Thursday, June 6, 2019

திருப்புகழ் 245 உடையவர்கள் ஏவர் (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருத்தணிகைமலை முருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 245 உடையவர்கள் ஏவர்  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான


......... பாடல் .........

உடையவர்கள் எவரெவர்கள் எனநாடி
     யுளமகிழ ஆசு ...... கவிபாடி
உமதுபுகழ் மேருகிரி யளவுமானது
     என உரமுமான ...... மொழிபேசி

நடைபழகி மீள வறியவர்கள் நாளை
     நடவுமென வாடி ...... முகம்வேறாய்
நலியுமுனமே உன் அருணவொளி வீசு
     நளின இருபாதம் ...... அருள்வாயே

விடைகொளுவு பாகர் விமலர் திரிசூலர்
     விகிர்தர் பரயோகர் ...... நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு
     விடவரவு சூடும் ...... அதிபாரச்

சடையிறைவர் காண உமைமகிழ ஞான
     தளர் நடையிடா முன் ...... வருவோனே
தவமலரு நீல மலர்சுனை அநாதி
     தணிமலை உலாவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உடையவர்கள் ஏவர் எவர்களென நாடி ... செல்வம் படைத்தவர்கள்
எவர்கள் எவர்கள் என்று தேடி,

உளமகிழ ஆசுகவிபாடி ... அவர்கள் மனம் மகிழ அவர்கள் மீது
ஆசுகவிகளைப்* பாடி,

உமதுபுகழ் மேரு கிரியளவும் ஆனது என ... உம் புகழ் மேருமலை
அளவு உயர்ந்தது எனக் கூறியும்,

உரமுமான மொழிபேசி ... வலிமையான முகஸ்துதி மொழிகளைப்
பேசியும்,

நடைபழகி மீள வறியவர்கள் ... நடந்து நடந்து பலநாள் போய்ப்
பழகியும், தரித்திரர்களாகவே மீளும்படி,

நாளை நடவுமென வாடி முகம்வேறாய் ... நாளைக்கு வா என்றே
கூற, அதனால் அகம் வாடி முகம் களை மாற,

நலியுமுனமே உன் அருணவொளி வீசு ... வருந்தும்
முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற

நளினஇரு பாதம் அருள்வாயே ... தாமரை போன்ற இரு
பாதங்களையும் தந்தருள்வாயாக.

விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் ... ரிஷபத்தை
வாகனமாகச் செலுத்துபவரும், பரிசுத்தரும், திரிசூலத்தை ஏந்தியவரும்,

விகிர்தர் பர யோகர் ... மிக்க உயர்ந்தவரும், மேலான யோகத்தவரும்,

நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு ...
பிறைச்சந்திரன், விளாமர (வில்வ)த் தளிர், சிறிய பூளைப் பூ, பற்களுடன்
கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு,

விட அரவு சூடும் அதிபாரச் சடையிறைவர் காண ... விஷப்பாம்பு
ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய
சிவபெருமான் கண்டு களிக்கவும்,

உமைமகிழ ஞான தளர் நடையி டாமுன்வருவோனே ...
உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே
வருபவனே,

தவமலரு நீல மலர் சுனை ... மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள்
உள்ள சுனையுடையதும்,

அநாதி தணிமலையு லாவு பெருமாளே. ... ஆதியில்லாததுமான
மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே.



*
தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0245_u.html

வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

No comments:

Post a Comment