கார்ந்துக்கொண்டு. கைப்பையை திறந்து போனை எடுத்து   மருமகளுக்கு கீழ மூங்கிலடி போயிட்டு வருகிறேன் என்ற செய்தியை சொன்னது. பாட்டியின் கைப்பையில் இருந்து ரோஜா இதழ்மணம் மீண்டும் வெளிவந்து பரவியது. 

பணத்தை கொடுக்கவேண்டாமுன்னு நினைக்கில திலகா, அந்த ஆள  பார்த்தா புள்ளைகள் புராணம் பாடியே கொன்னுடுவாறு. அதான். அதும் பெரிய பையன் துபாய் போனதிலிருந்து, கையில காசு புரள ஆரம்பித்ததும். ரொம்ப பேசுறான்

மனுசன்னா அப்படிதாங்க.  எல்லா மனுசனுக்கும் நாம பெருசுங்கற நினைப்பு இருக்கத்தானே செய்யுதுபாட்டிம்மா கொஞ்சியபடி தாத்தாவின் கைவிரலை நீவியபடி . அதில்   இருந்த காய்ப்புகளை தன்விரல்களால் நிமிண்டியது.
 
போன மாசம் பரங்கிப்பேட்டை சந்தையில பார்த்தேன் திலகா. பார்த்துட்டு பார்க்காத மாதரி போகக்கூடாதேன்னு டீ சாப்பிட கூப்பிட்டேன். மீண்டும் மகன் புரணம். எத்தனை தரம்தான் கேக்குறது. பேர பிள்ளைகள் சேலத்திற்கு ஹாஸ்டலில் படிக்கபோவதால மருமகள்  வண்டிகேட்டு வீட்டுக்குப்போயிடுச்சாம். மகன் இந்த வீட்ட பூட்டிட்டு அங்க போயி இருங்குறான்.  பெரிய மருமகள் தங்கத்தில் கொளுசு வாங்கி இருக்காம். மருமகள் யாரும் இவர் பேச்சை கேட்பதில்லை என்று ஊரில பேச்சு  என்று கூறிவிட்டு. தூரத்தில் வரும் பஸ் கீழமூங்கிலடி போகுமா என்று கையை தூக்கி நெற்றிக்கு மேலே வைத்துப்பார்த்தார். விளக்குவெளிச்சத்தில் கண்கள் கூசியது.

கடலூர் பஸ்வந்து நின்று ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றது. பின்னலேயே சேலம் பஸ் வந்து நின்றது. குல்பி ஐஸ்  விற்பவன் அருகில் வந்து நின்று மணியடித்துக்கொண்டு இருந்தான்.
 
அலமேலும் அவரும் ஒற்றை காணியை வைத்துக்கொண்டு பட்டப்பாட்டை நினைத்தால் கண்ணுல தண்ணி வந்துரும். இந்த நாலு புள்ளைகளை வளர்க்க அலமேலு கொஞ்சம்பாடா பட்டா. அவ பட்ட பாட்டுக்கு ஆண்டவன் கண்ணதொறந்துட்டான். ஆத்தாலதான் விட்டுட்டானுங்க அப்பனையாவது நல்லா பார்த்துக்கிட்டா சரிதான். அலமேலு அந்த பயலுகள வைத்துல வைச்சிகிட்டு காய்கறிகூடைய தலையில தூக்கிகிட்டு நடந்தத நினைச்சா கண்ணுல தண்ணிவந்துவிடும்  என்று பாட்டி  கண்களை துடைத்துக்கொண்டது.

எத்தனை கஷ்டப்பட்டு அது குடும்பத்தை காப்பாத்தியது. வாழ்க்கை வந்தபோது ஏன் உட்கார்ந்துசாப்பிட கொடுத்துவைக்கல. வாழ்க்கையின்னா அப்படித்தான்போல. அதுக்கு வயிலுத்துல கட்டி வந்துடுச்சின்னு அவரும் பார்க்காத டாக்டரில்ல. ஒரு கோயில் குளத்த விட்டதில்ல. அது அவருக்கு பொண்டாட்டி இல்ல தெய்வம். அது செத்த அன்னைக்கு மனுசன் அழுத பாத்து பதறிவிட்டேன்தாத்தாவின் கீழ் இமைகளில் நீர்கோடு துடைத்துக்கொண்டார்.

தாத்தா கொஞ்சநேரம் எதிர்திசையைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்.
அந்த மனநிலையின் வெக்கையை தணிக்க நினைத்த தாத்தாஅம்மாபுரத்தில் என் கூட்டாளி கல்யாணசுந்தரம் இருந்தானேஎன்று ஆரம்பித்தார்.

யாரு பால்கார கல்யாணமா?”

ஆமாம் அவன்தான். அம்பிகா நடித்த படத்த பார்த்தா அன்னைக்கு ராத்திரி பொண்டாட்டிய போட்டு அடித்து இருப்பான். பாவம், மாமியார்தான் தவி்ட்டு ஒத்தடம் கொடுக்கும். ஒருநாள் அது கிடந்த கிடைய பார்த்துட்டு அடிக்கபோயிட்டேன்

ஏன்

அத இப்ப சொல்ல முடியாது, ராத்திரி சொல்றேன்என்று தாத்தா கண்சிமிட்டினார்.

நீங்களும் உங்க கூட்டாளியும். நீங்கதான் மெச்சிக்கணும், இதுமாதரி கூட்டிளியெல்லாம் உங்களுக்குதான் கிடைக்கும். ஆளபாருஎன்று பாட்டி உதட்டை சுழித்துக்காட்டிவிட்டு. “எனக்குமட்டும் இது தெரிந்து இருந்தால் எம்ஜியார் படத்துக்கு கூட்டிட்டுபோ இல்லாட்டி பட்டினி போட்டுறுவேன்னு சொல்ல  வச்சிருப்பேன். அம்பிகாவாம் அம்பிகா.  விலக்கமாத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதா?”

தாத்தா கடைவா பல்தெறியிற மாதரி அண்ணாந்துப்பார்த்து பஸ்டாப் என்பதையும் மறந்து பகபகவென்று சிரித்தார். பாதிநிலா வானம்  நட்சத்திரங்களால் மின்னயது.

பாட்டி சுதாரித்துக்கொண்டு. “அலமேலுவோட மற்ற புள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்கஎன்று தாத்தாவை பஸ்டாப்புக்கு இறங்கிவரவைத்தது.

ஒரு பையனுக்கு சொந்த தங்கச்சி மகள கட்டி வைத்திருகிறார். எப்ப சந்தைக்கு வந்தாலும் மருமக பேர புள்ளைங்களுக்கு என்று  மூட்டைதான் கட்டி தூக்கிபோவார். பொண்டாட்டி இல்லங்கற கவலை இருக்குமி்ல்ல. ஆயிரம் அன்பு இருந்தாலும் அம்மாவின் அன்புபோல வருமா? ஆயிரம் உறவு இருந்தாலும், மனைவின் உறவாகுமா? மனுசன் இளைத்துதான் போய்விட்டார். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காததுபோல அந்த பேச்சு மட்டும் இன்னும் வெங்கலமணிதான்  என்று பாட்டிம்மாவின் மடியில் கிடந்த அதன் கையை மெல்ல தடவினார்.

பாட்டிம்மா கையை மடியில் இருந்து கையை இழுத்துக்கொண்டு அலமேலு புருஷன் இளைத்துவிட்டார் என்ற சொல்லால் துணுக்குற்ற   தாத்தாவை நிமிர்ந்து கூர்மையாகப்பார்த்துவிட்டு தலையைஇல்லைஎன்பதுபோல ஆட்டிக்கொண்டது.

கடலூர் பஸ்வந்து நின்றது. சென்னை பஸ்நிற்பதுபோல வந்து யாரும் ஓடிவராததால் நிற்காமலே போய்விட்டது. ஆரஞ்சி கலர் சுடிதாரில் காலேஜ் பெண்ணொருத்தி ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்போன் பேசியடிபோனாள்.

நீங்க போயி எதுத்தாபல இருக்கிற பாண்டியன்  மெஸ்சுல ஒரு சிக்கன் பிரியானி பார்சல் வாங்கி வாங்கஎன்று தாத்தாவை அவசரப்படுத்தியது பாட்டிம்மா.  பாட்டியை தாத்தா வித்தியாசமாக பார்த்தார். பாட்டி ஹோட்டலில் சாப்பிடாது. பாட்டியால் தாத்தாவும் ஹோட்டலில் சாப்பிடுவதையே விட்டுவிட்டார்.

 ஏன்?”

போயி வாங்கிட்டு வாங்க. ஒத்தவீட்டு கனகம், பிள்ளதாச்சி, ஏதாவது வாயிக்கு ருசியா  தின்னா தேவலம்போல இருக்கு என்று புருஷன்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தத வரும்போது  கேட்டேன். குடிகார பைய என்னத்த வாங்கிட்டு வரபோரான்.  பஸ்சு வந்திடபோகுதுஎன்று பாட்டிம்மா தாத்தாவை தள்ளியது.

தாத்தா எதுவும் சொல்லாமல் மடமடவென்று  நடந்து பிரியாணி கடைக்கு சென்றார். 
சோன்பப்புடி வாசம் வர பாட்டிம்மா திரும்பிப்பார்த்தது.  கண்ணாடி குடுவையை திறந்து சோன்பப்புடியை அள்ளி காகித சுருளில் மடித்துக்கொண்டு இருந்தான் தள்ளுவண்டிக் காரன்.
பார்சலுடன் வந்து தாத்தா நிற்கவும் கீழமூங்கிலடி மினி பஸ்வரவும் சரியாக இருந்தது. தாத்தா கையில் இரண்டு பிரியாணி பார்சல் பொட்டலங்கள்.

