Monday, February 17, 2020

உலகெலாம்-கடிதம்

ஓம் முருகன் துணை 



சௌதி-தமாம்-Chamber of Commerce கட்டிடத்தில் உள்ள உணவக முகப்போவியம்



அன்புள்ள ஜெ வணக்கம்.
உலகெலாம் கட்டுரை கற்கண்டு துகள் போல சிறிய கட்டுரையாக இருந்து இனிக்கிறது. வைரகல்போல பெரிதாக வண்ணம் தெளித்து ஒளிகின்றது.
மீண்டும் ஏன் இதுமாதிரியான கட்டுரைகளை மறுபிரசுரம்செய்யவேண்டி உள்ளது?
இலக்கியத்தை தூக்கிபிடிப்பதற்காகவா? ஆம்.
அறியாமையையே ஒரு பொருளாக வைத்து வியபாரம் நடத்தும் மனிதர்களை மட்டம் தட்டுவதற்காகவா? இல்லை. அவர்களின் வியாபாரத்திற்கு உங்கள் நல்லதை, உயர்ந்ததை, போற்றுதற்கு உரியதை அகங்களை நசுக்கி மிதித்துக்கொள்கின்றீர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்காக.
தமிழர்களில் அதிகபடியாக அறியாமையின் வடிவமாக இருக்கிறார்கள் என்பதை சுட்டுவதற்காகவா? இல்லை, அறியாமையின் தொடர் தொடுதலால் அறியாமையை அறிவாக கொண்டாடுகிறார்கள் என்பதை விளக்குவதற்காக.
அறியாமை ஒரு துருவம், ஞானம் ஒரு துருவம், இந்த இருதுருவத்திற்கு இடையே செறிந்து இருக்கும் மானிட கூட்டம் என்னவாக போகின்றது என்பதை சுட்டுவதற்கான கட்டுரை. கருமேகமும், அதை கிழிக்கும் மின்னலும்போன்ற கட்டுரை.
அறியாமைக்கும் அறிவுக்கும் இடையே எந்த துருவம் நோக்கி செல்லவது என்று அறியாத மனிதர்கள் முன்னே எது மீண்டும் மீண்டும் முன்னால் வந்து தொடுதல்கொள்கிறதோ அதே சரி என்று அதுவாகவே மனிதர்கள் மாறி விடுகின்றார்கள். அந்த மானிட அறிவு மயக்கம்தான், அறியாமையை விதைக்கும், அறியாமை உடையவர்களின் வெற்றி.
அந்த மயக்கத்தில் மனிதர்களை வைக்க அவர்களை பயன்படுத்தும் தலைவர்களும், ஊடகங்களும் அறியாமை உடையவர்களையே அறிவாளிபோல காட்டி வளர்க்கின்றார்கள். அவர்களின் நோக்கம் அவர்களை வளர்ப்பது இல்லை அவர்களின் மூலம் அறியாமையை மக்களிடம் வளர்க்கவேண்டும் என்பதுதான் உண்மை. அந்த அறியாமைகள் வெகு இயல்பாக மானிடர்களை தங்கள் சொல்லால் செயலால் எழுத்தால் தொட்டுத்தொட்டு அறியாமைகளில் வைக்கிறார்கள். மனிதர்களும் அறியாமையிலேயே இருக்கிறார்கள். இந்த அறியாமைகள் எளிதாக கிடைக்கிறது. உழைக்காமல் கிடைக்கிறது. உடலையோ உள்ளத்தையோ சிதைக்காமல் கிடைக்கிறது. அது ஒரு தீரா உயிர்கொல்லி நோயாக இருக்கிறது என்பதை அறியவிடமல் செய்தபடி கிடைக்கிறது. புண்ணை நக்குவதுபோல அது சுவையாகவும் இருக்கிறது.
ஞானம் தூரத்தில் இருக்கிறது. உழைத்து பெறவேண்டிய இடத்தில் இருக்கிறது. உடலையும் உள்ளத்தையும் ரணப்படுத்தியே கிடைக்கிறது. காலத்தை தொலைக்கவேண்டிய நிர்பந்தத்தில் வைக்கிறது. தன்னந்தனியாக தேடிஅலையவேண்டிய வனத்தில் கண்ணமூச்சி காட்டுகிறது. ஐம்புலன்களை இழுத்துபிடித்து நிறுத்தி ஓட்டவேண்டிய போர்பயணத்தில் இருக்கிறது.
ஞானம் தன்னை காட்டிக்கொள்ள ஞானத்தோடுதான் மோதுகின்றது. அதனால் அது குத்துபடுகின்றது அல்லது குத்துகின்றது. குத்தும்போதும் வலிக்கிறது. குத்துப்படும்போதும் வலிக்கின்றது. வலியில்லாமல் ஞானம் இல்லை.
அறியாமை தன்னை காட்டிக்கொள்ள அறியாமையோடு மோதுவதில்லை, நீர் நீரோடு கலப்பதுபோல அறியாமையோடு அறியாமை இரண்டில்லா ஒன்றாகிவிடுகின்றது. ஞானத்தின் ஒளியில் தன்னை அறிந்து தன் இருப்பதை நிறுத்திக்கொள்ள ஞானத்தின் தூரத்தில் நின்று திரைபோட முயல்கிறது.
அறியாமை, நீ என்று நீ மட்டும் என்று ஒருமையை சுட்டிக்காட்டி அந்த ஒருமையில் சுயநலத்தில் சுகம்காணும் வாழ்க்கையை முன்வைக்கிறது. பெரிய புராணம் என்ன தந்தது என்பதை அது ஏற்றுக்கொள்வதி்ல்லை. தன் புராணத்தை பெரிய புரணம் என்று பச்சாதாபம் கொள்ளவைத்து நப்பாசைப்படவைக்கிறது.
அறிவு நீ என்று சுட்டிக்காட்டும்போதே, நீ என்பது நீமட்டுமல்ல, நீ்ங்களாகிய எல்லோரும் என்கிறது. ஆங்கிலத்தின் you ஒருமையாகவும் பண்மையாகவும் இருப்பதுபோல் என்கிறது.
படைப்பாளிகள் தன் படைப்பகளை தன்னிலைக்காக படைகிறார்களா? முன்னிலைக்கா படைக்கிறார்களா? முன்னிலைக்காக படைக்கிறார்கள். தன்னையும் முன்னிலையாக வைத்துக்கொண்டு படைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எதையும் உலகுக்கு படைக்கிறார்கள். உலகுக்கு படைப்பதாலேயே தனக்கும் படைத்துக்கொள்கிறார்கள். உலகில் நானும் நீயும் ஒன்றுதான். உலகுக்கு படைக்கமுடியாதபோது அவர்களால் அவர்களுக்கும் படைத்துக் கொள்ள முடிவதில்லை என்பதை உணர்ந்ததாலேயே உலகுக்கு படைப்பதை பூரணபடைப்பு என்று பறைசாற்றுகின்றார்கள்.
திருக்குறளில் வள்ளுவன் உலகுக்கு முதல் எது என்று ஆய்ந்து சொல்கிறான். அதனால்தான் அது அவனுக்கும் முதலாகிறது.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரன் உலகம் மகிழ வலம் வருவது எது என்று தேடி கண்டடைந்து சொல்கிறான். அதுதான் அவனை மகிழ்விக்கிறது.
கம்பராமாயணத்தில் கம்பன் உலகத்தை யார் ஆக்கி காத்து அழித்து விளையாடுகிறார்கள் என்று கண்டுகளிக்கிறான். உலகம் கண்டு களிக்கிறது.
சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவர் தோன்றி மறைவதையே வழக்காக கொண்ட உலகம் முடிவும் தோற்றமும் இல்லாமல் இருக்கிறதே என்று ஆச்சரிய படுகின்றார்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் திங்களை போற்றுவதும், மழையை போற்றுவதும் உலகுக்கு அளித்தலால்தான்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் ஓதியும் உணர்ந்தும் அறியமுடியாதவனை உகலம் எப்படி அறிந்தது, எப்படி வழுத்தியது என்று கண்டுகளிக்கிறார்.
இந்த மாபெரும் கொடையாளிகளின் ஞானமும் அறிவும் உணர்வும் கலந்த படைப்புகள், உலகத்தில் நான் ஒருவன், நான் ஒருவனே உலகம் இல்லை என்பதை உணர்ந்து படைக்கப்பட்டதாக உள்ளது.
பெரும் படைப்புகள், மனிதர்களாக பிறந்தவர்களே நீங்கள் இருக்கிற இடம் எது? நீங்கள் செல்லவேண்டிய இடம் எது? அதன் பாதை என்ன? அதை அடைய தூரம் என்ன? அதை அடைந்தால் நீங்கள் எத்தனை பெரிய செல்வத்தை பெறுவீர்கள் என்பதை காட்ட கைபிடித்து அழைத்துச்செல்கிறது.
இதை அறியாத அறியாமை கொண்ட மனிதர்கள் தங்களின் முழு அறியாமையை கொண்டு அறியாமை மனிதர்களை உருவாக்குவதற்கு பெரும் ஞானியரை தொட்டு இழுத்து கீழே போடுகின்றார்கள். அது ஒரு ஆணவம். நான் அவரையே கீழே இழுத்துப்போட்டுவிட்டேன் என்று சுயஇன்பம் கொள்ளும் ஆணவம். அவர்கள் அந்த ஆணவத்தால் தங்கள் முகம் காட்டிக்கொள்கிறார்கள். தங்கள் இருப்பை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் மூலம் தன்னை வளர்த்து வளர்த்து வாழ்ந்துவிட்டுப்போய்விடலாம் என்று எண்ணுகின்றார்கள். அறியாமை மனிதர்களை உருவாக்கும் அறியாமை மனிதர்களால் ஞானியரின் நிழலைக்கூட தொடமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும், ஆனால் அவர்களின் கீழ் உட்காரும் மனிதர்களுக்கு அது தெரியாத மயக்கமாகத்தான் உள்ளது. அந்த மயக்கத்தை தெளிவிக்கவேண்டிய இடத்தில் இந்த கட்டுரை உள்ளது. அவர்களை நோக்கி திரும்பும் மனிதனின் நிலை என்ன? என்பதை சுட்டுக்காட்டும் இந்த கட்டுரை மிகவும் நுணுக்கமான இடத்தில் மானிட உள்ளத்தை தொட்டு மேலே எடுத்துச்செல்கிறது. அந்த தொட்டு எடுக்கும் வேலைகளை உங்களைப்போன்ற படைப்பாளிகள் செய்யும்போதே மயக்கம் தெளிகிறது. மேல் எழும்ப முடிகிறது.
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். சொல்வார் “அலை கடலை சார்ந்தது. கடல் அலையை சார்ந்தது இல்லை”
ஆத்மானந்தர் சொல்கிறார் “‘அலையும் கடலும் நீரன்றி வேறு அல்ல” என்கிறார்.
சௌதி அரேபியாவின் ஒரு உணவுவிடுதியில் இந்த ஓவியத்தைப் பார்த்தேன். முதல் ஓவியத்தில் அலை கடலி்ல் தோன்றுகிறது. இரண்டாவது படத்தில் கரையை அடைகிறது. மூன்றாவது படத்தில் மீண்டும் கடலுக்கே சென்று அடைகிறது.
காலத்தால் இடத்தால் மொழியால் வேறுபட்டு நின்று சொல்லப்பட்ட ஒரே உண்மை. ஆனால் உலகெலாம் என்று சொல்லப்பட்ட உண்மை.
ஞானத்தை விடையாக்கி உலாவரும் இறைவன், உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன் என்பது எத்தனை பெரிய உண்மை.
உலகெலாம் என்ற அந்த ஒரு சொல்லுக்காக சேக்கிழார் எத்தனை ஆழ்கடலுக்குள் இறங்கி முத்தெடுத்திருப்பார் என்பதை அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். எடுத்த முத்தை எப்படி உலகுக்கு அணிசெய்து பொக்கிஷமாக்குகின்றார் என்பதை அறிவும் உணர்வும் எழுச்சிபெற விளக்குகின்றீர். நன்றி.
ஏன் இலக்கியம் படிக்கணும்? மனித அகத்தில் மானிட குப்பைகள் குவிந்துவிடாமல் இருக்க. கொட்டிக்கொண்ட, கொட்டப்பட்ட குப்பைகளை கொளுத்தி அலகில் ஜோதிகாண.
அன்பும் நன்றியும்.
ராமராஜன் மாணிக்கவேல்.

