Tuesday, July 23, 2019

திருப்புகழ் 274 துப் பார் அப்பு (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

சிவகுமரா சுவாமிமலைசாமிநாதா போற்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா
பழநிஆண்டவருக்கு அரஹரோ ஹரா
திருக்தணிகைமலை முருகனுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர்சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 274 துப் பார் அப்பு  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தனனத் ...... தனதான

......... பாடல் .........

துப்பார் அப்பு ஆடற்றீ மொய்க்கால்
     சொற்பா வெளி முக் ...... குணமோகம்
துற்றாயப் பீறற் தோலிட்டே
     சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பாவக் காயத்து ஆசைப்பாடு
     எற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா
     எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பாமற் பாடிச் சேவிப்பார்
     தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்காழிச் சூர் செற்றாய் மெய்ப் போ
     தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பாகைப் பாலைப்போல் சொற்கா
     வற்பாவை தனத் ...... தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
     அப்பா குமரப் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

துப் பார் அப்பு ஆடல்தீ ... உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற

நெருப்பு,

மொய்க்கால் சொல் பா வெளி ... நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க
பரந்த ஆகாயம் (ஆகிய ஐம்பொரும் பூதங்களும்),

முக்குணமோகம் ... மூன்று குணங்களும் ( த்வம், ராஜ ம், தாமசம்),
மூவாசைகளும் (மண், பெண், பொன்)

துற்றாய ... (மேலே சொன்னவை யாவும்) நெருக்கமாக
வைக்கப்பட்டுள்ளதும்,

பீறல் தோலிட்டே சுற்றா ... (ஒன்பது துவாரங்களுடன்*) கிழிந்த
தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும்,

மதனப் பிணிதோயும் ... காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய

இப் பாவக் காயத்து ... இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது

ஆசைப்பாடு எற்றே ... ஆசைப்படுவதை மேற்கொண்டு,

உலகிற் பிறவாதே ... உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல்,

எத்தார் வித்தாரத்தே கிட்டா ... உன்னைத் துதிக்காதவர்களின்
கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும்

எட்டா அருளைத் தரவேணும் ... அவர்களுக்கு எட்டாததுமான உன்
திருவருளைத் தந்துதவ வேண்டும்.

தப்பாமற் பாடிச் சேவிப்பார் ... தவறாமல் உன்னையே பாடித்
தொழுபவர்கள் எவரெவரோ

தத்தாம் வினையைக் களைவோனே ... அவரவர்களின் வினைகளை
நீக்குபவனே,

தற்கு ஆழிச்சூர் செற்றாய் ... செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய
சூரனை அழித்தவனே,

மெய்ப் போதத்தாய் ... மெய்யான சிவஞான பண்டிதனே,

தணிகைத் தனிவேலா ... திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும்
ஒப்பற்ற வேலவனே,

அப் பாகைப் பாலைப் போல் சொல் ... அந்த சர்க்கரைப் பாகு
போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும்,

காவற் பாவை ... தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை

தனத்தணைவோனே ... மார்புறத் தழுவுபவனே,

அத்தா நித்தா முத்தா சித்தா ... உயர்ந்தவனே, என்றும்
உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே,

அப்பா குமரப் பெருமாளே. ... பரம பிதாவே, குமாரக் கடவுளே,
பெருமாளே.

நன்றி:கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0274_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

Saturday, July 20, 2019

திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதனுக்கு அரஹரோ ஹரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா
திருத்தணிகைமலை முருகனுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர்சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தாத்தன தத்தன தானன தானன
     தாத்தன தத்தன தானன தானன
          தாத்தன தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறொரு
     சாக்ஷியறப் பசியாறியை நீறிடு
          சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
     போற்பரி வுற்றுனையே கருதாது இகல்
          சாற்று தமிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப்

போக்கிடமற்ற வ்ருதாவனை ஞானிகள்
     போற்றுதல் அற்றதுரோகியை மாமருள்
          பூத்த மலத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப்
போக்கிவிடக் கடனோ அடியாரொடு
     போய்ப்பெறு கைக்கிலையோ கதியானது
          போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா அருள் ...... புரிவாயே