பாட்டிம்மா பார்சலை வாங்கியபடியேசோற்றை அடி பிடிக்க விட்டுட்டான்என்றது. பாட்டிம்மா.
    
பஸ் கீழமூங்கிலடியில் அலமேலு வீட்டுக்கு முன்னாலேயே நின்றது. வீதியின் இரண்டு பக்கமும் அலமேலு பிள்ளைகள் வீடுதான். ஏதோ ஒரு வீட்டின் கறிகுழம்பு வாசம் நாசியைவிசாரித்து. நாக்கை ஊறவைத்தது.

பணத்தை நாளைக்கு வந்து கொடுத்துக்கலாம் வா வீட்டுக்கு போயிடுவோம்என்றார் தாத்தா.

நாளைக்கு நாளைக்கு என்கிறது உங்க குடும்ப மந்திரமாஎன்று முறைத்த  பாட்டிம்மா எட்டி நடக்க தொடங்கியது.

பாட்டிம்மா கையை தாவிப்பிடித்த தாத்தா பாட்டிம்மாவின் கோபத்தை தணிக்கஇதுதான் சின்ன மகன் வீடு, கதவு ஜன்னல் எல்லாம் தேக்குஎன்றார்.  வீட்டை திரும்பி பார்த்த பாட்டிம்மாபெரிய வீடுதான். இந்த வீட்டுக்காரி மத்திமீனு வறுவலும், ரசமும் வைத்திருக்கிறாள்என்றது. பாட்டிம்மாவின் முகத்தில் கோபம் இருந்த இடமே தெரியவில்லை.

நல்ல மூக்கு உனக்குஎன்று தாத்தா பாட்டிம்மாவின் நுனிமூக்கை ஆள்காட்டி விரலால் தட்டினார். பாட்டிம்மா தலையை சினுங்களாக ஆட்டியது. பாட்டிம்மாவின் வைரதோடு, வைரமூக்குத்தியில் இருந்து ஒளி பூக்கள்  உதிர்ந்தது. 

இது மூன்றாவது மகன் வீடு. இவனுக்குதான் தங்கச்சி மகளை கட்டிவைத்திருக்கிறார். அதோ அதுதான் அவர் தங்கச்சிதாத்தா சுட்டிக்காட்டிய வீட்டில்  தங்கச்சி வரந்தாவில்  உட்கார்ந்து தட்டை மடியில் வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அங்கிருந்துதான் கறிகுழம்பு வாசம் வருகிறது.“கறிக்குழம்புக்கு இஞ்சி அதிகமாக அறைத்துவிட்டு இருக்கிறாள். ஒரே இஞ்சி வாசமாக இருக்கு, அப்பதான் கறிவேகுன்னு நினைச்சிருப்பா, ஆனா குழம்போட சுவையை அது குறைத்துவிடும். கறியும் இஞ்சிவாசம் அடிக்க ஆரம்பித்துவிடும்என்றது பாட்டிம்மா. தாத்தா மீண்டும் பாட்டியின் மூக்கை தட்டப்பார்த்து வலிக்காமல் கிள்ளிவிட்டார். 

இதுதான் இரண்டாவது மகன் வீடு. டூரிஸ்ட்வேன் வாங்கி வச்சி ஓட்டி சம்பாதிக்கிறான்என்று இடது புறம் சுட்டிகாட்டினார். இந்த மருமகள் புதுசத்திரம் ஸ்டேசனில் போலிஸ். வரந்தாவில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் சிக்கன் சால்னாவில் ஹோட்டல் பரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். காற்றில் விஸ்கிவாடை. பாட்டிம்மா முந்தானையால் மூக்கை மூடிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டது. “எப்படிதான் குடிக்கிறனுவோளோ? எதுக்குதான் குடிக்கிறானுவோளோ?” என்று பாட்டி சொன்னபோதுதான் தாத்தாவின் மூக்கிற்கு டாஸ்மாக் வாடை வந்து தொட்டது.

தாத்தா அதையே சாக்காக எடுத்துக்கொண்டுவா திலகா போய்விடலாம். நாளைக்கு பையன்கிட்ட கொடுத்துவிடுவோம்என்றார்.

பாட்டிம்மா நின்று தாத்தாவை துளைத்துவிடுவதுபோல் பார்த்தது.

சரி சரிஎன்ற தாத்தா.   அதோ அதுதான் பெரியமகன் வீடு. இதுதான் முதலில் கட்டியவீடு. இதில்தான் அலுமேலும் அவரும் வாழ்ந்தார்கள்.  அந்த வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கொட்டைகையில் டாக்டர் நின்றது.  பக்கத்தில் மாடுகள் நிற்பது நிழலாக தெரிந்தது. கன்றுக்குட்டிக்காக தாய்பசு மூச்சிறைத்து மெல்லி ஓசை எழுப்பியது.

வீடு பூட்டி இருக்கேஎன்று பாட்டி முடிப்பதற்குள் வரந்தாவில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. ஜீரோ வாட் பச்சை விளக்கு மட்டும் போர்ட்டிகோவில் தனித்து எரிந்தது.
 
சேதுபதிஎன்று தாத்தா அழைத்ததும். “யாரதுஎன்று சுரத்தி இல்லாமல் புரண்ட சேதுபதி பின்பு மெதுவாக எழுந்து அவிந்த வேட்டியை இழுத்து கட்டிக்கொண்டே தளர்ந்து நடந்து வந்தவர் பாட்டியை பார்த்ததும்வாங்கம்மா.வாங்கம்மாஎன்று கைபதறினார்.

இது சேதுபதி குரலாதாத்தாவால் நம்பமுடியவில்லை. வெங்கலமணியில் அலுமினிய பாத்திர ஓசையா?

வராதவங்க வந்திருக்கிங்க. உட்கார வைக்ககூட இடமில்லையே. அவளோட எல்லாம் போச்சிஎன்றவர் கை அவரையும் அறியாமல் குவிந்தது. கண்களின் ஓரத்தில் விளக்கு ஒளி முத்தாக மின்னியது.

அந்த சின்ன வரந்தாவின் அடுக்கிய மூட்டைகளின் இடையில்தான் சேதுபதி படுத்திருந்தார் என்பதை புரிந்துக்கொண்டார் தாத்தா. சாக்குநெடி, புழுங்கல்நெல்மணம், தவிட்டு மணத்தோடு தவிட்டுபூச்சி வாசம். எலி புழுக்கை நாற்றம். வேப்பம் புண்ணாக்கு சிக்கு நாற்றம். பாட்டிம்மாவிற்கு நெடியேறியது. 

அதிகநேரம் அங்கு நின்று அவரை சங்கடப்படுத்த விரும்பாவில்லை தாத்தா.
சிதம்பரம் போனப்ப, ஒரு பர்ஸ் கீழ கிடந்து எடுத்தேன். பார்த்தா! அதில் உங்க மனைவியோட போட்டோ. உங்க பர்ஸுன்னு தெரிந்தது அத கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தோம். நேரம் ஆகிவிட்டது, அப்புறம் ஒரு நாளைக்கு பகல்ல வரோம்என்று சொல்லியபடி தாத்தா பர்ஸை அவர் கையில் தினித்தார். அதை வாங்ககூட மனம் இல்லாமல் பேச்சு எழாமல் சேதுபதி நின்றார்.  அவர் கண்களில் ஈரம் தெரியாமல் இருக்க குனிந்துக்கொண்டார்.

தாத்தாவுடன் திரும்பி நடக்க தொடங்கிய பாட்டிம்மா  கால்கள் தயங்க நின்றதுஇந்த வீட்டில் கஞ்சிவாசம்கூட வரவில்லையேஎன்ற நினைப்பு பாட்டிம்மாவிற்குள் எழுந்ததும் மனம் பதைத்தது. கைகள் நடுங்கியதுசேதுபதியை திரும்பிப் பார்த்தது. அவர் கண்களில் கண்ணீர் துளி. பசி களைப்பு.
   
கையில் வைத்திருந்த பிரியாணி பார்சல் இரண்டையும்  பாட்டிம்மா அவர் கையில் வைத்ததும் அவசரமாக வாங்கி நெஞ்சோடு அனைத்துக்கொண்டார்.

 அம்மா!” என்றசொல் அவரின் ஆழத்தில் இருந்து  எழுந்து வந்து அவர் உதட்டில் உட்கார்ந்து கொண்டது. வெளிவரவில்லை. உதடு கோணி துடித்தது. “அம்மா!”  என்ற அவரின் அந்த சொல்லுக்கு ஓசையில்லை ஆனால்  பாட்டிம்மாவிற்குள் அந்த சொல் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவர் கண்ணில் மின்னிய நீர்த்துளி பாட்டியின் கையில் பட்டு விளக்கின் ஒளிசிதறலாக  மாறியது.

வீடு வரும்வரை தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளவி்ல்லை ஆனால்  வீடுவரும்வரை தாத்தாவின் கையைபிடித்த படியே இருந்தது பாட்டிம்மா.
 -----------------------------
ராமராஜன் மாணிக்கவேல்
அக்டோபர்-16-2019       


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

Thursday, November 7, 2019

அறக்கிளி (சிறுகதை)



                         ஓம் முருகன் துணை







அறக்கிளி (சிறுகதை)

ராமராஜன் மாணிக்கவேல்


நிழலை உதிர்த்துக்கொண்டே இருந்த பேரீச்சை மரத்தடியில், நீல ஜீன்ஸ்பேண்ட் பையில் வலது கையை நுழைத்துக்கொண்டு இடது கையை உயர்த்தி ஈச்சயிலை ஒன்றை பிடித்தப்படி மூவளைவு கொண்டு நின்றான் சரவணன். 