Tuesday, February 4, 2020

உடலும் மனமும் வளர்க

ஓம் முருகன் துணை 






உடம்புக்குள் உயிர் இருக்கிறது. உயிரை வளர்க்கத்தான் உடம்பு வளர்கிறது. மனதிற்குள் புத்தி இருக்கிறது. புத்தி வளரத்தான் மனம் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. 

உடம்பை வளர்ப்பது உயிரை வளர்க்கத்தான். உயிரை ஏன் வளர்க்கவேண்டும்? மெய்ஞானத்தை அடைவதற்காக. அது பெரிய விசயம். அது வாழ்வின் குறிக்கோள்.  அதற்கு நிறைய பாடுபடவேண்டும். மெய்ஞானத்தை பெறுவதற்காக உயிரை வளர்க்கவேண்டும் என்பதுபோலவே குறைந்த பட்சம் ஆனந்தமாக  வாழவும் உயிரை வளர்க்கவேண்டும் அதற்கு உடம்பை வளர்க்கவேண்டும். 

புரட்சித்தலைவர் பொன்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் உடம்பை மிகவும் கவனமாக வளர்த்தவர். தான் உடம்பின்மீது கவனமாக இருந்ததுபோலவே தன்னை சந்திக்கும் சிறுநடிகர்களையும் உடம்பின்மீது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவார். அதற்கு எம்.ஜி.ஆர் கூறும் காரணம். ஒரு பாடகன் பாடவரவில்லை என்றால் வேறு ஒரு பாடகன் பாடி அந்த பாடலை படமாக்கிவிடலாம். ஒரு இயக்குனர் அந்த படத்தை இயக்கவரவில்லை என்றால் வேறு ஒருவரை வைத்து படத்தை இயக்கிவிடலாம் ஆனால்  ஒரு கதாநாயகன் நடிக்கவேண்டிய  படத்தை வேறு ஒரு கதாநாயகன் நடித்தால் அது வேறு ஒருவர் படமாக மாறிவிடும். உன்னை எதிர்ப்பார்க்கும் ரசிகனுக்கு நீதான் நடிக்கவேண்டும் எனவே உடம்பை கவனமாக பார்த்துக்கொள் என்று கூறுவாராம். 

