Monday, May 13, 2019

திருப்புகழ் 8 உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)





ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருப்பரங்குன்றம் தேவசேனாபதி போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 8 உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

உனைத்தினந் தொழுதிலன் உனதியல்பினை
     உரைத்திலன் பலமலர்கொடு உன் அடியிணை
          உறப் பணிந்திலன் ஒருதவமிலன் உனது ...... அருள்மாறா
உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொடு உன்சிகரமும் வலம் வருகிலன்
          உவப்பொடு உன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெழும் பகடது பிடர்மிசை வரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்து அடர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்குறுஞ் செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்து அலமுறு பொழுது அளவைகொள்
          கணத்தில் என்பயம் அற மயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்தலந் தனில் அலகைகள் குதிகொள
     விழுக்குடைந்து மெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுகடு உழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தினஞ் சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொரிந்து அலர் பொதிய விணவரொடு
          சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெனந் தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப்பரங் கிரிதனில் உறை சரவண ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

உனைத்தி னந்தொழு திலன் ... யான் உன்னைத் தினந்தோறும்
தொழுவதும் இல்லை.

உனதியல்பினை உரைத்திலன் ... உன் தன்மைகளை எடுத்து
உரைப்பதுமில்லை.

பல மலர்கொடுன் அடியிணை ... பல மலர்கள் கொண்டு உன்
திருவடிகளை

உறப்ப ணிந்திலன் ... பொருந்தப் பணியவில்லை.

ஒருதவ மிலன் ... ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை.

உனதருள்மாறா உளத்து ளன்பினர் ... உன்னருள் நீங்காத
உள்ளத்தை உடைய அன்பர்

உறைவிடம் அறிகிலன் ... இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும்
இல்லை.

விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் ... ஆர்வத்தோடு உன்
மலையை வலம்வருவதும் இல்லை.

உவப்பொடுன்புகழ் துதிசெய ... மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க

விழைகிலன் ... விரும்புவதும் இல்லை.

மலைபோலே கனைத்தெ ழும்பகடது ... மலைபோல் உருவமுடன்,
கனைத்தவாறு வரும் எருமையின்

பிடர் மிசைவரு ... கழுத்தின் மீது வருகின்ற,

கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் ... கரிய நிறமும்
கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள்

கதித்த டர்ந்தெறி கயிறு ... என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற
பாசக்கயிறு கொண்டும்,

அடுகதைகொடு பொருபோதே ... துன்புறுத்தும் கதாயுதம்
கொண்டும் என்னோடு போரிடும் போது,

கலக்கு றுஞ்செயல் ... மனம் கலங்கும் செயலும்,

ஒழிவற அழிவுறு கருத்து ... ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும்

நைந்து அல முறுபொழுது ... நைந்துபோய் யான் துன்புறும்போது

அளவைகொள் கணத்தில் ... ஒரு கண அளவில்

என்பய மற ... என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி

மயில் முதுகினில் வருவாயே ... மயிலின் முதுகினில் நீ வருவாயாக.

வினைத்தலந்தனில் ... போர்க்களத்தில்

அலகைகள் குதிகொள ... பேய்கள் கூத்தாடுவதால்

விழுக்கு டைந்துமெய் உகுதசை ... ஊன் உடைந்து உடல்களிலிருந்து
சிதறின மாமிசத்தை

கழுகுண ... கழுகுகள் உண்ணவும்,

விரித்த குஞ்சியர் எனும் ... விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும்

அவுணரை அமர்புரிவேலா ... அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,

மிகுத்த பண்பயில் குயில்மொழி ... நிறைய ராகங்களில் பாடவல்ல
குயிலின் மொழி ஒத்த குரலாள்,

அழகிய கொடிச்சி ... அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்)

குங்கும முலைமுகடு ... குங்குமம் அணிந்த மார்பில்

உழுநறை விரைத்த சந்தன ம்ருகமத ... அழுந்தும் வாசமிகு
சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த

புயவரை உடையோனே ... மலை போன்ற தோள்களை உடையவனே,

தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு ... தினந்தோறும்,
நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி,

புனற்சொரிந்து அலர் பொதிய ... நீரால் அபிஷேகம் செய்து,
பூக்களை நிறைய அர்ச்சித்து,

விணவரொடு ... தேவர்களும்

சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ... கோபத்தை நிந்தித்து
விட்ட முனிவர்களும் தொழ,

மகிழ்வோனே ... அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே,

தெனத்தெனந்தன என ... தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன்

வரி யளிநறை தெவிட்ட ... இசைக்கும் வண்டுகள் தேனைத்
தெவிட்டும் அளவுக்கு

அன்பொடு பருகு ... ஆசையுடன் குடிக்கும்

உயர் பொழில்திகழ் ... உயர்ந்த சோலைகள் விளங்கும்

திருப் பரங்கிரி தனிலுறை ... திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும்

சரவண பெருமாளே. ... சரவண மூர்த்தியே

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0008_u.html

பாடயவர்-சம்பந்தம் குருக்கள்https://www.youtube.com/watch?v=rUZq21Ge6A0

அடியேன் குரலில் திருப்புகழ் https://www.youtube.com/watch?v=-qwknbOXFiI&t=419s

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 


No comments:

Post a Comment