Wednesday, June 19, 2019

திருப்புகழ் 256 கலை மடவார்தம் (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி. சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 256 கலை மடவார்தம்  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்


தனதன தானம் தனதன தானம்
     தனதன தானம் ...... தனதான

......... பாடல் .........

கலை மடவார்தம் சிலை அதனாலுங்
     கனவளையாலுங் ...... கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
     கருது அலையாலும் ...... சிலையாலுங்

கொலைதரு காமன் பலகணை யாலுங்
     கொடியிடையாள் நின்று ...... அழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
     குளிர்தொடை நீதந்து ...... அருள்வாயே

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
     திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவனமானும் கநவன மானும்
     செறிவுடன் மேவுந் ...... திருமார்பா

தலமகள் மீது எண் புலவர் உலாவுந்
     தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
     தனிமயிலேறும் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கலைமடவார்தம் ... மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த
மாதர்களின்

சிலையதனாலும் ... வசைப்பேச்சின் ஒலியினாலும்,

கனவளையாலும் ... பெருத்த சங்கின் பேரொலியினாலும்,

கரைமேலே ... கரையின் மேல் இருந்து கூவுகின்ற

கருகிய காளம் ... மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின்
ஓசையாலும்,

பெருகிய தோயம் ... பரந்து விரிந்த கடலின் ஓசையாலும்,

கருது அலையாலும் ... சிந்தனை அலைகளாலும்,

சிலையாலுங் கொலைதரு காமன் ... கரும்பு வில்லால் கொலை
செய்யவல்ல மன்மதன்

பலகணையாலும் ... வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும்,

கொடியிடையாள் ... கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய
இத்தலைவி

நின்றழியாதே ... உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று
அழிவுறாமல்,

குரவணி நீடும் புயம் அணி ... குரா மலர்களைத் தரித்துள்ள
நீண்ட புயங்களில் அணிந்துள்ள

நீபங் குளிர்தொடை ... கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட
குளிர்ந்த மாலையை

நீதந்து அருள்வாயே ... நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக.

சிலைமகள் நாயன் ... மலையரசன் மகள் பார்வதி நாயகன்
சிவனும்,

கலைமகள் நாயன் ... கலைமகள் ரஸ்வதியின் நாயகன்
பிரம்மனும்,

திருமகள் நாயன் ... லக்ஷ்மியின் நாயகன் திருமாலும்

தொழும்வேலா ... வணங்கி வழிபடுகின்ற* வேலாயுதனே,

தினைவன மானும் ... தினைப் புனத்திலே காவல் காத்த மான்
போன்ற வள்ளியும்,

கநவன மானும் ... விண்ணுலகில் மேன்மையான கற்பக வனத்தில்
வளர்ந்த மான் போன்ற தேவயானையும்

செறிவுடன் மேவும் திருமார்பா ... மனம் நிறைந்து அணைக்கும்
திருமார்பினனே,

தலமகள் மீது எண் புலவர் உலாவும் ... நிலமகளாகிய இவ்வுலகின்
மீது மதிப்பிற்குரிய புலவர்கள் உலாவும்

தணிகையில் வாழ்செங்கதிர்வேலா ... திருத்தணிகையில் வாழும்
ஒளி படைத்த வேலினை உடையவனே,

தனியவர் கூருந் தனிகெட ... உலக பாசத்தை நீக்கிய உன்
அடியார்களின் மிக்க தனிமை நீக்கி அருளி,

நாளுந் தனிமயிலேறும் பெருமாளே. ... நாள்தோறும் ஒப்பற்ற
மயிலின் மீது எழுந்தருளும் பெருமாளே.

* திருத்தணிகையில் மும்மூர்த்திகளும் வழிபாடு செய்த வரலாறு உண்டு.
தணிகைக்கு அருகே ஓடும் நந்தி ஆற்றின் வடகரையில் சிவ சந்நிதியும், தாரகாசுரன் விஷ்ணுவிடமிருந்து கவர்ந்த சக்ராயுதத்தை மீட்டுக் கொடுத்த முருகனை, திருமால் வழிபட்ட விஷ்ணுதீர்த்தம் கோயிலுக்கு மேற்கேயும், சிருஷ்டித் தொழிலில் முருகனிடம் தேர்ச்சி பெற்ற பிரம்மனுக்கான பிரம்மச்சுனை மலை ஏறும் வழியிலும் உள்ளன.

*****
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. ஊர்ப் பெண்களின் ஏச்சு, கடல், அலைகள், குயிலோசை,சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின்
பிரிவுத்துயரைக் கூட்டுவன.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0256_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகன் துணை

No comments:

Post a Comment