தனது படத்தில் நடிக்கும் சிறு நடிகன்கூட ஒழுக்கம், தண்ணி, புகை என்று இருக்கக்கூடாது. சரியான நேரத்திற்கு படபிடிப்பு தளத்திற்கு வரவேண்டும், படபிடிப்பு விட்டதும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு செல்லவேண்டும் என்று கவனம் எடுத்துக்கொள்வார் என்று நடிகர் சிவக்குமார் சொன்னார். 

ஜெமினி ஸ்டியோவில்  சௌக்கார் ஜானகி ஒரு படத்தில் நடிக்கும்போது வறுமையின் காரணமாக உணவு உண்ணாமல் இருந்ததால் மயக்கம்போட்டு விழுந்துவிடுகிறார். அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உடம்பு நலபெற்று மீண்டும் படபிடிப்பு தளத்திற்கு வருகிறார். அவரை அழைத்து ஜெமினி ஸ்டியோ நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் " ஒரு முறை முகத்தில் அரிதாரம் பூசிவிட்டால் உங்கள் நலம் உங்களுக்கு மட்டும்  முக்கியம் அல்ல,  உலகத்திற்கும்   முக்கியம். நீங்கள் எல்லாம் உலகத்திற்கே முக்கியமானவர்கள் உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தாராம். அன்றிலிருந்து உடம்பை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டேன். என்று 89வயது சௌகார் ஜானகி தெரிவித்தார். சௌக்கார் ஜானகியை இன்று பார்ப்பவருக்கும் அவரின் உடல்நலம்பேணுதல் உவகை அளிக்ககூடியதாக இருக்கும். அத்தனை நேர்த்தி. அழகு. தெளிவு. 

உடம்பை வளர்ப்பதன் மூலம் நமது உயிரை வளர்க்கின்றோம். உடல்மூலமாகவே உயிர் ஆனந்தத்தை மெய்ஞானத்தை பெறுகின்றது. 

மனதை வளர்ப்பதன் மூலமாகவே நாம் அறிவை வளர்க்கின்றோம்.  மனதை எப்படி வளர்ப்பது? நல்ல இலக்கியங்களை கற்பதன் மூலமாக வளர்க்கலாம். நல்ல மனிதர்கள் வாழ்க்கையை கவனித்து நடப்பதன் மூலம் வளர்க்கலாம். கற்றவர்கள் வாழ்க்கை வரலாற்றை, அவர்கள் பெற்ற அனுபவங்களை அறிவதன் மூலமாக மனதை வளர்க்கலாம். நல்ல கதைகளை படிப்பதன் மூலமாக மனதை வளர்க்கலாம், கதையை படிப்பதன் மூலமாக அந்த கதை மாந்தர்கள் வாழ்க்கையை உணர்வை நாம்பெறுகின்றொம் அதனால் மனம் விரிகிறது. மனம் விரியும்போது அறிவு தானே வளர்கிறது. 

டாக்டர் கே என்னும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி என்னும் விலங்கியல் நிபுணர் வாழ்க்கை சம்பவத்தைப்பற்றிய  ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் என்ற கதையில், டாக்டர் கேவுடன் பழகுவதால் ஒரு வனத்துறை அதிகாரியின் மனவிரிவு விளக்கப்படுகிறது. டாக்டர் கேயின் தன்னலமில்லா தியாக வாழ்க்கையும். உண்மையான அன்பையும் இந்த கதை நமக்கு வழங்குகின்றது. 

இந்த கதையில் குடிகாரர்கள் குடித்துவிட்டு எறிந்த காலிப்பாட்டிலின் கண்ணாடி குத்தி ஒரு யானை கால் வீங்கி நடக்கமுடியாமல் அலைகின்றது. தனது இருப்பிடத்தில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முதுமலைக்கு சென்று அதற்கு வைத்தியம் பார்க்கிறார் டாக்டர் கே. அதன் பிறகு ஒரு ஆண்டு கழிந்தபோது ஒரு நாள் இரவு டாக்டர் இருப்பிடத்தில் யானை வாசம் அடிக்கிறது. அதனை அறிந்த டாக்டர் கே என்னவென்று இருட்டில் சென்று பார்க்கிறார். ஒரு இரண்டு  வயது யானைக்குட்டி அவரிடம்  தனது காலில் அதேபோல் பீர்பாட்டில் குத்தியதை காட்டுகிறது. டாக்டர் கே வைத்தியம் செய்கிறார். அந்த குழந்தையானை முதுமலையில் இருந்து இவரை தேடிவந்து இருக்கிறது. அந்த குழந்தையுடன் டாக்டர் கே முன்னால் மருத்துவம் செய்த கொம்பன் யானையும் அதன் கூட்டமும் வந்து இருப்பது இருட்டில் தெரிகிறது. அவை அனைத்தும் டாக்டர் கேவுக்கு தங்கள் பிளிறலால் நன்றி சொல்கிறது. இந்த நம்பிக்கையை அன்பை கருணையை டாக்டர் கே எதனால் பெற்றார். பணத்தாலா? பட்டத்தாலா? இல்லை. தனது மனத்தின் விரிவால் அதற்குள் பெருகும் அன்பால் பெற்றார்.  இந்த கதையை படிக்கும்போது நம் மனமும் நம்மை அறியாமல் கருணையில் நனைகின்றது. 

வனத்துறை அதிகாரி டாக்டர் கேவுக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார். அது கைநழுவி விடுகிறது. ஆனால் டாக்டர்கே அதற்கெல்லாம் மனம் கொடுக்கவில்லை. அவரின் செயற்கரிய செயலுக்கு முன்னால் எந்தபட்டமும் அவருக்கு பெரிதில்லை என்பதை கதை காட்டுகின்றது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரி செயகலா தார்-என்ற குறள் டாக்டர் கே போன்றவர்களைப் பார்க்கும்போது தன் அர்த்தத்தின் வலிமையை நமக்குள் ஏற்றிச்செல்கிறது.  


கதையின் ஆரம்பத்தில் படிப்பது மதிப்பெண்பெறுவது வேலைக்கு போவது நன்றாக சம்பாதிப்பது மகிழ்ச்சியாக வாழ்வது என்ற சராசரி தனத்தில் சிக்குண்ட மானிட அகமாக வனத்துறை அதிகாரி வருகின்றார்.   அன்பு தியாகம் உழைப்பு நுண்ணறிவு பெருங்கருணை என்று உயர்வதை காட்டும்விதமாக டாக்டர் கே வருகின்றார். டாக்டர் கேவால் வனத்துறை அதிகாரி மனம்வளர்ந்து அறிவு மேன்மைபடுகின்றது. காந்தத்தை தொடும் இரும்பும் காந்தம் ஆவதுபோல இந்தகதை மானிட மனம் வளர்ப்பதை காட்டுகின்றது.  