மூக்கறை மட்டை மகாபல காரணி
     சூர்ப்பநகைப் படுமூளி யுதாசனி
          மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி ...... முழுமோடி
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்
     பேற்றிவிடக் கமலாலய சீதையை
          மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே கொடு ...... முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
     வீட்டில் இருத்திய நாளவன் வேரற
          மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் ...... மருகோனே
வாச்சிய மத்தள பேரிகைபோல் மறை
     வாழ்த்த மலர்க்கழு நீர்தரு நீள்சுனை
          வாய்த்த திருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

தாக்கு அமருக்கு ... தாக்கிச்செய்ய வேண்டிய போருக்கு


ஒரு சாரையை ... ஒரு சாரைப்பாம்பு சென்றதைப் போன்றவனை
(கோழை),

வேறொரு சாக்ஷியற ... அருகில் வேறு ஒருவரையும் சாக்ஷியாக
வைத்து உண்பிக்காமல்

பசி யாறியை ... தான்மாத்திரம் உண்ணுபவனை (சுயநலவாதி),

நீறிடு சாஸ்த்ர வழிக்கு ... திருநீற்றைத் தரிக்கிற சைவசாஸ்திர
வழிக்கு

அதி தூரனை ... வெகு தொலைவில் உள்ளவனை (சிவத்வேஷி),

வேர்விழு தவமூழ்கும் ... மரத்தைத் தாங்கும் வேர்போல்
உயிரைத்தாங்கும் தவத்தில் மூழ்கும்

தாற்பர்யம் அற்று உழல் பாவியை ... நற்பயனை விடுத்து வீணில்
உழலும் பாவியை (நாஸ்திகன்),

நாவலர் போல் ... புலவர் போல நடித்துக்கொண்டு,

பரிவுற்று உனையே கருதாது இகல் சாற்று ... அன்போடு
உன்னை நினையாமல், சண்டை செய்து

தமிழ்க்குரை ஞாளியை ... தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும்
நாயினை (நாய் போன்றவன்),

நாள்வரை தடுமாறி ... இந்தநாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து,

போக்கிடமற்ற வ்ருதாவனை ... வேறு புகலிடம் இல்லாத
வீணனை (வீணன்),

ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை ... மெய்யறிவாளர்களைப்
போற்றாதுவிட்ட துரோக சிந்தனை உடையவனை (துரோகி),

மாமருள் பூத்த மலத்ரய பூரியை ... பெரும் அஞ்ஞானம் நிறைந்த
மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்த கீழ்மகனை (மகாபாவி),

நேரிய புலையேனை ... பறையனுக்குச் சமானமானவனை (மிலேச்சன்),

போக்கிவி டக் கடனோ ... இத்தகைய பாவியாகிய அடியேனை
(முருகா, நீ) நீக்கிவிடக் கடவதோ? (இதுவரை அருணகிரியார் தம்மைத்
தாழ்த்திக் கொண்டு கோழை, சுயநலவாதி, சிவத்வேஷி, நாஸ்திகன்,
நாய்போன்றவன், வீணன், துரோகி, மகாபாவி, மிலேச்சன் என்று
கூறுகிறார்).

கதியானது அடியாரொடு போய் ... மோக்ஷ உலகில் உன்
அடியார்களோடு சேர்ந்து யானும் போய்

பெறுகைக்கு இலையோ ... பெறக்கூடிய பாக்கியம் எனக்கு
இல்லையா?

போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா ... போர் செய்வதும்,
ஒளிவிடுவதுமான வைரம் போன்ற கூரிய வேலினையும், மயிலினையும்
உடையவனே,

அருள்புரிவாயே ... திருவருள் புரியவேண்டும். (இனி, ராமாயணக்
கதைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்).

