Thursday, January 16, 2020

அம்மா

ஓம் முருகன் துணை 


அம்மா

“மா“ என்று சொல்லாத ஒரு உயிரில்லை. எந்த மொழியல் எந்த நாட்டில் ஒரு ஜீவன் பிறந்தாலும் இந்த “மா“ என்ற சொல்லை சொல்லிதான் தன்னை மண்ணில் இணைத்துக்கொள்கிறது.

தமிழ் மொழி அந்த “மா“ என்ற சொல்லை அழகுப்படுத்தும் விதமாக, உயர்த்தும் விதமாக, புனிதப்படுத்தும் விதமாக “அம்மா“ என்று அழைக்கிறது.

நண்பருடன் மருத்துவ சோதனைக்கு சென்று வந்த நண்பர் பாலகிருஷ்ணன் “மருத்துவ மனையில் பிறந்து சிலதினங்கள் ஆன குழந்தை அம்மா அம்மா என்று அழுவதைப்பார்த்து தழிழ் குழந்தை என்று நினைத்து அறையை எட்டிப்பார்த்தேன், அரபிக்குழந்தை“ என்றார். 

அரபி மொழி “மா“வை மேலும் மேன்மைப்படுத்தும் விதமாக “மாமா“ என்று அழைத்து பெருமைப்படுகிறது.

சகோதரியின் குழந்தைக்கு, தாயிக்கும் மேலான தாய்போல தாயின் சகோதரன் விளங்குவதால், தமிழ் தாய்மாமனை பெருமைப்படுத்தும் விதமகா   “மாமா“ என்று அழைக்கிறது.

பசு உலகையே தாயாக நினைக்கிறது போலும், அதானால்தான் தனது சொல்லை “மா“ என்ற விளியாக உலகுக்கு வைக்கிறதோ?.

2016ல் பு.முட்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மாணவர் மனமேம்பாட்டு சிறப்பு விழா  ஜிஜிஆர் திருமணமண்டபத்தில் நடந்தது. அதில் பேசிய மதிப்பிற்குறிய காவல்துரை ஆய்வாளர் திரு.மணி அவர்கள் சொன்ன கதை இது.

நடக்கமுடியாத வயதான மாமியாரை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பாத மருமகள், தனது கணவனிடம் மாமியாரைப்பற்றி சொல்லிச்சொல்லி அவளை தனித்துவிட ஏற்பாடு செய்துவிடுகிறாள்.

கணவன் தான் மகன் என்பதை மறந்து மனைவியின் பணியாள் என்றே நடந்து கொள்கிறான் என்பதை தாய் அறிந்துக்கொண்டு வீட்டை விட்டுவெளியேற முடிவெடுக்கிறாள்.   

மகன் தாயை ஒரு கூடையில் வைத்து மலைக்காட்டில் கொண்டுசென்று விட தயாராகிறான்.

கூடையில் உட்கார்ந்து இருக்கும் தாய் மகனிடம் வீட்டுதோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் இருந்து ஒரு கைப்பிடி முருங்கை இலை கொத்தை பறித்துவரச்சொல்லி கையில் வைத்துக்கொள்கிறாள்.

“போகும்போதுகூட சும்மா போகுதா பார் கிழ முண்டம்“ என்று மருமகள் முணுமுணுக்கிறாள். 
  
மகன் தாயை தூக்கிக்கொண்டு மலையை நோக்கிப்பயணம் செய்கிறான். தாய் கையில் இருந்த முருங்கைகீரை இணாக்கை கிள்ளி போட்டுக்கொண்டே செல்கிறாள்.  காட்டை கடந்து மலையின் உச்சியில் உள்ள ஒரு குகையில் தாயை இறக்கிவிட்டுவிட்டு, மகன் திரும்பி வீட்டை நோக்கி நடக்கிறான்.

திரும்பி நடக்கும் மகனை கூப்பிட்டு அம்மா சொல்கிறாள் “மகனே! இருட்டப்போகுது, வழிமறைந்விடும், வேகமாக நடந்துபோ, திரும்பிபோகும் வழியில் நான் போட்டு வைத்துள்ள முருங்கைகீரை இணாக்கை பொறிக்கி  எடுத்துக்கொண்டே போ, வழிமாறாது, வீட்டுக்கு சரியாக போய்விடுவாய்” என்கிறாள்.

மகனால் அதற்குமேலும் நடக்க முடியவில்லை.   

அந்த விழாவில் யுதிஷ்டிரன் யச்சனுக்கு சொன்ன பதில்களைப்பற்றி நான்பேசிவிட்டு அமர்ந்துஇருந்தேன். அந்த கதையைக் கேட்ட என் மனம் தாயை நினைத்து துள்ளி துடித்து சமநிலை அடைந்தது.

தாயின் இடத்தில் எதை வைத்து சமன்செய்யமுடியும். தாய்கூட அதை அறிந்து சொல்ல முடியாது.

குழந்தைகளை அடிக்காத தாய்களே இல்லை, ஆனாலும் தாயைவிட பெரும் உறவு குழந்தைகளுக்கு இல்லை. தாய் அடித்ததால் உடைந்துபோன குழந்தை உறவுகள் இல்லை. தந்தை அடித்ததால் உடைந்துபோன மகன்கள் பலர் இருக்கிறார்கள்.  தந்தையிடம் அந்த விரிசலை ஒட்ட பசை இல்லை.  அதனால் அந்த விரிசல் விரிந்துக்கொண்டே சென்று தந்தையை மகனை எதிர் எதிர் துருவத்தில் நிறுத்திவிடுகிறது. ஆனால் அம்மா அம்மாவாகவே இருந்து எந்த விரிசலையும் ஒட்ட வைத்துவிடுகிறாள். தாயிக்கும் பிள்ளைக்கும் இடையில் விரிசல் இருக்கிறது என்றால் அது பிள்ளையின் கற்பனையில் உள்ள விரிசல் மட்டுமே.  குழந்தை என்று ஒன்று தனியாக இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தாயின் கொடியில் கனிந்த தாயின் கனிதான். 

மேலே சொன்ன கதையில் அம்மா தாய்பாசத்தோடு நடந்துக்கொண்டாள் என்று தோன்றுகின்றது. அம்மா பாசக்காரியாக நடந்துக்கொள்வது நமது மனதின் வெளிப்பாடு, அவள் வாழ்க்கை விஞ்ஞானி. அவள் எத்தனை பெரிய சூழ்நிலை அறிவாளி. தாயை தொலைக்கபோன இடத்தில் மகனே தொலைந்துப்போவான் என்பதை அந்த தாய் அறிந்தது எத்தனை பெரிய அறிவாளி தனம். எந்த அறிவியலிலும் இந்த சூத்திரம் இல்லை. மகனுக்காக எத்தனை மணிநேரத்திற்கு முன்பு செயல்பட தொடங்குகின்றாள் அந்த தாய். குழந்தை பிறப்பதற்கு முன்பே அம்மா அம்மாவாகிவிடுகிறாள் என்பது குழந்தைகள் அறிவதில்லை. 

சௌதி அராபியாவில் இருந்து சென்று அம்மா முகம் பார்க்க முடியவில்லை. எனது அம்மா இறந்து பதினாறு நாள் காரியம் எங்கள் சொந்த ஊர் பூவாயிக்குளத்தில் மாமாவீட்டில் இருந்து  முடித்துவிட்டு  நாகவல்லி அம்மன்கோவில் வந்து  நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டை உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைக்க சென்றபோது அம்மா இல்லாத வீட்டில் அம்மா சுட்டுவைத்திருந்த தோசை மட்டும் இருந்தது.  

பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பிருந்தே அம்மா  பிள்ளைகளுக்கு உணவாகிக்கொண்டே இருக்கிறார்.  

ஜெயமோகன் எழுதும் வெண்முரசில் ஒரு கதை. இறக்கும் தருவாயில் உள்ள ஒரு தாய்பறவை, இன்னும் இறகும் சிறகும் முளைத்து பறக்க எழாத தன் குஞ்சுகளிடம்   சொல்லும். “முதலில் என்கால்களை சாப்பிடுங்கள், பின் இறக்கைகளை சாப்பிடுங்கள், அதன் பின் என் உடலை சாப்பிடுங்கள், இறுதியாக என் இதயத்தை சாப்பிடுங்கள். இறகும் சிறகும் முளைத்ததும் பறந்து சென்று உலகை வென்று வாழுங்கள்”  

அம்மா ஒரு வாழ்க்கை விஞ்ஞானி. தனக்கு தெரிந்த பொருள்களை மட்டும் கொண்டு அவள் விஞ்ஞானம் செய்கிறாள். மெய்ஞானம் படைக்கிறாள். அதனால் அதற்கு மதிபில்லை மண்ணில். ஆனால் தெய்வங்கள் அதனை வாழ்த்திக்கொண்டே இருக்கின்றன. 

சூழ்நிலையின் அறிவாளியாக இருக்கும் தாயால்தான் வாழ்க்கை வளமானதாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளும் குழந்தைக்கு தாயே தெய்வம்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை-திருக்குறள்      

இ்ந்த திருக்குறளில் திருவள்ளுவர் அருமையினும் அருமையான உவமைகளை சொல்லி இருக்கலாம், சொல்லவில்லை. தாயைவிட அருமையான ஒன்று உலகில் இல்லை என்பதை குறிப்பு உணர்த்த இந்த குறளில் தாயை உவமையாக வைக்கிறார்.



உலகையே அம்மாவாக நினைத்து “அம்மா“ என்று அழைத்து அம்மாவாக இருக்கும் கோமாதாவை வணங்கி அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்து. 

பட்டி பெருக பெருக பால்பானை பெருக பெருக

மாட்டுப்பொங்கலோ பொங்கல். 


தாய் வாழ்க தாயகம் வாழ்க தாய்தமிழ் வாழ்க. 

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல். 


No comments:

Post a Comment