மனிதன் உடலை வளர்க்கவேண்டும் அது உயிரை வளர்க்கும். மனிதன் மனத்தை வளர்க்கவேண்டும் அது அறிவை வளர்க்கும்.


டாக்டர் கே. விக்கிபீடியா

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்

Monday, February 3, 2020

நடுவில் நிற்கின்றோம்

ஓம் முருகன் துணை







ஒவ்வொரு சிந்தனைக்கும் செயலுக்கும் நிகழ்வுக்கும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று கீழ்நிலை. மற்றது மேல் நிலை. நாம் மையத்தில் நின்று பார்க்கின்றோம். நம் பார்வை கீழேயும் செல்லலாம். மேலேயும் செல்லலாம். எங்கும் செல்லாமல் கண்மூடிக்கொண்டும் இருக்கலாம். கண்மூடிக்கொண்டு இருப்பது ஒருசராசரிதனம். கீழே போவது அறியாமையின் அல்லது முயலாமையின் வெளிப்பாடு. மேலே செல்வதுதான் பகுத்தறிவு. ஊக்கத்தின் மேம்பாடு. வாழ்வின் உயர்வு.

கீழ்நிலை எது? மேல் நிலை எது? என்று இருபார்வையையும் செலுத்தி, மேல்நிலைக்கு உயர்வதுதான் மானிடராக பிறந்தன் ஆனந்தத்தைக் கொடுக்கும்.

மகாபாரதத்தில் ஒரு கதை. வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன் என்ற புகழ் உலகில் பரவுகின்றது. குருதுரோணர் அர்ஜுனனுக்கு மட்டும் அதிகமாக ரகசியமாக சொல்லித்தருகிறார் என்ற கீழ்நிலைப்பார்வை துரியோதனனுக்கு வந்தது. அந்தகீழ்நிலைப்பார்வையால் ஏற்பட்ட முனுமுனுப்பு  மன்னன் திருதராஷ்டிரன் வரை சென்றுவிட்டது.  சீடர்கள் இடம் பாரபட்சம் எதுவும் தனக்கு இல்லை என்று விளக்கிக்காட்ட துரோணர் முடிவு செய்தார்.

ஒரு நாளைகாலை சீடர்கள் உடன் கங்கைக்கு துரோணர் குளிக்க சென்றார்.பாழி வழி சென்றதும் அர்ஜுனனை அழைத்து இன்று எண்ணெய் தேய்த்துக்கொள்ளவேண்டும், எண்ணெய் எடுத்துவர மறந்துவிட்டேன். நீ சென்று குருமாதாவிடம் எண்ணெய் வாங்கி வா” என்று சொல்லி விட்டு “மாதாவிடமிருந்து எண்ணெயை வாங்கியபின் அதை கீழே எங்கும் வைக்கக்கூடாது என் கையில் தான் கொண்டுவந்து வைக்கவேண்டும்” என்ற நிபந்தனையும் விதிக்கிறார்.

“அப்படியே செய்கின்றேன் குருவே” என்று வணங்கி குருவின் குடிலை நோக்கி நடக்கிறான் அர்ஜுனன்.

துரோணர் பாண்டவர் நால்வருடனும், கௌரவர் நூறுபேருடனும் கங்கை நோக்கி நடக்கிறார். வழியின் பக்கத்தில் கொஞ்சம் தூரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. துரோணர் திரும்பி அந்த ஆலமரத்தை நோக்கி மாணவர்கள் உடன் நடக்கிறார். அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து மண்ணில் ஒரு யந்திரம் வரைந்து அதற்குள்  மந்திரத்தை எழுதி மாணவர்களுக்கு விளக்குகின்றார்.

“இந்த யந்திரத்தில் இருக்கும் மந்திரத்தை உச்சரித்து வில்தொடுத்து அம்புவிடவேண்டும். வில்லிலிருந்து கிளம்பும் ஒரு அம்பு பல அம்புகளாக பிரிந்து இந்த மரத்தில் உள்ள இலைகள் அனைத்திலும் துளையிடும்” என்றார்.

துரோணர்  துரியோதனை அழைத்து அந்த மந்திரத்தை உச்சரித்து அம்பு விடசொன்னார். துரியோதனன் அம்பு விட்டான். அவனுடைய ஒரு அம்பு பல அம்புகளாக பிரிந்து ஆலமரத்தில் இருந்த அனைத்து இலைகளிலும் துளையிட்டு அவனிடம் திரும்பி வந்தது.

இன்றைய பாடம் இதுதான் என்று கூறிய துரோணர் குளிக்க கங்கையை நோக்கி நடந்தார்.

குருமாதாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிய அர்ஜுனன் கங்கையை நோக்கி நடக்கிறான். வழியில் குருதேவரும் மாணவர்களும் ஆலமரத்தை நோக்கி நடந்த காலடித்தடத்தைப்பார்த்து அவனும் ஆலமரத்தடி செல்கிறான். ஆலமரத்தடியில் ஒரு யந்திரமும் அதில் மந்திரமும் உள்ளது. அர்ஜுனன் மேலே பார்க்கிறான் ஆலமரத்தின் அனைத்து இலைகளிலும் துளைவிழுந்து உள்ளது.  குருதேவர் இன்று நடத்திய பாடம் இதுதான் என்று அர்ஜுனனுக்கு புரிந்துவிட்டது. 

வலது கையில் எண்ணெய் கிண்ணம்.  இடது கையில் வில். தோளில் அம்பராதுணி. “எண்ணையை எங்கும் கீழே வைக்கக்கூடாது” என்று குருதேவர் சொன்ன நிபந்தனை சிந்தனையில் ஒலிக்கிறது. 

இன்றைய பாடத்தை எப்படிவிடமுடியும். அதுவும் மிகமிக முக்கிய அபூர்வமான பாடம். 

அர்ஜுனன் யந்திரத்தைப்பார்த்தான். மந்திரத்தை மனம்செய்தான். பாடம் பழகியது. எண்ணெய் கிண்ணத்தை ஒரு அம்பின் நுணியில் வைத்து சிந்தாமல் மேலே அனுப்பினான். அது திரும்புவதற்குள் மற்றொரு அம்பை எடுத்து மந்திரத்தை ஜெபித்து மேலே விட்டான். ஒரு அம்பு பல அம்பாக பிரிந்து  ஆலமரத்தின் அத்தனை இலைகளையும் துளையிட்டு திரும்பி வந்தது. எண்ணெய்யும் திரும்பி வந்தது. எண்ணெய்யை பிடித்துக்கொண்டு பாடம் புரிந்துவிட்ட மகிழ்ச்சியில்  குருவை  தேடிச்சென்று எண்ணெய்யை கொடுத்தான்.  

எண்ணெய்யை வாங்கிய குருதுரோணர் “எண்ணெய்யை எங்கும் வைக்கவில்லை அல்லவா?” என்று அவன் கண்களைப்பார்த்தாார். அவர் கண்கள் சிரித்தன. இவன் கண்கள் மகிழ்ச்சியில் வணங்கின. மற்ற சீடர்கள் குளிக்க தயாராகிக்கொண்டு இருந்தனர். 

