Thursday, May 16, 2019

திருப்புகழ் 517 திரு நிலம் மருவி (கயிலைமலை)


ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
ஸ்ரீகயிலைமலைநாதர் குமரா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 517 திரு நிலம் மருவி  (கயிலைமலை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதன தனனத் தான தனதன தனனத் தான

     தனதன தனனத் தான ...... தனதான



......... பாடல் .........



திருநில மருவிக் காலின் இருவழி அடைபட்டோடி
     சிவவழியுடன் உற்றேக ...... பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுரம் எரியத் தீயின் ...... நகைமேவி

இருவினை பொரியக் கோல திருவருள் உருவத் தேகி
     இருள் கதிரிலி பொற்பூமி ...... தவசூடே
இருவரும் உருகிக் காய நிலையென மருவித் தேவர்
     இளையவன் எனவித் தாரம்  ...... அருள்வாயே

பரிபுர கழல் எட்டாசை செவிடுகள்பட முத்தேவர்
     பழமறை பணியச் சூல ...... மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடி நெறுநெறெனக் கோவு
     பரியினை மலர்விட்டு ஆடி ...... அடியார்கள்

அரஹர வுருகிச் சேசெயென திருநடனக் கோலம்
     அருள்செயும் உமையிற் பாகர் ...... அருள்பாலா
அலரணி குழல்பொற்பாவை திருமகள் அமளிப் போரொடு
     அடியவர் கயிலைக் கான ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........



திரு நிலம் மருவிக் காலின் இரு வழி அடை பட்டு ஓ(ட்)டி ...

ஒளி வீசும் ஜோதி இடத்தைப் பொருந்தி, பிராண வாயு செல்லும்
இடகலை, பிங்கலை மார்க்கங்கள்* அடைபடும்படி மூச்சை ஓட்டி,



சிவ வழி உடன் உற்று ஏக பர(ம்) மீதே ... சிவ நெறியில் நின்று,

தனித்து நிற்கும் மேலிடத்தே


சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி ... சிவ ஜோதியை

பொம்மைக் கல்யாணம் போலக் கூடி,


கோல திரி புரம் எரியத் தீயில் நகை மேவி ... விளங்கி நிற்கும்

(காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்களும் உனது புன்னகையில்

விளைந்த தீயில் எரிபட்டு அழிய,



இரு வினை பொரியக் கோல திருவருள் உருவத்து ஏகி ...

எனது நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் பொரிந்து
சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு,



இருள் கதிர் இலி பொன் பூமி தவசு ஊடே ... இருளும் ஒளியும்

இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய்


இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி ... நீயும் நானும்

ஒன்றுபடக் கலந்து, (அத்தகையக் கலப்பால்) இவ்வுடல்
நிலைபட்டதெனப் பொருந்தி,



தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே ... தேவர்கள்

இவன் இளையவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப்
பெரும் பேற்றை அருள்வாயாக.



பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள் பட ... சிலம்பு, வீரக் கழல்கள்

ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடுபடும்படியாக ஒலிக்க,


முத்தேவர் பழ மறை பணிய ... பிரமன், ருத்திரன், திருமால் என்னும்

முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற,


சூலம் மழு மானும் பரிவோடு சுழல ... (கைகளில் ஏந்திய) சூலம்,

மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல,


சேடன் முடி நெறு நெறு என ... நாகராஜனாகிய ஆதிசேஷனின்

பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய,


கோவு பரியினை மலர் விட்டு ஆடி ... நந்தியாகிய வாகனத்தில்

திருவடி மலரை வைத்திருத்தலை விட்டு, நடனம் செய்து,


அடியோர்கள் அரஹர உருகிச் சே செ என ... அடியார்கள் அரகர

என மனம் உருகி ஜெய ஜெய என்று போற்ற,


திரு நடனக் கோலம் அருள் செ(ய்)யும் உமையின் பாகர்

அருள் பாலா ... ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின்
பாகராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே,



அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப்

போரொடு ... மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும்,
லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை

விரும்புவதோடு,


அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே. ... அடியார்கள் வாழும்

கயிலை மலையிடத்தும் விருப்பம் காட்டும் பெருமாளே.




* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:


நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு

'ரேசகம்' என்றும் பெயர்.  உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.


'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.



'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.



'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.



'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.


சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்

மன அமைதி ஏற்படும்.

நன்றி-கௌமாரம்.காம் http://www.kaumaram.com/thiru/nnt0517_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகன் சரணம் 


Tuesday, May 14, 2019

திருப்புகழ் 521 புமி அதனில் (கயிலைமலை)





ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
ஸ்ரீகயிலாமலைகுமரா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 521 புமி அதனில்  (கயிலைமலை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதனனத் ...... தனதான
     தனதனனத் ...... தனதான

......... பாடல் .........