மூக்கறை ... மூக்கு அறுபட்டவளும்,

மட்டை ... அறிவில்லாதவளும்,

மகாபல ... பெரும் வலிமையுள்ளவளும்,

காரணி ... ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக
இருந்தவளும்,

சூர்ப்பநகைப் படு மூளி ... சூர்ப்பநகையென்ற பெயருடன்,
மூளியான கொடியவளும்,

உதாசனி ... அவமதிக்கத் தக்கவளும்,

மூர்க்க குலத்தி ... மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில்
பிறந்தவளும்,

விபீஷணர் சோதரி ... விபீஷணருக்கு சகோதரியும்,

முழுமோடி ... முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை,

மூத்த அரக்கன் இராவணனோடு ... அண்ணனும்
அரக்கனுமான ராவணனிடம் சென்று

இயல்பேற்றிவிட ... சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில்
புகுத்திவிட,

கமலாலய சீதையை ... தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய
சீதாதேவியை

மோட்டன் வளைத்து ... மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக்
கவர்ந்து

ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய் ... ஒற்றைத் தேரிலே
வைத்து மேகமண்டலம் சென்று,

மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் ... பிரசித்தி பெற்ற,
அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்

இருத்திய நாள் ... (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது,

அவன் வேரற ... அந்த ராவணனின் வம்சமே வேரோடு
அற்றுப்போகும்படி,

மார்க்க முடித்த ... அதற்குரிய வழியை நிறைவேற்றிய

விலாளிகள் நாயகன் மருகோனே ... வில்லாதி வீரர்களின்
தலைவனாம் ராமனின் மருமகனே,

வாச்சிய மத்தள பேரிகை போல் ... வாத்தியங்களான மத்தளம்,
பேரிகை இவற்றின் ஓசை போல

மறை வாழ்த்த ... வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும்,

மலர்க்கழு நீர்தரு ... செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற

நீள்சுனை வாய்த்த ... நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற

திருத்தணி மாமலை மேவிய பெருமாளே. ... திருத்தணிகை
என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே.
நன்றி-கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0272_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Monday, July 15, 2019

திருப்புகழ் 269 சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை)




ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
சிவகுருநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 269 சினத்தவர் முடிக்கும்  (திருத்தணிகை)


பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான


......... பாடல் .........

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் உயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென்று ...... அறிவோம்யாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
     நிசிக் கருவறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
     நிறைப்புகழ் உரைக்குஞ் ...... செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
     தளத்துடன் அடக்குங் ...... கொடுசூரர்

சினத்தையும் உடற்சங்கரித்த மலைமுற்றுஞ்
     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணியிருக்கும் ...... பெருமாளே.
 


......... சொல் விளக்கம் .........

சினத்தவர் முடிக்கும் ... முருகன் அடியார்களை கோபிப்பவர்களது

தலைக்கும்,

பகைத்தவர் குடிக்கும் ... அவர்களைப் பகை செய்தவர்களது
குடும்பத்திற்கும்,

செகுத்தவர் உயிர்க்கும் ... அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,

சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... அவர்களைக் கண்டு கோபமாகச்
சிரிப்பவர்கட்கும்,

பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,

திருப்புகழ் நெருப்பென்று ... திருப்புகழே நெருப்பாகி (அடியோடு
அழிக்குமென)

அறிவோம்யாம் ... யாம் நன்கு அறிவோம்.

நினைத்தது மளிக்கும் ... (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும்
அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,

மனத்தையு முருக்கும் ... (பாடுவோர், கேட்போரின்) மனதையும்
உருக்குவதும்,

பிறவாமல் ... மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்

நிசிக்கரு வறுக்கும் ... இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
அறுப்பதும்,

நெருப்பையு மெரிக்கும் ... அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே
எரிப்பதும்,

பொருப்பையு மிடிக்கும் ... மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய,

நிறைப்புகழ் ... எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை

உரைக்குஞ் செயல்தாராய் ... பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.

தனத்தன தனத்தந்திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... (அதே ஒலியுடன்)

பேரி ... பேரிகைகள் முழங்கவும்,

தடுட்டுடு டுடுட்டுண் டென ... (அதே ஒலியுடன்)

துடி முழக்கும் ... உடுக்கைகள் முழங்கவும்,

தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த

கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூராதி அசுரர்களின்
கோபத்தையும்,

உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அறுத்தெறிந்த பிணமலைகள்
யாவையும்,

சிரித்தெரி கொளுத்தும் ... புன்னகை புரிந்தே அதிலெழுந்த
அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய

கதிர்வேலா ... ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,

தினைக்கிரி குறப்பெண் ... தினைப்பயிர் விளையும் மலைக்
குறவள்ளியை

தனத்தினில் சுகித்து ... மார்புற அணைத்து இன்புற்று,

எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... உயர்ந்தோர்
மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0269_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம். 


Wednesday, July 10, 2019

திருப்புகழ் 267 கூர்வேல் பழித்த (திருத்தணிகை)





ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகை மலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 267 கூர்வேல் பழித்த  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்


தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

கூர்வேல் பழித்த விழியாலே மருட்டி முலை
     கோடால் அழைத்து மலர் ...... அணைமீதே
கோபாவிதழ்ப் பருக மார்போடணைத்து கணை
     கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக்

கார்போல் குழற்சரியவே வாயதட்டி இரு
     காதோலை யிற்று விழ ...... விளையாடுங்
காமா மயர்க்கியர்கள் ஊடே களித்து நம
     கான் ஊருறைக்கலகம் ...... ஒழியாதோ

வீராணம் வெற்றி முரசோடே தவிற்றிமிலை
     வேதாகமத்து ஒலிகள் ...... கடல்போல
வீறாய் முழக்கவரு சூரார் இறக்கவிடும்
     வேலா திருத்தணியில் ...... உறைவோனே

மாரோன் இறக்கநகை தாதா திருச்செவியில்
     மாபோதகத்தை அருள் ...... குருநாதா
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு
     மாலோடணைத்து மகிழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால்
அழைத்து மலர் அணை மீதே ... கூர்மையான வேலாயுதத்தைப்
பழித்து வென்ற கண்களாலே வருபவரை மயக்குவித்து, மலை போன்ற
மார்பால் வரவழைத்து, மலர்ப் படுக்கை மேல்

கோபா இதழ்ப் பருக மார்போடு அணைத்து க(ண்)ணை
கோல் போல் சுழற்றி இடை உடை நாணக் கார் போல் குழல்
சரியவே ... தம்பலப் பூச்சி போலச் சிவந்த வாயிதழ் ஊறலை
உண்ணும்படி மார்புறத் தழுவி, கண்ணை அம்பு போலச் சுழற்றி,
இடையில் உள்ள ஆடை நெகிழவும், மேகம் போல் கருப்பான கூந்தல்
சரியவும்,

வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும்
காமா மயக்கியர்கள் ஊடே களித்து நம(ன்) கான் ஊர்
உறைக் கலகம் ஒழியாதோ ... வாய் அதட்டும் சொற்களைப்
பேசவும், இரண்டு காதுகளில் உள்ள ஓலைகளும் கழன்று விழவும்,
லீலைகளைச் செய்து காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது
மகளிருடன் மகிழ்வுற்று, யமனுடைய நரகில் சேர்ந்து
இருக்கும்படியான குழப்பம் என்னை விட்டு அகலாதோ?

வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேத
ஆகமத்து ஒலிகள் கடல் போல வீறாய் முழக்க வரு(ம்)
சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே ...
வீராணம் என்னும் பெரிய பறை, வெற்றி முரசாகிய ஜய பேரிகை,
மேள வகை, திமிலை என்ற பறை, வேதாகம ஒலிகள் இவையெல்லாம்
கடல் போல மிக்க சிறப்புடன் முழக்கம் செய்ய, எதிர்த்து வந்த சூரர்கள்
இறக்கும்படி செலுத்திய வேலாயுதனே, திருத்தணிகைப் பதியில்
வீற்றிருப்பவனே,

மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா
போதகத்தை அருள் குரு நாதா ... மன்மதன் இறக்கும்படி சிரித்த
தந்தையின் காதுகளில் சிறந்த ஞானோபதேசத்தை அருளிய குரு நாதனே,

மாலோன் அளித்த வ(ள்)ளியார் மால் களிப்ப வெகு
மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே. ... திருமால் பெற்ற
வள்ளி அம்மை மிக்க மகிழ்ச்சிகொள்ள, அதிக ஆசையுடன்
அவளை அணைத்து மகிழ்ந்த பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். மற்றும் கோபால சுந்தரம் ஐயா அவர்கள். 


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Saturday, June 29, 2019

திருப்புகழ் 266 கூந்தல் அவிழ்த்து (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளி திருப்புகழ்
திருப்புகழ் 266 கூந்தல் அவிழ்த்து  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தாந்தன தத்தன தத்தன தத்தன
     தாந்தன தத்தன தத்தன தத்தன
          தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள்
     பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
          கோம்பு படைத்த மொழிச்சொல்பரத்தையர் ...... புயமீதே
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள்
     வாஞ்சையுறத் தழுவிச் சிலுகிட்டவர்
          கூன்பிறை யொத்த நகக்குறி வைப்பவர் ...... பலநாளும்

ஈந்த பொருட்பெற இச்சை உரைப்பவர்
      ஆந்துணையற்ற அழுகைக்குரல் இட்டவர்
           ஈங்கிசையுற்ற அலக்குண மட்டைகள் ...... பொருள்தீரில்
ஏங்கியிடக் கடையிற் த(ள்)ளி வைப்பவர்
     பாங்ககலக் கருணைக்கழல் பெற்றிட
          ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிடல் ...... அருள்வாயே

காந்தள் மலர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
     வேந்து குரக்கு அரணத்தொடும் அட்டிடு
          காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் ...... மருகோனே
காங்கிசை மிக்க மறக்கொடி வெற்றியில்
     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
          கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... யிளையோனே

தேந்தினை வித்தினர் உற்றிட வெற்றிலை
     வேங்கை மரத்தெழிலைக்கொடு நிற்பவ
          தேன்சொலியைப் புணரப் புனம் உற்றுறைகுவை ...... வானந்
தீண்டு கழைத்திரள் உற்றது துற்றிடு
     வேங்கை தனிற் குவளைச்சுனை சுற்றலர்
          சேர்ந்த திருத்தணிகைப் பதி வெற்புறை ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் ... கூந்தலை அவிழ்த்தும்
முடித்தும் மினுக்குபவர்கள்.

பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் ... பாய்கின்ற கண்களுக்கு
மை இட்டு மிரட்டுபவர்கள்.

கோம்பு படைத்த மொழிச் சொல் பரத்தையர் ... கோபக் குறிப்பான
மொழிகளைச் சொல்லும் விலைமாதர்கள்.

புயம் மீதே கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் ... தம்மிடம்
வந்தவர்களின் தோள்களின் மேல் கோங்கு மர முகையைப் போன்ற
மார்பகத்தால் அழுத்துபவர்கள்.

வாஞ்சை உறத் தழுவிச் சிலுகு இட்டவர் ... விருப்பத்துடன்
முன்னர் தழுவி பின்னர் துன்பம் ஊட்டும் சண்டை இடுபவர்கள்.

கூன் பிறை ஒத்த நகக் குறி வைப்பவர் பல நாளும் ஈந்த
பொருள் பெற இச்சை உரைப்பவர் ... வளைத்த பிறை போன்ற
நகக் குறியை வைப்பவர்கள். பல நாளும் கொடுத்து வந்த பொருளுக்கு
மேல் அதிகமாகப் பெற தங்கள் விருப்பத்தை எடுத்துச் சொல்பவர்கள்.

ஆம் துணை அற்ற அழுகைக் குரல் இட்டவர் ஈங்கிசை உற்ற
அவலக் குண மட்டைகள் ... தங்கள் விருப்பம் நிறைவேறும் வழி
அற்ற போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள். தீங்கு செய்யும்
துன்பம் தரும் குணத்தைக் கொண்ட பயனற்றவர்கள்.

பொருள் தீரில் ஏங்கி இடக்கடையில் த(ள்)ளி வைப்பவர் ...
(கையில் தமக்குக் கொடுப்பதற்குப்) பொருள் இல்லாது போனால்
மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி
வைப்பவர்கள்.

பாங்கு அகலக் கருணைக் கழல் பெற்றிட ஈந்திலை எப்படி
நற் கதி புக்கிடல் அருள்வாயே ... ஆகிய பொது மகளிருடைய நட்பு
ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ
அருளவில்லையே. எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்
புரிவாயாக.