துரோணரும் சீடர்களும் குளித்து முடித்ததும். மீண்டும் குடிலை நோக்கி நடக்கதொடங்கினார்கள். அந்த ஆலமரம் வந்ததும் குருதேவர் “வாருங்கள் அந்த ஆலமரத்திற்கு சென்று பார்த்துவிட்டு செல்வோம்” என்று சீடர்களை அழைத்துக்கொண்டு ஆலமரத்தடிக்கு சென்றார். மரத்தில் உள்ள இலைகள் அனைத்திலும் இரண்டு துளைகள் இருந்தன. சீடர்கள் ஆச்சரியத்தில் வாய் அடைத்து நின்றனர். 

“யார் இந்த இரண்டாவது துளையை போட்டது” என்றார் குருதேவர் துரோணர். 

“அடியேன்தான் குருதேவா” என்று அர்ஜுனன் வந்து வணங்கினான். 

துரோணர் துரியோதனை பார்த்தார். அவன் தலைகுனிந்துக்கொண்டான். குருதேவர் துரோணர் வாஞ்சையுடன் அர்ஜுனன் தலையை கோதினார். 

இந்த கதையில் அர்ஜுனன் இடத்தில் துரியோதன் எண்ணெய் வாங்க சென்று இருந்தால் தனக்கு குருதேவர் பாடத்தை மறைத்துவிட்டார்  என்று பொறாமைக்கொண்டு கீழான சிந்தனையில் நின்று இருப்பான். ஆனால் அர்ஜுனன் தரையில் இருந்த யந்திரமும் மந்திரமும் தனக்கான பாடம் என்பதால்தான் குருதுரோணர் அதை அழிக்காமல் விட்டுவைத்து உள்ளார் என்று மேலான எண்ணத்தில் தன்னைநிறுத்தி பாடத்தை கற்றுக்கொண்டு வென்றான். 

நாம் எந்த  சிந்தனைக்கும் செயலுக்கும் நிகழ்வுக்கும் இடையில் மையத்தில் பூஜியத்தில் நிற்கின்றோம். அதனால் உயர்வை நோக்கி அல்லது கீழ்மைநோக்கி நாம் நகரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே ஒவ்வொரு நகர்வையும் உயர்ந்ததை நோக்கி வைக்கும் கூரறிவை வளர்த்துக்கொள்வது மனதை விசாலமாக்கும் சிந்தனையை மலரச்செய்யும் வாழ்க்கையை பொன்மயமாக்கும். 

சிந்தனையை செயலை நிகழ்வுகளை மேலானதாக்க, சிந்தனை செயலில் மேலானவர்களின் சொற்களை வாழ்க்கை முறையை நூல்களை பயில்பதன்மூலமும் அதனை வாழ்க்கையில் அனுஷ்டிப்பதன்மூலமும் நாம் அடையமுடியும். 

வாழ்க வளமுடன். வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல் 





Sunday, February 2, 2020

பிரபஞ்சன்-தலை சாய்க்க சிறுகதை-வாசிப்பு அனுபவம்.





ஓம் முருகன் துணை





  

ஜெயங்கொண்டத்தில்   இருந்து இரவு காட்டு மன்னார்கோவிலுக்கு இரவு  கடைசி பேருந்தில் வந்தேன். நான் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தபோது சிதம்பரம் கடைசிப்பேருந்து தூரத்தில் போவது தெரிந்தது. ஓடிப்போய் ஏறமுடியாது. 
   
எனக்கு நாளை மதியம் அண்ணாமலை பொறியியல் கல்லூரியில் இளங்கலை ஆசிரியர் பயிற்சி தேர்வு. பு.முட்லூர் வீட்டில் இருந்து செல்லவேண்டும்.

காட்டுமன்னார் குடி அனைத்துகடைகளும் தங்கள் வாய்மூடி விழிமுடிக்கொண்டு தூங்க தொடங்கிவிட்டன. வீதி விளக்குகள் மட்டும் மஞ்சள் தெளித்துக்கொண்டு சோர்ந்து நின்றன. 

மூன்று படியுள்ள பழக்கடையின் மேல் படியில் தெற்கு வடக்கில் நீட்டிப்படுத்துவிட்டேன். சிதம்பரம் செல்லும் முதல்பேருந்தின் இறைச்சலில் எழுந்து வீட்டுக்கு வந்து குளித்து உண்டு, நடராஜர்கோவில் சென்று வணங்கி தேர்வு எழுதி வெற்றிப்பெற்றேன். இறைவன் அருள்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சென்னை வந்த முதல்நாள் இரவு எங்கு படுப்பது என்று தெரியாமல் அண்ணாசாலையில் இரவு முழுவதும் நடந்ததாக சொன்னார்.

இரவுதான் தூங்குவதற்கான நேரம். இரவில் புதிய இடத்தில் படுத்தால் பயம்வரும். தூக்கம் ஓடிப்போய்விடும். 

எழுத்தாளர் பிரபஞ்சனின் “தலை சாய்க்க” என்ற சிறுகதையில் இடப்பற்றாகுறையால் சொந்தவீட்டில் தூங்கமுடியாதவனின் நிலையை எடுத்துக்காட்டுகின்றது. 

நாளைக்காளை நடக்கவிருக்கும் திருமணத்திற்கு மாலை சென்று வரும் மனைவியுடன் மாமியாரும் வந்துவிடுகிறார் வீட்டில் படுத்து எழுந்து காலையில் திருமணத்திற்கு செல்ல. அந்த ஒருவர் வந்துவிட்டதாலேயே வீட்டுக்குள் படுக்க முடியாமல் முன்னால் உள்ள வரண்டாவில் அப்பா அம்மா படுத்திருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறான். அன்று மழைவேறு பெய்கின்றது. நல்ல மழைப்பெய்தால் வீடு ஒழுகும், வீடே உட்கார்ந்து இருக்கவேண்டும். 

அப்பா அம்மா தூங்கும்வரை வெளியில் சென்று வர விரும்புகின்றான். மழையில் நனைந்தபடி செல்கின்றான். நேரத்தை கடத்துவதற்காக வேண்டாத விரும்பாத படத்திற்கு சென்று உட்கார்ந்து வருகின்றான். 

ஜன்னல்ஓரம் கிடக்கும் பெஞ்சில் படுக்கிறான். தூக்கம்வரும்போது பாயை ஜன்னலில் கட்டி இருக்கும் மாடு தலையை விட்டு பாயை திங்க இழுக்கிறது. பெஞ்சை நகர்த்திப்போட்டால் வீட்டு சாக்கடை நாற்றம் குமட்டுகிறது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் கிடக்கிறான். விடியட்டும். விடிந்ததும் வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு சென்றுவிடுவார்கள். வீட்டுக்குள் படுத்து தூங்கிவிடலாம் என்று விடிவதற்காக காத்திருக்கிறான். 

வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு சென்றபின்பு உள்ளே சென்று தூங்கப்போகிறான். இரவு பெய்த மழையில் நனைந்ததால் அவன் உடம்பு அனலாக கொதிக்கின்றது. 

அதனால் என்ன? தூங்கத்தானே போகின்றோம். என்று கதையை பிரபஞ்சன் முடிக்கின்றார். 

தூங்குவதற்காக விடியவேண்டும் என்று காத்திருக்கும் ஒரு சமுகவாழ்வின் விளம்புநிலையை இந்த கதை காட்டுகின்றது. 