புமியதனிற் ......ப்ரபுவான
     புகலியில் வித்தகர் ...... போல
அமிர்த கவித் ...... தொடைபாட
     அடிமை தனக்கு ...... அருள்வாயே

சமரில் எதிர்த்த ...... சுர்மாளத்
     தனியயில் விட்டு ...... அருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
     ரசதகிரிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புமியதனிற் ப்ரபுவான ... இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும்
தலைவரும்,

புகலியில்* வித்தகர்போல ... சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல

அமிர்தகவித் தொடைபாட ... இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத்
தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு

அடிமைதனக்கு அருள்வாயே ... இந்த அடிமைக்கும் திருவருள்
புரிவாயாக.

சமரிலெதிர்த்த சுர் மாள ... போரில் எதிர்த்து வந்த சூரன்
மாண்டொழிய

தனியயில்விட்டு அருள்வோனே ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி
அருளியவனே,

நமசிவயப் பொருளானே ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின்
தத்துவமாகியவனே,

ரசதகிரிப் பெருமாளே. ... வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள
பெருமாளே.
* புகலி = சீர்காழி:

உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால்
புகலி என்ற பெயர் பெற்றது.

நன்றி. கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0521_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

Monday, May 13, 2019

திருப்புகழ் 8 உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)





ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருப்பரங்குன்றம் தேவசேனாபதி போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 8 உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

உனைத்தினந் தொழுதிலன் உனதியல்பினை
     உரைத்திலன் பலமலர்கொடு உன் அடியிணை
          உறப் பணிந்திலன் ஒருதவமிலன் உனது ...... அருள்மாறா
உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொடு உன்சிகரமும் வலம் வருகிலன்
          உவப்பொடு உன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெழும் பகடது பிடர்மிசை வரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்து அடர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்குறுஞ் செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்து அலமுறு பொழுது அளவைகொள்
          கணத்தில் என்பயம் அற மயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்தலந் தனில் அலகைகள் குதிகொள
     விழுக்குடைந்து மெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுகடு உழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தினஞ் சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொரிந்து அலர் பொதிய விணவரொடு
          சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெனந் தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப்பரங் கிரிதனில் உறை சரவண ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

உனைத்தி னந்தொழு திலன் ... யான் உன்னைத் தினந்தோறும்
தொழுவதும் இல்லை.

உனதியல்பினை உரைத்திலன் ... உன் தன்மைகளை எடுத்து
உரைப்பதுமில்லை.

பல மலர்கொடுன் அடியிணை ... பல மலர்கள் கொண்டு உன்
திருவடிகளை

உறப்ப ணிந்திலன் ... பொருந்தப் பணியவில்லை.

ஒருதவ மிலன் ... ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை.

உனதருள்மாறா உளத்து ளன்பினர் ... உன்னருள் நீங்காத
உள்ளத்தை உடைய அன்பர்

உறைவிடம் அறிகிலன் ... இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும்
இல்லை.

விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் ... ஆர்வத்தோடு உன்
மலையை வலம்வருவதும் இல்லை.

உவப்பொடுன்புகழ் துதிசெய ... மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க

விழைகிலன் ... விரும்புவதும் இல்லை.

மலைபோலே கனைத்தெ ழும்பகடது ... மலைபோல் உருவமுடன்,
கனைத்தவாறு வரும் எருமையின்

பிடர் மிசைவரு ... கழுத்தின் மீது வருகின்ற,

கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் ... கரிய நிறமும்
கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள்

கதித்த டர்ந்தெறி கயிறு ... என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற
பாசக்கயிறு கொண்டும்,

அடுகதைகொடு பொருபோதே ... துன்புறுத்தும் கதாயுதம்
கொண்டும் என்னோடு போரிடும் போது,

கலக்கு றுஞ்செயல் ... மனம் கலங்கும் செயலும்,

ஒழிவற அழிவுறு கருத்து ... ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும்

நைந்து அல முறுபொழுது ... நைந்துபோய் யான் துன்புறும்போது

அளவைகொள் கணத்தில் ... ஒரு கண அளவில்

என்பய மற ... என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி

மயில் முதுகினில் வருவாயே ... மயிலின் முதுகினில் நீ வருவாயாக.