காந்தள் மலர்த் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து
குரக்கு அரணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுதன் உத்தம
சற்குணன் மருகோனே ... (சுக்கிரீவனை) காந்தள் மலர் மாலையை
அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற
அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக்
கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும்,
உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய)
மருகனே,

காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே ... (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்
வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர்
வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம்
போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான
விநாயகருக்குத் தம்பியே,

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை
மரத்து எழிலைக் கொடு நிற்பவ தேன் சொ(ல்)லியைப்
புணரப் புனம் உற்று உறைகுவை ... இனிமையுள்ள தினையை
விதைத்த வேடர்கள் வருவதை அறிந்து தனி வேங்கை மரத்தின்
அழகு விளங்க நின்றவனே, தேன் போல இனிய சொற்களை
உடைய வள்ளியைச் சேர்வதற்கு (அவள் இருந்த) தினைப்
புனத்தைச் சேர்ந்து அங்கு இருந்தவனே,

வானம் தீண்டு கழைத் திரள் உற்றது துற்றிடு வேங்கை
தனில் குவளைச் சுனை சுற்று அலர் சேர்ந்த திருத்தணிகைப்
பதி வெற்பு உறை பெருமாளே. ... ஆகாயத்தைத் தொடும்படி
உயர்ந்த மூங்கிலின் கூட்டத்துக்கு அருகே நெருங்கி நிற்பனவும், பொன்
போல ஒளி வீசும் குவளை மலர்கள் சுனையில் சுற்றிலும் (எங்கும்)
பூத்திருப்பதுமான திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0266_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

Friday, June 28, 2019

திருப்புகழ் 264 குலைத்து மயிர் (திருத்தணிகை)


ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 264 குலைத்து மயிர்  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்த தனத் தனத்த தனத்
     தனத்த தனத் தனத்த தனத்
          தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான

......... பாடல் .........

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
     கழுத்து மணித் தனப்புரளக்
          குவித்த விழிக் கயற்சுழலப் ...... பிறைபோலக்
குனித்த நுதற் புரட்டி நகைத்
     துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
          குழைச்செவியிற் றழைப்ப பொறித் ...... தனபாரப்

பொலித்து மதத் தரித்த கரிக்
     குவட்டு முலைப் பளப்பளெனப்
          புனைத்த துகிற் பிடித்த இடைப் ...... பொதுமாதர்
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
     குலுக்கில் அறப் பசப்பி மயற்
          புகட்டி தவத்தழிப் பவருக்கு ...... உறவாமோ

தலத்த நுவைக் குனித்தொரு முப்
     புரத்தை விழக் கொளுத்தி மழுத்
          தரித்து புலிக்கரித் துகிலைப் ...... பரமாகத்
தரித்து தவச்சுரர்க்கண் முதற்
     பிழைக்க மிடற்று அடக்கு விடச்
          சடைக் கடவுள் சிறக்க பொருட் ...... பகர்வோனே

சிலுத்து அசுரர்க் கெலித்து மிகக்
     கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
          செழிக்க அருட் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா
தினைப்புனமிற் குறத்தி மகள்
     தனத்தின் மயற் குளித்து மகிழ்த்
          திருத்தணியிற் தரித்த புகழ்ப் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

குலைத்து மயிர்க் கலைத்து வளைக் கழுத்து மணித்
தனப்புரளக் குவித்த விழிக் கயற்சுழல ... மயிர் அவிழ்ந்து
கலைந்து போக, சங்கு போன்ற கழுத்தில் உள்ள மணிமாலை
மார்பகங்களின் மேல் புரள, குவிந்த கண்கள் கயல் மீனைப்
போல சுழல,

பிறைபோலக் குனித்த நுதற் புரட்டி நகைத்துருக்கி மயற்
கொளுத்தி இணைக் குழைச்செவியில் தழைப்ப ... பிறைச்
சந்திரனைப் போல வளைவுற்ற நெற்றியை நெறித்து, சிரித்து
மனதை உருகச் செய்து, காம ஆசையை உண்டு பண்ணி,
இணையான குண்டலங்கள் காதுகளில் விளங்க,

பொறித் தனபாரப் பொலித்து மதத் தரித்த கரிக் குவட்டு
முலைப் பளப்பளெனப் புனைத்த துகிற் பிடித்த இடைப்
பொதுமாதர் ... தேமல் கொண்ட தனப் பாரம், அழகு பெற்று மதம்
கொண்ட யானை போன்றும் மலை போன்றும் மார்பகங்கள் பளப்பள
என்று ஒளியிட, இறுக்க உடுத்த ஆடையைக் கொண்ட இடுப்பை
உடைய பொது மகளிர்

புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக் குலுக்கில் அறப்
பசப்பி மயற் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ ...
தோள்களினாலும், வளைப் பிலுக்காலும், நடைக் குலுக்காலும்
மிகவும் இன் முகம் காட்டி ஏய்த்து மோகத்தை ஊட்டி, தவத்தையும்
அழிக்கக் கூடிய பொது மகளிர்களின் சம்பந்தம் ஆகுமோ?