வாழ்வின் அன்றட எளிய நிகழ்வு ஒன்று எத்தனை பெரிய சுமையாக சவாலாக மாறுகின்றது என்பதை இந்த கதை சித்திரம் வரைகிறது.  

இந்த எளிய நிகழ்வை நாம் யதார்த்தம் என்று கடந்துசென்றுவிடுவோம் ஆனால் எழுத்தாளன் தன் நுண்அவதானிப்பால் அதை வாழ்வின் கனமான பகுதி என்று நம்முன் எடுத்துவைத்து   அதில் உள்ள சிடுக்குகளை கடப்பதும் வாழ்வின் தவம்தான் என்று காட்டுகின்றான். வாழ்வு எத்தனை சிறிய சிக்கலில் மனிதனை நிறுத்தி தாயம் விளையாடுகிறது. 

சமுகத்தின்மீதும் சகமனிதர்கள்மீதும் ததும்பும் அன்பு கொண்டவர் பிரபஞ்சன் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம். 



அன்பும் நன்றியும் 
ராமராஜன் மாணிக்கவேல்




Thursday, January 30, 2020

எஸ்.ராமகிருஷ்ணன்-காந்தியோடு பேசுவேன்-சிறுகதை-ஒலிவடிவம்



ஓம் முருகன் துணை 

எஸ்.ராமகிருஷ்ணன்-காந்தியோடு பேசுவேன்-சிறுகதை




காந்தியை அறிந்து கொள்ள வாசிப்பு உதவி செய்யாது என்றே நான் நம்புகிறேன், வாசிப்பின் வழியே காந்தி கருத்துருவமாக மட்டுமே பதிவாகிறார், அவரது செயல்பாடுகளின் பின்னுள்ள வலியை, எளிமையை, நேரடித்தன்மையை வாழ்ந்து பார்க்க வேண்டும், அப்போது தான் காந்தி , மணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துளி மணலாக விழுந்து நிரம்புவதைப்  போல கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் விழுந்து நிறைவார்-சிறுகதை






நன்றி- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்





Wednesday, January 29, 2020

மனுசி-சிறுகதை-வாசிப்பு அனுபவம்.










ஓம் முருகன் துணை

நேற்று இரவு பவா செல்லதுரை சொன்ன மனுசி-பிரபஞ்சன் சிறுகதையை கேட்டேன். 

நன்றி பவா.

உங்களை க.சீ. சிவக்குமார் “ நீ ஒரு இசைமயமானவன்“ என்று சொன்னதாக சொன்னீர்கள். நான்சொல்கிறேன் “நீ ஒரு கதைகனிந்த பெரும்பலா. உன்னில் இருந்து சுவையான கதைநதி பாய்ந்து என்னை திக்கவைக்கிறது“ . உங்கள் கதைகளை கேட்கும்போது உங்களை கட்டிப்பிடித்து முத்தமிட நினைக்கிறேன். கதை சொல்லும்போது நீ ஒரு தாயாக தெரிகிறாய்.  .

மனுசி சிறுகதை லட்சுமி என்ற பசுவுக்கும் அதை வளர்க்கும் அம்மாவிற்கும் உள்ள பாசத்தை வெறுப்பை சொல்லும் கதை. கூடவே மருமகள் உடன் மாமியர் கொள்ளும் மனவிலக்கத்தையும் காட்டும் கதை.

பெண்பிள்ளைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்துக்கொள்ளும் இந்த காலத்தில்தான் பெண்பிள்ளை பெற்று எடுக்காத மருமகளையும், மாட்டையும் வெறுக்கும் தாயின் மனநிலையை மகன் கதைச்சொல்லியாக இருந்து சொல்லும் கதை.

பின்னலூரில் குடியிருந்தபோது எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்த ஆச்சி அந்த ஊரில் இருந்த ஒரு ஆச்சியைப்பற்றி சொன்ன செய்தி ஞாபகத்தில் வருகிறது.

“அவள் ஆண்டுக்கு ஒரு  ஆம்பள பிள்ள பெப்பா, அவள் வளர்க்கிற பசு ஆண்டுக்கு ஒரு  கெடெரிக்கன்ணுப்போடும். அவளுக்கு பூரிப்பு வராம இருக்குமா?”

பிரபஞ்ச தத்துவம் சொல்லும் ரகசியம் என்னவென்றால் ஒரு குடும்பத்தில் பெண்ணும், மாடும் கருவுற்று இருந்தால், முதலில் பசுமாடு  எந்த கன்றைபோடுமோ அந்த வகை குழந்தைதான் பெண்ணும் பெற்று எடுப்பால் என்று எனது அத்தை சொன்னார்கள்.  

மனுசி சிறுகதையிலும்    அந்த வீட்டுபெண்கள் ஆண்பிள்ளைகளை பெறுகின்றார்கள். அந்தவீட்டிற்கு வரும் மாடும் ஆண் கன்றுகளைத்தான் ஈனுகின்றது.

ஆண்கன்றை ஈன்றதாலேயே பிள்ளைகளைவிட மேலான பாசம்வைத்து பிள்ளைபோல் வளர்த்த பசுவை அந்த கதையின் அம்மாவெறுக்கின்றார். 

“பெண்ணை புரிந்துக்கொள்ள பெண் பேசுவதை கவனிக்காதே, பெண் செய்வதை கவனி“ என்று ஓஷோ சொல்கிறார்.

தனது மருமகளும் பெண்ணை பெற்று எடுக்கவில்லை, தான் வளர்க்கும் மாடும் கெடெரி கன்றை ஈனவில்லை என்று மருமகளை ஈட்டுக்காட்டும் அம்மா. ஒருநாள் தான் ஒரு பெண்குழந்தையை பெற்றதாகவும், அது அம்மைநோயில் இறந்துவிட்டதாகவும் அந்தகதையில் வரும் அம்மா இந்த கதையில் அழுகிறாள்.

மாட்டை வெறுக்கும் அம்மா அந்த மாட்டை விற்க சொல்லிவிடுகிறார்கள்,அம்மாவின் மனமாறுபாட்டை அறிந்த கதைச்சொல்லியும் மாட்டை விற்றுவிடுகிறார். அந்த மாடு வாங்கியவருடன் சென்ற பின்பு அம்மா அழுவைப்பார்த்து கதைச்சொல்லி அம்மா அந்த குழந்தைகக்காக அழவில்லை என்று சொல்கிறார். 

அவளையும் அறியாமல் அவள் மாட்டுக்காகத்தான் அழுகிறாள்.
   
இத்தனை பாசம் வைத்த மாட்டை அம்மா  வெறுப்பது பெண்கன்றை ஈனவில்லை என்பதற்காக மட்டும் இல்லை. உள்ளார்ந்த ஒரு காரணம் உள்ளது கதையில்.

எட்டுத்தலைமுறையாக அந்த வீட்டில் பெண் பிள்ளைகள் பிறப்பதில்லை. கொள்ளுதாத்தாவின் கொள்ளுதாத்தா அவரின் மனைவியை சந்தேகப்பட்டு கழுத்தறுத்து கொன்றுவிட்டார். தாத்தா பாட்டியிடம் எதுவும் கேட்கவில்லை. பாட்டியும் என்ன ஏது என்று தெரியாமல்,எதுவும் சொல்லாமலே செத்துவிட்டது.  அது பத்தினிப்பெண்ணின் பெண்சாபம்.