தேன் வண்ணக்கனியும், மஞ்சல் வண்ண செங்காய்களும் நிறைந்த பேரிச்சைக்குலைகளோடு பாலையில் முலைத்த தேர்போல் நின்றது அந்த வெயிலுக்கு மறத்துபோன மரம்.

ஈச்சயிலையின் நிழல் அவனின் வெள்ளை டி-சர்ட்டில் விழுந்து புதிய வடிவங்களை கணம்தோறும் வரைந்து அழித்துக்கொண்டு இருந்து.

பாலைமண்ணில் வேட்டைநாய்போல அலையும் வெயில் மின்துகள்கள்  வழிவதுபோல நீந்திக்கொண்டே சென்று தூரத்தில் நீர்அலைகள் அலையடிப்பதுபோல நதியென கண்களை ஏமாற்றியது.  

பாலை மண்ணில் முளைத்திருந்த இலையில்லா சிறுசிறு செடிகள்  தூக்கி எறிந்த துறுவேறிய கட்டுக்கம்பி போல குந்தியிருந்தது.

மணலில் உதிர்ந்த  காப்பித்துள் வண்ணக்கனிகளின் புழுங்கிய மணம் அவன் நாசியையும்,  தேன்தேடும் தேனீக்களின் ரீங்காரமும், கனி உண்ணும் சிட்டுகளின் சலசலப்பும்  செவியை நிறைப்பதை மறந்து தன்னில் ஆழ்ந்து தனக்கு தானே  தூரத்தில் இருந்தான். அவன் ஓட்டிவந்த வெள்ளைநிற ஏசி டொயோட்டா காம்ரிக்கார் அருகில்  இசைத்தப்படி நின்றது.  

தலைமுடிக்குள் ஈரப்பதத்தை உருவாக்கும் பாலை வெயில்காற்று, பாலை மண்படிந்து நிறம்மங்கிய ஈச்சயிலையில் புதுந்து குளிர்சூடுக்காற்றை சரவணன் மீது வழியச்செய்தது. சரவணன் சுடுக்காற்றையும் குளிர்க்காற்றையும் ஒன்றாக அனுபவித்தான். ஒரே மூழ்களில்  சுடும்நீரும் தண்ணீரும் உடல்தொடும் கணம்.

அவனையும் அறியாமல் “ஏசிக்காற்றில் எவ்வளவு குளிர் இருந்தாலும் உயிர் இருப்பதில்லை,  இந்த இலைக்காற்றின் ஒவ்வொரு துளிக்கும் உயிர் இருக்கு” என்று வாய்விட்டுச்சொன்னான்.

அவன் வார்த்தைகள் அவனை எழுப்பிவிட தன்னிலை உணர்ந்து தலை திருப்தி விழி சுழல சுற்றும் பார்த்தான். யாரும் இல்லை.  யாருமில்லாதது சுகமாக இருந்தது. மனிதன் மனிதனிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்வதைதான் மாபெரும் திறமையாக நினைக்கிறான் என்ற நினைப்பு அவனுக்குள் எழ ஒரு புன்னகையை சுவைத்தான். அந்த புன்னகை அவன் நாவில் ஒட்டி நழுவியது அந்த நேரத்திற்கு இதமானதாக இருந்தது.

ஈச்சமரத்தின் நிழல்காற்று உடலை குளிர்வித்தாலும் உள்ளம் பாலையின் மணல்போல் சூடு ஏறி தகித்தது.  

“வாழ்வதற்காக சாகிறோம்” என்று சிரிக்கும், “தங்கச்சிகளை கரைச்சேர்க்கணும், கரைச்சேர்க்கணும்“ என்று சொல்லியபடியே   ஐந்து ஆண்டுகளாய் நாட்டுக்குச்செல்லாமல்  சௌதியில் உழலும் கடலூர் பொன்வண்ணனின் நித்தியவாசகம் நினைவில் எழ அவன் முகம் அருகில்வந்துபோனது. “வலி தரும்   சோகம்  உள்ளம் நெகிழவைக்கும் நகைக்சுவையாக உருமாறுமோ? அப்படி என்றால் சோகம் என்ற ஒன்று இல்லைதானோ? சோகம் மனதின் கற்பிதமோ?”

அந்த மரம் விரித்த நிழல் கம்பளத்தை தாண்டாமல் மரத்தை சுற்றி சுற்றி நடந்து வந்தான்.  உதிர்ந்த பழங்கள் காலணியில் மிதிப்படாமல் இருக்க வலமும் இடமும் கால் மாற்றி மாற்றி நடந்தான். அப்படியே பறந்து ஒரு பறவைபோல இந்தியா சென்றுவிட நினைத்தான். அப்பொழுதே தேன்மொழியை பார்க்கவேண்டும்போல் மனம் துடித்தது.

தேன்மொழி போன் செய்வாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. நினைக்காதது நடப்பதால்தான் மண்ணில் இத்தனைக்கோடி மக்கள் வாழ்ந்தாலும் வாழ்க்கை புதியதாக இருக்கிறதா?

இன்று காலை அலுவலகத்தில் இருந்தபோது இந்தியாவில் இருந்து  அழைப்பு. எந்த எண்கள் இந்தியாவில் இருந்துவந்தாலும் அழைப்பை துண்டித்துவிட்டு இவன்தான் மீண்டும் அழைப்பான். புதிய எண்களாக இருக்கிறதே என்று நினைத்தப்படியே அழைப்பை துண்டித்துவிட்டு, இவனே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தான். வழக்கத்திற்கு மாறான நேரத்தில் போன் வந்தாலும், பழக்கமில்லாத எண்கள் அழைத்தாலும் மனம் ஏன் பதறுகிறது?. ஒரு நற்செய்தி வரும், அது ஒரு  ஆனந்த அழைப்பாக இருக்கும் என்று ஏன் மனம்   எண்ண மறுக்கிறது?. மனிதமனத்தின் ஆழம் பாசிமூடிய நீர்தெரியாத குளம்போல தெரியாத பயத்தால்  நிறைந்து இருக்கிறது. காலம் அதன்மீது கல்லெறியும் போதெல்லாம் பயம்தெறித்து மனிதனை நனைக்கிறது.   

 “தேன்மொழி பேசுறேன் சார்”   தூரம் ஒலியால் சுருங்கிவிட்டதன் ஆனந்தம் அவள் குரலில் மலர்கிறது   என்று இவன் நினைப்பதற்குள், இலைநுனி மழைத்துளி பட்டென சிதறுவதுபோல  சரவணனுக்குள் திரண்ட பரவசம் வடிவங்கொள்வதற்குள் அவள் அழுகையால் வெடித்து சிதறியது.  . 

தேன்மோழி, சரவணன்  படித்த நடுநிலைப்பள்ளியில் ஏழாம்வகுப்பு படிக்கிறாள்.   சரவணன் இப்பொழுது சௌதி அரேபியாவில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியலாளராக பணிசெய்கிறான்.

 “தேன்மொழி“ என்று அலுவலகத்தையும் மறந்து ஆனந்தக் கூச்சல் போடபோனவன்,   அவள் அழுவும் ஒலியால் மனம் மடக்கப்பட்டு, என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்து, அலுவலத்தில் யாராவது தன்னைப்பார்க்கிறார்களா என்று கண்களால் துழவி, நெற்றியில் வழியும் தன் முடியை இடதுகையால் நீவி தலைக்கு ஏற்றிக்கொண்டு வெளியே வந்தான்.  தேனீர் அறையில் இருந்து வந்த பிலிப்பைன் அக்கவுண்டன்ட் புன்னகைத்தப்படி தாண்டிப்போனான், அவன் கையில் இருந்த காப்பியின் மணமும், அவன்மீது தெளிக்கப்பட்டிருந்த வாசனைத்திரவியமும் நாசி வழியேறி உடலை தடவியது, அதையும் தாண்டி அவன் உண்ணும் உணவின் மணம் அவனோடு ஒட்டிக்கொண்டே வருவதுபோல் குமட்டவைத்தது. ஒருவருக்கு சுவைப்பது ஒருவருக்கு குமட்டுவது பழக்கத்தின் விளைவோ?!  

தேன்மொழியின் அழுகையால் ஏற்பட்ட பதட்டத்தில் அலுவலக ஏசியின் குளிரையும்  தாண்டி அவனுக்கு நெற்றிப்பொட்டில் வியர்வை துளிர்த்தது.  மேல் உதட்டை மடித்து கீழ் வரிசைப்பற்களால் கடித்துக்கொண்டே நடந்தான்.   இன்னும் தேன்மொழி அழுதுக்கொண்டுதான் இருந்தாள்.

எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் யாரோ முள்ளை பாதையாக்கி இழுத்துப்போவது போன்ற தவிப்புடன் நடந்தவன் செல்லிடப்பேசியின் அழைப்பை துண்டித்தான்.

