Saturday, June 29, 2019

திருப்புகழ் 266 கூந்தல் அவிழ்த்து (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளி திருப்புகழ்
திருப்புகழ் 266 கூந்தல் அவிழ்த்து  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தாந்தன தத்தன தத்தன தத்தன
     தாந்தன தத்தன தத்தன தத்தன
          தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள்
     பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
          கோம்பு படைத்த மொழிச்சொல்பரத்தையர் ...... புயமீதே
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள்
     வாஞ்சையுறத் தழுவிச் சிலுகிட்டவர்
          கூன்பிறை யொத்த நகக்குறி வைப்பவர் ...... பலநாளும்

ஈந்த பொருட்பெற இச்சை உரைப்பவர்
      ஆந்துணையற்ற அழுகைக்குரல் இட்டவர்
           ஈங்கிசையுற்ற அலக்குண மட்டைகள் ...... பொருள்தீரில்
ஏங்கியிடக் கடையிற் த(ள்)ளி வைப்பவர்
     பாங்ககலக் கருணைக்கழல் பெற்றிட
          ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிடல் ...... அருள்வாயே

காந்தள் மலர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
     வேந்து குரக்கு அரணத்தொடும் அட்டிடு
          காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் ...... மருகோனே
காங்கிசை மிக்க மறக்கொடி வெற்றியில்
     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
          கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... யிளையோனே

தேந்தினை வித்தினர் உற்றிட வெற்றிலை
     வேங்கை மரத்தெழிலைக்கொடு நிற்பவ
          தேன்சொலியைப் புணரப் புனம் உற்றுறைகுவை ...... வானந்
தீண்டு கழைத்திரள் உற்றது துற்றிடு
     வேங்கை தனிற் குவளைச்சுனை சுற்றலர்
          சேர்ந்த திருத்தணிகைப் பதி வெற்புறை ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் ... கூந்தலை அவிழ்த்தும்
முடித்தும் மினுக்குபவர்கள்.

பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் ... பாய்கின்ற கண்களுக்கு
மை இட்டு மிரட்டுபவர்கள்.

கோம்பு படைத்த மொழிச் சொல் பரத்தையர் ... கோபக் குறிப்பான
மொழிகளைச் சொல்லும் விலைமாதர்கள்.

புயம் மீதே கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் ... தம்மிடம்
வந்தவர்களின் தோள்களின் மேல் கோங்கு மர முகையைப் போன்ற
மார்பகத்தால் அழுத்துபவர்கள்.

வாஞ்சை உறத் தழுவிச் சிலுகு இட்டவர் ... விருப்பத்துடன்
முன்னர் தழுவி பின்னர் துன்பம் ஊட்டும் சண்டை இடுபவர்கள்.

கூன் பிறை ஒத்த நகக் குறி வைப்பவர் பல நாளும் ஈந்த
பொருள் பெற இச்சை உரைப்பவர் ... வளைத்த பிறை போன்ற
நகக் குறியை வைப்பவர்கள். பல நாளும் கொடுத்து வந்த பொருளுக்கு
மேல் அதிகமாகப் பெற தங்கள் விருப்பத்தை எடுத்துச் சொல்பவர்கள்.

ஆம் துணை அற்ற அழுகைக் குரல் இட்டவர் ஈங்கிசை உற்ற
அவலக் குண மட்டைகள் ... தங்கள் விருப்பம் நிறைவேறும் வழி
அற்ற போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள். தீங்கு செய்யும்
துன்பம் தரும் குணத்தைக் கொண்ட பயனற்றவர்கள்.

பொருள் தீரில் ஏங்கி இடக்கடையில் த(ள்)ளி வைப்பவர் ...
(கையில் தமக்குக் கொடுப்பதற்குப்) பொருள் இல்லாது போனால்
மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி
வைப்பவர்கள்.

பாங்கு அகலக் கருணைக் கழல் பெற்றிட ஈந்திலை எப்படி
நற் கதி புக்கிடல் அருள்வாயே ... ஆகிய பொது மகளிருடைய நட்பு
ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ
அருளவில்லையே. எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்
புரிவாயாக.

காந்தள் மலர்த் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து
குரக்கு அரணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுதன் உத்தம
சற்குணன் மருகோனே ... (சுக்கிரீவனை) காந்தள் மலர் மாலையை
அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற
அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக்
கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும்,
உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய)
மருகனே,

காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே ... (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்
வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர்
வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம்
போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான
விநாயகருக்குத் தம்பியே,

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை
மரத்து எழிலைக் கொடு நிற்பவ தேன் சொ(ல்)லியைப்
புணரப் புனம் உற்று உறைகுவை ... இனிமையுள்ள தினையை
விதைத்த வேடர்கள் வருவதை அறிந்து தனி வேங்கை மரத்தின்
அழகு விளங்க நின்றவனே, தேன் போல இனிய சொற்களை
உடைய வள்ளியைச் சேர்வதற்கு (அவள் இருந்த) தினைப்
புனத்தைச் சேர்ந்து அங்கு இருந்தவனே,

வானம் தீண்டு கழைத் திரள் உற்றது துற்றிடு வேங்கை
தனில் குவளைச் சுனை சுற்று அலர் சேர்ந்த திருத்தணிகைப்
பதி வெற்பு உறை பெருமாளே. ... ஆகாயத்தைத் தொடும்படி
உயர்ந்த மூங்கிலின் கூட்டத்துக்கு அருகே நெருங்கி நிற்பனவும், பொன்
போல ஒளி வீசும் குவளை மலர்கள் சுனையில் சுற்றிலும் (எங்கும்)
பூத்திருப்பதுமான திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0266_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

No comments:

Post a Comment