அம்மாவிற்குள் அந்த சாபத்தை போக்கடிக்கவேண்டும் என்ற பெரும் தீவிரம் இருக்கிறது. அம்மா பெற்றும் தக்கவைக்கமுடியாத ரணத்தில் இருக்கிறாள். அம்மாவின் தொடர் ஓட்டத்தில் குச்சி மருமகள் இடத்திற்கு வந்துவிட்டது, மருமகள் ஆண்பிள்ளையாக பெற்று இலக்கை தொடாமலே ஓய்ந்துவிட்டாள். அந்த தொடர் ஓட்டத்தில் மருமகள் வீட்டில் இருந்து வந்த பசு லட்சுமி கலந்துக்கொள்கிறது அதுவும் இலக்கை தொடாமலே ஆண்கன்றாக ஈன்று நின்றுவிடுகிறது.  பெண்பிள்ளைப்பெற்று   அந்த குடும்பம்மீது இருக்கும் பெண்சாபத்தை கழுவமுடியவில்லை என்ற ஆரா ரணம் இந்த கதையில் உள் உறைந்து உள்ளது.

மற்றவர்கள் இடம் இல்லாதது தன்னிடம் இருக்கிறது என்று காட்டி மற்றவர்கள் மனதில் கடுகளவாது பொறாமைவிதையை தூவுவது இந்த அம்மாவின் குணம். அதில் சந்தோஷப்படுவது இந்த அம்மாவின் குணம். அந்த குணம் கொண்ட அம்மாவின்வீட்டில் பெண் என்ற பேருக்கு ஒரு பசுகூட கன்றுபோடவில்லை என்றால் அந்த அம்மாவின் மனதில் எத்தனைபெரிய பொறாமைவிதை இந்த உலகும் காலமும் விதியும் கடவுளும் தூவி சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். என்று நினைக்கவேண்டி உள்ளது.  

நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்கிறது உபநிடதம்.

மனிதன் விரும்பியதை மட்டும் இல்லை வெறுப்பதையும் அடைந்தே தீர்கின்றான் என்கிறது உளவியல் தத்துவம்.

அப்பாவைப்போல குடிகாரன் தனக்கு கணவனாக வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அப்பாபோலவே கணவன் வந்து அமைந்தார் என்று ஆண்டாள் P.சொக்கலிங்கம் நிகழ்வில் ஒரு பெண்மணி சொல்கிறார்.

அந்த கழுத்தறுப்பட்ட பாட்டி அந்த குடும்பத்தின்மீது சாபம் இட்டதோ இல்லையோ. அந்த குடும்பத்திற்கு வாக்கப்பட்டுவரும் பெண்கள் மனதில் அந்த நிகழ்வு பெரும் அதிர்வாக நுழைந்து நிலைகுலைய செய்து எண்ணங்களை பாவத்திலும் சாபத்திலும் கொண்டு சென்று நிலைக்கவைத்து விடுகிறது. எங்கிருந்து வந்தாலும் அந்த குடும்பத்திற்கு வரும் பெண்கள் எல்லாம் அந்த கழுத்தறுப்பட்ட பாட்டியின் வடிவங்கள்தான். அந்த குடும்பத்திற்கு அந்த பாட்டியின் இடத்திற்குதான் அவர்கள் வருகிறார்கள். அவர்கள் உள்ளுக்குள் அந்த குடும்பத்தை அவர்களையும் அறியாமல் சபிக்கிறார்கள். அது ஒரு எண்ண அலையாக பரவிக்கொண்டு இருக்கிறது. அதுதான் அவர்களை அந்த குடும்பத்திற்கு உரிய  பெண் பிள்ளைகளை  பெற்று எடுக்க முடியாமல்செய்கிறது. அந்த எண்ணங்கள் அவர்கள் வளர்க்கும் மாட்டுக்குள்ளும் நுழைந்து இறந்தப்பாட்டிக்கு நீதி செய்கிறது.

அந்த குடும்பத்தில் கொள்ளுதாத்தாவின் கொள்ளுதாத்தா மட்டும் இல்லை, இதோ இந்த அம்மாகூட பெண்களை (மருமகளை, மாட்டை) உள்ளார்ந்து மகிழ்விக்கவில்லை.  

பெண்ணை மகிழ்விப்பவருக்கே கண்ணீர் மறைந்து ஆனந்தம் பெருகுகிறது. கதையின் உள்ளீடாக இந்த கதை அந்த இடத்தை தொடுகிறது.

எண்ணம் மாறாமல் வாழ்க்கை மாறுவதில்லை. 

இந்த கதையை சொல்லும்போது பவா செல்லதுரை தனது தாயுக்கும் மீனம்மா என்ற மாட்டிற்கும் உள்ள நெருக்கத்தை சொல்கிறார். மாடு செல்லவம் மட்டும் அல்ல அன்பும்கூட. அந்த அன்பை மாட்டுடன் வாழ்ந்துப்பார்த்தவர்களால்தான் பெற்றுக்கொள்ள  முடியும்.

பவா செல்லதுரையும் அவரது அம்மாவும் அவர்வீட்டு நாயும் மீனம்மாவும் வயலுக்கு செல்கையில் பவா செல்லதுரையின் வயலில் அறுவடை நெல்லை கசக்கி திருடுபவர்களைப்பார்த்து இவர்கள் அமைதியாக நிற்க. அந்தமாடு பொறுக்க முடியாமல் செருமியதையும் அதைக்கேட்டு திருடர்கள் எழுந்ததையும் பவா செல்லுதுரை சொல்லும்போது அந்த மீனம்மாவின் முகமும் ஸ்பரிசமும் கைகளுக்குள் வந்துபோனது.

திருடர்களைப்பார்த்து கொதிக்காமல் அவர்களின் கயமையை கண்டுகொண்ட கம்பீரத்துடன் வேண்டிய அளவுக்கு கசக்கிக்கொண்டுபோகங்கள் என்று பவாவின் தாய் திரும்பிகாட்சியும், அந்த திருடர்கள் கசக்கிய நெல்லை விட்டுப்போன காட்சியும் அறத்தின் மென்மையை வன்மையை உண்மையை எழுந்து வரவைக்கிறது.

பவாவின் மீனாம்மா விற்கப்பட்டு அது சிலநாள் கழித்து பவாவின் வீட்டிற்கே வந்ததும். அந்த பணத்தை செலவு செய்யாமல் வைத்திருந்த பவாவின் அம்மா அந்த பணத்தை வாங்கியவரிடம் கொடுத்து மாட்டை விட்டுவிட்டு திரும்பிப்போகசொன்னதும் அன்பின் ஆழமும் உயரமும்.

நாங்கள் ஒரு வெள்ளைமாடு வளர்த்தோம். எங்கள் ஐந்துபேரை   பெற்ற அம்மாவிற்கு அதுவும் ஒரு குழந்தைதான்.  அம்மாவின் வார்த்தையை அது மீறியது இல்லை. அம்மாவின் பசியை அம்மா அறிந்தாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் அம்மா அதன்பசியை அறிந்து இருந்தார். அதற்கு உணவு இல்லை வைக்கோல் இல்லை புல் இல்லை என்றால் அம்மா அழுதுவிடுவார்.