இது அவன் அலுவலக நேரம், தேன்மொழியின் அழுகை ஒலி தட்டியதில்  சுருங்கிய மனம் மீண்டும் வேலை நாற்காலியில் உட்காரும் விதமாக விரியவில்லை. மேலதிகாரியிடம் அனுமதிப்பெற்று வெளியெற நினைக்கும்போதே, மேலதிகாரியின் ஆணவத்தின் நினைவு  அமிலமென உள்ளத்தை சுட்டது. கணிணிக்கு கொடுக்கும் கவனத்தை பார்க்கவந்தவர்களுக்கு கொடுக்க மாட்டார். கவனத்தை கொடுக்கமாட்டாரே தவிர அடுத்தவர்கள் தரும் பணிவின் எல்லையை அளந்துகொண்டே இருப்பார்.  அடுத்தவரிடம் அதித பணிவை எதிர்பார்க்கும் மேல்அதிகாரிகள் தன்னை காணவரும் ஊழியர்களை அவமதிப்பதில் எல்லை கடப்பது ஏன்? அடிப்படை மனித பண்புகூட இல்லாத, வடிவத்தில் மட்டும் மனிதர்கள். நாற்காலியால் மரியாதை பெறுபவர்கள். மனிதநாற்காலிகள். நாற்காலியால் மரியாதை பெறுபவன் நாற்காலியைவிட சிறியவன் என்பதை நாற்காலியே ஒருநாள் உணர்த்தும்.

கடமை வயிறு வாழ்க்கை என்று ஒவ்வொருவருக்கும் அவர் முன் நிற்கவேண்டி உள்ளது. இதுதான் விதியா? கர்மவா? மேலதிகாரியிடம் அனுமதிப்பெற்றுக்கொண்டு வெளி அலுவல்களை கவனிப்பதுபோல் தன் காரை எடுத்துக்கொண்டு இங்குவந்துவிட்டான். அவனுக்கு அவனிடமிருந்தே தனிமை தேவைப்பட்டது.

மழையில்லா விவசாயத்தின் வலியும், கிராமவாழ்க்கையின் சுருங்கிய பொருளாதார எல்லையும், எதிர்கால வாழ்க்கையின் புதிய கதவுகளுக்கு முன்பு நிற்கதியாக நிறுத்தும் அவலம் புரிய தொடங்கியபோது அப்பாவின் தூண்டுதலால் உழைப்பால் வழிகாட்டுதலால் வாங்கிய     பொறியியல் பட்டம் சௌதிக்கு  கதவுதிறந்துவிட்டது.

இந்திய மாநிலங்களை இணைக்கும் ஹிந்தியும், உலகை இணைக்கும் ஆங்கிலமும் முழுமையாக பேச இயலாதபோது கண்ணிருந்தும் குருடாக, வாயிருந்தும் ஊமையாக கனல்மீது நின்ற தருணத்தில் விழுந்த அனுபவவிதையால் முளைத்ததுதான் அவன் படித்த பள்ளியில் அவனால் நடத்தப்படும் ஹிந்தி மற்றும் ஆங்கிலமொழி பேசும் வகுப்பு. அதற்குறிய தற்காலிக ஆசிரியர் ஊதியத்தை அவனும் அவன் நண்பர்களும் ஒரு அறக்கட்டளை நிருவி செயல் படுத்தினார்கள். அது நன்றாக செயல்படுகின்றது, நற்பயனையும் விளைவிக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் விடுப்பில் ஊருக்கு செல்லும்போது பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து பள்ளிக்கு தேவையான நற்காரியங்கள் செய்துக்கொடுத்து, பிள்ளைகளுக்கு எழுத்து, பேச்சு, ஓவியம் என்று போட்டிகள் வைத்து பரிசுக்கொடுப்பது வழக்கம். இந்த முறை ஆங்கிலப்பேச்சுப்போட்டியும் ஹிந்தி கட்டுரைப்போட்டியும் வைத்தார்கள். அதில் முதல் பரிசுப்பெற்றவள்தான் தேன்மொழி.

அவனுக்கு தேன்மொழியை முதல்சந்திப்பிலேயே பிடித்துவிட்டது. அவள் பூந்தொட்டத்தில் ஒரு பொன்னாங்கன்னிகீரை. இல்லாமையாலேயே இருப்பவளாக தோன்றினாள். அவளிடம் ஒரு அழியாத செல்வம் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருந்தாள். அது அவளின் எளிமையா?. அந்த  புன்னகையா? குளிர்ந்த பார்வையா? களங்கமில்லா குழந்தைமையா?  எதையும் மிகைஇல்லாமல் குறையில்லாமல்  செய்யும் செயலா?

அவள்தான் கடவுள் வாழ்த்துப்பாடினால் நன்றாக இருந்தது. அவளுக்கு தேன்மொழி என்று யார்பெயர் வைத்திருப்பார்கள். சிலபெயர்கள் சிலநபர்களுக்காகவே காத்திருக்கிறது.  நன்றாக இருந்தது என்பதுடன் அவளால் அந்த பாடல் அழகாகவும் இருந்தது. அழகு என்பது உடல் சார்ந்த விசயம் இல்லை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தினாள்.
உருவசையும்போது உடன் அசையும் நிழல்போல் அவள் அழகோடு அறிவோடு திறமையோடு வறுமையும் உடன் அசைந்தது. அன்று பள்ளியில் பரிசு அளிக்கும் விழா என்பதால் அனைத்து மாணவமாணவியரும் புத்தாடையில் வந்திருந்தார்கள். ஆனால், தேன்மொழி மட்டும் வழக்கம்போல சீறுடையிலேயே வந்திருந்தாள் அதுவும் வெளுத்து, துவைத்த சுருக்கங்களோடு இருந்தது.

அன்று அவன்  பட்டில்நெய்த மயில் பின்னல்வேலைப்பாடு கொண்ட மயிலிறகு வண்ண முழுக்கை குர்தாவும் தாழம்பூவண்ண பைஜாமாவும் அணிந்து இருந்தான். அவள் ஆடையைப்பார்த்து தன்ஆடையைப்பார்த்த அந்த கணத்தில்,  சப்பாத்திபழ முள்ளை தரையில் தேய்ப்பதுபோல யாரோ தன் நெஞ்சில் தேய்ப்பதை உணர்ந்தான். மனித அகங்காரம் அடுத்தவர்களை சீண்டுவதன் மூலம் தன்னை உயர்த்திக்காட்டுகின்றது, அதுவே அடிபடும்போது எத்தனை வலியாக இருக்கிறது. எழுந்து ஓடி அந்த ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு, எப்போதும் அணியும் வழக்கமான பிறர் கண்களை உறுத்தாத ஆடைகளை அணியவேண்டும்போல் இருந்தது அல்லது தேன்மொழிக்கு அந்த பள்ளியிலேயே யாரும் போட்டுப்பார்த்திராத புதுமையான விலை உயர்ந்த ஆடையை வாங்கி வந்து அணிந்துக்கொள்ளச்சொல்லிப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. மனம் ஒரு குருடன், எல்லா திசைகளிலும் சிறகின்றி  பறக்கிறான், கூடவே வாயில்லாமல் பேசுகிறான். ஆனால் அவன்  கடந்ததூரம் என்பது இல்லவே இல்லை. 

விழாத்தொடங்கிவிட்டது. எல்லாம் நடந்துக்கொண்டு இருந்தது. அவனும் செயல்களில் ஈடுப்பட்டுக்கொண்டே இருந்தான். அவள் அதே ஆடையுடன் பரிசு வாங்கினாள். அவன் அதே ஆடையில்தான் பரிசு வழங்கினான். அவள் பரிசுவாங்கிக்கொண்டு செல்லும்போது திரும்பி முகம் குனிந்து இமையுயர்த்தி புன்னகைவிரிய ஒரு பார்வைப்பார்த்தாள் அது தேவதைகளின் பார்வை. தேவதைகளுக்கு அழகு ஆடையாளா வரும்?. அவனின் ஆடையின் அழகு விலை எல்லாம் உதிர்ந்துக்கொண்டு இருந்ததை உணர்ந்தான்.  வழக்கமாக அவன் ஆடம்பரமாக ஆடை உடுத்தி தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. இயல்பாக இருப்பதையே அவன் அகம் விரும்பும். குடும்பத்தாரின் விருப்பத்திற்காக இன்று அணிந்துவந்திருந்தான். அவனின் காரைப்பழ உதடுகளில் ஒரு புன்னகை பூத்தது. அந்த புன்னகை அவனுக்குள் இருந்த சுமையை  நீர்க்கச்செய்தது.   
தலைமை ஆசிரியர் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டதும். அவன் என்ன பேசுவது என்று யோசித்தான். வேலைப்பார்க்கும் நாட்டில் யாரிடம் எதை பேசினாலும் கடைசியில் ஒரு அறிவுரையோடுதான் முடிப்பார்கள் என்பதை அறிந்திருந்ததால் அறிவுரைச்சொல்வதைவிட ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம் என்று தோன்றியது. ஏன் வேலைப்பார்க்கும் நாட்டில் இருப்பவர்கள் மட்டும் அறிவுரைச்சொல்கிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் எல்லோரும் தனிமையில் இருக்கிறார்கள், பாதுகாப்பின்மையை உணர்ந்திருக்கிறார்கள். அந்த பாதுகாப்பின்மையால் மற்றவர்கள்மீது ஏற்படும் பரிவால் அந்த அறிவுரையை வழங்குகின்றார்கள். அது ஒரு தாய்மை உணர்வு அல்லது நான் என்ற அகங்காரம். அகங்காரம் இல்லாமல் இருப்பதுபோலவே இருப்பதுதான் பரிவின்வெளிப்பாடா? என்று எண்ணியபடியே  அறிவுரை வழங்குவதைவிட ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம் என்று நினைத்தான். கதைக்குள் இல்லாத அறிவுரையா?  அவனுக்கு அந்த நேரத்தில் தோன்றிய கதையொன்றை சொல்லத்தொடங்கினான்.