தலத்த நுவைக் குனித்தொரு முப்புரத்தை விழக்கொளுத்தி
மழுத்தரித்து புலிக் கரித்துகிலைப் பரமாகத் தரித்து ...
பூமியின் மத்தியில் விளங்கும் மேருவாகிய வில்லை வளைத்து,
ஒப்பற்ற முப்புரங்களை பொடிபடும்படி எரித்து, மழு ஆயுதத்தைக்
கையில் ஏந்தி, புலி, யானை இவைகளின் தோலை ஆடையாக அணிந்து,

தவச் சுரர்க்கண் முதற் பிழைக்க மிடற்றடக்கு விடச்
சடைக்கடவுட் சிறக்க பொருள் பகர்வோனே ... தவம் நிறைந்த
தேவர்கள் முதலானோர் பிழைக்கும் பொருட்டு கண்டத்தில்
அடக்கிய விஷத்தை உடைய சடைப் பெருமானாகிய சிவபெருமான்
மகிழ்ச்சி பெற பிரணவப் பொருளைக் கூறியவனே,

சிலுத்த சுரர்க் கெலித்து மிகக் கொளுத்தி மறைத் துதிக்க
அதிற் செழிக்க அருட் கொடுத்த மணிக் கதிர்வேலா ...
சண்டை இட்ட அசுரர்களை வென்று, அவர்களை நிரம்ப எரியிட்டு,
வேதம் துதி செய்ய அதனால் தேவர்கள் செழிப்புற அருள் புரிந்த
அழகிய சுடர் வேலனே,

தினைப்பு னமிற் குறத்தி மகள் தனத்தின் மயற் குளித்து
மகிழ்த் திருத்தணியில் தரித்த புகழ்ப் பெருமாளே. ... தினைப்
புனத்தில் குறப் பெண் வள்ளியின் மார்பகங்கள் மீதான மோகத்தில்
குளித்து மகிழும் பெருமாளே, திருத்தணிகை மலையில் நிலைத்து
வீற்றிருக்கும் புகழ் வாய்ந்த பெருமாளே.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0264_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம். 

Wednesday, June 26, 2019

திருப்புகழ் 260 கிரி உலாவிய (திருத்தணிகை)


ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா


ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 260 கிரி உலாவிய  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான


......... பாடல் .........

கிரியுலாவிய முலைமிசை துகிலிடு
     கபட நாடக விரகிகள் அசடிகள்
          கெடுவியாதிகள் அடைவுடை யுடலினர் ...... விரகாலே
க்ருபையினாரொடு மணமிசை நழுவிகள்
     முழுது நாறிகள் இதமொழி வசனிகள்
          கிடையின்மேல் மனமுருகிட தழுவிகள் ...... பொருளாலே

பரிவிலா மயல் கொடுசமர் புரிபவர்
     அதிக மாவொரு பொருள் தருபவரொடு
          பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே
பகழிபோல்விடு வினைகவர் திருடிகள்
     தமை எணாவகை யுறுகதி பெரும்வகை
          பகர மாமயில் மிசைவர நினைவதும்  ...... ஒருநாளே

அரியராதிபர் மலரயன் இமையவர்
     நிலைபெறாது இடர்பட உடன் முடுகியெ
          அசுரர் தூள்பட அயில்தொடும் அறுமுக ...... இளையோனே
அரிய கானகமுறை குறமகளிட
     கணவனாகிய அறிவுள விதரண
          அமரர் நாயக சரவணபவ திறல் ...... உடையோனே

தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
     சரிவுறா நிலைபெறு தவமுடையவர்
          தளர்விலா மனமுடையவர் அறிவினர் ...... பரராஜர்
சகல லோகமும் உடையவர் நினைபவர்
     பரவு தாமரை மலரடி யினிதுற
          தணிகை மாமலை மணிமுடி யழகியல் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள்
அசடிகள் ... மலை போன்ற மார்பின் மேல் ஆடையை அணிந்துள்ள