ஒரு மழைநேரம் மாலை அம்மா வைக்கோல் நனைகிறது என்பதற்கா மாட்டுக்குபோட வேண்டிய அளவு வைக்கோலை பிடிங்கிவந்து வீட்டு வாசல்படிக்கு முன்னால் வீட்டுக்குள் போட்டுவிட்டு மழையில் நனைந்தபடி வாசலில் கிடந்த துணிகளை பொருள்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். இரண்டுவயது கைக்குழந்தையாக இருந்த எனது தங்கை சின்னவண்டு வாசல்படியில் உட்கார்ந்து மழையைப்பார்த்துக்கொண்டு இருந்தது.  தங்கையின் பின்னால் வீட்டுக்’குள் வைக்கோல். வாசலில் மழையும் அம்மாவும்.

மேச்சலுக்கு சென்ற வெள்ளைமாடு மழையில் நனைந்து ஓடிவந்து அவசரமாக வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. வாசல்படியில் குழந்தை. அம்மா பதறி “ஐயோ. என் புள்ள” என்று  ஓடிவந்துப்பார்க்கிறார்கள். வெள்ளைமாடு முன்னங்கால் இரண்டையும் தூக்கி வைக்கோல்மீது வைத்து வைக்கோல் திங்கிறது. பின்னங்கால் வாசலுக்கு வெளியில் இருக்கிறது. குழந்தை மாட்டு வயிற்றுக்குகீழே உட்கார்ந்து மடியைப்பார்த்து சிரிக்கிறது.

நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் மட்டும் இல்லை வெள்ளைமாட்டின் குழங்தைகள்கூடதான் என்பது இப்போது நினைக்கையில் புரிகிறது.

ஒரு நாள் அப்பா வெள்ளைமாட்டை விற்றுவிட்டார்கள். அம்மாவும் அழுதார்கள். அப்பா தனது பேச்சால் கண்ணீரை மறைத்தார்கள்.  வெள்ளைமாடும் ஒருநாள்அம்மாவை தேடிவந்தது. 

அம்மா தன்னால் முடிந்தது ஒருவேளை உணவுஊட்டி அனுப்பி வைத்தார். 

விலங்குகள் அன்பு காட்டுவதில் மனிதர்கள்முன் மனிதர்களைவிட மேலானவர்கள். மனிதர்கள் எண்ணங்களால் பலநேரங்களில்  விலங்கின்முன் விலங்கைவிட கீழனவர்கள்.

மனுஷி கதையிலும் லட்சுமி மாடு திரும்பி வந்துவிடவேண்டும்போல் இருந்தது.




அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.  

Monday, January 27, 2020

காதலி அரசி அன்னை


ஓம் முருகன் துணை

காதலி என்பதும் பெருநிலை. அரசியென்பதும் பெருநிலைதான்,  இரண்டும் அன்னையாகி உலகில் வாழ்வாங்கு வாழும் உயர்நிலைதான். 

அன்னை பார்வதி காதலி, அன்னை சிவகாமி காதலி, அன்னை சீதை காதலி, அன்னை சந்திரவதி காதலி, அன்னை சாவித்திரி காதலி, அன்னை தமயந்தி காதலி.

அன்னை மீனாட்சி காதலி மட்டும் இல்லை, உலகாளும் அருளரசி.  அன்னை தேவயானி காதலியாக இருந்து, உலகாண்டா ராஜமாதா. அன்னை திரௌபதி   பெரும்காதலி,  உலகாளும் குலதெய்வம்.

காதலியாக இருப்பவரும், காதலியாகவும் ஆளுமையுடை அரசியாகி அன்னையாகவும் இருப்பவர்களும் இருபெரும்  உயர்நிலைகள். ஒன்று அகமாகி வளர்வது. மற்றொன்று புறமாகி வளர்வது. இரண்டு வளர்ச்சியும் உயர்வானதே.  

காதலியாக இருப்பவர்கள் உலக உள்ளங்களில் மென்மையானவர்களாக எளியவர்களாக தெரிகின்றார்கள். ஆனால் அவர்கள் அகஆளுமைக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஊற்றுக்கண்போல அவர்களிடம் இருந்தே அவர்கள் சார்ந்து உள்ளவர்கள் சக்தியை ஆளுமையை மேன்மையை பெருகின்றார்கள். அவர்கள் ஒரு மையம். பரவுவதில்லை. ஆனால் பரவுவது எல்லாம் அவர்களிடம் இருந்தே.

காதலியாகி ஆளுமை அரசியாகி அன்னையாகவும் உள்ளவர்கள் புறசக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்கள் ஆற்றல் முழுவதை புறத்தில் விரித்து வைத்து புறத்தை சக்தி உடையதாக செய்கிறார்கள். அவர்கள் அகத்தை விரித்துக்கொண்டே செல்கின்றார்கள். அகம் ஒன்று இருப்பதாககூட அவர்கள் அறிவதில்லை. அவர்கள் அறிவதெல்லம் புறம்உலகம். புறஉலகமே அவர்களை கொண்டு வளர்ந்து, புறஉலகம் அவர்களின் வடிவங்களாக ஆகிவிடுகின்றன.

காதலியாக இருப்பவர்கள் அரசிகளை பெரியவர்கள் என்று நினைப்பது உண்டு. அரசிகளாக இருப்பவர்கள் காதலிகளை பெரியவர்களாக நினைப்பது உண்டு. தன்னைத்தான் திரும்பிப்பார்ப்பவர்களே தன்னின் பெருமையை உணரமுடியும். அதுவே ஆனந்தம் தரும் வளர்ச்சி என்பது விளங்கும். 

காதலியாக இருப்பவர்கள் உள்ளத்தை இனிக்கவைத்து கண்ணில் ஆனந்தமாக நிறைகின்றார்கள். காதலியாக மட்டும் இல்லாமல் அரசியாகவும் ஆகி  அன்னையாகவும் இருப்பவர்கள் கண்ணில் புதுமையாக நிறைந்து இதயத்தில் தீபமாக ஒளிர்கின்றார்கள்.

பெண்கள் இரண்டு கிளைகளாக வளரமுடியும். தன்னை காதலியாக மட்டும் வளர்த்துக்கொள்வது. மற்றொன்று காதலியாக இருந்து ஆளுமையுடைய அரசியாகி லோக அன்னையாகவும் வளர்த்துக்கொள்வது. 

அன்பானவர்களே! உங்கள் இயல்பு என்ன என்பதை கவனித்து உங்களை எதுவாக வளர்த்துக்கொள்ளமுடியுமோ அதாக வளர்த்துக்கொள்ளுங்கள்.

அன்னை சிவகாமியாக இருப்பது முடியா நடனம் கண்டு ஆடல் கண்டு முடிவிலியாக நிற்பது. அன்னை  மீனாட்சியாக இருப்பது வளராட்சி செய்து  வளர்ந்தோங்கி நிற்பது. இரண்டுமே வாழ்க்கையின் ஆடல்தான். 

வாழ்க வளமுடன்.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.