வினைத்தலந்தனில் ... போர்க்களத்தில்

அலகைகள் குதிகொள ... பேய்கள் கூத்தாடுவதால்

விழுக்கு டைந்துமெய் உகுதசை ... ஊன் உடைந்து உடல்களிலிருந்து
சிதறின மாமிசத்தை

கழுகுண ... கழுகுகள் உண்ணவும்,

விரித்த குஞ்சியர் எனும் ... விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும்

அவுணரை அமர்புரிவேலா ... அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,

மிகுத்த பண்பயில் குயில்மொழி ... நிறைய ராகங்களில் பாடவல்ல
குயிலின் மொழி ஒத்த குரலாள்,

அழகிய கொடிச்சி ... அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்)

குங்கும முலைமுகடு ... குங்குமம் அணிந்த மார்பில்

உழுநறை விரைத்த சந்தன ம்ருகமத ... அழுந்தும் வாசமிகு
சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த

புயவரை உடையோனே ... மலை போன்ற தோள்களை உடையவனே,

தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு ... தினந்தோறும்,
நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி,

புனற்சொரிந்து அலர் பொதிய ... நீரால் அபிஷேகம் செய்து,
பூக்களை நிறைய அர்ச்சித்து,

விணவரொடு ... தேவர்களும்

சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ... கோபத்தை நிந்தித்து
விட்ட முனிவர்களும் தொழ,

மகிழ்வோனே ... அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே,

தெனத்தெனந்தன என ... தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன்

வரி யளிநறை தெவிட்ட ... இசைக்கும் வண்டுகள் தேனைத்
தெவிட்டும் அளவுக்கு

அன்பொடு பருகு ... ஆசையுடன் குடிக்கும்

உயர் பொழில்திகழ் ... உயர்ந்த சோலைகள் விளங்கும்

திருப் பரங்கிரி தனிலுறை ... திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும்

சரவண பெருமாளே. ... சரவண மூர்த்தியே

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0008_u.html

பாடயவர்-சம்பந்தம் குருக்கள். https://www.youtube.com/watch?v=rUZq21Ge6A0

அடியேன் குரலில் திருப்புகழ் https://www.youtube.com/watch?v=-qwknbOXFiI&t=419s

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 


திருப்புகழ் 5 விடமடைசு வேலை (விநாயகர்)



ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாத போற்றி 
யசோதை இளம்சிங்கம் ஸ்ரீகண்ணபெருமான் திருமருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 5 விடமடைசு வேலை  (விநாயகர்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

......... பாடல் .........

விடம் அடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாணம் ...... எனவேதான்
விழியும் அதிபார விதமும் உடை மாதர்
     வினையின் விளைவேதும் ...... அறியாதே

கடியுலவு பாயல் பகல் இரவெனாது
     கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவன் அறிவீனன் இவனும் உயர் நீடு
     கழலிணைகள் சேர ...... அருள்வாயே

இடையர் சிறுபாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியென நாம ...... முறைகூற

அடையலவர் ஆவி வெருவ அடிகூர
     அசலும் அறியாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவு முடி சாட
     அறிவருளும் ஆனை ...... முகவோனே.


......... சொல் விளக்கம் .........

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் ... நஞ்சு பொருந்திய
கடலும், தேவர் படையும், சூலாயுதமும்,

விசையன் விடு பாணம் எனவே தான் ... அருச்சுனன் விடுகின்ற
அம்பும் சமானம் என்று கூறும்படியான

விழியும் அதி பார விதமும் உடை மாதர் ... கண்களும்,
அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின்

வினையின் விளைவு ஏதும் அறியாதே ... சாகசத் தொழில்களினால்
விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது,

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது ... வாசனை மிக்க
படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்

கலவி தனில் மூழ்கி வறிதாய கயவன் அறிவு ஈனன் ...
சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும்
ஆகிய

இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே ...
அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள்
புரிவாயாக.

இறைவன் மகள் வாய்மை அறியாதே ... அரசன் உக்ரசேனனுடைய
மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக
(அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப்
படுவார்கள் என்ற உண்மை தெரியாது)

இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை
கூற ... மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப்
பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற
(அவள் முறையீட்டுக்கு இரங்கி),

இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக ...
(அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத்
திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக்
கண்ணன் தன்வசமாக்க),

அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர்
ஓட ... பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ
வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட,

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட ... போவது ஏனடா
சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும்

அறிவு அருளும் ஆனை முகவோனே. ... அறிவை
(கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0005_u.html

அடியேன் குரலில் திருப்புகழ்-https://www.youtube.com/watch?v=hTgEZOg9n-I&list=UUvSbTvTGd7X63HCxCAT3hAA&index=14

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Saturday, May 11, 2019

திருப்புகழ் 4 நினது திருவடி (விநாயகர்)




ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
ஸ்ரீகற்பகவிநாயகர் திருவடிப்போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 4 நினது திருவடி  (விநாயகர்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனன தனதன தத்தன தத்தன

     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான


......... பாடல் .........