கபட நாடகம் ஆடும் தந்திரக்காரிகள், முட்டாள்கள்,

கெடு வியாதிகள் அடைவுடை உடலினர் ... கெட்ட
நோய்களை இடம் கொண்டுள்ள தேகத்தை உடையவர்கள்,

விரகாலே க்ருபையினார் ஒடு மணம் மிசை நழுவிகள் ...
வெகு சாமர்த்தியமாக, (தங்கள் மீது) அன்பு வைத்தவர்களோடு மணம்
செய்து கொள்வதாகக் கூறி பிறகு நழுவி விடுபவர்கள்,

முழுது நாறிகள் இத மொழி வசனிகள் ... முழுதும் துர் நாற்றம்
வீசுபவர்கள், இன்பம் உண்டாகும்படி பேசுபவர்கள்,

கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள் ... படுக்கையின் மீது
ஆடவர் மனம் உருகும்படி தழுபவர்கள்,

பொருளாலே பரிவு இ(ல்)லா மயல் கொடு சமர் புரிபவர் ...
பொருள் காரணமாக அன்பு கலவாத ஆசையுடன் சண்டை செய்பவர்கள்,

அதிகமா(க) ஒரு பொருள் தருபவரொடு பழைய பேர் என
இதம் உற அணைபவர் ... அதிகமாக ஒரு பொருளைக்
கொடுப்பவர்களிடம் (அவர்களோடு) பழைய உறவினர் போல இன்பம்
பிறக்க அணைபவர்கள்,

விழியாலே பகழி போல் விடு வினை கவர் திருடிகள் ...
கண்களால் அம்பு செலுத்துவது போல காரியத்தை வெல்லும்
திருடிகள்,

தமை எ(ண்)ணா வகை அறு கதி பெறும் வகை ... (அத்தகைய)
விலைமாதர்களை நான் எண்ணாதபடிக்கு, அடைய வேண்டிய நற்
கதியைப் பெறும் வழியை,

பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே ... எனக்கு
நீ போதிக்க, சிறந்த மயில் மேல் வர நீ நினைக்கும்படியான ஒரு
நாள் உண்டாகுமோ?

அரி அர(ன்) அதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது
இடர் பட ... திருமால், ருத்திரன் என்னும் மேலோர், தாமரை மலரின்
மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் (தத்தம் தொழிலில்) நிலை பெற
ஒட்டாமல் துன்பப்பட,

உடன் முடுகியே அசுரர் தூள்பட அயில் தொடும் அறு முக
இளையோனே ... உடனே விரைந்து சென்று, அசுரர்கள் தூளாகுமாறு
வேலாயுதத்தைச் செலுத்திய ஆறு முக இளையோனே,

அரிய கானகம் உறை குற மகளிட கணவனாகிய அறிவு
உள விதரண ... அருமையான வள்ளி மலைக் காட்டில் உறைகின்ற
குறமகள் வள்ளி நாயகியின் கணவனாகிய, அறிவுள்ள தயாள குணம்
படைத்தவனே,

அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே ...
தேவர்களின் தலைவனே, சரவணபவனே, வெற்றியை உடையவனே,

தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை
பெறு தவம் உடையவர் ... தரும நீதி வாய்ந்தவர்களும், வேதம்
கற்றவர்களும், பொறுமை உடையவர்களும், தவறுதல் இல்லாத நிலைத்த
வகையில் தவம் புரிபவர்களும்,

தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர் ...
சோர்வு இல்லாத மனத்தை உடையவர்களும், அறிஞர்களும்,
மேலான அரசர்களும்,

சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர்
அடி இனிது உற ... எல்லா உலகங்களுக்கும் அதிபர்களும், உன்னை
நினைந்து போற்றுபவர்களும் தொழும் தாமரைமலர் போன்ற திருவடி
இனிது பொருந்த

தணிகை மாமலை மணிமுடி அழகியல் பெருமாளே. ...
திருத்தணி மாமலையின் அழகிய உச்சியில் அழகு விளங்க வீற்றிருக்கும்
பெருமாளே.
நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0260_u.html
வெற்றிவேல் முருனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்