”ஒரு ஊரில் அரக்கன் ஒருவன் இருந்தான். பறவை விலங்கு மனிதன் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அடித்து சாப்பிடுவான். ஊருக்குள் புகுந்தால் கையில் மாட்டிய மனிதர்கள் அனைவரையும் பிடித்து கடித்து சாப்பிட்டுவிடுவான். ஊர் மக்கள் எல்லாம் அவனிடம் மண்டியிட்டு தங்களை விட்டுவிடும்படி கெஞ்சி கெஞ்சி வேண்டினார்கள்,அவர்களின் வேண்டுதலை கேட்ட அரக்கன்  “மாதாமாதம் தனக்கு வேண்டிய உணவும் ஆடும் மாடும் கோழியும் மற்றும் மாதத்திற்கு  ஒரு குழந்தையையும் உணவாகக்கொடுங்கள் உங்களை எதுவும் செய்யமாட்டேன். உங்களை யாரும் தாக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னான்.  

ஊர் மக்கள் அதற்கு சம்மதித்து ஒரு மாதத்திற்கு வேண்டிய உணவு, காய்கறிகள், ஆடு, மாடு, கோழி மற்றும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு குழந்தையையும் உணவாகக்கொடுத்தார்கள். அவன் ஊரின் நடுவில் உட்கார்ந்து அதை சாப்பிடுவான்.  அந்த குழந்தையை அவன் ஒரே நாளில் சாப்பிட மாட்டான். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கையையோ காலையோ பிய்த்து தின்பான். உயிரோடு இருக்கும் குழந்தை வலிதாங்காமல் கதறும். அதைப்பார்த்து அவன் ரசிப்பான். ஊரில் உள்ள அனைவரையும் பார்த்து அந்த குழந்தை தன்னைக் காப்பாற்றும்படி கண்ணீர்விடும். எல்லோருக்கும் அந்த குழந்தையை காப்பாற்றும் எண்ணம்வரும் ஆனால் ஊரில் உள்ள மற்றவர்கள் சாகமல் இருப்பதற்காக, ஊரைக்காப்பதற்காக  அந்த குழந்தை துன்பப்பட்டால் படட்டும் என்று மனதைக்கல்லாக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள்”.

சரணவன் அந்த இடத்தில் கதையை நிறுத்தி விட்டு, பயமும், பச்சாதாபமும், இரக்கமும் கலந்து, கண்ணீர் ததும்பும் விழிகளோடு அமர்ந்திருந்த கதைக்கேட்ட குழந்தைகளைப்பார்த்து அந்த குழந்தையை காப்பாற்றுவது சரியா? அல்லது   அப்படியே விட்டுவிடுவது சரியா? என்றொருக் கேள்வியைக்கேட்டான். நான்கில் மூன்று பங்கு குழந்தைகள் காப்பாற்றவேண்டும் என்றார்கள். ஒரு  பங்கு குழந்தைகள் காப்பாற்றவேண்டாம் என்றார்கள்.

தேன்மொழி மட்டும் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு தேன்மொழி என்ன நினைக்கிறாள் என்று கேட்க ஆவலாக இருந்தது. அவளின் மௌனம் மேலும் வியப்பையும் ஆவலையும் அவனுக்கு தந்தது. மனம் வியப்பும் ஆவலும் கொண்டதாலேயே அவளிடம் கேட்பதை தவிர்த்துவிட்டு, காப்பாற்றுவதுதான் சரி என்று கைதூக்கிய குழந்தைகளைப்பார்த்து ”ஏன் காப்பாற்றவேண்டும்?” என்று கேட்டான். 

தேன்மொழி சட்டையின் சுருக்கத்தை நீவுவதுபோல் யார் யார் எழுகிறார்கள் என்று ஓரக்கண்ணால் பார்த்தாள். ஐந்து பெண்குழந்தைகளும், மூன்று பையன்களும் பதில் சொல்ல கைத்தூக்கினார்கள். சலனமில்லா மௌனம் அவள் முகம்முழுவதும் பரவி இருந்தது. ஆனால் வலியின் வேர்கள் அதில் படர்வதைப்பார்த்தான். அப்போதுகூட அவள் எழுந்து பதில் சொல்லமாட்டாளா? என்று  ஏங்கியபடி அவளைப்பார்த்தான். அவளின் மௌனம் அவனை அவளை தாண்டிச் செல்லவைத்தது.  “ஒவ்வொருவராக சுருக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொன்னார்கள் ஆனால்  “அடுத்தவர் துன்பப்பட்டு நாம் சுகபடவேண்டுமா?. நமக்கு மனசாட்சி இல்லையா?” என்ற பொருளிலேயே அனைவரும் சொன்னார்கள்.  

காப்பாற்றவேண்டாம் என்பவர்கள் பக்கத்தில் இருந்து யாரும் எழுந்திருக்கவில்லை. “ஏன்” என்றான் அவன். எல்லோரும் தலைகவிழ்ந்து இருந்தார்கள். மனசாட்சி என்ற சொல் அவர்களை அழுத்தி உட்காரவைத்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்ட சரவணன். “மற்றவர்கள் சொன்னபதிலில் குற்றவுணர்ச்சிப்பட்டோ அல்லது திருப்திப்பட்டோ சும்மா உட்கார்ந்துவிடக்கூடாது. நீங்கள் முன்னம் என்னநினைத்து காப்பாற்றவேண்டாம் என்று சொன்னீர்களோ அதற்கான காரணத்தைச்சொல்லுங்கள் அதுதான் சுயசிந்தனை. மரம்பெய்யும் மழைபோல நாம் அடுத்தவர் பதிலில் திருப்தி அடைந்துவிட்டால் அதன்பின்பு வரும் கேள்விக்கு சுயமாய் சிந்திக்கமுடியாமல் ஆகிவிடும் எனவே நல்லதோ கெட்டதோ நினைத்ததை பேச பழகவேண்டும். “ம்“ எழுந்து பதில் சொல்லுங்கள்” என்றான்.

அனைவர் தலைகளும் நிமிர்ந்தன, முகத்தில் படர்ந்திருந்த தாழ்வுமனப்பான்மை நிழல் விலகி ஒளி படர ஒவ்வொருவராக எழுந்து பதில் சொன்னார்கள். வெவ்வேறு விதமாக ஆரம்பித்து “பலரின் நன்மைக்காக ஒருவர் தன்னை தியாகம் செய்வது தப்பில்லை” என்று முடித்தார்கள்.

தேன்மொழி இப்பொழுதும் மௌனமாகத்தான் இருந்தாள். யாரையும் பார்க்காமல் தான் வாங்கிய பரிசுப்பொருளைப்பார்ப்பதுபோல குனிந்துகொண்டு இருந்தாள். “தேன்மொழி நீ என்ன நினைக்கிறாய்” என்று சரவணன் கேட்டுவிட நினைத்தான். வலதுகையில்  கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை சரிசெய்வதுபோல  அவளைப்பார்த்தான். தொண்டைக்குழிவரை   வார்த்தை வந்துவிட்டது.

“நீங்க என்ன சார் நினைக்கிறீங்க?” என்று ஒரு பெண்குழந்தை எழுந்து நின்று கேட்கவும், சரணவன் சுதாரித்துக்கொண்டு, லேசாக சிரித்தப்படியே வலது புறம்   அமர்ந்திருந்த தலைமையாசிரியரைப்பார்த்தான். அவர் நரைத்த பெரியமீசையை நீவியப்படி “அதிக பிரசங்கி உட்காரு“ என்றார்.  இடது புறம் அமர்ந்திருந்த கணக்கு வாத்தியார், “எனக்கும் ஆவலாக இருக்கு சார். நீங்க என்ன நினைக்கிறீங்க“ என்று  ஓசையில்லா ஒலியில் கேட்டார். கணக்கு வாத்தியாரின் ஆவல் மற்ற ஆசிரியர்களுக்கும் பரவி முகஅசைவின் மூலம் வெளிப்பட்டது.  

சரவணன் சிரித்துக்கொண்டே எழுந்து குர்தாவின் இடதுகையின் சுருக்கத்தை   இழுத்து நீவியபடியே பேசினான். “மனசாட்சி, தியாகம் என்பது எல்லாம் அறம் என்னும் சொல்லின் வேறு முகங்கள். கட்டற்ற ஆசையில் விழுந்து தீமைகள் செய்யும் மனத்தை தடுத்து நேர்வழியில் கொண்டு சென்று வாழ்க்கையை உயர்ந்ததாக ஆக்க  உலகில் இருக்கும்  கருவிதான் அறம். அறமுடைய ஒவ்வொரு செயலும் மனிதனை மாண்பு உடையவனாக உயர்த்தும். அறம் நம்மிடம் இருப்பதால் தான் மற்றவர்கள் துன்பத்தை நீக்கவேண்டும் என்ற மனசாட்சியுடன் வாழ்கின்றோம். அறம் நம்மிடம் இருப்பதால்தான் நாம் அழிந்தாலும் பரவில்லை மற்றவர்கள் வாழவேண்டும் என்ற தியாகத்தை செய்கிறோம். அறம் நம்மிடம் இருப்பதால்தான் நமக்கு வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுகிறது. அறம் இருப்பதால்தான் உலகில் சுயநலத்தின் எல்லை முடிவிற்கு வருகிறது. அறமே மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்துகிறது.   உங்கள் இருவர் குழுவும் சொன்னது சரிதான். ஆனால் அடுத்தவர்கள் தியாகத்தில் நாம் வாழ்வதாக இருக்கக்கூடாது, அடுத்தவர்கள் வாழ்க்கைக்காக நாம் தியாகம் செய்தவர்களாக இருக்கவேண்டும்” என்று கூறி,  குழந்தைகளுக்கு வாழ்த்தும்  ஆசிரியர்களுக்கு நன்றியும் கூறி சரவணன் தன்வீட்டிற்கு தன் இன்னோவா காரில் புறப்பட்டான். குழந்தைகள் அனைவரும் சுற்றி நின்று கையசைத்து அவனுக்கு நன்றி சொன்னார்கள். தேன்மொழியை அவன் விழிகள் தேடின, ஆனால் அவள் அங்கில்லை.

சரவணனனின் கார் பள்ளிக்கூடத்தின் தெருவைக்கடந்து கிழக்குதிசையில் திரும்பியபோது தேன்மொழி அவனுக்காக காத்திருந்ததுபோல் பரிசுப்பொருளை ஒருகையில் தாங்கியப்படி கையசைத்து டாட்டாக்காட்டினாள். சரணவன் காரை அவள் அருகில் நிறுத்தி கார்க்கதவை திறந்து ஏறிக்கொள்ளச் சொன்னான். சிரித்துக்கொண்டே ஓடி வந்து ஏறிக்கொண்டாள். அவள் நளினமாக காரில் ஏறி உட்கார்ந்ததும் காருக்கே ஒரு அழகுவந்ததுபோல் இருந்தது.

இறைவன் சில பெண்களை தேவதைகளை கிள்ளி எடுத்து செய்கிறானோ?  ”அந்த கதையைப்பற்றி உனது பதில் என்ன?” என்று கேட்க அப்போதும் நினைத்தான், அவளே விரும்பினால் சொல்லட்டும் என்று விட்டுவிட்டான். மடியில் பரிசுப்பொருளை வைத்துக்கொண்டு மென்மையாக சாய்ந்து இருக்கையுடன் இயல்பாக ஒட்டிக்கொண்டாள். பூவில் உட்கார்ந்திருக்கும் பூப்பொல. நான்கு கையிருக்கா என்று பார்க்கதோன்றும் அமர்வு. அதற்குள் அவள் வீடு வந்துவிட்டது. “சா..ர்.. நிறுத்துங்க நிறுத்துங்க எங்க வீடு தாண்டிப்போய்விட்டது“ என்று திரும்பிப்பார்த்தாள். “போகட்டும், எங்கள் வீட்டுக்கு வந்துடேன்“ என்றான் சிரித்தப்படி சரவணன்.

“ஐயோ..அதெல்லாம் வேண்டாம் சார். என்னை இறக்கிவிடுங்கள். பாட்டியும் அம்மாவும் தேடும்“ என்று முகம் சுண்டிவிட கூறினாள். அவள் உடலில்  பயத்தின் அசைவு இலைநுனி புழு துடிப்புபோல பரவியது.
“டோண்ட் ஒரி, இப்படியே கடைத்தெருவு வரை ஒரு ரவுண்ட்போயிட்டு வருவோம் வா. பயப்படாதே“ என்றான். அவள் சற்று அமைதியாக இருந்தாள், எதுவும் பேசவில்லை. சரவணன் வண்டியின் ஒலிப்பெட்டியை இயக்கிப்பாடவைத்தான். சட்டென்று தேன்மொழியின் குரல்வளம் நினைவில் எழுந்ததால் பாடல்ஒலியை குறைத்துவிட்டு. “நீ ஒரு பாட்டுப்பாடு” என்றான்.

எந்த வித மறுப்பும் இன்றி,“இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவினில்  தொட்டிலைக்கட்டிவைத்தேன்“  என்று இனிமையாகப்பாடினாள். தன்னிடம் உள்ளதை மறுபின்றி உலகுக்கு வழங்குவதே ஒரு மாபெரும் தெய்வபண்புதான் என்று அவனுக்கு தோன்றியது. அவள் அந்தப்பாடலை அப்பொது அங்குபப்பாடுவாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அந்தப்பாடல் அவனுக்குள் பெருவெளியைத்திறந்து அவனை உள்ளிழுத்துக்கொண்டு ஆனந்தத்தில் மூழ்கடித்தது. அவளை அள்ளி மார்போடு அனைத்துக்கொள்ளவேண்டும்போல் மனம் பரபரத்தது. அந்த சின்னப்பரிசு அமர்ந்திருக்கும் மடியில் தலைசாய்த்து கண்மூடவேண்டும்போல் நெஞ்சம் கரைந்தது.   பாடும்போது இவள் தேன்மொழி இல்லை, வேறு யாரோ.  தனியன் என்பதுபோல் தோன்றினாள் அல்லது உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பவள்போல்  உருவுகாட்டினாள்.  .

சரணவன் கடைத்தெருவிற்கு சென்று தேன்மொழிக்கு வண்ணமின்னும் விலையுயர்ந்த புதிய ஆடையும் திண்பண்டமும் வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அருகில் கொண்டுவந்து விட்டான்.

தேன்மொழி மகிழ்ச்சியுடன் நன்றிச்சொல்லி வீட்டிற்கு செல்லும் அழகைப்பார்த்துக்கொண்டே சாலையோரத்தில் வண்டியில் சாய்ந்துகொண்டு நின்றான். செவ்வண்ணம் நிறைந்த மாலைநேர சூரியன் பொன்தட்டில் வைத்த செந்திலகம்போல் மின்னியது. அதை எடுத்துச்சூடிக்கொள்ள செல்லும் தேவதைபோல   அவள்போய்கொண்டே இருந்தாள். அவள் வீடு அருகில்தான் இருந்தது. எல்லாம் மறைந்து அந்த வான்திலகசூரியனும் அவளும் மட்டும் பிரபஞ்சமாகியதுபோல் பார்த்துக்கொண்டு நின்றான்.   “இப்பொழுதாவது அவள்  அந்த கதைக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தற்கு காரணம் சொல்லுவாளா? என்று நினைத்தான்.

நடந்துக்கொண்டு இருந்த தேன்மொழி சட்டென திரும்பி வேகமாக அவனை நோக்கி வந்தாள். சிவந்த சூரியனை பிடறியில் சூடிய இளம்சிம்மம்  அசைவதுபோல் இருந்தது அவள் வருகை.  அவன் அருகில் வந்தவள். “அந்த கதைக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று நினைத்துக்கொண்டு நிக்கிறீங்களா சார்“ என்றதும் சரவணன் அதிர்ந்து “ஆம்” என்பதுபோல் அவசரமாக தலையசைத்தான்.

தேன்மொழிக்குள் மீண்டும்   மௌனம் வந்து படர்ந்தது. தலைக்குனிந்து கால் கட்டைவிரல்நுனியால் பூமியில் ஒரு கோடு இழுத்தாள். கால்நுனி சிவந்து விரல் நகம் சூரியஒளிப்பட்டு படிகம்போல் மின்னியது. படியவாரிய அவளின் தலையில் நேர்க்கோடுபோல ஓடிய வாக்கு    அவளை இரண்டாக பிரிப்பதுபோல் தோன்றியது. அளந்து நேர்த்தியாக செய்ததலை. ஒவ்வொரு முடியும் நரம்புபோல் சரியாக படிந்து சடையாகி மின்னியது. இந்த தலையில் பனித்துளி மின்னும் ஒரு ஒற்றை ரோஜாவை வைத்தாள் அந்த ரோஜா எத்தனை அழகாக இருக்கும் என்று சரவணன் நினைத்தபோது அவள் தலை உயர்த்தி அவனைப்பார்த்தாள். சித்திரத்தில் எழுதியதுபோன்ற அந்த மஞ்சள் முகத்தில் துடிக்கும் மீன்விழியில் கண்ணீர் படர்ந்து இருந்தது. சரவணன் பதறிவிட்டான். அளவாக நகம் வெட்டப்பட்ட ஆள் காட்டிவிரல் நுனியால் விழிநீரை சுண்டிவிட்டவள் சிரித்தாள். யாரடி பெண்ணே நீ?, அணங்கா? தேவதையா? அன்னையா? தோழியா? மகளா? அல்லது அனைத்திற்கும் மூலமான ஆதிபராசக்தியா? சரவணனின் எண்ண அலைகள்  அவனை அள்ளி அள்ளிச் சென்ற அந்த தருணத்தில், அருகில் இருந்த அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் மாலைநேர தீபாராதனை மணி கிணிங்கிணிங்கிணிங் என்று ஒலித்தது. சரவணன் நரம்புகளில் வீணையின் நரம்பதிர்வு, இசையின் நடனம்.

“மற்றவர் துன்பத்தை துடைக்க நினைப்பது மனசாட்சி. மற்றவருக்காக துன்பத்தை தாங்கிக்கொள்வது தியாகம். தானும் நல்லா இருக்காம, மற்றவர்களையும் நல்லா இருக்கவிடாம வாழ்ற வாழ்க்கைக்கு என்ன  பேருசார்?”

நரம்பறுந்த வீணைபோல் சரவணன் மனம் அதிர்ந்து அடங்கியது. அவளே பேசட்டும் என்று அவளை கூர்ந்து நோக்கியபடி மௌனமாக நின்றான். அவள் மூக்குநுனி சிவந்து புடைத்தது.  

“என்னோட அப்பா, அம்மாவும், ஆயாவும் கூலிவேலைக்கு சென்று சம்பாதித்து வரும் பணத்தை எடுத்துப்போய் டாஸ்மார்க்கில் தண்ணி அடித்துவிட்டு வந்து தினமும்   அம்மாவையும், பாட்டியையும் என்னையும் அடித்து துன்புருத்திவிட்டு, தானும் சுயநினைவு இல்லாம, இடுப்புல துணியில்லா ரோட்டில் விழுந்து கிடக்கிறார். தினமும் நரகவேதனை அனுபவிக்கிறோம்.  அந்த கதையில் வரும் குழந்தை அனுபவிக்கும் துன்பத்திற்கு ஒரு அர்த்தமாவது இருந்தது, நான் அனுபவிக்கும் துன்பத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை, எனக்கும் நன்மையில்லை, இதை உண்டாக்கும் என் அப்பாவுக்கும்  நன்மையில்லை. அதனால்தான் அந்த கதைக்கு நான் எந்த பக்கமும் பதில் சொல்லவில்லை” என்று அழுதுக்கொண்டே சொன்னவள். மூக்கை இழுத்து உறிஞ்சியப்படி  “இந்த பரிசைக்கூட நாளைக்கு வித்து தண்ணி அடிச்சிடுவாரு, நீங்களே வச்சிக்குங்க” என்று அவன்கையில் பரிசைத்தினித்துவிட்டு, கண்ணில் வழியும் கண்ணீரோடு அவனுக்கு சிரித்துக்கொண்டே டாட்டா காட்டிவிட்டு திரும்பி நடக்கத்தொடங்கினாள்.
இவளால் எப்படி இப்பவும் சிரிக்கமுடிகிறது?. சரவணனுக்கு சிரிப்பு என்பதே மறந்துவிடும்போல் இருந்தது. அவன் கொடுத்த பரிசு. கொடுக்கும்போது எத்தனை மென்மையாக இருந்தது, இப்போது எப்படி இத்தனை கனக்கிறது?

சரவணன் காலுக்கு கீழே யாரோ இருந்து   உயிர் முழுவதையும் பூமிக்குள் இழுப்பதுபோல் வலி உணர்ந்தான். வண்டியின் கதவுக் கைப்பிடியை இருக்கிப்பிடித்துக்கொண்டான். கண்ணீர் ததும்பும் விழியோடு தேன்மொழியை திரும்பிப்பார்த்தான் அவள் வீட்டிற்குள் மறைந்துவி்ட்டாள்.  யாரோ ஒருவர் இடும்பில் கட்டியிருந்த கைலியை அவுத்து தோளில் போட்டுக்கொண்டு தள்ளாடி தள்ளாடி அவள் வீட்டைநோக்கிப்போவதை பார்த்த  சரவணன் மெதுவாக நடந்துச்சென்று, தேன்மொழியின் பரிசை அவள் வீட்டு வாசலில் வைத்துவிட்டு   அங்கு நிற்பதா அல்லது போவதா என்று தவித்து, பின் அவசரமாக வந்து வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக போனான்.

அதற்குப்பின்பு பலநாள் தேன்மொழியை பார்க்க நினைத்தான், ஆனால் என்னச்சொல்லி எப்படிப்போய் பார்ப்பது என்று இருந்துவிட்டான். அப்பாவுடன் தேக்கு மரம்வாங்க அந்த ஊருக்கு சென்றபோது, தேன்மோழி தெருபைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருப்பதைப்பார்த்ததும் அருகில் அழைத்து அப்பாவிற்கு அறிமுகப்படுத்தினான். அப்பா தனது வெள்ளைத்தாடியை இடது கையால்  நீவியபடியே வலது கையை எடுத்து அவள் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதுபோல் சிரித்தார். அப்போது அப்பாவின் கண்கள் மின்னியது.

தேன்மொழி சிரித்துக்கொண்டே சரவணனைப்பார்த்து “ சார் உங்களுக்கு ஒரு சாரி, ஒரு தேங்க்யூ” என்றாள்.

“எதுக்கு சாரி . எதுக்கு தேங்க்யூ”

நான் பரிசை திருப்பிக்கொடுத்ததற்கு சாரி. நீங்க எங்க வீட்டுவாசலில் அதை கொண்டுவந்து வைத்தற்கு தேங்க்யூ”

நான் அன்று வீட்டுக்கு வந்ததைப்பார்த்தாயா?

“ஆம்” என்பதுபோல் தலையாட்டியவள். “அந்த பரிசை அப்பாவிற்கு தெரியாமல் அடுக்குபானையில் மறைத்து வைத்திருக்கிறேன்” என்று சிரித்தபோது  கண்கள் மலர்ந்தது. “  அன்று நீங்கள் போட்டிருந்த ட்ரெஸ் சூப்பர்” என்று ஒரு துள்ளுத்துள்ளிச் சொன்னாள். அது ஒரு பட்டாம்பூச்சி தருணம். சரவணன் சத்தமில்லாமல் சிரித்தான். இப்போது அந்த ட்ரெஸை போட்டிருக்கவேண்டும்போல் தோன்றியது.

“எங்க வீட்டுக்கு வந்துடு, நான் படிக்கவைக்கிறேன்” என்று அப்பா மடியில் நழுவி விழுந்த    கதர்வெள்ளைத்துண்டை இழுத்து சட்டைப்போடமல் திறந்துக்கிடந்த நெஞ்சை துடைத்துக்கொண்டே சொன்னார்.  ருத்ராட்சத்தில் இணைத்திருந்த பொன்மணி ஒளிர்ந்தது.

“அப்பா” என்று சரவணன்  அப்பாவின் கைகளைப்பற்றிக்கொண்டான். அவன் உடல் சிலிர்த்தது.

மௌனமாக நின்ற தேன்மொழியிடம் சரவணனும் “வந்துவிடு, வீ்ட்டில் தங்கிப் படிக்கலாம். பாட்டுவகுப்புக்கு அனுப்புறேன். நீ பெரிய ஆளா வரவேண்டியவள்” என்றான்.

“அம்மாவையும், ஆயாவையும் நரகத்தில் விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி சார் சொர்க்கத்திற்கு வருவது” என்று சொல்லிவிட்டு, குரல் உயர கம்பீரமாக “மனசாட்சி..தியாகம்” எனறு அவனைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு பாவாடை காற்றில் ஓவியம் வரைய ஓடிப்போனாள்.

“மனசாட்சி, தியாகம்” என்னும் சொல் அவள் வாய்வார்த்தையில் கேட்டபோது மலையளவு கனமானதாக, கடலளவு பரந்ததாக தெரிந்தது.  சரவணன் மலைக்குகீழே தான் மாட்டிக்கொண்டதுபோல தலைக்குனிந்தான்.

“அவள் உண்ணி இல்லடா, ஊட்டி. எங்க இருந்தாலும் ஊட்டுவாள், எப்படி இருந்தாலும் ஊட்டுவாள், அவள் குழந்தையாக இருக்கும் தாயிடா” என்று  விழிவிரிய சிரித்த அப்பாவின் நெற்றியில் இருந்த விபூதி வாசனையோடு பளபளத்தது.  “அவள் பிழைத்துக்கொள்வாள், வண்டிய எடுடா“ என்றார் கண்கள் மின்ன.

விடுப்பு முடிந்து சௌதிக்கும் வந்துவிட்டான். வேலை பளுவில் தேன்மொழியையே மறந்துவிட்டான். அவளிடமிருந்துதான் போன். அதுவும் அழுகையோடு.  

ஈச்சமர நிழலில் நடந்துக்கொண்டு இருந்த சரவணன் நின்று மீண்டும் போனை எடுத்து அந்த நம்பருக்கு தொடர்புக்கொண்டான். ஒலித்துக்கொண்டே இருந்தது. யாரும் அழைப்பை ஏற்கவில்லை. மூன்று நான்கு முறை அழைத்துப்பார்த்துவிட்டு யாரும் எடுக்காததால் சரவணன் தன் வண்டியில் ஏறி தனது வேலை நடக்கும் பகுதிக்கு சென்றான். மீண்டும் போன் ஒலித்தது. தேன்மொழியா? என்று அவசரமாகப்பார்த்தான். அலுவலக எண். அழைப்பை எடுக்காமல் தவறவிட்டான். அலுவக அழைப்பை எடுத்தாலும் தப்பு , எடுக்காவிட்டாலும் தப்பு. எடுத்தால் வேலையில் கவனமின்றி போனை நோண்டிக்கொண்டு இருக்கிற குற்றச்சாட்டு. எடுக்காவிட்டால் எங்கே போய் தொலைந்தாய் என்ற ஏச்சு. அடுத்த அழைப்புக்காக காத்திருந்தபோதே அலுவலக அழைப்பு வந்தது. உடனே எடுக்காமல் ஒலிக்கவிட்டு எடுத்தான். வேலை கவனத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் பாசாங்கு. பாசாங்கு என்பதுகூட ஒரு திறமைதான் பொருள்யுகத்தில்.

“எங்க சார் போனிங்க, மேசன் மோகன் வெயில் தாங்கமுடியாமல் மயக்கம்போட்டு விழுந்துட்டான்”

“அடி எதாவது பட்டுவிட்டதா” என்று சரவணன் பதறினான்.  

“நல்ல நேரம், கீழ இறங்கி வந்து தண்ணீர் குடிக்கும்போதுதான் இப்படி நடந்துப்போச்சி, ஆம்புலன்சுல அல் தோசரி ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப்போறோம். ஆபிசுக்கு செய்தி சொல்லிட்டு, அங்க வந்துடுங்க” என்ற டைவர் மணி  அழைப்பை துண்டித்தார்.

மோகனுக்கு அடிபடவில்லை என்ற நினைப்பு துயரத்திலும் ஒரு நிம்மதியாக இருந்தது. வாழ்க்கையின் வடிவமே அதிசயமானதுதான். ஒவ்வொரு வலியிலும் இன்னொரு வலியின்மையை கண்டு ஆனந்தப்படுவது.  மேலாளருக்கு போன்செய்து சொல்லிவிட்டு ஆபிசுக்கு சென்று மேசன் மோகனைப்பார்த்தான். குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது. சரவணனைப்பார்த்து சிரித்தார். ஆதரவாக அவர்கையை தடவி நட்புடன் பிடித்துக்கொண்டான். அந்த நேரத்தில் அவனுக்கும் அந்த ஆறுதல் தேவையாகத்தான் இருந்தது. போன் அழைக்க எடுத்துப்பார்த்தான். மீண்டும் தேன்மொழியின் அழைப்பு.

அழைப்பைத்துண்டித்துவிட்டு வெளியில் வந்து சாலையைக்கடந்து சென்று எதிரே இருந்த நடைபாதை இருக்கையில் அமர்ந்து தேன்மொழியை அழைத்தான்.

“சார் நான் தேன்மொழிப்பேசுறேன், நல்ல இருக்கிங்களா?. அப்பா குடிக்கறது இல்ல, தினம் வேலைக்குப்போகிறார். என்னை அம்மாவை ஆயாவை நல்லாப்பார்த்துகிறார். இது அப்பா வாங்கியாந்தபோன், உங்களுக்குதான் முதல்ல பேசுறேன். நீங்க எனக்கு கொடுத்த பரிசை ஒரு நாள் கையில் எடுத்து ரொம்பநேரம் தடவிப்பார்த்துக்கிட்டே இருந்தார். இப்ப வேலைக்கு போகிறார். குடிக்காம வீட்டுக்குவருகிறார். தினமும் வேலைக்குப்போகும்போது அந்த பரிசை தொட்டுத்தடவிப்பார்க்காமல் போகமாட்டார் சார்” என்று  அவள் பேசிக்கொண்டே இருந்தாள். சரவணன் மௌனமாக இருந்தான். அந்த மௌனம் அப்போது அவனுக்கு பிடித்திருந்தது.

பேசிக்கொண்டே இருந்த தேன்மொழி சட்டென பாடத்தொடங்கினாள்.   சரவணனுக்கு அப்பாவைப் பார்க்கனும்போல் இருந்தது.


*******
ராமராஜன் மாணிக்கவேல்.

Thursday, August 15, 2019

திருப்புகழ் 279 பகல் இராவினும் (திருத்தணிகை)


ஓம் முருகன் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா
திருத்தணிகைமலை முருகனுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 279 பகல் இராவினும்  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனன தானனம் தனன தானனம்
     தனன தானனம் ...... தனதான

......... பாடல் .........

பகல் இராவினுங் கருவியால் அனம்
     பருகி யாவிகொண்டு ...... உடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
     பலபுராணமுஞ் ...... சிலவோதி

அகல நீளமென்று அளவு கூறரும்
     பொருளிலே அமைந்து ...... அடைவோரை
அசடர் மூகரென்று அவலமே மொழிந்து
     அறிவிலேன் அழிந் ...... திடலாமோ

சகல லோகமும் புகல நாடொறுஞ்
     சறுகிலாத செங் ...... கழுநீருந்
தளவு நீபமும் புனையுமார்ப தென்
     தணிகை மேவு செங் ...... கதிர்வேலா

சிகர பூதரந் தகர நான்முகன்
     சிறுகு வாசவன் ...... சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்
     சிதற வேல்விடும் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

பகலி ராவினுங் கருவி யால் ... பகலிலும் இரவிலும் இந்த உடம்பு
என்ற கருவியால்

அ(ன்)னம் பருகி யாவிகொண்டு ... சோறு உண்டு உயிரைப்
பாதுகாத்து

உடல்பேணி ... இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான்,

பழைய வேதமும் புதிய நூல்களும் ... பழமையான வேத
நூல்களையும் புதுமையான நூல்களையும்

பலபுராணமுஞ் சிலவோதி ... பலவகையான புராணங்களையும்
ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து,

அகல நீளமென்று அளவு கூறரும் ... இத்தனை அகலம்
இத்தனை நீளம் என்று அளக்க முடியாத

பொருளிலே அமைந்து அடைவோரை ... பேரின்பப் பொருளிலே
மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை,

அசடர் மூகரென்று அவலமே மொழிந்து ... மூடர், ஊமையர்
என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து

அறிவிலேன் அழிந்திடலாமோ ... அறிவிலியாகிய அடியேன்
அழிந்து போகலாமா?

சகல லோகமும் புகல ... எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி,

நாடொறும் சறுகிலாத ... தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற

செங்கழுநீரும் தளவு நீபமும் ... செங்கழுநீர் மலரும், முல்லையும்,
கடப்ப மலரும்

புனையு மார்ப ... தரிக்கின்ற மார்பனே,

தென் தணிகை மேவு செங்கதிர்வேலா ... அழகிய திருத்தணிகையில்
வாழ்கின்ற செவ்வொளி வீசும் வேலாயுதா,

சிகர பூதரந் தகர ... சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை
பொடிப்பொடியாக,

நான்முகன் சிறுகு வாசவன் ... பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து
தாழ்ந்த இந்திரனும்

சிறைமீள ... சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற,

திமிர சாகரங் கதற ... இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக,

மாமரஞ் சிதற ... மாமரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல்
பிளவுபட,

வேல்விடும் பெருமாளே. ... வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

நன்றி. கௌமாரம்.காம்-http://www.kaumaram.com/thiru/nnt0279_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Tuesday, August 13, 2019

திருப்புகழ் 277 நிலையாத சமுத்திர (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருச்செந்தூர் முருகா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி


திருப்புகழ் 277 நிலையாத சமுத்திர  (திருத்தணிகை)

       பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
     தனதான தனத்தன தான ...... தனதான

......... பாடல் .........

நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி
     நிசமானது எனப்பல பேசி ...... யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
     நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயின் அலைப்பல வேகி

     சலமான பயித்திய மாகி ...... தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரையறுத்து உனை யோதி
     தலைமீதில் பிழைத்திடவே நின்  ...... அருள்தாராய்

கலியாண சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோத
     கவினாரு புயத்தில் உலாவி ...... விளையாடிக்
களிகூருமுனைத் துணைதேடும் அடியேனை சுகப்படவே வை
     கடனாகும் இதுக்கனமாகு ...... முருகோனே


பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோகமெனப் பரிவேறு
     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.



......... சொல் விளக்கம் .........

நிலையாத சமுத்திரமான ... அகலம், ஆழம் இவ்வளவு என்று

காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற


சமுசார துறைக்கணின் மூழ்கி ... சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே

மூழ்கி,


நிசமானதெனப் பல பேசி ... மெய் போன்ற பல பொய்களைப் பேசி,



அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி ... அந்த சம்சாரக்

கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,


பெரியோர்களிடைக் கரவாகி ... பெரியோர்களின் கூட்டத்தில்

சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,


நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் ... நல்ல

நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,


தலையான வுடற்பிணி யூறி ... உடலில் முதன்மையான நோய்கள்

வந்து தாக்கவும்,


பவநோயின் அலைப்பல வேகி ... இந்த சம்சார சாகரத்தில் பிறவி

நோய் என்னும் பல அலைகள் வீசவும்,


சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் ... கோபம்

கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,


பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து ... பிறவியின் மூல காரணத்தை

ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,


உனையோதி தலைமீதில் பிழைத்திடவே ... உன் புகழ் ஓதி

இவ்வுலகில் உய்யுமாறு


நினருள்தாராய் ... உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.



கலியாண சுபுத்திரனாக ... மேன்மை தங்கிய கல்யாண

மாப்பிள்ளையாகவே


குறமாது தனக்கு விநோத ... குறக் குல வள்ளி தேவியிடத்தில்

என்றும் விளங்கி உல்லாசமாக,


கவினாரு புயத்தில் உலாவி விளையாடி ... அழகு நிறைந்த

அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து


களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை ... மகிழும்

உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை


சுகப்பட வேவை கடனாகும் ... இன்பம் அடையும்படியாகவே

வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும்.


இதுக்கன மாகு முருகோனே ... அவ்வாறு என்னை அருளினால்

அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே.


பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்

கூறி ... பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன்
திருப்புகழைப் பாடி


படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ... இவ்வுலகிலே

உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து
வாழும்படியாக அருளும் செவ்வேளே,


சிவலோக மெனப்பரி வேறு ... இதுவே பூலோகத்தில் உள்ள

சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க


பதியான திருத்தணி மேவு ... திருத்தலமாகிய

திருத்தணிகையில் வாழ்கின்ற,


பவரோக வயித்திய நாத பெருமாளே. ... பிறவிப் பெரு

நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே. 

நன்றி. கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0277_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்.