நினது திருவடி சத்தி மயிற்கொடி
     நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழம் அப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசி பருப்பவல் எட்பொரி
          நிகரில் இனிகதலிக் கனி வர்க்கமும் ...... இளநீரும்


மனது மகிழ்வொடு தொட்ட கரத்தொரு
     மகர சலநிதி வைத்த துதிக்கர
          வளரு கரிமுக ஒற்றை மருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே


தெனன தெனதென தெத்தெனனப் பல
     சிறிய அறுபத மொய்த்து உதிரப்புனல்
          திரளும் உறுசதை பித்த நிணக்குடல் ...... செறிமூளை
செரும உதர நிரப்பு செருக்குடல்
     நிரைய அரவ நிறைத்த களத்திடை
          திமித திமிதிமி மத்தளம இடக்கைகள் ...... செகசேசே


எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்து முழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெனத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்று நடித்திட
          எதிரு நிசிசரரைப் பெலியிட்டருள் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........


நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி
கொடுத்திட ... (முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல்
(இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு,


நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் ...
நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும்,
புதிய பால், தேன்,


நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி
பருப்பு அவல் எள் பொரி ... நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன்,
லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி,


நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் ... ஒப்பில்லாத
இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப்
பொருட்களை),


மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ... மன மகிழ்ச்சியுடன் தொடும்
கைகளையும்,


ஒரு மகர சலநிதி வைத்த துதி கர ... ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள
கடலில் வைத்த துதிக்கையையும்* உடைய


வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக ... வளரும்
யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து,


மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு ... அவருக்கென்றே
பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய
சொற்களைக் கொண்டு (துதித்தும்),


வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு ... தூக்கிய
கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில்
குட்டியும்**,


வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே ... (அந்த
விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில்
அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன்.


தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம்
மொய்த்து உதிரப் புனல் ... தெனன தெனதென தெத்தென
இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர்,


திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை ...
திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய
மூளைத் திசுக்கள்,


செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் ... பிளந்த வயிற்றில்
நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள்,


நிரைய அரவ நிறைத்த களத்து இடை ... இவைகளோடு
வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில்


திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ ...
திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம்
செகசே சே என ஒலிக்கவும்,


துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து
முழக்கிட ... துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப்
பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க,


டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை ... டிமுட டிமு
டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப,


இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட ... ஒன்றோடொன்று
பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட,


இரண பயிரவி சுற்று நடித்திட ... ரண பைரவி என்னும் தேவதைகள்
சுற்றிக் கூத்தாட,


எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே. ... எதிர்த்து
வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே.




* திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.



** ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது.  தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0004_u.html

அடியேன் குரலொலியில் திருப்புகழ்-https://www.youtube.com/watch?v=XE9d6QSWSKU&list=UUvSbTvTGd7X63HCxCAT3hAA&index=16

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 


Friday, May 10, 2019

திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)



ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
ஸ்ரீவயலூர் விநாயகர் இளையவா முருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய 
திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி  (விநாயகர்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

......... பாடல் .........

பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனும் உக்ர துரகமும் ...... நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியும் முற்றிய  ...... பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
     செப்பென எனக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
     எள்பொரி அவல் துவரை ...... இளநீர் வண்டு
எச்சில் பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு வெளரிப்
      பழம் இடிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்க அடிசில்  கடலை பட்சணம் எனக்கொள் ஒரு
     விக்கிந சமர்த்தனெனும் ...... அருளாழி
வெற்ப குடிலச்சடில விற்பரமர் அப்பரருள்
     வித்தக மருப்புடைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் ... அங்கவடி, பேரழகான மணி,
பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும்
பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்,

நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தின் நன்கு பூத்த
மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்,

அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி
வேலும் ... அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன்
மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில்
உள்ள கூர்மையான வேலையும்,

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... திக்குகள் எட்டும்
மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும்,

ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ...
காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு
தோள்களையும்,

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு
என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே
வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று
எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு,
அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,

எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி,
அவல், துவரை, இள நீர், தேன்,

பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப
வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,

இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம்
எனக் கொள் ... பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள்,
சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக்
கொள்ளும்

ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற,
வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே,
கருணை மலையே,

குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த
சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான
அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,

மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பு** உடைய
பெருமாளே.


* திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார்.
அந்த அபூர்வமான பாடல்தான் இது.

** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.

நன்றி. கௌமாரம். காம் http://www.kaumaram.com/thiru/nnt0002_u.html

பாடியது. திரு.டி.எம்.சௌந்தர்ராஜன் படம் அருணகிரிந நாதர். https://www.youtube.com/watch?v=U9CM142K1YA

அடியேனின் குரல்ஒலிவடிவம். https://www.youtube.com/watch?v=wsMC7NKQpKs

பழநி சண்முகதேசிகர் -https://www.youtube.com/watch?v=2EFJuUtGfIU




வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம